’இஸ்லாமாபாத்தின் வீழ்ச்சி முதல் கராச்சி அழிக்கப்பட்டது வரை’: இந்திய செய்தி ஊடகங்களின் பொய் பிரச்சாரமும் கிளறிவிடப்படும் தேசிய வெறியும்!
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்களைப் பழிவாங்கும் நோக்குடன் மே 7ஆம் தேதி ”ஆப்ரேஷன் சிந்தூர்” செயல்படுத்தப்பட்டதாக இந்தியா தரப்பில் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மறுநாள் (மே 8) இந்தியாவை பாகிஸ்தான் இராணுவம் தாக்கியது. இந்நிலையில் பிரபலமான இந்திய ஊடகங்கள் பலவற்றிலும் இந்தியாவைக் கொண்டாடும் வகையிலும் பாகிஸ்தானைத் தூற்றும் விதமாகவும் பல பொய் செய்திகள் உலா வரத் தொடங்கின.
மே 8 ஆம் தேதிக்குப் பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பரஸ்பர தாக்குதல் தீவிரமடைந்தது. இதன் காரணமாக இருநாடுகளிலும் எல்லையில் வசித்து வரும் மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களது குடியிருப்புகள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதல் தொடங்கியதிலிருந்தே இரண்டு பக்கங்களிலும் உள்ள சாதாரண மக்கள் தான் பெரும்பாலும் பாதிப்பை எதிர்கொண்டனர். களநிலவரம் இவ்வாறு இருக்க, மக்களிடம் உண்மையைக் கொண்டு சேர்க்க வேண்டிய ஊடகங்களோ, மக்களிடம் இந்திய தேசவெறியூட்டும் நோக்குடனும் பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலும் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
அர்னாப் கோஸ்வாமி, ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் உள்ள பாசிஸ்டுகளின் ஊதுகுழலான ஊடகங்கள் மட்டுமின்றி, நடுநிலைவாதிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஊடகங்கள் கூட இந்துத்துவக் கும்பலின் தேசவெறிப் பிரச்சாரத்திற்குப் பலியாகி உறுதிப்படுத்தப்படாத தவறான செய்திகளைப் பரப்பி தேசவெறியை கிளப்பும் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
அந்த வகையில் இந்திய ஆளும் வர்க்க ஊடகங்கள் முதற்கொண்டு மக்களால் அதிகமாகப் பார்க்கப்படும் ஊடகங்கள் அனைத்திலும் பலவாறான பொய் செய்திகளும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் பரப்பப்பட்டன. அவற்றில் சில கீழே தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
1. இராணுவத் தளபதி ஆசிஃப் முனிர், பாகிஸ்தான் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார் என்ற ஆதாரமற்ற செய்தியை ஜீ தெலுங்கு, தந்தி (தமிழ்), ஏ.பி.பி (ABP) ஆகிய சேனல்கள் ஒளிபரப்பின. தற்போது வரை இந்த பதிவினை தங்களது வலைத்தளப் பக்கத்திலிருந்து நீக்காமல் உள்ளன.
2. பாகிஸ்தானுக்கு எதிராக மற்றொரு போர்முனையை இந்திய கப்பற்படை திறந்துள்ளதாகவும், பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை இந்திய கப்பற்படை அழித்துவிட்டதாகவும் இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில செய்தி ஊடகங்கள் பலவற்றிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்காலி செய்தி நிறுவனமான, ”ABP ஆனந்தா”, மூன்று மாதங்களுக்கு முன்னர் பிலடெல்ஃபியாவில் நடந்த விமான விபத்தின் காட்சிகளை ஒளிபரப்பி, “இந்திய தாக்குதலுக்குப் பிறகு கராச்சி துறைமுகத்தின் நிலைமை” என்று குறிப்பிடுகிறது. ‘இந்தியா டுடே’, NTV (தெலுங்கு) உள்ளிட்டவற்றிலும் இதுபோன்ற செய்திகள் காணப்பட்டது.
3. ஜீ, டிவி9, லோக்மத், அமர் உஜாலா போன்ற பல செய்தி நிறுவனங்களும் கராச்சி துறைமுகத்தில் ஐ.என்.எஸ் விக்ராந்த் தாக்கியதைக் காட்டுவதற்கு, 2023 ஆம் ஆண்டு கடற்படைப் பயிற்சிப் படத்தைப் பயன்படுத்தியுள்ளதாக அல்ட் நியூஸ் (Alt News) உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் உச்சமாக, ‘ரிபப்ளிக் பங்களா’வின் பெண் செய்தியாளர் ஒருவர், இதே கூற்றைத் தெரிவித்ததுடன், “பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை 26 போர்க்கப்பல்கள் சுற்றியுள்ளது. இன்று பாகிஸ்தான் அழிக்கப்பட்டுவிடும்” என்று போர் வெறியை உமிழ்ந்தார்.
4. ரஜௌரி பகுதியின் இராணுவ யூனிட்டில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக ‘ஆஜ் டாக்’ செய்தியில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்திய இராணுவம் இதனை மறுத்துவிட்டது.
5. NDTV, ஜீ நியூஸ் மட்டுமல்லாது, நியூஸ் லைவ், NKTV, பிரட்டிடின் டைம்ஸ் உள்ளிட்ட அஸ்ஸாம் செய்தி நிறுவனங்கள் பலவும் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் இந்திய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதாகவும், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிஃப் உயிர் பயத்தால் பதுங்குகுழியில் ஒளிந்து கொண்டுள்ளதாகவும் பாகிஸ்தானை இழிவுபடுத்தும் நோக்கில் செய்திகளைப் பரப்பின. ”டைம்ஸ் நௌ நவா பாரத்”-இல் “இந்திய ராணுவம் கராச்சியைத் தாக்கி தீ வைக்க வேண்டும்” என்று செய்தி ஒளிபரப்பப்பட்டது.
6. டெக்கன் குரோனிக்கிள் (Deccan Chronicle) தனது X வலைத்தள பக்கத்தில், AI ஆல் உருவாக்கப்பட்ட போலி காணொளியைப் பதிவிட்டு, பாகிஸ்தானின் மூன்று விமானங்கள் இந்தியாவால் வீழ்த்தப்பட்டுள்ளன என்று பாகிஸ்தான் இராணுவ செய்தித்தொடர்பாளர் ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டது.
படிக்க: ஆபரேஷன் சிந்தூரைக் காரணம் காட்டி கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் பாசிச மோடி அரசு!
ஊடகங்கள் பொய் செய்திகள் பரப்புவது குறித்து கருத்து தெரிவிக்கும் பலரும், டி.ஆர்.பிக்காக (TRP) தான் ஊடகங்கள் இவ்வாறு செய்கின்றன என்று குறிப்பிடுகின்றனர். எனினும் பரப்பப்படும் போலி செய்திகளின் உள்ளடக்கத்தைக் கவனித்தால் பிரபலத்திற்காக மட்டுமே வெறுப்பைக் கக்கும் செய்திகள் வெளியிடப்படுவதாகத் தெரியவில்லை. மெயின்ஸ்ட்ரீம் மீடியாக்கள் என்று சொல்லப்படும் இந்திய ஊடகங்களில் பெரும்பாலானவை பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துத்துவ கொள்கைக்கு உடன்பட்டுச் செயல்படுவது புலனாகிறது. அந்த வகையில் இந்த ஊடகங்கள் பாசிச கும்பலின் இந்துத்துவ கருத்துகளை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சங்கிகளின் கருத்துக்களைப் பரப்பும் ஊடகங்கள் ஊக்குவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் அதே சூழலில், இந்த பாசிசக் கும்பலின் சதித்திட்டங்களை அம்பலப்படுத்தும் சுதந்திர ஊடகங்கள் (Independent Media) பல கடுமையான அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றன. பாகிஸ்தான் இந்தியா இடையிலான தாக்குதல்கள் தீவிரமடைந்தபோது, இருதரப்பிலும் சேதங்கள் ஏற்பட்டன. எனினும் தனது பிம்பம் சுக்குநூறாகி விடும் என்ற அச்சத்திலிருந்த மோடி-அமித்ஷா கும்பல், பாகிஸ்தான் அழிக்கப்பட்டுவிட்டதாகக் கட்டுக்கதைகளைப் பரப்பி வந்தது.
கடந்த மே 8 ஆம் தேதி, ”இந்திய இராணுவத்தின் ரஃபேல் போர் விமானம் ஒன்று பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டது” என்று சி.என்.என் (CNN) வெளியிட்ட செய்தியைப் பதிவிட்டதற்காக, ”தி வயர்” (The Wire) ஆங்கில செய்தி இணையதளம் பாசிசக் கும்பலால் முடக்கப்பட்டது. “சுமார் 15 மணிநேரம் வரை முடக்கப்பட்டிருந்த நிலையில், எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி இணையதளம் முடக்கப்பட்டதாகவும், சர்ச்சை எனக் குறிப்பிடப்படும் கட்டுரையை நீக்குமாறு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடமிருந்து எச்சரிக்கை கடிதம் கூட வரவில்லை” என்று தி வயர் இணையதளம் கூறியுள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானிலுள்ள அப்பாவி மக்கள் தான் கொல்லப்படுகிறார்கள் என்று கூறி அதனை எதிர்த்துக் குரலெழுப்பி வந்த கேரளாவைச் சேர்ந்த ரெஜாஸ் சைய்தீக் என்ற பத்திரிகையாளர், மாவோஸ்டுகளுடன் தொடர்பில் உள்ளவர் என்று கூறி நாக்பூர் போலீசால் இரண்டு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியின மக்களின் மீதான இராணுவத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து தொடர்ச்சியாகப் போராடி வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க: தேசவெறி போர் வெறியைக் கிளப்பிவிடும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் | தோழர் சாந்தகுமார்
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் என்பது அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன. சமீபத்தில், ‘எல்லைகளற்ற செய்தியாளர்கள்’ (RSF) எனப்படும் பாரீஸை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேசிய நிறுவனம் வெளியிட்டுள்ள உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில் (2025), 180 உலக நாடுகள் உள்ள அந்த தரவரிசைப் பட்டியலில், இந்தியா 151வது இடத்தைப் பெற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், “தி இந்து” (The Hindu) செய்தித்தாளின் இயக்குநர், என்.ராம் அவர்கள் கூறுகையில், “கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்தே ஊடகச் சுதந்திரம் குறைந்து கொண்டே வந்துள்ளது. மேலும் இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட ‘பெகாசஸ்’ (Pegasus) போன்ற உளவுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஊடகங்கள் கண்காணிக்கப்பட்டு வருவது வருத்தம் அளிக்கிறது. அரசின் அடக்குமுறைகளைக் கேள்வி கேட்கும் பல சுதந்திர ஊடகங்கள் இன்னும் செயல்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.
ஆம், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் நிகழும் ஆளும் வர்க்கத்தின் சதித்திட்டங்களை அம்பலப்படுத்தியும் மக்களின் ஒற்றுமையின் அவசியத்தை எடுத்துரைத்தும் சுதந்திர ஊடகங்களே தொடர்ந்து எழுதிவருகின்றன. உலகெங்கிலும் பாசிஸ்டுகளின் கை மேலோங்கிவரும் இச்சூழலில், பாசிசக் கும்பலை வீழ்த்துவதற்கும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் ஊடகங்களின் பங்கு இன்றியமையாததாகும்.
எனவே மக்களுக்காக இயங்கும் ஊடகங்களை ஆதரிப்பதும் அவை அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் போது, அரசை எதிர்த்துக் குரலெழுப்புவதும் புரட்சிகர இயக்கங்கள், ஜனநாயக சக்திகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் அனைவரின் கடமையாகும்.
மேலும், மக்கள் மத்தியில் பொய் செய்திகளைப் பரப்புவதுடன் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிடும் பாசிசக் கும்பலின் ஊதுகுழல் ஊடகங்களை உழைக்கும் மக்கள் புறக்கணிப்பதும், அவற்றைத் தடை செய்ய நிர்ப்பந்தித்துப் போராடுவதும் இன்றியமையாததாகும்.
மக்கள் அதிகாரக் கழகம்,
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம்
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram