ஆபரேஷன் சிந்தூரைக் காரணம் காட்டி கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் பாசிச மோடி அரசு!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து தவறான செய்திகள் பரப்பப்படுவதைத் தடுப்பதாகக் கூறிக்கொண்டு ஊடகங்களைத் தணிக்கை செய்து கருத்துச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுத்தது பாசிச கும்பல்.

ஹல்காம் தாக்குதலை மையமாகக் கொண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்று வந்த தாக்குதல்கள் தொடர்பான செய்திகளைப் பதிவிட்டதற்காக பாசிச கும்பல் பல்வேறு ஊடகங்களின் எக்ஸ் கணக்குகளை முடக்கியுள்ளது. இதற்கு எதிராக ஜனநாயக சக்திகளும், எதிர்க்கட்சி தலைவர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 மக்கள் கொடூர முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இத்தாக்குதல் குறித்து கேள்வி கேட்கும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தது பாசிச கும்பல். தற்போது சமூக ஊடக தளங்களையும் தன்னுடைய பாசிச கரங்களைக் கொண்டு ஒடுக்கி வருகிறது.

குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் போர் குறித்த செய்திகளைப் பதிவிட்டு வந்த மக்தூப் மீடியா, காஷ்மீரின் அனந்த நாக்கை தளமாகக் கொண்ட தி காஷ்மீரியத் (The Kashmiriyat) ஸ்ரீநகரைத் தளமாகக் கொண்ட ஃபிரீ பிரஸ் காஷ்மீர் (Free Press Kashmir) போன்ற செய்தி வலைத்தளங்களின் எக்ஸ் கணக்குகளை பாசிச கும்பல் முடக்கியுள்ளது.

ஸ்ரீநகரைச் சேர்ந்த பத்திரிகையாளர் அனுராதா பாசின் (Anuradha Bhasin) டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் முசாமில் ஜலீல் (Muzamil Jaleel) ஆகியோரின் எக்ஸ் கணக்குகளும் பாசிச கும்பலால் முடக்கப்பட்டுள்ளன. மேலும் ”4 PM நியூஸ்” என்கிற பிரபல யூடியூப் சேனல் மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த டாக்டர் மெதுசாவின் (Dr. Medusa) யூடியூப் சேனலையும் பாசிச கும்பல் முடக்கியுள்ளது.


படிக்க: குணால் கம்ரா மீதான பாசிச தாக்குதல் – கருத்துச் சுதந்திரத்தைக் கல்லறையில் தள்ளும் நடவடிக்கை!


ஊடக சுதந்திரம் மீதான தனது பாசிச தாக்குதலை மேலும் தொடர்ந்தது பாசிச கும்பல். கடந்த மே 8 ஆம் தேதி அன்று இந்தியாவின் ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் போர் விமானம் தாக்கி வீழ்த்தியதாக சி.என்.என் (CNN) என்கிற பன்னாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. அதனை “தி வயர்” (The Wire) தன்னுடைய வலைத்தளத்தில் செய்தியாகப் பதிவிட்டிருந்தது. இந்நிலையில் 9 ஆம் தேதி அன்று அதிகாலை தி வயர் வலைத்தளத்தை பாசிச கும்பல் முடக்கியது. ஆனால் ஐடி விதிகள் 2021 (IT rules 2021) கீழ் ஆன்லைன் செய்தி தளங்களை ஒழுங்குபடுத்தும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இருந்தோ தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் இருந்தோ தி வயர் நிறுவனத்திற்கு வலைத்தளம் முடக்கப்பட்டதற்கான சட்டப்பூர்வமான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி வயர் “இந்த தன்னிச்சையான மற்றும் விவரிக்க முடியாத நடவடிக்கையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். இந்தியாவிற்கு ஒரு முக்கியமான நேரத்தில், விவேகமான, உண்மையுள்ள, நியாயமான பகுத்தறிவு குரல்களும் செய்தி மற்றும் தகவல் ஆதாரங்களும் இந்தியாவிடம் உள்ள மிகப்பெரிய சொத்துக்களில் ஒன்றாக இருக்கும். இந்த அப்பட்டமான தணிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று தி வயர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருந்தது.

பின்னர் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் மின்னஞ்சல் வாயிலாக வலைத்தளம் முடக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தது தி வயர் நிறுவனம். அதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ரஃபேல் குறித்து கட்டுரை பதிவிட்டதற்காக வலைத்தளம் முடக்கப்பட்டதாகப் பதிலளித்திருக்கிறது.

இந்நிலையில் 9 ஆம் தேதி அன்று இரவு அக்கட்டுரையை தி வயர் தன்னுடைய வலைத்தளத்திலிருந்து நீக்கியுள்ளது. தங்களது வலைத்தளத்தை மீட்பதற்காக அக்கட்டுரையை நீக்கியதாகவும் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மே 10 ஆம் தேதி அன்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தி வயர் வலைத்தளம் மீதான தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது.


படிக்க: விகடன் முதல் விஜய் டிவி வரை: நெரிக்கப்படும் குரல்வளை!


மேலும் பாகிஸ்தானிய கணக்குகள் உள்ளிட்ட 8,000 எக்ஸ் (X) கணக்குகளை முடக்க வேண்டும் என்று எக்ஸ் நிறுவனத்திற்கு பாசிச கும்பல் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பதிவு வெளியிட்டதற்காக “Global Government Affairs” என்ற எக்ஸ் நிறுவனத்தின் பக்கமும் சிறிது நேரத்தில் முடக்கப்பட்டது. கணிசமான எண்ணிக்கையிலான கணக்குகளுக்கு, கணக்குகளை முடக்குவதற்கான எந்த ஆதாரமோ அல்லது நியாயமோ எங்களுக்குக் கிடைக்கவில்லை. முழு கணக்குகளையும் தடுப்பது தேவையற்றது மட்டுமல்ல, அது ஏற்கனவே உள்ள மற்றும் எதிர்கால உள்ளடக்கத்தின் தணிக்கைக்குச் சமம். மேலும் பேச்சு சுதந்திரத்தின் அடிப்படை உரிமைக்கு முரணானது” என்று எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாசிச கும்பல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து தவறான செய்திகள் பரப்பப்படுவதைத் தடுப்பதற்கே ஊடகங்களை முடக்கியதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் ஊட்டங்களைத் தணிக்கை செய்து, தனக்கு எதிரான கருத்துகளைப் பதிவிடும் ஊடகங்களை ஒடுக்குவதற்கே இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க