காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை ஒட்டி மதவெறி-தேசவெறி-போர் வெறியைப் பரப்பிவருகிறது பாசிச பா.ஜ.க. கும்பல். பாகிஸ்தானின் தாக்குதலில் காஷ்மீர் மக்கள் கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் மதுரை ஆதினம்-தமிழ்நாடு பா.ஜ.க. கும்பலின் மூலம் மதவெறி-மதக்கலவரத்தைத் தூண்ட முயல்கிறது.
கடந்த மே 2 அன்று மதுரை ஆதினம் சென்னையின் அருகே காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற 6-வது சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ளார். உளுந்தூர்பேட்டையின் சேலம் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தபோது மற்றொரு காருடன் இலேசாக உரசியது. பின்னர் அதே காரிலேயே சென்னைக்கு சென்ற ஆதினம், சென்னையில் செய்தியாளர்களிடையே பேசுகையில், “இது திட்டமிட்ட சதி. தன்னைக் கொல்ல விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. விபத்துக்குப் பிறகு நான் மயங்கிவிட்டேன். ஆனால், தொப்பி அணிந்து தாடி வைத்த ஒருவர் காரில் நம்பர் பிளேட் இல்லாமல் ஓட்டி வந்து மோதியதாக என் கார் டிரைவர் தெரிவித்தார்” என்று இஸ்லாமிய மத வெறுப்புணர்வைத் தூண்டிவிட்டார்.
ஆனால், “கொலை முயற்சிக்கான சதி ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. மேற்படி விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகன ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டது” என சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை ஆராய்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசு அறிக்கை வெளியிட்டனர். இதன் மூலம் ஆதினத்தின் மதவெறி நாடகம் அம்பலமானது.
ஆனால், பா.ஜ.க-வின் மூத்தத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “ஆதின விவகாரத்தில் சி.சி.டி.வி. கேமராவை வைத்து முடிவு எடுக்க முடியாது. ஆதினம் கூறுவதை வைத்து யார் எனக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று ஆதினத்தின் சதிக்கும் துணைபோயுள்ளார்.
படிக்க: இஸ்லாமிய வெறுப்பைக் கக்கும் மதுரை ஆதீனம் | ஆர்.எஸ்.எஸ் ஆதீனத்தைக் கைது செய்! | தோழர் ரவி
மேலும், கடந்த மே 6 அன்று காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க. கும்பல் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “கார்கில் போர் நடைபெற்றபோது பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. இந்தியாவில் இரத்த ஆறு ஓடும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது. அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய், ‘இந்தியாவில் பாதி இடத்தை இழந்தால் கூட பரவாயில்லை. ஆனால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் என்ற இடமே இருக்காது’ என்று தெரிவித்தார். அதன்பிறகு புல்வாமா தாக்குதலுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். மேலும் தமிழ்நாட்டில் ஊடுருவியுள்ள பாகிஸ்தானியர்களை உடனே வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தேசவெறியையும்-இஸ்லாமிய வெறுப்புணர்வையும் தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க-வின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், “தமிழ்நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்கள் குறித்து அரசு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கோவையில் சிலிண்டர் வெடிப்பிற்குப் பிறகு இந்துக்கள் நாங்கள் உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்று இஸ்லாமிய மதவெறியைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். மேலும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் இத்தகைய கருத்தையே தெரிவித்து வருகின்றனர்.
பாசிச பா.ஜ.க. கும்பலானது தமிழ்நாட்டைக் கைப்பற்றுவதற்கு மதக்கலவரங்கள், மதவெறி, தேசவெறி பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டில் சென்னிமலையில் இந்துக்களை கிறிஸ்தவர்கள் கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள் என்று மதக்கலவரத்தைத் தூண்ட முயன்றது. பின்னர் மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஆடு கோழி பலியிடக் கூடாது என்று இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மதவெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஆனால் இரண்டு நடவடிக்கைகளும் தமிழ்நாட்டு மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில்தான் 2026 தேர்தலில் தமிழ்நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் காஷ்மீர் தாக்குதலைப் பயன்படுத்தி மக்களிடம் தேசவெறி, மதவெறியை ஊட்டி கலவரத்தைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி ஜனநாயக சக்திகள், புரட்சிகர அமைப்புகள் நடத்துகின்ற போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் தி.மு.க. அரசு தமிழ்நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்டக்கூடிய கலவரக் கும்பலின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கியது கண்டிக்கத்தக்கது. பாசிச கும்பலுக்கு பேச்சுரிமை உள்ளிட்ட எந்த உரிமைகளையும் அனுமதிகளையும் வழங்கக் கூடாது. இதனை ஜனநாயக சக்திகள் தி.மு.க. அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram