அரசின் அதிகாரப்பூர்வ தகவலின் படி 2023 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 2,851 என்றிருந்தது. அது 2024 ஆம் ஆண்டில் சற்றே குறைந்து 2,635 என்றானது. ஆனால் இந்த ஆண்டு முதல் மூன்று மாதத்திலேயே 767 தற்கொலைகள் பதிவாகி இருக்கிறன. இதே விகிதத்தில் போனால் 2025 ல் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
“2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் முடிய மொத்தம் 767 தற்கொலைகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. அவற்றில் 373 வழக்குகள் அரசின் நிவாரணம் ₹1 லட்சத்தைப் பெறத் தகுதி உள்ளவையாகவும் 200 வழக்குகள் அரசு நிவாரணம் பெறத் தகுதியற்றவையாகவும் அறியப்பட்டுள்ளன. மீதமுள்ள 194 வழக்குகள் அதற்கான விசாரணையிலிருந்து வருகின்றன” என்று விவசாயிகளின் தற்கொலை குறித்த சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்கு, அம்மாநிலத்தின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் மகரந்த பாட்டீல் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
விவசாயிகளின் தற்கொலையைத் தடுப்பதற்கான எந்த முயற்சியும் திட்டமோ இல்லை. மாறாக தற்கொலைகளுக்கு நிவாரணத்திற்கு என்று தனி அமைச்சகம் உருவாக்கி வழக்கு விசாரணை நடத்துவதே இன்றைய ஆட்சியாளர்களின் சாதனை. இது விவசாயிகளின் தற்கொலை குறித்த இன்றைய ஆளும் கட்சிகளின் பார்வையும் கண்ணோட்டமும் ஆகும்.
“மாநிலத்தின் விவசாயிகள் அன்றாடம் தற்கொலை செய்து கொண்டு செத்துக் கொண்டிருக்கையில் அரசு அது பற்றி பாராமுகமாகவே இருந்து வருகிறது. 200 வழக்குகள் அரசின் நிவாரண உதவிக்குத் தகுதி பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது, 194 வழக்குகள் இன்னமும் முடிவு செய்யப்படாமல் விசாரணையிலிருந்து வருகின்றன. இது அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை வெளிக்காட்டுகிறது” என்று கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்து விட்டு அதன்பிறகு பி.டி.ஐ (Press Trust of India) செய்தி நிறுவனத்திற்கு நேர்காணல் தருகிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் விஜய் வாடேட்டிவார். இதுவே விவசாயிகளின் தற்கொலைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் எதிர்வினை.
படிக்க: மகாராஷ்டிரா: மூன்று மாதத்தில் 767 விவசாயிகள் ‘தற்’கொலை
காங்கிரசின் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் மகாராஷ்டிராவின் விதார்பா மாவட்டப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொண்ட செய்தி இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒன்றாகும். ஏன், உலகத்தின் கவனத்தை ஈர்த்த ஒன்றாகும். காங்கிரஸ் ஆட்சியை மறுத்து கடந்த 12 ஆண்டுகளாக சிவசேனா மற்றும் சிவசேனா – பா.ஜ.க கூட்டணி ஆட்சிகளிலும் விவசாயிகளின் வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றால் என்னதான் காரணம்? யார் தான் பொறுப்பு?
கடந்த 20 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் இயங்கி வரும் எல்லா கட்சிகளும் ஆட்சி செய்து விட்டன. ஒன்றியத்திலும் மாநிலத்திலும் மோடி அமித்ஷா கும்பலின் இரட்டை எஞ்சின் ஆட்சியே நடந்தாலும் விவசாயிகளால் தற்கொலையிலிருந்து கூட மீள முடியாது என்றால் விவசாயிகள் மட்டுமின்றி கார்ப்பரேட் முதலாளித்துவ கும்பலால் பல வகையிலும் ஒடுக்கப்படும் எல்லா பிரிவு மக்களும் சிந்திக்க வேண்டும். வேறென்னதான் தீர்வு என்பதைப் பற்றிச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
அதானி, அம்பானி, அகர்வால் ஆகிய கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும் எந்தக் கட்சிக்கும் விவசாயிகளுக்கு மறுவாழ்வளிக்கக் கூடிய கொள்கையோ, திட்டமோ, நோக்கமோ எதுவுமில்லை என்பதை உணர வேண்டிய தருணமிது. ஒன்றுபட்ட போராட்ட வழிமுறைகளை வகுத்துச் செயல்பட விவசாயிகள் முற்பட வேண்டும். அப்படி விவசாயிகள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்குத் துணை நிற்க வேண்டியது இந்திய உழைக்கும் மக்களின் வரலாற்றுக் கடமையாகும்.
செய்தி ஆதாரம்: தி வயர்
சுந்தரம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram