மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தாண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகி இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 1-ஆம் தேதி அன்று நடைபெற்ற சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், அம்மாநிலத்தில் அதிகரித்துவரும் விவசாயிகள் தற்கொலைகள் குறித்தும் அதற்கு இழப்பீடு வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்தும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பிரத்னியா ராஜீவ் சதவ், சதேஜ் பாட்டீல் மற்றும் பாய் ஜக்தாப் ஆகியோர் கேள்வியெழுப்பினர். மேலும், தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மாநில நிவாரண மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் மகராந்த் பாட்டீல் 2025-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா பிராந்தியத்திலுள்ள யவத்மால், அமராவதி, அகோலா, புல்தானா மற்றும் வாசிம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்கள் விவசாயத்திற்காக வாங்கிய அதிகப்படியான கடன்கள், பயிர்களை விளைவிப்பதற்கு போதுமான நீர்ப்பாசன வசதியின்மை, குறைந்த பயிர் விளைச்சல் போன்ற நெருக்கடிகள் காரணமாக தாங்கள் வாங்கிய கடனை கட்ட முடியாமல் நொடிந்துபோய் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தாண்டு மட்டுமின்றி, இதுபோன்ற காரணங்களால் 2024-ஆம் ஆண்டு 2,635 விவசாயிகளும் 2023-ஆம் ஆண்டில் 2,851 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மொத்தமாக 2001-ஆம் ஆண்டு முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் 39,825 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவற்றில் 22,193 விவசாயிகள் மாநிலத்தில் நிலவும் விவசாய நெருக்கடியினால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாடு முழுவதும் கணக்கீடு செய்தால் ஒவ்வொரு ஆண்டும் கடன் தொல்லையால் லட்சக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
படிக்க: கர்நாடகா: கார்ப்பரேட், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு எதிரான தேவனஹள்ளி விவசாயிகள் போராட்டம்!
1990-களில் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட பிறகு இந்திய விவசாயம் திட்டமிட்டு கார்ப்பரேட்மயமாக்கப்பட்டு வருகிறது. அதன் விளைவாக விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றி, விவசாய நிலங்கள், கொள்முதல், விநியோகம் அனைத்தையும் கார்ப்பரேட்களின் கைகளில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் சட்டதிட்டங்கள் அமல்படுத்தப்பட்டு இந்தியா முழுக்க விவசாயிகள் கொத்து கொத்தாகக் கொல்லப்பட்டனர்.
2014-ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்நடவடிக்கைகள் இன்னும் மூர்க்கப்படுத்தப்பட்டு இந்திய விவசாயத்தை அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பலின் கைகளிலும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளிடமும் ஒப்படைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மறுபுறம், அம்பானி-அதானி போன்ற கார்ப்பரேட் கும்பல்களுக்காக விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு மக்கள் விவசாயத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டும் வருகின்றனர். பயிர்களுக்குத் தேவையான உரத்தின் விலையை அதிகரிப்பது, பயிர்களை குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்வது போன்றவற்றின் மூலம் வாங்கிய கடனை கட்ட முடியாத நிலைக்கு விவசாயிகளைத் தள்ளுகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் தற்கொலை செய்து கொண்டுள்ள 767 விவசாயிகளில் 373 பேர் குடும்பங்கள் மட்டுமே இழப்பீடு பெற தகுதியுடையவை என்று மகாராஷ்டிர மாநில பா.ஜ.க. அரசு அயோக்கியத்தனமாகத் தெரிவித்துள்ளது. அவற்றில் 327 விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற இழப்பீடு தொகையை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 194 பேரின் தற்கொலை வழக்குகளில் விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் 200 குடும்பங்கள் அரசு நிர்ணயித்த அளவுகோலைப் பூர்த்தி செய்யாததால் அக்குடும்பங்கள் இழப்பீடு பெறுவதற்குத் தகுதியற்றவை என்றும் கூறி தனது பாசிச கோரமுகத்தை வெளிக்காட்டியுள்ளது.
ஒருபுறம் விவசாய விரோத நடவடிக்கைகளின் மூலம் விவசாயிகளைத் திட்டமிட்டு படுகொலை செய்து கொண்டிருக்கும் அதேவேளையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முறையாக இழப்பீடு கூட வழங்காமல் வஞ்சித்து வருகிறது.
படிக்க: ஆந்திரா: கார்ப்பரேட் சோலார் மின்திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்
எனவே, விவசாயிகள் தற்கொலை என்பது அரசு நிர்வாகத்தின் சீர்கேடு சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. அது ஆளும் வர்க்கத்தின் விவசாயக் கொள்கையின் அடிப்படையில் விவசாயிகள் மீது திட்டமிட்டுத் திணிக்கப்படுவதாகும்.
மறுபுறம், ஆரம்பத்தில், மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்திய விவசாயிகளின் தற்கொலைகள் தற்போது செய்திகளாகவும் புள்ளிவிவரங்களாகவும் மக்களிடத்தில் பழக்கப்படுத்தப்பட்டு அதனை கடந்து செல்லும் இழிநிலை உருவாகியுள்ளது. ஆனால், நாம் உண்ணும் உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள் உணவுக்கு வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்வது அநீதியின் உச்சம்.
இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியதும் திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டுவரும் இந்திய விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இப்போராட்டமானது விவசாயத்தில் கார்ப்பரேட்டுகளை புறக்கணிக்கின்ற, உண்மையான விவசாய நலனைக் கொண்ட மாற்று விவசாய கட்டமைப்பிற்கான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram