மே 11 ஆம் தேதி அன்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் இஸ்ரேலின் கொடூரமான இனவெறி தாக்குதலினால் காசாவில் 1,500 மக்கள் கண்பார்வையை இழந்துள்ளனர் என்றும் இஸ்ரேல் தொடர்ந்து மனிதாபிமான உதவிகளைத் தடுத்து வருவதால் 4,000 பேர் கண்பார்வையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர் என்றும் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளது.
இனவெறி இஸ்ரேல் கடந்த மார்ச் 18 ஆம் தேதி முதல் காசா மீது மீண்டும் தாக்குதலைத் தொடங்கி ஆயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்து வருகிறது. மறுபுறம் காசாவின் அனைத்து நுழைவாயில்களையும் மூடி காசா மக்களுக்குத் தேவையான சுத்தமான குடிநீர், உணவு, மருந்து பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளைத் தடுத்து மக்களைப் படுகொலை செய்து வருகிறது.
இந்நிலையில் காசாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் கடந்த மே 11 ஆம் தேதி அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சு தாக்குதலினால் 1,500 மக்கள் கண்பார்வையை இழந்துள்ளனர் என்றும் இஸ்ரேலின் தொடர் நெருக்கடி காரணமான அத்தியாவசிய மற்றும் அறுவை சிகிச்சைக்குத் தேவையான மருந்து பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் காசா கண் மருத்துவமனையின் (Gaza Eye Hospital) இயக்குநர் டாக்டர் அப்தெல்-சலாம்-சபா (Dr. Abdel-Salam Sabah) சில அவசர அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். காசா சுகாதாரத் துறை கண் அறுவை சிகிச்சை பொருட்கள் மற்றும் உபகரணங்களின் கடுமையான பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது, இதனால் கண் அறுவை சிகிச்சை சேவைகள் அழிவின் விளிம்பில் உள்ளன. குறிப்பாக விழித்திரை தொடர்பான சிகிச்சைகள், நீரிழிவு விழித்திரை நோய் மற்றும் உட்புற கண் இரத்தக்கசிவுகள் தொடர்பான சிகிச்சைகளுக்குத் தேவையான மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளது.
கண் மருத்துவமனையில் தற்போது பெரிதும் தேய்ந்த நிலையில் மூன்று அறுவை சிகிச்சை கத்தரிக்கோல்கள் மட்டுமே உள்ளன. அவை பல முறை மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. இது நோயாளியின் பாதுகாப்பைக் கடுமையாகச் சமரசம் செய்கிறது; பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருத்துவ சேவையை வழங்குவதைத் தடுக்கிறது.
குண்டுவெடிப்பு தொடர்பான கண் காயங்களுக்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஹீலான் (Healan) மற்றும் நுண் அறுவை சிகிச்சை தையல் கருவிகள் (microsurgical sutures) போன்ற சிறப்பு மருத்துவ பொருட்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அவை இப்போது கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டன என்கிற நிலைதான் உள்ளது.
படிக்க: காசா: கருத்து சுதந்திரத்தின் கல்லறை
உடனடியாக சர்வதேச உதவி கிடைக்காவிட்டால், மருத்துவமனை அறுவை சிகிச்சை சேவைகளை முற்றிலுமாக நிறுத்தி வைப்பதாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்று டாக்டர் சலாம்-சபா தெரிவித்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மனிதாபிமான அமைப்புகளின் தலையீட்டின் அவசரத் தேவையினையும் வலியுறுத்தியுள்ளார்.
மார்ச் 2 ஆம் தேதி முதல் இஸ்ரேல் காசாவின் முக்கிய நுழைவாயில்களை மூடியுள்ளது. இதன்மூலம் உணவு, மருத்துவ உதவி மற்றும் பிற மனிதாபிமான பொருட்கள் எல்லைகளில் தடுத்து நிறுத்தி பாலஸ்தீனியர்களுக்கு எதிரான போர் ஆயுதமாக இஸ்ரேல் பட்டினியைப் பயன்படுத்துவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமையான பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மார்ச் 2 ஆம் தேதிக்குப் பிறகு மட்டும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 57 பாலஸ்தீன குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியது இங்கே நினைவுகொள்ளத்தக்கது.
மார்ச் 18 அன்று இஸ்ரேல் காசா மீதான தனது தாக்குதலை மீண்டும் தொடங்கியதிலிருந்து 2,700க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 7,400 பேர் காயமடைந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலின் இனப்படுகொலையினால் 52,800க்கும் அதிகமாக மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்பது பல ஆய்வுகள் கூறும் மறுக்க முடியாத உண்மையாகும்.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram