ஜூலை 5: ஸ்டேன் சுவாமி நினைவு நாள்! | வேண்டும் ஜனநாயகம் தெருமுனைக்கூட்டம்

நாள்: 05-07-2025 நேரம்: மாலை 05.00 மணி இடம்: சிலுவைப்பட்டி, தூத்துக்குடி

ஸ்டேன் சுவாமி நினைவு நாள்!
வேண்டும் ஜனநாயகம் தெருமுனைக்கூட்டம்

ஆர்.எஸ்.எஸ்- பிஜேபி ; அம்பானி- அதானி பாசிசக் கும்பலை
முறியடிக்க ஒன்றிணைவோம்!

தெருமுனைக் கூட்டம்

நாள்: 05-07-2025 நேரம்: மாலை 05.00 மணி
இடம்: சிலுவைப்பட்டி, தூத்துக்குடி

அன்பார்ந்த உழைக்கும் மக்களே !

காடுகளும், மலைகளும் இவற்றைச் சுற்றிலும் உள்ள கனிம வளங்களும், நீர் நிலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் யாவும் மக்களுக்கு சொந்தமானது. ஆனால் இன்று அதிகாரத்தில் அமர்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ் பிஜேபி பாசிச கும்பல் ஒட்டுமொத்த நாட்டையும் கூறுபோட்டு அம்பானி – அதானி அகர்வால் உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளுக்கு தாரை வார்க்கிறது. இதை எதிர்த்து போராடும் மக்களையும், ஜனநாயக சக்திகளையும் கைது, சிறை சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொன்றொழிக்கிறது. அந்த வகையில் மக்களுக்காக போராடிய 84 வயதுடைய அருட்தந்தை ஸ்டேன் சுவாமி அவர்களை, மோடியை கொல்ல சதி செய்ததாக பொய் குற்றம் சாட்டி சிறையில் தள்ளி விசாரணை காலத்திலேயே படுகொலை செய்தது பாசிசக்கும்பல்.

யார் இந்த ஸ்டேன் சுவாமி?

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தல் பிறந்து வளர்ந்தவர் ஸ்டேன் சுவாமி. கத்தோலிக்க ஜேசு சபையில் சேர்ந்து மக்களுக்காக பணியாற்றிய அருட்தந்தை ஸ்டேன் சுவாமி திருச்சியில் படித்தவர். சமூகவியல் மற்றும் மக்கள் அமைத்துக்கொண்டார். மேல் படிப்புக்காக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றவர். அங்கே அந்த நாட்டு மக்களின் உரிமைக்காக போராடினார். பின்னர் இந்தியா வந்த ஸ்டேன் சுவாமி பெங்களூரில் சில காலம் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். அதன்பின் ார்கண்ட் மாநிலத்தில் தங்களது உரிமைக்காக போராடிய பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் போராட்டத்தோடு தன்னையும் இணைத்துக் கொண்டார். இதனால் பலமுறை கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். நாடு, மதம், இவாம், மொழி கடந்து மனிதம் என்ற ஒன்றே ஸ்டேன் சுவாமியை போராடும் மக்களோடு இணைத்தது. 40 ஆண்டு காலம் ஜார்கண்ட் பழங்குடியின் மக்களோடு மக்களாக குடிசையில் வாழ்ந்து போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தினார். மாவோயிஸ்ட் என்ற பெயரில் ஆதிவாசி இளைஞர்கள் கைது செய்யப்பட்டபோது அதற்கு எதிராக சட்டப்போராட்டங்களை நடத்தினார். இவை போதுமே பாசிசக் கும்பல் ஸ்டேன் சுவாமியை குறிவைக்க…

மோடி அரசின் சதி வலை

ஆர்.எஸ்.எஸ்-ன் மூதாதையர்களான பேஷ்வாக்களை ஆங்கிலேயப் படைகளில் இருந்த தாழ்த்தப்பட்ட ‘மகர்’ பிரிவு படை வீழ்த்திய 200 வது ஆண்டு நினைவு நாள் 2018ல் பீமா கோரேகான் எனுமிடத்தில் முன்னெடுத்து செல்லப்பட்டது. இதில் திட்டமிட்டு இந்துத்துவ கும்பல் கலவரத்தை தூண்டியது. கலவரத்ததை தூண்டினார்கள் என்று சமூக செயற்பாட்டாளர்களான அம்பேத்கரின் பேரன் ஆனந்த் நெல்தும்டே பேராசிரியர் சாய்பாபா, சுதா பரத்வாஜ் உள்ளிட்ட 17 பேர் மீது NIA வழக்கு போட்டது. இந்த வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத, சம்பவத்தின் போது ஜார்கண்டில் இருந்த ஸ்டேன் சுவாமியை இதில் இணைத்து சதி வழக்கு தொடுத்தது பாசிச மோடி அரசு.

மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகளுடன் இணைந்து சதி செய்தார் என பொய்யான வழக்கு புனையப்பட்டு, கைது செய்யப்பட்டு மும்பையில் உள்ள தலேஜா சிறையில் அடைக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்த ஸ்டேன் சுவாமியின் கணினியில் அவருக்கே தெரியாமல் 44 ஃபைல்கள் சொருகப்பட்டது. ஸ்டேன் சுவாமியின் கணினி ஹேக் செய்யப்பட்டது என சர்வதேச புலனாய்வு நிறுவனத்தால் நிரூபிக்கப்பட்ட பின்னரும் நீதிமன்றம் அதற்கு செவிமடுக்கவில்லை.

90 சதவீதம் பானமான பேராசிரியர் சாய்பாபா, 80 வயதை கடந்த வரவரராவ், ஸ்டேன் சுவாமி ஆகியோர் மரண வாயிலில் நிறுத்தப்பட்டனர். 1967 சட்டவிரோத தடுப்பு சட்டத்தில் இவர்களை கைது செய்து விசாரணை கைதிகளாக சிறையில் அடைத்தது தேசிய புலனாய்வு முகமை (NIA), ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் ஸ்டேன் சுவாமிதான் மிகவும் வயதானவர். அவர் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டவர். குறிப்பாக நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் துணைக்கு ஆள் இல்லாமல் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள முடியாது. தன் கையால் ஒரு குவளையை பிடித்து தண்ணீர் கூட குடிக்க முடியாது. சிறையில் தண்ணீர் குடிக்க உறிஞ்சு குழாய் கேட்டபோது சிறை நிர்வாகம் திட்டமிட்டே அனுமதி மறுத்தது. நீதிமன்றத்தில் முறையிட்டபோது பதில் சொல்ல 20 நாட்கள் அவகாசம் கேட்ட NIA வின் கோரிக்கைக்கிணங்க ‘மாண்புமிகு’ நீதிமன்றமும் அந்த அவகாசத்தை கொடுத்தது. ஆனால் அதன்பின் கொரோனா தொற்று ஏற்பட்டு கேட்கும் திறனை இழந்தார் ஸ்டேன் சுவாமி. தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டினால் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னர் இறந்து போனார்

பழங்குடியின மக்கள் போராளி ஸ்டேன் சுவாமி பயங்கரவாதியா!

தான் யாருக்காக நிற்கிறோம். யாரை எதிர்த்து களமாடுகிறோம், தான் செய்யும் காரியத்தின் விளைவுகள் எப்படிப்பட்டது என அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது. அவர் எதற்கும் அஞ்சவில்லை. பயந்து ஓடவில்லை. தன் மரணத்தை உணர்ந்த அந்த மனிதர் தனக்கு பிணை வேண்டும் என கேட்டது கூட தான் நேசித்த தன் மக்களின் மத்தியில் உயிர் போக வேண்டும் என்ற விருப்பத்தினால்தான், மக்களுக்காக போராடி வீரனாய் மடிந்திருக்கிறார் அவர். 84 வயது முதியவரை சித்திரவதை செய்து கொன்றதன் மூலம் பாசிஸ்டுகள் தாங்கள் கோழைகள் என்பதை நிரூபித்துள்ளனர்.

மோடி அரசு ஏன் இதை செய்கிறது?

1990 களில் கொண்டுவரப்பட்ட மறுகாலனியாக்க கொள்கையின் விளைவால் நாட்டின் இயற்கை வளங்கள். பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு பெரு முதலாளிகளுக்கு தாரைவார்க்கப்படுகிறது. கார்ப்பரேட்டுகளுக்காக இந்த பணிகளை சிரமேற்கொண்டு செய்து தர காவி பாசிஸ்டுகள் அதிகாரத்தில் அமர வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி நீதிமன்றம், விசாரணை அமைப்புகள், தேர்தல் ஆணையம் என அரசின் அனைத்து உறுப்புகளும் பாசிசமயமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஊபா, தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் திணிக்கப்படுகின்றன. குற்றவியல் நடைமுறை சட்டங்கள் உள்ளிட்ட சட்டங்கள் அனைத்தும் திருத்தப்படுகிறது. இதை எதிர்ப்பவர்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது பொய் வழக்கு புனைந்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்து கொன்று குவிக்கிறது. இதன் மூலம் பெரு முதலாளிகளின் நலன் வேறு, தன் நலன் வேறு அல்ல என உணர்த்துகிறது மோடி அரசு. இது மட்டுமின்றி இஸ்லாமியர்கள் பலர் விசாரணை என்ற பெயரில் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

ஒரு நாடு தனது மக்களுக்கு எதிராக போர் செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு இருந்த போதும் சொந்த நாட்டு மக்கள் மீதே போர் தொடுத்து வருகிறது பாசிச மோடி அரசு. வனப் பாதுகாப்புச் சட்டம் என்கிற பெயரில் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் ட்ரோன்கள் மூலம் பழங்குடியின மக்களை தாக்கி விரட்டியடிக்கிறது. இதுவரை இல்லாத அளவில் செயற்கை நுண்ணறிவு மையப்படுத்தப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் காடுகளையும், மலைகளையும் அழிக்க இரண்டு மாதங்களில் 4.5 இலட்சம் கோடி முதலீடுகள் அங்கே குவிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று இலட்சம் கோடி மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்காகவும், ஒரு இலட்சம் கோடி ஸ்டீல் உற்பத்தி ஆலைகளுக்காகவும் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையை தளமாக கொண்ட பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் 1,143 கோடி, அதானி நிறுவனம் 48,000 கோடி, ரிவ்யூ பவர் லிமிடெட் நிறுவனம் பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்காக 11,500 கோடி முதலீடுகள் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காடுகளையும், மலைகளையும் தங்களது வாழ்விடங்களாக கொண்டுள்ள, அவைகளை பாதுகாக்கின்ற பழங்குடி மக்களை கார்ப்பரேட்டுகளுக்காக அங்கிருந்து விரட்டி அடிக்கிறது துணை ராணுவப் படை. பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்குவதை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது. பழங்குடி மக்களை கொலை செய்து மாவோயிஸ்ட் என கணக்கு காட்டுகிறது பாசிச மோடி அரசு. கனிம வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கு தடையாக இருக்கும் காடுகளின் பாதுகாவலர்களான பழங்குடி மக்களை ‘மாவோயிஸ்ட்கள்’ என முத்திரை குத்தி சொந்த நாட்டு மக்களை தீவிரவாதிகளைப் போல சித்தரித்து துணை இராணுவப் படைகளை வைத்து கொன்று குவித்து வருகிறது பாசிச மோடி அரசு. இயற்கை வளங்களை பாதுகாக்க போராடும் பழங்குடி மக்களையும் அவர்களுக்கு துணையாக நிற்கும் மாவோயிஸ்ட் தோழர்களையும் சுட்டுக் கொல்கிறது. மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்களை தேச நலனுக்கு எதிரானவர்களாக சித்தரித்து சிறையில் தள்ளிக் கொல்கிறது. மண்ணையும், சுற்றுச்சூழலையும் நஞ்சாக்கிய நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் அகர்வாலுக்காக தூத்துக்குடி மண்ணின் மைந்தர்கள் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்று அதானியின் கொள்ளைக்காக தூத்துக்குடி துறைமுகம் கையளிக்கப்பட்டுள்ளது. பெரு முதலாளிகளின் தங்கு தடையற்ற வளர்ச்சிக்காக தென்மாவட்டங்களில் ஆதிக்க சாதி சங்கங்களின் மூலமாக சாதியக் கொலைகளும், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பிரச்சனைகளை தூண்டிவிட்டு மத மோதல்களையும் திட்டமிட்டு உருவாக்குகிறது ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி பாசிசக் கும்பல். இதன் மூலம் தனது இந்துத்துவ கனவை நோக்கி நகர்கிறது.

நாம் என்ன செய்ய வேண்டும்?

தனது இந்த பாசிச திட்டங்களை நிறைவேற்ற ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் தேசிய புலனாய்வு முகமை (NIA), நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அரசின் உறுப்புகளை கைக்கூலி அமைப்புகளாக மாற்றி வருகிறது. ஊபா, தேசத்துரோக சட்டம் போன்ற கொடிய சட்டங்களை செயற்பாட்டாளர்கள் மீது திணித்து, விசாரணை காலத்தையே தண்டனைக் காலமாக்கி படுகொலை செய்கிறது.

தனது இறுதி மூச்சு வரை பழங்குடி மக்களின் உரிமைக்காக போராடியவர் ஸ்டேன் சுவாமி. அதற்காக தனது உயிரையும் பணயம் வைத்தார். அதேபோல் கனிம வளக் கொள்ளையை எதிர்த்து போராடிய ஜக்பர் அலி கொல்லப்பட்டார். மணல் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு இயற்கை வளக் கொள்ளையை எதிர்த்து பலர் தங்களது உயிரை பணயம் வைத்து போராடுகின்றனர். இன்று டங்ஸ்டன், விமான நிலையம், சிப்காட் ஆகிய திட்டங்களுக்காக நமது நிலங்கள் பறிக்கப்படுகிறது. கல்வி, மருத்துவம், சுகாதார உரிமைகள் கார்ப்பரேட்டுகளுக்காக காவு வாங்கப்படுகிறது. இதை முறியடித்து நமது ஜனநாயக உரிமையை நிலை நாட்ட சாதி, மத, இன பாகுபாடின்றி அமைப்பாய் திரள்வதும், வேண்டும் ஜனநாயகம் என்று உழைக்கும் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து களத்தில் இறங்க வேண்டிய தருணமிது. மேலும் பாசிசத்தை வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு அமைக்கும் பாதையில் ஜனநாயக சக்திகளாய் ஒன்றிணைந்து களமிறங்கிப் போராட வேண்டும். இவையே அருட்தந்தை ஸ்டேன் சுவாமிக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.

மக்கள் அதிகாரக் கழகம்,
திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்டம்,
93853536005

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க