மக்களின் நகையைத் திருடிய குரும்பூர் கூட்டுறவு வங்கி!

பதினைந்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் வங்கி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக வங்கியை நம்பி அடகு வைக்கப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை கூட்டுறவு வங்கியே மோசடி செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட மக்களின் 548 நகை பைகளில் 261 நகை பைகள் மாயமானதாகத் தெரியவந்தது. மாயமான நகைகள் இருப்பில் இல்லை என்றும் இருப்பில் இருப்பது போன்று போலியாகக் கணக்கை உருவாக்கி ரூபாய் 2 கோடியே 3 லட்சத்து 92 ஆயிரத்து 700 வரை மோசடி செய்ததாகத் தெரியவந்துள்ளது.

இதேபோல் வைப்புநிதியும் இருப்பில் இருப்பது போன்று போலியாகக் கணக்கை உருவாக்கி ரூ.27 கோடி வரை மோசடி செய்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதில் கொடுமை என்னவென்றால் இந்த மோசடி 2021 செப்டம்பர் மாதத்திலேயே ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இன்றுவரை இதை மீட்டுத் தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மக்கள் தங்களது நகை மற்றும் பணத்திற்காகத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.

இந்த தொடர் போராட்டத்தின் அடுத்த கட்டமாக மே 8 அன்று தமிழக உழவர் முன்னணி மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் குரும்பூரில் நடைபெற்றது.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மோசடியில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வேண்டும், அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது, பாதிக்கப்பட்டவர்களின் டெபாசிட் பணம் மற்றும் நகைகளை விரைந்து மீட்டுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவ்வாறு பதினைந்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் வங்கி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மக்கள் எச்சரிக்கை விடுத்தனர். தலைவர், செயலாளர், துணைச் செயலாளர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதும் உடல் நிலையைக் காரணம் காட்டி ஜாமீன் பெற்றுள்ளனர். இன்று வரை மக்களின் நகை பணம் வீட்டு தரப்படவில்லை

கூட்டுறவு வங்கி என்பது பெரும்பாலும் உறுப்பினர்களின் வளங்களைப் பயன்படுத்தி உறுப்பினர்களின் நலனுக்காக நிறுவப்பட்டவை. உறுப்பினர்களுக்கு நியாயமான விலையில் கடன் மற்றும் நிதிச் சேவைகளை வழங்குவதே கூட்டுறவு வங்கிகளில் நோக்கம் ஆகும். ஆனால் இந்த நோக்கத்தைக் காற்றில் பறக்க விட்டு அதிகாரிகளும், உள்ளூர் அரசியல்வாதிகளும் இணைந்து மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பது தொடர் கதையாக உள்ளது. களப்போராட்டங்களே மக்களுக்கு வெற்றியை ஈட்டி தரும்.


மக்கள் அதிகாரக் கழகம்,
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம்
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க