ஒடிசா ரதயாத்திரை படுகொலை: பா.ஜ.க ஆட்சியின் அவலங்கள்

ரத யாத்திரையின் முதல் நாளிலேயே கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டிருந்த போதும், அதனால் நூற்றுக்கணக்கான மக்கள் மயக்கமடைந்த போதும், ஒடிசாவை ஆளும் பா.ஜ.க. அரசு மக்களைப் பாதுகாப்பதற்கு எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மேற்கொள்ளாததே இப்படுகொலை நிகழ்ந்ததற்கான காரணமாகும்.

பா.ஜ.க. ஆளும் ஒடிசா மாநிலத்தில் குண்டிச்சா கோவிலில் ஜூன் 29 அன்று நடந்த ரத யாத்திரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். பா.ஜ.க. ஆட்சியில் ‘கூட்டநெரிசல் விபத்து’ என்ற பெயரில் இந்தியாவில் மீண்டுமொரு படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் பிரபலமான ஜெகநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ரத யாத்திரை திருவிழா ஒன்பது நாட்களுக்கு நடைபெறும். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இந்த ரத யாத்திரையில் கலந்துகொள்வதற்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் வருகை புரிவர். திருவிழாவின் முதல் நாளில் ஜெகநாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகிய மூன்று கடவுள்களின் ரதங்கள் ஜெகநாதர் கோவிலிலிருந்து குண்டிச்சா கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி நாளில் ரதங்கள் மீண்டும் ஜெகநாதர் கோவிலுக்கு கொண்டு வரப்படுவது ஆண்டுதோறும் பின்பற்றப்பட்டுவரும் வழக்கமாகும்.

இந்தாண்டு ரத யாத்திரையின் முதல் நாளான ஜூன் 27-ஆம் தேதி அன்று ஜெகநாதர் கோவிலிலிருந்து மூன்று ரதங்கள் குண்டிச்சா கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஆனால், அதிக வெப்பம் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக 700-க்கு மேற்பட்ட மக்கள் மயக்கமடைந்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கூட்டத்தை முறையாகக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் போதிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளாததால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர் என்பதை அங்கிருந்த மக்கள் அம்பலப்படுத்தினர்.

இந்நிலையில், ஜூன் 29 அதிகாலையில் மூன்று ரதங்களும் மீண்டும் ஜெகநாதர் கோவிலுக்கே கொண்டு வரப்பட்டன. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது கூட்டத்தின் நடுவே ரதம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் மரங்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் வந்துள்ளன. அவற்றுக்கு வழி விடுவதற்கு மக்கள் முயன்றபோது ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த 50-க்கு மேற்பட்டோர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆறு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் பலி எண்ணிக்கை கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

கூட்ட நெரிசலில் தங்களது நெருங்கிய உறவுகளை இழந்த ஒருவர் கூறுகையில், “நாங்கள் அதிகாலை 3:30 மணிக்குப் பிறகு குண்டிச்சா கோயிலை அடைந்தோம். அங்கு பெரும் கூட்டம் இருந்தது. ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசு யாரும் அங்கு இல்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் நான் என் மனைவியை இழந்தேன்” என்று குமுறியுள்ளார்.


படிக்க: மகா கும்பமேளா: பலி எண்ணிக்கையை மறைத்த பாசிச யோகி அரசு


ரத யாத்திரையின் முதல் நாளிலேயே கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டிருந்த போதும், அதனால் நூற்றுக்கணக்கான மக்கள் மயக்கமடைந்த போதும், ஒடிசாவை ஆளும் பா.ஜ.க. அரசு மக்களைப் பாதுகாப்பதற்கு எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மேற்கொள்ளாததே இப்படுகொலை நிகழ்ந்ததற்கான காரணமாகும். குறிப்பாக, விபத்து நடந்தால் அவர்களைக் கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் என எந்தவித முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை.

சொல்லப்போனால், ஜூன் 27-ஆம் தேதி அன்று நடைபெற்ற ரத யாத்திரையில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு வழக்கத்தைவிட மக்கள் கூடுதலாக கலந்து கொண்டுள்ளனர். மேலும், ஜூன் 29 ரத யாத்திரை ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளில் நடக்கவிருந்ததால் லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பது தெரிந்தும் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யாமல் ஒடிசா பா.ஜ.க. அரசு இப்படுகொலையை நிகழ்த்தியுள்ளது.

ஆனால் மாவட்ட ஆட்சியரை மாற்றியும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தும் இக்கொலைக் குற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ள பா.ஜ.க. அரசு முயல்கிறது. மேலும், மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “இந்த துயர சம்பவத்திற்காக நானும் எனது அரசாங்கமும் அனைத்து ஜெகநாத பக்தர்களிடமும் மன்னிப்பு கோருகிறோம். உயிரிழந்த பக்தர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஆழ்ந்த துக்கத்தைத் தாங்கும் வலிமையை அவர்களுக்கு வழங்குமாறு மஹாபிரபு ஜெகநாதரிடம் பிரார்த்திக்கிறேன்” என்று தனது அரசாங்கத்தின் படுகொலையை பக்தியில் மூழ்கடித்து மூடிமறைக்கும் விதமாகப் பதிவிட்டுள்ளார்.

பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பல் இந்து மக்களிடம் உள்ள பக்தி உணர்வைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களை தனக்கான வாக்கு வங்கியாக மாற்றும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக ‘மகா’ கும்பமேளா, ரத யாத்திரை போன்ற மத நிகழ்வுகளை ஊதிப்பெருக்கி, ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் மக்களைத் திரட்டி, எந்தவித முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவிக்கிறது. இந்தாண்டு தொடக்கத்தில் நடந்த மகா கும்பமேளாவில் குறைந்தது 82 மக்கள் கொல்லப்பட்டது; கடந்த ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் போலி சாமியார் போலே பாபாவின் மத நிகழ்வில் குறைந்தது 121 பேர் கொல்லப்பட்டது என பா.ஜ.க. ஆட்சியில் இத்தகைய படுகொலைகள் தொடர்கதையாகியுள்ளன.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க