ஆந்திராவில் கார்ப்பரேட் நிறுவனமான இந்தோசோல் (Indosol) சூரியமின் திட்டத்திற்காக 8,300 ஏக்கர் வளமான நிலங்களைக் கைப்பற்றுவதற்கான சந்திரபாபு நாயுடு அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு எதிராக காண்டுகூர் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
எஸ்.பி.எஸ்.ஆர் நெல்லூர் (SPSR Nellore) மாவட்டத்தில் உள்ள ராமையாபட்டணம் (Ramayapatnam) துறைமுகத்திற்கு அருகில் வர இருக்கும் இந்த சோலார் மின்திட்டத்தைக் கண்டித்து பாரத சைதன்யா யுவஜனா கட்சி (Bharata Chaitanya Yuvajana Party – BCY) தலைவர் போட் ராமச்சந்திர யாதவ் தலைமையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 3 கி.மீ பேரணி மேற்கொண்டனர். மேலும் காண்டுகூருக்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்தோசோல் சூரிய திட்டத்திற்கு 8,300 ஏக்கர் நிலத்தை வலுக்கட்டாயமாக அபகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தையொட்டி, காண்டுகூர் (Kandukur) சட்டமன்றத் தொகுதியில் உள்ள காரேடு (Karedu) கிராமத்தில் பதற்றம் நிலவியது. ஏனெனில் ஜூன் 29 திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தடுக்கும் நோக்கத்தோடு போலீசு குவிக்கப்பட்டு அடக்குமுறை ஏவப்பட்டது.
அந்த இடத்திற்குச் செல்லும் அனைத்து சாலைகளும் போலீசால் மூடப்பட்டிருந்தாலும், திரு.ராமச்சந்திர யாதவின் தலைமையில் கடல் பாதை வழியாக கரேடுவை அடைந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டக் களத்திற்கு அணிவகுத்தனர்.
திரளான விவசாயிகளின் கூட்டத்தில் உரையாற்றிய அவர், விவசாயிகளுடன் கலந்தாலோசிக்காமல் ஒருதலைபட்சமாக இந்த திட்டத்தை அறிவித்ததாக அரசைக் குற்றம் சாட்டினார். எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கிய விவசாயிகளை ஒடுக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சியைக் கண்டித்தார்.
அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு உடன்பட மறுத்தால், விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று அரசாங்கத்தை எச்சரித்தார்.
படிக்க: கர்நாடகா: கார்ப்பரேட், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு எதிரான தேவனஹள்ளி விவசாயிகள் போராட்டம்!
மறியல் போராட்டத்தின் மூலமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட காரணத்தால், துணை கலெக்டர் ஸ்ரீபூஜா அந்த இடத்திற்கு விரைந்து சென்று, கள நிலைமையை அரசாங்கத்திற்கு அறிக்கையாக எடுத்துரைப்பதாகக் கூறியதையடுத்து போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
ஆந்திரா, கர்நாடகா, சத்தீஸ்கர், தமிழ்நாடு என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கார்ப்பரேட் திட்டங்களுக்காக விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. போராடும் மக்களை ஒடுக்க அனைத்து அரசாங்கங்களும் அடக்குமுறைகளை மேற்கொள்கின்றன.
அனைத்துத் துறைகளிலும் கார்ப்பரேட்மயமாக்கல் நடவடிக்கைகளை எல்லாக் கட்சி அரசாங்கங்களும் எந்தவித வேறுபாடுமின்றி தீவிரமாக நிறைவேற்றுவதற்கு முயல்கின்றன. உழைக்கும் மக்களைப் புறந்தள்ளுகின்றன.
போராட்டக் களங்களில் மட்டும்தான் மக்கள் தங்களது உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முடியும் என்பதே உண்மை.
அய்யனார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram