வக்ஃப் திருத்தச் சட்டம் 2025: மோடி அரசை பின்வாங்க வைப்பது எப்படி?

சி.ஏ.ஏ., பொது சிவில் சட்டம் போன்ற சட்டங்களின் மூலம் இஸ்லாமியர்களின் குடியுரிமை, தனியுரிமை போன்றவற்றை பறிப்பதுபோல, வக்ஃப் திருத்தச் சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துகளை பறித்து பொருளாதார ரீதியாக அவர்களை ஒடுக்குவதை நோக்கமாக கொண்டே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆட்சியிலிருக்கும் பாசிச பா.ஜ.க. கும்பல், இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களை உரிமைகள் ஏதுமற்ற இரண்டாந்தர குடிமக்களாக மாற்றுவதற்கான பல்வேறு பாசிச நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் உச்சமாக இஸ்லாமியர்கள் மீது இதுவரை இல்லாத வகையில் பாசிச பயங்கரவாதத் தாக்குதலை தொடுப்பதற்கு ஏதுவாக, வக்ஃப் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் திருத்த மசோதாவில், தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவைச் சார்ந்த பா.ஜ.க. உறுப்பினர்கள் முன்வைத்த 14 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு முன்பை விட மேலும் அபாயகரமானதாக இச்சட்டம் மாற்றப்பட்டுள்ளது.

குறுக்கு வழியில் நிறைவேற்றப்பட்ட பாசிச சட்டம்

நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஏப்ரல் 3-ஆம் தேதி அதிகாலையிலும் மாநிலங்களவையில் 4-ஆம் தேதி அதிகாலையிலும் “வக்ஃப் திருத்த மசோதா 2024”-யை எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களின் எதிர்ப்பை மீறி மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது. இம்மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அடுத்த நாளே ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், 1995-ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, “ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாட்டு சட்டம்” (UMEED – Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் கலவர கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ள வாகனங்கள்

மக்களின் எதிர்ப்பு காரணமாக தடாலடியாக வக்ஃப் திருத்த மசோதாவை நிறைவேற்ற இயலாத மோடி அரசு, கடந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்காக அம்மசோதாவை அனுப்பி வைத்திருந்தது. ஆனால், இவையெல்லாம் வெறும் கண்துடைப்பிற்காகத்தான் என்பது நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டபோதே அம்பலமாகிவிட்டது. பா.ஜ.க. உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் முறையாக விவாதங்கள் எதுவும் நடத்தப்படவில்லை. இதுவரை நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை நீக்கிவந்த மோடி அரசு, நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது பொய் குற்றம் சாட்டி அவர்களை இடைநீக்கம் செய்தது. இதன்மூலம் நாடாளுமன்ற கூட்டுக் குழு என்ற முறையையே கேலிக் கூத்தாக்கியுள்ளது. இறுதியாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்த 500-க்கும் மேற்பட்ட திருத்தங்களை நிராகரித்துவிட்டு, பா.ஜ.க. உறுப்பினர்கள் பரிந்துரைத்த 14 திருத்தங்களை மட்டும் கூட்டுக் குழு ஏற்றுக் கொண்டு மசோதாவை தாக்கல் செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் எந்தவித முன்னறிவிப்புமின்றி கூட்டத்தொடர் முடிவடையும் கடைசி இரண்டு நாட்களில் வஃக்ப் திருத்த மசோதாவை தாக்கல் செய்த மோடி அரசு, அதிகாலை வரை விவாதங்களை நடத்தி, தனக்கிருக்கும் பெரும்பான்மையை பயன்படுத்தி அவசர அவசரமாக மசோதாவை நிறைவேற்றியது.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது; அதிகாலை வரை விவாதம் நடத்தியது என ஜனநாயகப் பூர்வமாக இம்மசோதா நிறைவேற்றப்பட்டதாக பா.ஜ.க. கும்பல் தம்பட்டம் அடித்துக்கொள்கிறது. ஆனால், மூன்று குற்றவியல் சட்டங்கள், வனப் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல பாசிச சட்டங்களைப் போல, வக்ஃப் திருத்தச் சட்டத்தையும் பெயரளவிலான ஜனநாயக வழிமுறைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்துவிட்டு குறுக்கு வழியிலேயே மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது. இதன்மூலம், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தன்னுடைய பாசிச ஆட்சியை அரங்கேற்றுவதற்கு ஒத்திசைவாகவே இந்த போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பு செயல்படுகிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது.

காவி-கார்ப்பரேட் கும்பலுக்காக அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகள்

இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்கள் இறையருளை நாடி ஏழை, எளிய மக்களின் நலனுக்காக தானமாக வழங்கும் அசையும், அசையா சொத்துகளே வக்ஃப் சொத்துகள் என்றழைக்கப்படுகின்றன. இச்சொத்துகளில் பள்ளிவாசல்கள், தர்காகள் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களும், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களும் உள்ளன. சிறுபான்மை விவகார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, வக்ஃப் வாரியத்திடம் இந்தியா முழுவதும் சுமார் 8.7 லட்சம் சொத்துகள் உள்ளன. அவை 9.4 லட்சம் ஏக்கர் நிலத்தில் பரவியுள்ளன.

வக்ஃப் சொத்துகளை நிர்வாகம் செய்வதில் பல முறைகேடுகள் நடக்கின்றன, அவற்றை முறைப்படுத்துவதற்காகவும் ஏழை இஸ்லாமியர்களின் நலனுக்காகவுமே வக்ஃப் திருத்தச் சட்டத்தை கொண்டுவந்திருப்பதாக மோடி அரசு கூறுகிறது. “ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்” என்ற பழமொழிக்கேற்ப உள்ளது மோடி அரசின் இந்த நாடகம். ஆட்சிக்கு வந்ததிலிருந்து சி.ஏ.ஏ., முத்தலாக் தடை சட்டம், லவ் ஜிகாத் தடை சட்டம், மத மாற்ற தடைச் சட்டம், தூக் ஜிகாத் சட்டம், பொது சிவில் சட்டம் என சட்டப்பூர்வமாகவும்; பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் உலாவும் காவிக் குண்டர்கள், வி.எச்.பி., பஜ்ரங் தள் உள்ளிட்ட சங்கப் பரிவாரங்கள் மூலமும் நாள்தோறும் பல்வேறு தாக்குதல்களை இஸ்லாமியர்கள் மீது பா.ஜ.க. கும்பல் தொடுத்து வருகிறது. இஸ்லாமியர்களின் வீடுகளை அழித்து அவர்களை அகதிகளாக மாற்றுவதற்காக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் புல்டோசர் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இவ்வாறு அனுதினமும் இஸ்லாமியர்கள் மீது பாசிச தாக்குதலை தொடுத்துவரும் மோடி கும்பல் ஏழை இஸ்லாமியர்களின் நலனுக்காக வக்ஃப் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக கூறுவது எவ்வளவு அயோக்கியத்தனமானது.

உண்மையில், சி.ஏ.ஏ., பொது சிவில் சட்டம் போன்ற சட்டங்களின் மூலம் இஸ்லாமியர்களின் குடியுரிமை, தனியுரிமை போன்றவற்றை பறிப்பதுபோல, வக்ஃப் திருத்தச் சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துகளை பறித்து பொருளாதார ரீதியாக அவர்களை ஒடுக்குவதை நோக்கமாக கொண்டே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் உள்ள சில அம்சங்களை பரிசீலித்தாலே, இதனை புரிந்துகொள்ள முடியும்.

2024 ஆகஸ்டில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் திருத்த மசோதாவில், வஃக்ப் சொத்துகளை நிர்ணயிக்கும் மற்றும் கணக்கெடுக்கும் அதிகாரம் வக்ஃப் வாரியத்திடம் இருந்து மாவட்ட ஆட்சியருக்கு மாற்றப்பட்டிருந்தது. இதன்மூலம், வக்ஃப் வாரியங்கள் அதிகாரம் பறிக்கப்படுவதுடன், அரசுக் கட்டமைப்பில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகள் மூலம் வக்ஃப் சொத்துகள் அபகரிக்கப்படுவதற்கான அபாயம் இருந்தது. ஆனால், தற்போது சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தில், வக்ஃப் சொத்துகளை நிர்ணயம் மற்றும் கணக்கெடுப்பதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்குப் பதிலாக, மாவட்ட ஆட்சியரை விட உயர் பதவியில் உள்ள அதிகாரிக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரோ அரசு அதிகாரியோ, யாராக இருந்தாலும் வக்ஃப் வாரியத்தின் அதிகாரத்தைப் பறித்து, வக்ஃப் சொத்துகளை கொள்ளையடிக்க வேண்டும் என்ற பாசிச கும்பலின் சதித்திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லை.

அடுத்ததாக, தற்போது திருத்தப்பட்டுள்ள இச்சட்டத்தில், வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் “வக்ஃப் பயனர்” (Waqf by user) என்ற விதியின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட சொத்துகள் வக்ஃப் சொத்துகளாகவே தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் முகலாய மன்னர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து வக்ஃப்களாக உள்ள சொத்துகள் காவி-கார்ப்பரேட் கும்பலிடமிருந்து பாதுகாக்கப்படலாம் என்று தோன்றலாம். ஆனால், இங்குதான் காவிக் கும்பலின் சூட்சுமம் உள்ளது. இதில், பகுதியளவு அல்லது முழுமையாக சர்ச்சைக்குரிய வக்ஃப் சொத்திற்கும், அல்லது அரசாங்க இடத்திற்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் அரசு சொத்தா அல்லது வக்ஃப் சொத்தா என வக்ஃப் சொத்துகளை நிர்ணயம் செய்வதற்கான அதிகாரம் அரசு அதிகாரிக்கு வழங்கப்பட்டிருப்பதை இணைத்துப் பார்க்க வேண்டும். இதன்மூலம் முகலாய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட சொத்துகளையும் அரசு சொத்துகள் என்று கூறி காவி-கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாகவே இச்சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

அடுத்ததாக, வக்ஃப் சொத்துகளுக்கான பதிவுகள், ஆண்டுக்கணக்குகள், வழக்குகளை கையாள்வது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்காக மையப்படுத்தப்பட்ட இணையதளப் பக்கம் (Web Portal) உருவாக்கப்பட வேண்டும் என்று வக்ஃப் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சட்டம் இயற்றப்பட்ட ஆறு மாதங்களுக்குள், வக்ஃப் தொடர்பான அனைத்து ஆவணங்களும் இந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு மாத காலத்திற்குள் பதிவேற்ற முடியாத போது முத்தவல்லி (வக்ஃப் சொத்துகளை நிர்வகிப்பவர்) விண்ணப்பிக்கும் பட்சத்தில் கால நீட்டிப்பு குறித்து வக்ஃப் தீர்ப்பாயம் முடிவு செய்யும் என்றும் இஸ்லாமியர்கள் வக்ஃப்களுக்கு தானமாக வழங்கும் சொத்துகளை இந்த இணையதளத்தின் மூலமே வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட வக்ஃப் நிறுவனங்கள் வக்ஃப் சொத்துகளை நிர்வாகம் செய்து வருகின்றன. இவற்றின் அனைத்தின் செயல்பாடுகளையும் மோடி அரசு இனி மையப்படுத்தப்பட்ட இணையதளம் மூலம் கட்டுப்படுத்தப்போகிறது. இதன்மூலம், மாநில வக்ஃப் வாரியங்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு ஒன்றிய அரசிடம் குவிக்கப்படும். பல துறைகளில், மோடி அரசு டிஜிட்டல்மயமாக்கம் என்ற பெயரில் இவ்வாறான அதிகார பறிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, மத்திய, மாநில வக்ஃப் வாரியங்களில் இரண்டு இஸ்லாமியர் அல்லாதவர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்ற விதி கூட்டுக் குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகும் நீடிக்கிறது. அப்பட்டமாக, வக்ஃப் வாரியங்களில் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளை நியமித்து அதனை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திலிருந்தே மோடி அரசு இந்த விதியை தக்கவைத்துள்ளது. தஞ்சாவூர் மாவாட்டம் பாபநாசம் அருகே உள்ள கோவில் ஒன்றில், அறங்காவலராக இஸ்லாமிய பெயர்கொண்ட ஒருவர் ( உண்மையில் இந்து மதத்தைச் சார்ந்தவர்) நியக்கமிப்பட்டதற்கே வானத்திற்கும் பூமிக்கும் குதித்தது சங்கிக் கும்பல். ஆனால், இஸ்லாமியர்களின் வக்ஃப் வாரியங்களில் மட்டும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை நியமிக்க வேண்டுமாம். இதுதான் பாசிசக் கும்பலின் இரட்டை நீதி.

கூடுதலாக, நாட்டின் பல மாநிலங்களில் வக்ஃப் சொத்தா அல்லது அரசு, தனியார் சொத்தா என்று சர்ச்சைக்குரிய நிலங்களில் பல கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டின் திருச்செந்துறை, பீகாரில் கோவிந்பூர், கர்நாடகாவில் விஜயபுரா, சித்ரதுர்கா, பல்லாரி ஆகியவை அதற்கு சான்றுகளாகும். இவற்றில் சில கிராம நிலங்களை தங்களுடைய வக்ஃப் சொத்துகள் என்று வக்ஃப் வாரியங்கள் வாதிடுகின்றன. சில கிராம நிலங்கள் வக்ஃப் சொத்துகள் இல்லை என்பதை வக்ஃப் வாரியங்களே உறுதி செய்து இருக்கின்றன.

வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம்.

அவற்றின் உண்மைத் தன்மைகளை ஆராய்வதற்கு பதிலாக, வக்ஃப் திருத்தச் சட்டமானது சட்டப்பிரிவு 40-இன் படி கிராம நிலங்களை வக்ஃப் சொத்துகளாக கருத இயலாது என்று கூறுகிறது. இதன்மூலம் மோடி அரசு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வக்ஃப்களிடம் இருந்து பறிப்பதுடன், சர்ச்சைக்குரிய நிலத்தில் வாழும் மக்களை தனக்கு அடித்தளமாக திரட்டிக் கொள்ள காவிக் கும்பலுக்கு வழியேற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு மோடி அரசானது மேற்குறிப்பிட்ட ஒரு சில திருத்தங்கள் மட்டுமின்றி, 1995 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் மேற்கொண்டுள்ள அனைத்து திருத்தங்களும் இஸ்லாமியர்களிடமிருந்து வக்ஃப் சொத்துகளை அபகரித்து காவி-கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிடும் வகையிலேயே உள்ளது.

காவி பயங்கரவாதத்தின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்

வக்ஃப் சட்டத்தை பயன்படுத்தி இஸ்லாமியர்கள் இந்துக்களின் சொத்துகளை அபகரிப்பதாக பல ஆண்டுகளாக நச்சுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் காவிக் கும்பல், தற்போது இச்சட்டத்திருத்தத்திற்குப் பிறகு இஸ்லாமியர்கள் மீது பாசிச பயங்கரவாதத் தாக்குதல்களை தீவிரப்படுத்த தொடங்கியிருக்கிறது.

“வக்ஃப் சட்டப்பிரிவு 40-யைப் பயன்படுத்தி இந்துக்களின் சொத்துகளை வக்ஃப் சொத்துகளாக அறிவித்துக் கொள்ள முடியும்”, “இந்தியாவில் உள்ள வக்ஃப் சொத்துகளின் மொத்த பரப்பளவு பாகிஸ்தானின் பரப்பளவை விட அதிகம்”, “இந்தியாவிற்குள் இன்னொரு பாகிஸ்தான் உருவாகி வருகிறது” என்று பல பொய், வெறுப்புப் பிரச்சாரங்கள் நம்முடைய கற்பனைக்கெட்டாத வகையில் பரப்பப்பட்டு வருகின்றன. வக்ஃப் சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்கள் இந்துகளின் நிலங்களை அபகரித்துக் கொள்ளும் “நில ஜிகாத்” நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்ற வெறுப்புப் பிரச்சாரம் காவிக் கும்பலால் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

ஒருபுறம் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடும் காவிக்கும்பல், மறுபுறம் நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மீது கலவரங்களை கட்டவிழ்த்துவிடுவதற்கும் ஆயுத்தமாகி வருகிறது.

மேற்கு வங்கத்தில் வெடித்த கலவரம் இதன் தொடக்கமே. மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் பகுதியில் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராடிய மக்கள் மீது காவிக் கும்பல் தாக்குதல் தொடுத்து போராட்டத்தை கலவரமாக்கியது. இந்த வன்முறையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தை கட்டவிழ்த்துவிட்ட காவி கும்பல், இம்மாநிலத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறது.

இதேபோல், தமிழ்நாட்டில் வேலூர் காட்டுக்கொல்லை கிராமத்தில் 60 குடும்பங்கள், 5 ஏக்கர் வக்ஃப் நிலத்தில் வசிப்பதாக மசூதி நோட்டீசு அனுப்பியிருந்த நிலையில், இந்த விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு இந்து முன்னணி-பா.ஜ.க. கும்பல் இந்து மக்களின் நிலங்களை தர்கா அபகரிப்பதாக மதவெறுப்பு பிரச்சாரம் செய்துவருகிறது. ஏற்கெனவே, தமிழ்நாட்டில் திருச்செந்துறை பகுதியில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் உட்பட அக்கிராம மக்கள் வசிக்கும் பல ஏக்கர் நிலங்கள் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என்று பொய் பிரச்சாரத்தில் காவி கும்பல் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து இஸ்லாமிய மக்களை இனப்படுகொலை செய்து தனக்கான பாசிச அடித்தளத்தை உருவாக்கியதுபோல, நாடுமுழுவதும் பல இடங்களில் சர்ச்சைக்குரிய வக்ஃப் சொத்துகளை குறிவைத்து கலவரங்களைத் தூண்டுவதற்கான பாசிச கும்பலின் சதித்திட்டமும் இச்சட்டத்திருத்தத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கிறது. ஏற்கெனவே, வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு எதிராக காவி கும்பல் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டத்தின் மூலம் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை நீர்த்துப் போக செய்ய வேண்டும் என்ற நோக்கமும் பாசிச கும்பலுக்கு உள்ளது.

அதேபோல், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இஸ்லாமிய மக்களின் சொத்துகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் புல்டோசரால் இடிக்கப்பட்டுவரும் நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் நாடு முழுவதும் இஸ்லாமிய மக்களின் சொத்துகள் மீது புல்டோசர் பயங்கரவாதம் ஏவப்படும் அபாயமும் உள்ளது. அதாவது சட்டவிரோதமாக உள்ள புல்டோசர் பயங்கரவாதம் சட்டப்பூர்வமாக்கப்படும்.

யூதர்களை இனப்படுகொலை செய்வதற்கு ஹிட்லர் ‘கெட்டோமயமாக்கல்” (Ghettoisation) என்ற முறையை கையாண்டான். யூதர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து, அவர்களின் குடியிருப்புகளை அழித்து, பொருளாதார ரீதியில் ஒடுக்கி ‘கெட்டோ’களில் (குறிப்பிட்ட இன/சமய மக்கள் நெருக்கமாக தனித்து வாழும் சேரிப்பகுதி) அடைத்து இனப்படுகொலை செய்தான். இந்தியாவில் காவிக் கும்பல், இஸ்லாமியர்களை இராண்டாந்தர குடிமக்களாக்குவதற்கு பின்பற்றி வழிமுறையும் ஹிட்லரின் கெட்டோமயமாக்கலை ஒத்ததாகவே உள்ளது.

ஆகவே, இந்தியாவில் வக்ஃப் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதை, மோடி அரசின் கடந்த பத்தாண்டுகால பாசிச ஆட்சிக் காலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள காவி பயங்கரவாதத்தின் அடுத்தக்கட்ட பாய்ச்சலாகவே பார்க்க வேண்டியுள்ளது.

உச்சநீதிமன்றத்தால் வக்ஃப் திருத்தச் சட்டத்தை தடுத்து நிறுத்த முடியுமா?

வக்ஃப் திருத்தச் சட்டம் மோடி அரசால் நிறைவேற்றப்பட்ட பிறகும், அதற்கு முன்னரும் அதனை எதிர்த்து 73 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகளாலும் இஸ்லாமிய அமைப்பை சார்ந்தவர்களாலும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனுக்களை ஏப்ரல் 16, 17 தேதிகளில் விசாரித்த உச்சநீதிமன்றம், வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடையை விதித்து அடுத்த விசாரணையை மே 5-ஆம் தேதி தள்ளி வைத்திருக்கிறது.

உச்சநீதிமன்றம், வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்திருப்பதற்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்பு அளித்திருக்கின்றன. இத்தடையை தங்களுடைய சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக மக்களிடம் பிரச்சாரம் செய்து கொள்கின்றன. ஆனால், வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பரந்த அளவில் நடைபெற்றுவரும் மக்கள் போராட்டங்களால்தான் உச்சநீதிமன்றம் வக்ஃப் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

மேலும், வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம், அடுத்தடுத்த விசாரணைகளில் நிரந்தர தடை விதித்துவிடும் என்று நாம் கருதிக்கொண்டு இருக்க முடியாது. ஏனென்றால், கடந்த பத்தாண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் பல்வேறு பாசிச நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் உடந்தையாகவே இருந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம், பாபர் மசூதி இடிப்பு, தேர்தல் பத்திரங்கள் உள்ளிட்ட பல வழக்குகளை அதற்கு சான்றுகளாக நாம் கூற முடியும். இவ்வழக்குகளில் பாசிச கும்பலின், நடவடிக்கைகள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக இருந்த போதிலும் பாசிச கும்பலுக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிரான வழக்கிலும், வக்ஃப் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 14, 25, 26, 20, 246 ஆகிய பிரிவுகளுக்கு எதிராக உள்ளதை பல வழக்கறிஞர்களும் அம்பலப்படுத்தியுள்ளனர். ஆனால், “வக்ஃப் திருத்தச் சட்டத்தில் நேர்மறையான விஷயங்கள் உள்ளன” என்று கூறி நரகலில் நல்லரிசி தேடும் வேலையை செய்கிறது உச்சநீதிமன்றம்.

ஒருவேளை, வக்ஃப் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடைக்கல்லாக இருக்கிறதென்றால், அதை பாசிஸ்டுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். சான்றாக, டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகளை நியமிப்பதற்கு முதல்வருக்கு அதிகாரம் உள்ளதா அல்லது துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்று தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் முதல்வருக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வழங்கிய போது அதனை முறியடிக்கும் விதமாக மோடி அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தப் பிறகு உச்சநீதிமன்றத்தை “ஷரியா கோர்ட் ஆப் இந்தியா” என்றும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கலவரத்தை தூண்டுகிறார் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுக்கத் தொடங்கியிருக்கிறது காவி கும்பல்.

ஆகவே, சட்டப்போராட்டம் என்பதற்குள் மட்டும் தங்களை வரம்பிட்டுக் கொள்வது எந்தவகையிலும் வக்ஃப் திருத்தச் சட்டத்தை பின்வாங்க வைக்காது. மாறாக, அது காவிக் கும்பலின் நிகழ்ச்சி நிரலுக்குத் துணை செய்வதாகவே அமையும்.

நாட்டை ஷாகின்பாக்களாக்குவோம்!

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலால் வக்ஃப் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதென்பது இஸ்லாமியர்களுக்கு சொந்தமான வக்ஃப் சொத்துகளை காவி-கார்ப்பரேட் கும்பல் அபகரிப்பதற்கான நடவடிக்கை மட்டுமல்ல. கிறித்துவம், சீக்கியம், ஜைனம் உள்ளிட்ட பிற மத நிறுவனங்களின் சொத்துகளை காவி-கார்ப்பரேட் கும்பல் அபகரிப்பதற்கு அடித்தளமிடும் நடவடிக்கையாகும். குறிப்பாக, இந்து மத நிறுவனங்களின் சொத்துகளை காவி-கார்ப்பரேட் கும்பல் அபகரிப்பதற்கு அடித்தளமிடும் நடவடிக்கையும் ஆகும்.

பாசிச கும்பலின் இச்சதித்திட்டத்தை ஆர்.எஸ்.எஸ்-இன் ஊதுகுழலான “ஆர்கனைசர்” தளத்தில், “இந்தியாவில் யாருக்கு நிலம் அதிகம் உள்ளது? கத்தோலிக்க திருச்சபை எதிர் வக்ஃப் வாரியம்” என்று தலைப்பில் ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியான கட்டுரை அம்பலப்படுத்தியது. நாடு முழுவதும் கத்தோலிக்க திருச்சபை சுமார் 17.29 கோடி ஏக்கர் நிலங்களை சொந்தமாகக் கொண்டுள்ளது என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அதன் நிலம் பெரும்பான்மையாக பிரிட்டிஷ் ஆட்சியின் போது கையகப்படுத்தப்பட்டது என்று அவதூறை அள்ளிவீசியிருந்தது. இக்கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு பாசிச கும்பலின் சதித்திட்டத்தை எதிர்க்கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் அம்பலப்படுத்தத் தொடங்கியவுடன் அத்தளத்தில் இருந்து கட்டுரை நீக்கப்பட்டுவிட்டது.

அதேபோல், தமிழ்நாட்டில் கோயில்களை நிர்வாகம் செய்துவரும் இந்து அறநிலையத்துறையைக் கலைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக இந்து முன்னணியைச் சார்ந்த குண்டர்களும் கார்ப்பரேட் சாமியாரன ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டவர்களும் குரல் கொடுத்து வருவதன் பின்னணியில் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கமே ஒளிந்துள்ளது.

எனவே, வக்ஃப் திருத்தச் சட்டம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டியது இஸ்லாமிய மக்கள் மட்டுமின்றி, இந்து, கிறித்துவம் உள்ளிட்ட மதங்களைச் சார்ந்த நாட்டின் கோடானுகோடி உழைக்கும் மக்களின் கடமையாகும். மூன்று வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட பாசிச சட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலிருந்து மோடி அரசை பின்வாங்க வைத்திருப்பது விடாப்பிடியான, உறுதியான, போர்க்குணமிக்க களப் போராட்டங்களே ஆகும்.

குறிப்பாக, 2019 ஆம் ஆண்டில் மோடி அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு டெல்லி ஷாஹீன்பாக் பகுதியில் இஸ்லாமிய பெண்கள் முன்னெடுத்த தொடர் போராட்டம் முன்னுதாரணமாக அமைந்தது. நாட்டின் பல பகுதிகளில் ஷாஹீன்பாக் வடிவிலான போராட்டங்கள் பற்றிக்கொள்ளத் தொடங்கின. காவிக் குண்டர்கள் மற்றும் போலீசு படையினரின் கடும் அடக்குமுறைகளைத் தாங்கி மூன்று மாதங்களுக்கு மேலாக நடந்த ஷாஹீன்பாக் வடிவிலான போராட்டங்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தற்காலிகமாக பின்வாங்க வைத்தது.

களப் போராட்டங்கள் மூலமே மோடி அரசை வக்ஃப் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தவிடாமல் தடுத்த நிறுத்த முடியும் என்பதை இஸ்லாமிய அமைப்புகளும் மக்களும் உணர்ந்திருக்கின்றனர். அதன்விளைவாகத்தான், உச்சநீதிமன்றம் வக்ஃப் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்த போதும், அச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து வருகின்றன. ஆகவே, வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஷாஹீன்பாக் வடிவிலான போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டங்களை வக்ஃப் திருத்த சட்டத்தை பின்வாங்கும் வகையில் வளர்த்தெடுக்க வேண்டியது புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


கதிர்

(புதிய ஜனநாயகம் – மே 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க