சென்னையில் 27.05.2025 மாலை மக்கள் அதிகாரக் கழகத்தின் கொள்கை அறிக்கையான “மாபெரும் ஆயுதம்” ஆவணம் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்வை மக்கள் அதிகாரக் கழகம் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா தலைமையேற்று நடத்தினார்.
அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்குப் பின் தோழர் வெற்றிவேல் செழியன் தலைமையிலான மக்கள் அதிகாரம் தொடர்ச்சியாக மாநாடு, பொதுக்கூட்டம், பல்வேறு இயக்கங்கள், பிரச்சாரங்கள், போராட்டங்கள் வாயிலாக பாசிச எதிர்ப்பில் எவ்வாறு களத்தில் நிற்கிறது என்பதை விளக்கிப் பேசினார். காட்டு யானைக்கு மதம் பிடித்தால் அது எவ்வாறு காட்டை அழிக்குமோ அவ்வாறு இன்று பாசிசம் இந்த நாட்டை அழித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த “மாபெரும் ஆயுதம்” மக்கள் விடுதலைக்கான ஆயுதமாக மாறும் என்று தனது தலைமை உரையில் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து மக்கள் அதிகாரக் கழகத்தின் கொள்கை அறிக்கையான “மாபெரும் ஆயுதம்” மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்களால் வெளியிடப்பட்டு அதை மே 17 மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
அடுத்ததாகப் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் பிஸ்மில்லா கான் மக்களின் பிரச்சினைகள் புரியாத யார் யாரோ கட்சி ஆரம்பிக்கிறார்கள். மக்களின் வலிகளைப் புரிந்து அதை தங்களின் வலியாக ஏற்றுக்கொண்டு தங்களை முன்னிறுத்திப் போராடுகின்ற இவர்களின் கரத்தை வலுப்படுத்த வேண்டியது நமது கடமை. கடந்த மூன்று வருடமாக ஒன்றாக நாங்கள் பயணிக்கிறோம். இறுதி வரை மக்கள் அதிகாரக் கழகத்தோடு பயணிப்போம் என்று தனது உரையில் பேசினார்.
மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில அமைப்பு இணைச் செயலாளர் தோழர் வினோத் மாபெரும் ஆயுதம் என்கிற இந்த கொள்கை ஆவணத்தை விளக்கிப் பேசினார். நிதி மூலதனத்தின் ஆகமிக பிற்போக்கான ஆகமிகக் கொடூரமான ஒரு கும்பலின் ஆட்சி தான் பாசிசம். நிலவுகின்ற நாடாளுமன்ற கட்டமைப்பைப் பயன்படுத்தி இந்தியாவில் பாசிசம் அரங்கேறுகிறது. அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை தன்வயப்படுத்தி இந்த கும்பல் தன் எதிரிகளை வீழ்த்துகிறது. ஆர்.எஸ்.எஸ் – இந்துத்துவ கும்பலைத் தடை செய்ய வேண்டும்; பாசிசத்தை வீழ்த்த வேண்டும். அதற்கு அனைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படியான பாசிச சக்திகளை ஒருங்கிணைக்கும் கட்சி தான் மக்கள் அதிகாரக் கழகம். மக்களை ஒருங்கிணைக்கும் மாபெரும் ஆயுதம் தான் இந்த கொள்கை அறிக்கை என்று தனது விளக்க உரையில் முன் வைத்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர் வேலுமணி அவர்கள் தனது வாழ்த்துரையில் மக்களுக்கான அதிகாரம் மற்றும் விடுதலையைப் போராடிப் பெற்றுத் தருவதில் மக்கள் அதிகாரக் கழகத்தின் பங்கு மிகப் பெரியதாக உள்ளது. திருப்பரங்குன்றத்தில் இரண்டு மாதமாகத் தொடர்ச்சியாகப் போராடி பாசிச கும்பலின் நடவடிக்கையை முறியடித்ததில் மக்கள் அதிகாரக் கழகத்தின் பங்கு மிக முக்கியமானது என்று குறிப்பிட்டார்.
அடுத்ததாகப் பேசிய மே 17 இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மதுரையில் நடைபெற்ற மக்கள் அதிகாரக் கழகத்தின் இரண்டாவது மாநாட்டைக் குறிப்பிட்டுப் பேசினார். இன்றைய சூழலில் பாசிசம் பற்றிய விவாதம் தேவைப்படுகிறது. மார்க்சிய லெனினிய அரசியல் புரிந்தவர்களே ஆழமாக பாசிசம் குறித்து விளக்கி விட முடியும். பாசிசத்தின் பின்னணி குறித்து ஐரோப்பாவில் 100 ஆண்டுகளாக ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் நூறு ஆண்டுகள் ஆய்வுகள் செய்துள்ளனர். இவற்றையெல்லாம் இணைத்துப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப வேலைத் திட்டங்கள் அமைத்துக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. அப்படி இவற்றை உள்ளடக்கிய ஒரு கொள்கை ஆவணமாகத் தான் இந்த ஆவணம் அமைந்திருக்கிறது. அப்படியான ஆவணத்திற்கு மாபெரும் ஆயுதம் என்ற பெயர் பொருத்தமாக இருப்பதாக நான் பார்க்கிறேன்.
தேர்தல் களத்திலும் பாசிச பா.ஜ.க-வை நாம் அம்பலப்படுத்த வேண்டும். கட்சிகள், தேர்தல் சாராத கட்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றை இணைத்து பாசிச எதிர்ப்புக்கு ஒரு அணி உருவாக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட அணிக்கு பாசிச எதிர்ப்புக் கொள்கை வேண்டும்.
கடுமையான ஒரு காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். அப்படியான காலகட்டத்தில் மாபெரும் ஆயுதம் என்கிற இந்த தொகுப்பு ஆவணத்தில் சமகால பிரச்சனைகளை விரிவாக விவாதித்துள்ளார்கள். பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களில் பல்வேறு பிரச்சினைகளை உள்ளடக்கி அவற்றைத் தொகுத்து எளிய கையேடாக எளிய மக்களுக்குப் புரியும் வகையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது நமது கடமையாக இருக்கிறது. இவ்வாறு தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.
இறுதியாக தோழர் பிரியா நன்றி உரை ஆற்றினார்.
இந்த நிகழ்வு வினவு தளத்தில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் பாசிச எதிர்ப்பிற்கான இந்த மாபெரும் ஆயுதத்தை கைகளில் மட்டுமல்ல, நெஞ்சிலும் ஏந்திக் கொண்டோம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram