பென்டிங்க் பள்ளி நிர்வாகமே, ஏழை மாணவர்களின் கல்வியைப் பறிக்காதே!

21.04.2025

பென்டிங்க் பள்ளி நிர்வாகமே,
ஏழை மாணவர்களின் கல்வியைப் பறிக்காதே!

சென்னை வேப்பேரியில் இயங்கி வரும் “பென்டிங்க்” (Bentinck) மகளிர் மேல்நிலைப் பள்ளியின் முன்பு நேற்று (மே 20) பள்ளி மாணவிகள், முன்னாள் மாணவிகள் பெற்றோர்கள் என அனைவரும் அரசு உதவி பெறும் பிரிவில் சேர்க்கை முறையாக நடைபெறாததைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.

வேப்பேரியில் இயங்கி வரும் “பென்டிங்க்” மகளிர் மேல்நிலைப் பள்ளி என்பது 188 – ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியாகும்.

இந்த பென்டிங்க் மகளிர் மேல்நிலைப் பள்ளி என்பது அரசு உதவி பெறும் பிரிவு மற்றும் சுயநிதி கல்வி பிரிவு என இரண்டு பிரிவுகளைக் கொண்டு இயங்கி வருகிறது.

அரசு உதவி பெறும் பள்ளியான பென்டிங்க் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முழுக்க முழுக்க ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகள் அதிகம் படித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் பள்ளி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பிரிவில் சேர்க்கையை முறையாக நடத்தவில்லை. இதன் விளைவு 2,000 மாணவிகள் படித்து வந்த அரசு உதவி பெறும் பிரிவில் தற்போது 500 மாணவிகள் மட்டுமே படித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதைக் காரணம் காட்டி 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்திருக்கிறது பள்ளி நிர்வாகம். மேலும் 10 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்யப் போவதாக 13/05/2025 அன்று முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளியில் சேர வரும் மாணவிகளை சுயநிதி கல்வி பிரிவில் சேரச் சொல்லி பள்ளி நிர்வாகம் வற்புறுத்துகிறது. ஏற்கெனவே அரசு உதவி பெறும் பிரிவில் படித்து வரும் மாணவர்களுக்கு எந்த காரணங்களும் இல்லாமல் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

பென்டிங்க் மகளிர் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

ஏற்கெனவே 2,000 மாணவிகள் படித்து வந்த அரசு உதவி பெறும் பிரிவில் முறையாக சேர்க்கையை நடத்தாததால் பல ஏழை எளிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு உதவி பெறும் பிரிவை முற்றிலும் ஒழித்துவிட்டு சுய நிதி கல்வி பிரிவில் மட்டும் சேர்க்கை நடத்துவது என்பது ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி உரிமையை முற்றிலும் பறிப்பதாகும்.

எனவே தமிழ்நாடு அரசு இதில் உடனடியாக தலையிட்டு அரசு உதவி பெறும் பிரிவில் சேர்க்கையை முறையாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், அப்பள்ளியை முழுமையாக அரசு உதவி பெறும் பள்ளியாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.

அப்பள்ளியில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் மிகப் பெரிய அளவில் அவதிப்பட்டு வருகின்றனர். அதையும் உடனடியாக தமிழ்நாடு அரசு சரி செய்து கொடுக்க வேண்டும் என புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்புக் குழு கேட்டுக்கொள்கிறது.


மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க