21.04.2025

சென்னைப் பல்கலைக்கழக கல்விக் கட்டண உயர்வை அனுமதியோம்!

ன்றைய சூழலில் தனியார் கல்லூரிகள் மிகப்பெரும் அளவில் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருவதால், ஏழை-எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த மாணவர்களால் அதிகளவில் பணம் செலுத்தி அங்கு படிக்க முடிவதில்லை. அரசு கல்லூரி-பல்கலைக்கழகங்கள்தான் அம்மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான ஆதாரமாக உள்ளன.

அதில் தென்னிந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னைப் பல்கலைக்கழகம் முதன்மையானது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலை-அறிவியல், மொழியியல், உடற்கல்வி என பல்வேறு துறைகளில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்.

ஆனால், பிற அரசு கல்லூரிகள்-பல்கலைக்கழகங்களைப் போலவே சென்னைப் பல்கலைக்கழகமும் முறையாகப் பராமரிக்கப்படாமல் நிதி ஒதுக்கப்படாமல் சீரழிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி திட்டமிட்டே தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் ஒன்றிய-மாநில அரசுகளிடமிருந்து நிதியைப் பெறுவதற்கும் நேரடியான வழிகளைக் கையாள்வதற்குப் பதிலாக, மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உயர்த்துவது என்ற குறுக்கு வழியைக் கையிலெடுத்திருக்கிறது சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம்.

அதாவது, வருகின்ற 2025-26 கல்வியாண்டு முதல் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உயர்த்துவதற்கான ஆலோசனைக் கூட்டத்தை கடந்த மே 16 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பேராசிரியர்களுடன் இணைந்து நடத்தியிருக்கிறது சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம். இந்த கட்டண உயர்வுக்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் அதிகமான தொகையையே மாணவர்களிடத்தில் வசூலித்துவரும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் தற்போது மொத்தமாக கட்டணத்தையே உயர்த்த உள்ளது. இதனால், தற்போது ஒரு ஆண்டுக்கு (இரண்டு செமஸ்டர்) கட்டப்படும் கல்விக் கட்டண தொகையை ஒரே செமஸ்டருக்கு கட்டும் அளவிற்கு கல்விக் கட்டணம் இரட்டிப்பாக உள்ளது.

அதாவது, இதற்கு முன்னர் ஓர் ஆண்டுக்கு அதிகபட்சமாக வசூலிக்கப்பட்டுவந்த ரூ.4,522 இனி ஒரு செமஸ்டருக்கே வசூலிக்கப்படும் பேரபாயம் உருவாகியுள்ளது. இது ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமை மீது தொடுக்கப்படும் அப்பட்டமான தாக்குதல் ஆகும்.

உண்மையில், சென்னைப் பல்கலைக்கழகம் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியானது பாசிச மோடி அரசால் தீவிரப்படுத்தப்பட்ட செயற்கையான நெருக்கடியாகும். மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததைக் காரணம் காட்டி பல்கலைக்கழக மானிய குழு சென்னைப் பல்கலைக்கழகத்திற்கான நிதியை நிறுத்தி வைத்திருப்பது, மோசடியான காரணங்களைக் கூறி பல்கலைக்கழகத்தின் வரி விகிதத்தைக் கூட்டி நெருக்கடி தருவது என பல வழிகளில் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியைத் தீவிரப்படுத்தி வருகிறது மோடி அரசு. குறிப்பாக, சென்னைப் பல்கலைக்கழகம் முறையாக வரி செலுத்தவில்லை எனக் கூறி வருமான வரித்துறை மூலம் கடந்த 2024-ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கி நேரடித் தாக்குதலில் இறங்கியது.

மறுபுறம், தமிழ்நாடு அரசுக்கு கீழ் இயங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாடு அரசு கடந்த ஏழு ஆண்டுகளாக நிதி ஒதுக்காமல் சென்னைப் பல்கலைக்கழகத்தை கை கழுவி விட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியிலும் இதே நிலை தொடரும் நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல்களையும் தி.மு.க. அரசு கண்டு கொள்வதில்லை.

ஒன்றிய-மாநில அரசுகளின் இத்தொடர் தாக்குதலின் காரணமாக, பேராசிரியர்களுக்கான சம்பளம், விடுதி செலவு, மின் கட்டணம், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான சம்பளம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்க முடியாமல் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் திணறி வருகிறது. இவ்வாறு பல்கலைக்கழக நிர்வாகத்தைத் திணறடிப்பதன் மூலமாக அதனை கல்விக் கட்டணத்தை உயர்த்தச் செய்தும் கார்ப்பரேட்டுகளிடம் நிதி பெறச் செய்தும் பல்கலைக்கழகத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்பதே மோடி அரசின் கெடு நோக்கமாகும். தமிழ்நாடு அரசும் இதற்குத் துணைபோகும் வகையிலேயே நடந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த முயல்வது மோடி அரசின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவே அமையும். கல்விக் கட்டண உயர்வை மாணவர்களிடத்தில் இயல்பாக்கி ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படும் அபாயம் இதில் ஒளிந்துள்ளது.

இதன் மூலம், வெளிப்புறத்தில் அரசு பல்கலைக்கழகமாக இருந்துகொண்டே உள்ளுக்குள் தனியார் பல்கலைக்கழகத்தைப் போல சென்னைப் பல்கலைக்கழகம் மாற்றியமைக்கப்பட்டு தனியார்மயமாக்கப்படும்.

சென்னைப் பல்கலைக்கழகத்தினுடைய இந்த நடவடிக்கையை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், கட்டணத்தை உயர்த்துவது என்பது ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையாகும்.

ஆகவே கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கையை சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் என்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கேட்டுக்கொள்கிறது.


மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க