திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் பள்ளிக்கல்லூரி மாணவர்களிடையே சாதிவெறி போதையும் அரிவாள் கலாச்சாரமும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. நாங்குநேரியில் நன்றாக படித்த காரணத்திற்காக பள்ளி மாணவன் சின்னதுரை மீது ஆதிக்கச் சாதிவெறிப்பிடித்த சக மாணவர்கள் அரிவாளைக் கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியது; தூத்துக்குடியில் கபடி போட்டியில் வெற்றி பெற்றதற்காக தேவேந்திர ராஜா என்ற மாணவன் அரிவாளால் வெட்டப்பட்டது; தூத்துக்குடியில் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் எட்டாம் வகுப்பு மாணவனான ரஹ்மத்துல்லாஹ் அரிவாள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது ஆகிய சம்பவங்கள் தென்மாவட்டங்களில் மாணவர்கள் மத்தியில் அரிவாள் கலாச்சாரம் தீவிரமடைந்து வருவதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
இவ்வாறு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சக மாணவர்களாலேயே அரிவாளால் தாக்கப்படுவது தமிழ்நாட்டில் புதிய-அபாயகர போக்காக வளர்ந்து வருகிறது. மேற்குறிப்பிட்ட தாக்குதல்களில் மட்டுமின்றி தென்மாவட்டங்களில் தீவிரமடைந்துவரும் சாதித் தாக்குதல்கள் ஒவ்வொன்றிலும் 18 வயதுக்குட்பட்ட, அதிலும் 17 வயதுடைய சிறுவர்களே கூலிப்படையைப் போல பயன்படுத்தப்படுகின்றனர்.
ஆனால், தமிழ்நாட்டில் கொலைக் குற்றங்களில் சிறுவர்கள் ஈடுபடுவது குறித்து சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “சிறுவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களை மூளைச்சலவை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மற்றபடி, இது சாதிப் பிரச்சினை அல்ல, ஊடகங்கள் அவ்வாறு உருவகப்படுத்த வேண்டாம். தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் சாதிப் பிரச்சினை இல்லை. குறிப்பாக திருநெல்வேலியில் இல்லவே இல்லை. தனிப்பட்ட பிரச்சினை சாதிப் பிரச்சினையாக பெரிதுப்படுத்தப்படுகிறது” என அவர் அப்பட்டமாக பொய்யுரைத்தது ஜனநாயக சக்திகளிடையே எதிர்ப்பை கிளப்பியது.
அப்பாவு மட்டுமின்றி தி.மு.க. அரசு-அதிகார வர்க்கம், அதன் ஊடகங்கள் என அனைவரும் தென்மாவட்டங்களில் சிறுவர்கள் மத்தியில் வளர்ந்துவரும் சாதி மற்றும் அரிவாள் கலாச்சாரத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் அதனை மூடிமறைப்பதிலேயே முனைப்புக் காட்டுகின்றன. ஆனால், தென்மாவட்டங்களில் நடந்துகொண்டிருக்கும் சாதியத் தாக்குதல்களும் படுகொலைகளும் தென்மாவட்டங்கள் சாதித் தாக்குதலின் குவிமயமாக மாறிக்கொண்டிருக்கிறது என்கிற யதார்த்தத்தை நம் முகத்தில் அறைகின்றன.
சாதிவெறியூட்டும் ஆதிக்கச் சாதி சங்கங்கள்!
மாணவர்கள் மத்தியில் அரிவாள் கலாச்சாரமும் சாதியத் தாக்குதல்களும் அதிகரிப்பதை ‘சிறுவர்களுக்கு இடையிலான சாதாரண மோதல்’ என்றே தி.மு.க. அரசும் அதன் ஊடகங்களும் சித்தரிக்கின்றன. ஆனால், அரிவாள் கொண்டு தாக்குவது என்கிற அளவிற்கு வீரியம் பெற்றுள்ள தாக்குதல்களை பற்றி சற்று சிந்தித்தாலே மாணவர்களை பின்னாலிருந்து யாரோ இயக்குகிறார்கள் என்கிற உண்மையை நம்மால் புரிந்துகொள்ள முடியும். உண்மையில், ஆதிக்கச் சாதி சங்கங்களே மாணவர்கள்-இளைஞர்கள் மத்தியில் சாதிவெறியை கட்டவிழ்த்துவிடுவதில் முதன்மை பங்காற்றுகின்றன.
தமிழ்நாட்டிலேயே அதிகளவிலான சாதி சங்கங்கள் தென்மாவட்டங்களில்தான் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கணக்கில் இயங்கும் தேவர் (முக்குலத்தோர்) மற்றும் நாடார் சாதி சங்கங்கள் சாதிவெறியூட்டும் வேலைகளை அனைத்து வழிகளிலும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
கே.என். இசக்கிராஜா தேவர், ஏ. மூர்த்தி தேவர், ஸ்ரீவை சுரேஷ் தேவர் போன்ற சாதிவெறியர்கள் தேவர் சாதி மக்களிடையேயும், சுபாஷ் பண்ணையார், ராக்கெட் ராஜா, ஹரி நாடார், பந்தல் ராஜா போன்ற சாதிவெறியர்கள் நாடார் மற்றும் வெள்ளாளர் சமூகத்தினரிடையேயும் சாதிய சங்கங்களின் மூலமாக வெளிப்படையாக ஆதிக்கச் சாதிவெறியை ஊட்டுகின்றனர். இவர்கள் அனைவரும் பிற சாதி மக்களுக்கு எதிராக, குறிப்பாக பட்டியலின மக்களுக்கு எதிராக, வெறுப்புப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டு, வன்முறையை தங்களது சாதியின் வரலாற்று அடையாளமாக சித்தரித்து சாதிக் கலவரத்தை உண்டாக்க முயற்சித்து வருகின்றனர். பள்ளிக் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களிடையே பரவிவரும் அரிவாள் கலாச்சாரத்திற்கு அடித்தளமிடுபவர்களும் பட்டியலின மாணவர்களை வெட்டுவதற்கு தைரியமூட்டுபவர்களும் இதுபோன்ற ஆதிக்கச் சாதி சங்கங்களின் தலைவர்களே ஆவர்.
சான்றாக, சில மாதங்களுக்கு முன்னர் திருநெல்வேலியில் ஆதிக்கச் சாதிவெறியர்கள் வேகமாக கார் ஓட்டிச் சென்றதை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக பாலிடெக்னிக் மாணவர் மனோஜ் ஆதிக்கச் சாதிவெறியர்களால் வெட்டப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து ஆதிக்கச் சாதியினரின் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது, “இங்குள்ளவர்கள் பட்டியல் சாதி மக்களுடன் சாதி பார்க்காமல்தான் பழகி வந்தோம். ஆனால், சாதி சங்கங்களால் எங்களிடம் ஆதிக்கச் சாதிவெறி மனப்பான்மை வளர்த்துவிடப்படுகிறது. எங்கள் ஊரில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சாதி சங்கங்களைச் சேர்ந்தவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். சாதி ரீதியான பேனர்கள் வைப்பது, சாதிவெறியூட்டும் பாடல்களை வேண்டுமென்றே ஒலிப்பது, பிற சாதியினரைப் பற்றி பொய்-வெறுப்புப் பிரச்சாரங்களை மேற்கொள்வது என்று எல்லா வகைகளிலும் ஆதிக்கச் சாதி மனப்பான்மையை நிலைநாட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்” என்று ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவர்கள்- இளைஞர்களே வெளிப்படுத்தினர்.
இந்த ஆதிக்கச் சாதி சங்கங்கள் மாணவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள் மூலமாக அவர்களை சாதிய வலைக்குள் கவர்ந்திழுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, சாதிவெறியர்களை தலைவராக பாவித்து சாதிப் பாடல்களுக்கு ரீல்ஸ்-வீடியோ போடும் கலாச்சாரம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதில் எந்தவித பேதமுமின்றி அனைத்து சாதியைச் சேர்ந்த ஆண்-பெண் என இருபாலரும் ஈடுபடுத்தப்படுகின்றனர். “வீர பரம்பர டா வீறு கொண்ட வம்சமடா… பகைச்சா பதற வைக்கும் பரம்பரைக்கு சொந்தமடா”, “எங்க அக்குளுக்குள்ள எந்நாளும் வீச்சருவா இருக்கும்”, “வேலுக்கம்பு வீச்சருவா எங்க சாமிடா” போன்ற சாதிவெறியூட்டும் பாடல் வரிகள் பின்னணியில் ஒலிக்க, கையில் அரிவாளுடன் நிற்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரப்பப்படுவது ஆதிக்கச் சாதி மாணவர்களிடம் சாதிவெறியையூட்டி அரிவாளை கையிலெடுக்கவே ஊக்குவிக்கின்றன.

கவுண்டம்பாளையம், திரௌபதி, திலகர், சண்டியர் போன்ற ஆதிக்கச் சாதிவெறியூட்டும் திரைப்படங்கள், அதன் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் வன்மத்தை கொட்டும் பேச்சுகள் ஆகியவை ஏற்கெனவே சாதிய வலைக்குள் சிக்கியுள்ள இளைஞர்களிடையே சாதிய வன்மத்தை தீவிரப்படுத்துகின்றன. ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிய தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கோகுல்ராஜ் படுகொலையின் முக்கிய குற்றவாளியான யுவராஜ் சமீபத்தில் பெயிலில் வெளிவந்தபோது, அவன் தியாகியைப் போல் கொண்டாடப்பட்டதும் அதனை தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்ததும் ஆதிக்கச் சாதிவெறி வன்மத்திற்கு தீனிப்போட்டன.
அதேபோல், முத்துராமலிங்கத் தேவர் போன்ற சாதிவெறித் தலைவர்களின் சிலைகளை நிறுவி பாதுகாத்து சாதிப் பெருமையைப் பேசுவதும், சமூகத்திற்காக தியாகம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., இமானுவேல் சேகரன் போன்ற தலைவர்களை சாதியத் தலைவர்களாக சித்தரித்துக் கொண்டாடும் அவலமும் தொடர்கிறது. இவ்வாறு பண்பாட்டு ரீதியாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடத்தில் சாதிவெறியைத் தூண்டும் வேலைகளையே சாதிவெறி சங்கங்கள் செய்துவருகின்றன. இவற்றின் மூலம் எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் ஒருவன் சாதிய சிந்தனையிலேயே இருத்தி வைக்கப்படுகிறான்.
இவையன்றி, பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற வன்முறையைத் தூண்டும் ஆன்லைன் விளையாட்டுகள் மாணவர்களிடத்தில் வன்முறையை ஊக்குவிக்கின்றன. அதேபோல், மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கப்படும் சாதிவெறி மிருகத்தனத்தை உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கேற்ப தென்மாவட்டங்களில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா, கூல்-லிப் போன்ற போதைப்பொருள் கலாச்சாரம் இயல்பாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளிலேயே மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்கள் சரளமாக வலம்வருகின்றன. இதனை பரப்பும் போதைப்பொருள் மாஃபியா கும்பலால் போலீசின் துணையின்றி இத்துணை சுதந்திரமாக செயல்பட முடியாது என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. இது தென்மாவட்டங்களில் மாணவர்கள் மத்தியில் சாதிவெறி ஊட்டப்படுவது, ஆதிக்கச் சாதி சங்கங்கள்-போதைபொருள் மாஃபியா கும்பல்-போலீசு ஆகியவற்றின் ஒற்றுமையுடன் மிகவும் நிறுவனமயமாக நடக்கிறது என்பதை உணர்த்துகிறது.
தீர்ப்பு எழுதும் தமிழ்நாடு போலீசு!
தமிழ்நாட்டில் தீவிரமடைந்துவரும் சாதித் தாக்குதல்களை தனிப்பட்ட தாக்குதலாக சித்தரிப்பதை தி.மு.க. அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இதனை தமிழ்நாடு போலீசு முன்னின்று செய்கிறது. இதற்கு சில சமீபத்திய சான்றுகளை சுட்டிக்காட்ட முடியும்.
கபடி போட்டியில் வென்றதற்காக தேவேந்திரராஜா வெட்டப்பட்ட சாதியக் கொடூரத்தை இளைஞர்களுக்கு இடையே நடந்த கைகலப்பு மோதலாகவே போலீசு சித்தரித்தது. மேலும், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த லட்சுமணனின் தங்கையை தேவேந்திரராஜா காதலித்து வந்ததாகவும் அதன் காரணமாக தேவேந்திரராஜா மீது லட்சுமணன் தாக்குதல் நடத்தியதாகவும் அப்பட்டமான பொய்யைப் பரப்பி போலீசு கீழ்த்தரமாக நடந்துகொண்டது. இதன்மூலம் இச்சம்பவத்தை சாதிவெறிச் செயல் என்ற கோணத்திலிருந்து திசைத்திருப்பி இளைஞர்களுக்கு இடையிலான முன்விரோத மோதல் என்ற வட்டத்திற்குள் சுருக்க முயன்றது. ஆனால், தேவேந்திரராஜாவிற்கு நடந்தது அப்பட்டமான சாதியத் தாக்குதலே, முன்விரோதம் போன்ற வேறெதுவும் காரணமல்ல என்பதை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
எட்டாம் வகுப்பு மாணவனான ரஹ்மத்துல்லாஹ் தாக்கப்பட்டபோது, இரு மாணவர்களுக்கிடையில் பென்சில் பிரச்சினை கடந்த ஒரு மாத காலமாகவே இருந்து வந்ததாகவும் அந்த மோதலில் ரஹ்மத்துல்லாஹ் அரிவாளால் வெட்டப்பட்டதாகவும் பாளையங்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ் தெரிவித்துள்ளார். ஒரு பென்சில் பிரச்சினைக்காக 13 வயதேயான சிறுவன் புத்தகப்பையில் அரிவாளை எடுத்துவந்து சக மாணவனை வெட்டுவான் என்பதை குழந்தை கூட நம்பாது. ஆனால், போலீசுதுறையோ இது மாணவர்களுக்கு இடையிலான பிரச்சினை மட்டுமே, இதில் சாதி ரீதியிலான நோக்கம் எதுவுமில்லை என்று தயங்காமல் பொய்கூறுகிறது.
அதேபோல், நாங்குநேரி மாணவன் சின்னதுரை கடந்த மாதத்தில் மீண்டும் தாக்கப்பட்டபோது, “சின்னதுரை மீதான முந்தைய சாதித் தாக்குதலுக்கும் தற்போதைய தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை. இது தனிப்பட்ட விவகாரம்” என்றார் போலீசு துணை ஆணையர் சந்தோஷ். “சின்னதுரையை வெட்டியது ஒரு பிக்-பாக்கெட் கும்பல். அவரிடம் காசு இல்லை என்பதால் அவரை வெட்டியுள்ளது” என்று தமிழ்நாடு போலீசு டி.ஐ.ஜி. தெரிவித்தார். சின்னதுரைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் நண்பர்களைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று போலீசிடம் சொல்லிவிட்டுச் சென்றபோதே இத்தாக்குதல் நடந்ததாகவும் கூறி சின்னதுரைக்கு உரிய பாதுகாப்பு வழங்காமலிருந்த தனது தவறை மறைத்து சின்னதுரை மீது பொய்குற்றம் சுமத்தியது தமிழ்நாடு போலீசு. மேலும் கிரண்டர் (Grindr) என்ற எல்.ஜி.பி.டி.க்யூ. (LGBTQ+) சமூகத்தினருக்கான செயலியை சின்னதுரை பயன்படுத்தி வந்ததாகவும் அதில் அறிமுகமானவரை சந்திக்க சென்றபோதே இத்தாக்குதல் நடந்ததாகவும் சில போலீசு அதிகாரிகள் பொய்யைப் பரப்பியதையடுத்து சமூகவலைத்தளம், ஊடகங்களில் சின்னதுரை அவமானப்படுத்தப்பட்டார்.
இதன்மூலம் சாதியத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கும் வேலையை போலீசு செய்து வருகிறது. சாதித் தாக்குதல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் அதனை மூடிமறைப்பதற்கான வேலைகளில் போலீசு ஈடுபடுவதுடன் எந்தவித முறையான விசாரணையும் இன்றி வழக்குகளில் தீர்பெழுதும் பணியையும் தானே ஏற்று செய்கிறது.
உண்மையில், மாணவர்களை சாதிவெறியர்களாக மாற்றும் சாதிவெறித் தலைவர்களை சிறையிலடைப்பதை விட்டுவிட்டு அவர்களுக்கு 24 மணிநேரமும் உயர்மட்ட பாதுகாப்பளிக்கும் பணியைதான் போலீசு மேற்கொண்டு வருகிறது. போலீசின் துணையுடனேயே சாதி சங்கங்களின் தலைவர்கள் சுதந்திரமாக உலா வருகின்றனர்.
ஆதிக்கச் சாதித் தலைவர்கள் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவற்றில் தலையிடுவதற்கும் சாதி ரீதியாக மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கும் இந்துத்துவ வர்ணாசிரம-சனாதன கருத்துக்குப் பலியாகியுள்ள போலீசு துறை உதவிபுரிகிறது என்பதே களநிலவரம். “அவன நீ என்கவுண்டரில் போட்டு தள்ளு. முடியலன்னா எங்ககிட்ட விட்டுவிடு. நாங்க பார்த்துக்கிறோம்” என்று சாதிவெறியர்கள் போலீசுக்கு உத்தரவிடும் அளவிற்கு தமிழ்நாட்டில் ஆதிக்கச் சாதிவெறியர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த போலீசு துறையிலும் பலர் ஆர்.எஸ்.எஸ்-இன் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு அவ்வமைப்பின் மறைமுக கைக்கூலிகளாக செயல்படுகின்றனர். சாதித் தாக்குதல்கள் தடுத்துநிறுத்தப்படாமல் அது தீவிரமடைந்து வருவதற்கு இதுவும் மிகமுக்கியமான காரணமாகும். அதேபோல், சாதிக் கொடுமைகளை அனுபவிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பல அடக்குமுறைகளையும் மீறி குற்றவாளிகள் மீது புகாரளிக்க முன்வந்தால், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக சித்தரித்து அவர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்கிறது போலீசு. இதனை எதிர்த்து போராடினால் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொலை செய்யவும் துணிகிறது.
தமிழ்நாட்டில் வேர்பரப்பும் பாசிச சக்திகள்
கள்ளமௌனம் காக்கும் தி.மு.க. அரசு!
2014-ஆம் ஆண்டு ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றினாலும், பாசிச கும்பலுக்கு தமிழ்நாடு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது. பிற மாநிலங்களில் மதக்கலவரத்தையும் இனவெறியையும் தூண்டிவிட்டு அரசியல் செய்யும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. மதவெறிக் கும்பல் எவ்வளவு முயற்சித்தும் தமிழ்நாட்டில் மதக்கலவரங்களை ஏற்படுத்த முடியவில்லை. எனவே தமிழ்நாட்டில் வேரூன்றியிருக்கும் சாதிவெறியைத் தூண்டிவிட்டு சாதிக் கலவரத்தை உருவாக்கி அதன்மூலம் தமிழ்நாட்டில் காலூன்றிவிடலாம் என்ற எண்ணத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாகவே அனைத்து சாதி சங்கங்களிலும் ஊடுருவி இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடத்தில் சாதி வெறியூட்டும் வேலையை செய்து வருகிறது.
குறிப்பாக, தென்மாவட்டங்களில் உள்ள சாதி சங்கங்களில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் கும்பல் முன்னெப்போதையும் விட தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடுதான் அதிகரித்துவரும் சாதித் தாக்குதல்களும் படுகொலைகளும். சாதி சங்கத் தலைவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு நைச்சியமாக அடியாள் வேலை பார்க்கின்றனர் என்பதே உண்மையாகும்.
அந்தவகையில், தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் உள்ள பா.ஜ.க. எதிர்ப்புணர்வின் காரணமாக நேரடியாக இந்துத்துவ அரசியலை மேற்கொள்ள முடியாத பாசிச கும்பல் சாதி சங்கத் தலைவர்கள் மற்றும் சாதி ரீதியாக அரசியல் செய்பவர்கள் மூலம் தனது இந்துத்துவக் கொள்கையை அமல்படுத்தி வருகிறது. தற்போது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் பா.ஜ.க.-வின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது சாதி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ்-இன் ஊடுருவலை தீவிரப்படுத்தி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மீண்டும் சாதிக் கலவரங்களை இன்னும் வீரியமாக கட்டவிழ்த்து விடுவதற்கான சதித்திட்டமே ஆகும்.

இதன் காரணமாக, வடமாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் மீது கும்பல் படுகொலைகள் நடப்பது போல தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிவெறி கொடுமைகள் அரங்கேறும். சாதிய சங்கங்களில் ஊடுருவி அந்தந்த சாதி மக்களை பாசிஸ்டுகள் தங்களுடைய அடித்தளமாக மாற்றிக்கொள்வார்கள். பாசிசத்திற்கு எதிராக வீரியமாகக் களமாடக் கூடிய மாணவர்களும் இளைஞர்களும் பாசிஸ்டுகளின் அடித்தளமாக மாற்றப்படுகின்றனர் என்பது மிகப்பெரும் ஆபத்தாகும்.
இவற்றின் விளைவாக, தமிழ்நாட்டில், அதிலும் குறிப்பாக தென்மாவட்டங்களில், தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பு மிகப்பெரும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. ஆனால், தனது ஆட்சியை சமூக நீதி ஆட்சி என்றும் பாசிசத்திற்கு எதிரான ஆட்சி என்றும் தம்பட்டம் அடித்துக்கொள்ளக் கூடிய தி.மு.க. இப்பிரச்சினைக்கு முகங்கொடுக்க கூட தயாராக இல்லை.
சாதியக் கட்டமைப்பை எதிர்ப்பதாக கூறிக் கொண்டாலும் வெறும் சீர்திருத்தங்களை மட்டுமே கொண்டுவந்து தங்களின் ஓட்டு அரசியலுக்காக இந்த வர்ணாசிரம கட்டமைப்பை தக்கவைக்கவே முயற்சிக்கிறது. வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தில் இரண்டு ஆண்டுகளாக குற்றவாளிகளை பாதுகாத்துவந்த தி.மு.க. அரசு, தற்போது பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளி கூண்டில் நிறுத்தியிருப்பது அதன் சாதியத் தன்மையை வெளிக்காட்டுகிறது.
அதேபோல், 2023-இல் மாணவன் சின்னதுரை வெட்டப்பட்ட சம்பவத்தின் போது, மாணவர்களிடம் குடிகொண்டுள்ள சாதிவெறியை ஒழிப்பதற்கும் சாதியத் தாக்குதல்களைத் தடுப்பதற்கும் பரிந்துரைகளை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது தி.மு.க. அரசு. ஆய்வுகள் முடித்து 2024-இல் கல்வித்துறை அமைச்சரிடம் அவ்வறிக்கை ஒப்படைக்கப்பட்டாலும் தற்போது வரை அதன் பரிந்துரைகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளது தி.மு.க. அரசு.
16 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில், வருகை பதிவேட்டில் மாணவர்கள் குறித்த சாதி விவரங்கள் இடம்பெறக்கூடாது; உதவித்தொகை குறித்த விவரங்களை வகுப்பறையில் தெரிவிக்கக் கூடாது; சாதியைக் குறிக்கும் வகையில் பொட்டுகள் இடுவதையும் கயிறுகள் கட்டுவதையும் தடை செய்ய வேண்டும் உட்பட 20 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சமூகப் பணிகளில் கள நடவடிக்கைகளில் இறங்கும்போது மட்டுமே ஜனநாயகப்படுத்தப்படுவார்கள்; இதனை உறுதிப்படுத்தும் விதமாக அனைத்து பள்ளிகளிலும் எல்லா சாதி மாணவர்களையும் ஒருங்கிணைத்து “சமூக நீதி மாணவர் படை” என்ற மாணவர் அமைப்பை தொடங்க வேண்டும் என்பது போன்ற முக்கிய பரிந்துரைகளை கொடுத்துள்ள அவ்வறிக்கையை அமல்படுத்தினால் ஆதிக்கச் சாதியினரிடத்தில் எதிர்ப்பு கிளம்பும் என்பதற்காகவே தி.மு.க. அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, நம் களப்போராட்டங்களின் மூலமே சாதி வெறியாட்டங்களை முடிவுக்கு கொண்டுவர முடியும்.
அனைத்து சாதி மக்களுக்கு இருக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இந்துத்துவக் கட்டமைப்பை நீடிக்கச்செய்யவே ஆதிக்கச் சாதியினரிடையே தலித்துக்கள் எதிரிகளாக முன்னிறுத்தப்படுகின்றனர். நம் கண்முன்னே இளைய தலைமுறை திசைமாறிச் செல்வதைப் பார்த்துக்கொண்டு இனியும் அமைதி காக்கப் போகிறோமா? அல்லது இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கப்போகிறோமா?
தமிழ்நாடு அரசே!
- மக்களை மத, சாதிரீயாகப் பிளவுபடுத்தும் பா.ஜ.க- ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பலை தடை செய்! ஆதிக்கச் சாதி சங்கங்களைத் தடை செய்
- சாதிவெறியை தூண்டும் திரைப்படங்கள், பாடல்களை தடை செய்! நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை தமிழ்நாடு முழுவதிலுமுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் உடனே நடைமுறைப்படுத்து!
என முழங்குவோம். அதிகரித்துவரும் தலித் மாணவர்கள் மீதான சாதியத் தாக்குதல்களுக்கு எதிராக களப் போராட்டங்களைக் கட்டியமைக்க அமைப்பாய் திரள்வோம்!
ஜென்னி லீ
(புதிய ஜனநாயகம் – மே 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram