மேற்கு வங்கம்: ‘ஜெய் ஶ்ரீ ராம்’ற்கு மாற்று ‘ஜெய் ஜெகன்நாத்’ அல்ல

பா.ஜ.க-வை எதிர்ப்பதாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூறிக்கொள்வதென்பது, தேர்தலில் மட்டுமே எதிர்ப்பதாக உள்ளது. மாறாக பாசிச பா.ஜ.க நடைமுறைப்படுத்திவரும் இந்துத்துவக் கொள்கைகளையோ அதன் கார்ப்பரேட் சேவைகளையோ எதிர்ப்பதாகவும் அவற்றிற்கான கருத்தியல் ரீதியான மாற்றை முன்வைப்பதாகவும் இல்லை.

நாடு முழுவதும் தொழிலாளர் தின கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு அதாவது ஏப்ரல் 30ஆம் தேதி மேற்கு வங்கத்தில் ஜெகன்நாதர் கோவிலை நைச்சியமாகத் திறந்து வைத்துள்ளது மம்தா அரசு.

மேற்குவங்கம் மாநிலத்தில் அமைந்துள்ளது கடலோர நகரமான திகா. இங்கு சுமார் 22 ஏக்கர் நிலப்பரப்பளவில் 250 கோடி ரூபாய் செலவில் ஒடிசாவில் உள்ள ஜெகன்நாதர் கோவிலை ஒத்த கோவில் ஒன்றைக் கட்டியெழுப்பியுள்ளது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம்.

மேற்குவங்க மாநில மக்களின் வரிப்பணத்தை மட்டுமே பயன்படுத்தி கோவில் கட்டுமானத்திற்கான ஒட்டுமொத்த செலவும் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பா.ஜ.க கூட மத நிறுவனங்கள் பலவற்றின் நிதியுதவியைப் பயன்படுத்தித் தான் அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டியதென்றும், முழுவதுமாக மக்கள் வரிப்பணத்தை மட்டுமே பயன்படுத்தி மாநில அரசே மத ரீதியிலான கோவிலைக் கட்டியுள்ளது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்று அரசியல் ஆர்வலர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், எந்த ஒரு அரசாங்கமும் மதத்தை விளம்பரப்படுத்துவதற்கோ மேம்படுத்துவதற்கோ மக்களின் பொதுநிதியைப் பயன்படுத்தக் கூடாது என்று அரசியல் சாசனத்தின் பிரிவு 25, 26 மற்றும் 27ல் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அரசியல் சாசனத்தைத் தூக்கிப்போட்டு காலில் மிதித்துவிட்டு இத்தகைய நடவடிக்கையில் மம்தா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று கொந்தளித்து வருகின்றனர்.

இந்த கோவிலை மேற்குவங்கத்தின் பாரம்பரிய அடையாளச் சின்னமாக மம்தா பிரச்சாரம் செய்துவருகிறார். ஆனால் நம்மால் அவ்வாறு கருதமுடியாது. அம்மாநிலத்தின் மக்கள்தொகை சுமார் 10 கோடி ஆகும். இதில் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டிற்கும் கீழ் உள்ளனர்.‌ இந்தளவிற்குப் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மக்களைக்‌ கொண்டுள்ள போது, உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை மக்களின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல், சாதி, மதம் கடந்து அனைத்து மக்களின் பணத்தையும் ஒட்டச் சுரண்டி இந்துக்களுக்கான கோவிலைக் கட்டியிருப்பதென்பது, அம்மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.

ஆனால் பலரும் இதனை பா.ஜ.க-வின் இந்துத்துவத்திற்கு மம்தா கொடுத்த தக்க பதிலடி என்று பெருமை பீற்றிக் கொள்கின்றனர்.


படிக்க: ஆபரேஷன் சிந்தூரைக் காரணம் காட்டி கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் பாசிச மோடி அரசு!


ராமர் கோவிலுக்குச் செய்த பூஜையைப் போன்றே ஏப்ரல் 29ஆம் தேதி அன்று பிரதிஷ்டை பூஜையை நடத்தியுள்ளது. இதில் பூசாரிகள், துறவிகள், முக்கிய கட்சித் தலைவர்கள், பிரபல நடிகர்கள் போன்ற‌ சிலர் மட்டுமே பங்குகொள்ள அனுமதிக்கப்பட்டதாகவும் மம்தாவின் சொந்த கட்சியினரே அழைக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் ஒருவர் கூட இந்நிகழ்வில் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மக்களின் உழைப்பைச் சுரண்டி கட்டப்பட்ட இந்த கோவிலில் வழிபட மக்களை அனுமதிக்கவில்லை என்பது எவ்வளவு அயோக்கியத்தனம் என்று பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, கோவில் திறப்பு நாளான ஏப்ரல் 30ஆம் தேதியன்று இறைச்சிக் கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டதாகவும் இஸ்லாமியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இவ்வாறு தொடர்ச்சியாக இஸ்லாமிய வெறுப்பைக் கக்கி, இந்துக்களின்‌ வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, ராமநவமி கொண்டாட்டம் எனும் பெயரில் அந்நாளை கலவர நாளாக மாற்ற சங்பரிவாரக் கும்பலை அனுமதித்தது, பா.ஜ.க நடத்திய மகா கும்பமேளாவிற்குப் போட்டியாக ஹூக்லி மாவட்டத்தில் திரிவேணி சங்கம கும்பமேளா நடத்தியது என இப்படிப் பல வகைகளில் பா.ஜ.க-வின் இந்துத்துவ கொள்கைக்கு மாற்றாக மிதவாத இந்துத்துவத்தையே மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரசு முன்னிறுத்துகிறது.

2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியதன்மூலம் மேற்குவங்கத்தில் அதன் செல்வாக்கு அதிகரித்திருப்பது நிரூபணமானது. இதற்குப் பிறகே இந்துக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக இந்த கோவில் கட்டுமான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2026 ஆம் ஆண்டு மேற்குவங்கம் உட்பட 4 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், எல்லா இடங்களிலும் கலவரத்தைத் தூண்டிவிட்டும் இந்து முனைவாக்கத்தை ஏற்படுத்தியும் தேர்தலில் வெற்றிபெறத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்.


படிக்க: மணிப்பூர்: இரண்டு ஆண்டுகளைக் கடந்து தொடரும் பாசிச கும்பலின் நரவேட்டை!


பா.ஜ.க-வை எதிர்ப்பதாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூறிக்கொள்வதென்பது, தேர்தலில் மட்டுமே எதிர்ப்பதாக உள்ளது. மாறாக பாசிச பா.ஜ.க நடைமுறைப்படுத்திவரும் இந்துத்துவக் கொள்கைகளையோ அதன் கார்ப்பரேட் சேவைகளையோ எதிர்ப்பதாகவும் அவற்றிற்கான கருத்தியல் ரீதியான மாற்றை முன்வைப்பதாகவும் இல்லை.

இறுதியில் இது இந்துத்துவத்திற்குப் பலியாவதாகவே போய் முடியும். திரிணாமுல் கட்சியின் இந்த திட்டமானது 2026 தேர்தலில் உதவுமா என்பதை இதற்கு முன்னர் நடந்துமுடிந்த ஒடிசா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய தேர்தல் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. பாசிச பா.ஜ.க-வின் இந்துத்துவக் கொள்கைக்கு முன்னால் மிதவாதமோ கவர்ச்சிவாதமோ என்றைக்கும் எடுபடாது‌. ‘ஜெய் ஶ்ரீ ராம்’ற்கு மாற்று ‘ஜெய் ஜெகன்நாத்’ அல்ல என்பதையே ஒடிசாவின் நிலைமை நிரூபித்துள்ளது.

ராமருக்கு மாற்றாக பிராந்தியளவில் புகழ்பெற்ற தெய்வங்களின் கோவில்களைக் கட்டுவது, துர்கா பூஜை நடத்துவது, ராமநவமியைத் உயர்த்திப்பிடிப்பது ஆகியவற்றை விடுத்து மம்தா அரசாங்கம் பாசிச எதிர்ப்புத் திட்டங்களை முன்வைத்து மக்களுடன் களத்தில் இணைந்து செயல்பட முன்வரவேண்டும்.


மக்கள் அதிகாரக் கழகம்,
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம்
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க