மகாராஷ்டிரா: முதல்வர் பட்னாவிஸ் தொகுதியில் பல்லாயிரம் போலி வாக்காளர்கள்

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி ஒரு தொகுதியில் நான்கு சதவிகிதம் வாக்குகள் அதிகரித்திருந்தால் அதை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், பட்னாவிஸின் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் எட்டு சதவிகிதத்தை விட அதிகமாக புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்த போதிலும் எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.

2024 ஏப்ரல்-மே மாதங்களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கும், 2024 நவம்பரில் நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கும் இடைப்பட்ட ஆறே மாதங்களில், அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்த நாக்பூர் தென்மேற்கு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் 29,219 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது அத்தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 8.25 சதவிகிதம் ஆகும். “நியூஸ் லாண்டரி” செய்தி ஊடகம் நடத்திய ஆய்வின் மூலம் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி ஒரு தொகுதியில் நான்கு சதவிகிதம் வாக்குகள் அதிகரித்திருந்தால் அதை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், பட்னாவிஸின் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் எட்டு சதவிகிதத்தை விட அதிகமாக புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்த போதிலும் எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும், 8.25 சதவிகிதம் என்பது அத்தொகுதியின் சராசரி கணக்காகும். குறிப்பாக சில பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் புதிய வாக்காளர் சேர்க்கை நடைபெற்றிருக்கிறது. மேலும் இதே தொகுதியில், அதே காலத்திற்குள் 2,301 வாக்காளர்கள் நீக்கப்பட்டும் உள்ளனர்.

நியூஸ் லாண்டரி செய்தி ஊடகம் ஆய்வு செய்த வாக்குச் சாவடிகளில் 50 வாக்குச்சாவடிகளை தோராயமாக தெரிவு செய்து வாக்காளர் பட்டியலை சோதனை செய்தது. அதில் நான்காயிரம் வாக்காளர்களுக்கு முகவரியே இல்லை என்பதைக் கண்டறிந்தது.

அந்தத் தேர்தலில் பட்னாவிஸ் தனது போட்டியாளரான காங்கிரஸ் வேட்பாளர் பிரஃபூல் குடாதே என்பவரை 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். பட்னாவிஸ் தொடர்ந்து நான்காவது முறையாக அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தொகுதியில் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலை விட சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு 14,225 வாக்குகள் அதிகரித்து இருக்கின்றன. காங்கிரசுக்கு 8,000 வாக்குகள் அதிகரித்துள்ளன. இங்கு வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லுகள் நடைபெறுவது பற்றி தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு வருகின்றனர். ”டெல்லி முதல் உத்தரப்பிரதேசம் வரை, தற்போது மகாராஷ்டிரம் என்று எல்லா இடங்களிலும் வாக்குப்பதிவுகளில் முறைகேடுகள் (Rigging) நடக்கிறது” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சுமத்தி உள்ளார்.


படிக்க: மகாராஷ்டிரா: ஆண்டுதோறும் அதிகரித்துவரும் விவசாயிகள் தற்கொலை


ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவதும் பழைய வாக்காளர்கள் இறப்பு மற்றும் இடமாற்றம் போன்ற காரணங்களால் நீக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருவதேயாகும். ஆயினும் புதிய சேர்க்கையில் நான்கு சதவிகிதத்திற்கு மேல் இருந்தாலோ நீக்கத்தில் இரண்டு சதவிகிதத்திற்கு மேல் இருந்தாலோ அந்தப் பட்டியலை மீண்டும் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பது தேர்தல் ஆணையம் வகுத்து வைத்திருக்கும் விதியாகும்.

ஆனால், 70 சதவிகித வாக்குச்சாவடிகளில் நான்கு சதவிகிதத்திற்கும் கூடுதலாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் உள்ள 370 வாக்குச்சாவடிகளில் 263 வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர்கள் நான்கு சதவிகிதத்திற்கும் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதிலும் 26 வாக்குச்சாவடிகளில் 20 சதவிகிதத்திற்கும் அதிகமாகவும் நான்கு வாக்குச்சாவடிகளில் 40 சதவிகிதத்திற்கு அதிகமாகவும் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட மறு ஆய்வுகளுக்கு தேர்தல் ஆணையம் சில அடுக்கு சோதித்தறிதல் அடங்கிய வழிமுறைகளை வகுத்து வைத்துள்ளது. எனினும் கீழ் நிலையில் நேரடியாக சோதித்தறியும் வேலைகளைப் பொறுத்தவரை அதே பழைய அங்கன்வாடி ஊழியர்களும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போன்றவர்களும்தான் செய்து முடிக்க வேண்டும். புதிய வாக்காளர் சேர்ப்பு இணையவழியில் பெறப்படும் படிவம் 6-இன் வழியாக நடக்கிறது மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் மூலம் நேரடியாக படிவம் 6 பெற்றும் பதிவு செய்யப்படுகிறது.

கீழிருந்து மேலாக நான்கு அடுக்கு சோதனை முறை இருந்தாலும் கீழ்நிலை ஊழியர் சோதித்தால் அவ்வளவுதான், மறுபடி அதனை சோதித்தல் என்பது எதுவும் நடைமுறையில் கிடையாது. தேர்தல் ஆணையம் அனைவருக்கும் பொதுவானது என்று கூறப்பட்டாலும் அதுவும் இதே அதிகார வர்க்க நபர்களால்தான் கட்டியமைக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேர்தல் ஆணைய விதிகள் இறுதியாக மாநிலத் தலைமை அதிகாரிகள் மற்றும் மாவட்ட தலைமை அதிகாரிகள்தான் சோதித்தறிய வேண்டும் என்று கூறுகிறது. ஆனாலும் என்ன? ஒரு மாநில தலைமை அதிகாரி (Chief Election Officer – CEO) மாநிலம் முழுவதற்கும் தோராயமாக தெரிவு செய்யப்பட்ட நூறு படிவங்களை சராசரியாக ஒரு மாவட்டத்திற்கு குறைந்தது 5 படிவம் என்கிற வகையில் சோதித்தறிய வேண்டும். மற்றபடி அதே பழைய முறையில் ஊழியர்களைக் கொண்டு நடைமுறையில் சோதனை செய்ய வேண்டும். அதேபோல ஒரு மாவட்ட அதிகாரி குறைந்தபட்சம் 20 படிவங்களை அதாவது அந்த மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் குறைந்தது 4 படிவங்கள் என்கிற வகையில் நேரடியாக சோதிக்க வேண்டும். அதேபோன்று ஊழியர்களைக் கொண்டு நடைமுறையில் நேரடி சோதனையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறது ஆணைய விதிகள்.

நியூஸ் லாண்டரி வலைத்தளம் 20 முதல் 58 சதவிகிதம் வரை புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்த 12 வாக்குச்சாவடிகளை தெரிவு செய்து அங்கு நடைமுறையில் சோதித்தறியும் ஊழியர்களைக் சந்தித்துப் பேசியது. அவர்களில் ஆறு பேர் தாங்கள் அத்தகு மறுசோதனை எதிலும் ஈடுபடவில்லை என்று கூறி அவர்களிடம் பேசினர். மற்றவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர் அல்லது மௌனம் காத்தனர். மேலும் மாவட்ட அலுவலகத்தில் இருந்து கத்தை கத்தையாக படிவங்களை அனுப்பி சோதிக்கும்படி சொல்லுகிறார்கள், இவை எல்லாம் நடைமுறையில் எப்படி சாத்தியம் என்றும் கேள்வி எழுப்பினர்.

எஸ்.பி. நகுவன்ஷி என்பவர் ஒரு வாக்குச்சாவடியின் பொறுப்பாளர் (சாவடி. எண். 174, சிந்தி உயர்நிலைப்பள்ளி அரை எண்- 3). இந்தப் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இவ்வாறு 24 சதவிகித வாக்காளர்கள் அதிகரித்து இருப்பதை நான் பார்த்ததில்லை என்று கூறுகிறார். இந்த முறை மாவட்ட அலுவலகத்திற்கு 300 படிவங்கள் வந்தன, ஆனால் அதில் நான் 8 முதல் 10 படிவங்களில் மட்டுமே கையொப்பமிட்டு இருக்கிறேன். மற்றவற்றுக்கெல்லாம் மாவட்ட அலுவலகம்தான் பதிலளிக்க வேண்டும் என்று கூறுகினார். வாக்குப்பதிவின்போது தான் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் கூடியிருப்பதை பார்த்தேன். ஆனால் அப்போது அவற்றை சோதிப்பது என்னுடைய பணி இல்லை என்பதால் அமைதியாக இருந்து விட்டேன் என்கிறார்.

மற்றொரு ஊழியர் சந்தீப் கொராடே, வாக்குச்சாவடி பொறுப்பாளர் (சாவடி எண். 76 இராமச்சந்திர முக்காரே எம்.சி.வி.சி. கல்லூரி அறை எண்-1) இந்த சாவடியில் 30 சதவிகிதம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். மாவட்ட ஆட்சியருக்கு ஏராளமான படிவங்கள் வந்தன. அவை அத்தனையும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டன. நாங்கள் சிலவற்றை மட்டும் எடுத்து சோதித்ததில் அங்கு அப்படியான ஆட்கள் யாரும் இல்லை என்பது தெரியவந்தது. அதை மேலே தெரிவித்து விட்டோம். எல்லாம் மாவட்ட அதிகாரிகளுக்கு தான் தெரியும் என்று பதில் அளித்தார்.

கணேஷ் ஜார் வார் வாக்குச்சாவடி பொறுப்பாளர் (சாவடி எண்-181, என்.எம்.சி. தொடக்கப்பள்ளி. அறை எண்.1) இங்கு 39.9 சதவீத புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். அதாவது 365 படிவங்கள் அவருக்கு வந்துள்ளன. தவறான முகவரிகள் கொடுக்கப்பட்டிருந்ததால் கண்டறிய முடியவில்லை என்பதுடன் இது மிகப் பெரிய தொல்லையாக இருக்கிறது எனவே வாக்காளர் அட்டைகளையும் நாங்கள் மாவட்ட அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பினோம். ஆனால் அவர்களோ மீண்டும் எங்களுக்கே அனுப்பி விநியோகித்து விட கூறினர். ஆனாலும் முகவரி இல்லாமல் எப்படி ஒப்படைப்பது என்று கூறி இறுதியாக மாவட்ட அலுவலகத்திலேயே ஒப்படைத்து விட்டோம் என்றார்.

கணேஷ் ஜார்வாரின் மேற்பார்வையாளர் மாயா இம்முறை ஏராளமான புதிய வாக்காளர்கள் சேர்ந்து இருப்பது உண்மைதான் மாவட்ட ஆணையம் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள மேற்கொண்ட பிரச்சார நடவடிக்கைகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.

திவாகர் பக்காரி வாக்குச்சாவடி எண் 189 (ஜைத்தலாவில் உள்ள ஏக் மாதா உயர்நிலைப்பள்ளி அரை எண்.1). இங்கு 58.8 சதவிகிதம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர் கூறுகிறார் 400 புதிய படிவங்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டன அவ்வளவையும் சோதிக்க எங்களுக்கு நேரம் இருக்கவில்லை. இருப்பினும் சிலவற்றை மட்டும் எடுத்து சோதனை செய்தோம் என்றும் மாவட்ட ஆணையத்துக்கு அனைத்தும் தெரியும் என்றும் கூறினார்.

வாக்குச்சாவடி எண் 200 (ஜைத்தாலாவில் உள்ள தூய ஜோசப் தொடக்கப்பள்ளி அரை எண் 1). இங்கு 30 சதவிகித புதிய வாக்காளர்கள் அதாவது 328 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். மீனாட்சி நிக்கோசி என்னும் ஊழியர் ”இந்த பகுதிக்கு புதிய நபர்கள் குடி வந்தால் நான்தான் வாக்காளர் படிவம் பெற்று பட்டியலில் சேர்ப்பேன். ஆனால் இந்த முறை மாவட்ட ஆணையத்திலிருந்து சோதனைக்கு உட்படுத்தும் பட்டியல் எங்களுக்கு வந்தன. எல்லாவற்றையும் என்னால் சோதிக்க முடியவில்லை. காரணம் மாவட்ட ஆணையத்திலிருந்து வந்திருக்கிறது என்றால் அவை பெரும்பாலும் சரியானதாகவே இருக்க வேண்டும் இல்லையா? என்று என்னிடம் கூறினார்கள்” என்றார்.

ஊழியர்களை தவிர மேற்பார்வையாளர்களிடம் தொடர்பு கொண்டதில் இரண்டு பேர் மட்டுமே பதில் அளித்தனர். அவர்களில் மாயா என்பவர் கூறுகையில் பலரும் கல்லூரி மாணவர்கள் என்றும் எப்படியும் நேரடியான சோதித்து அறிதலுக்கு நாங்கள் கீழ்மட்ட ஊழியர்கள் சொல்வதை தான் சார்ந்து இருக்க வேண்டி உள்ளது என்றும் பதிலளித்தார். ஒரே வாக்கு சாவடியில் 365 வாக்காளர்கள் சேர்ந்து இருப்பது பற்றி கேட்டபோது ”கல்லூரி மாணவர்களாகவே இருக்க வேண்டும். இது போன்ற சோதித்தறிதலில் கவனம் செலுத்தும் அளவுக்கு எங்களுக்கு நேரம் இருப்பதில்லை” என்றார்.

மற்றொருவர் மாட்கரே, சந்திப் கொராடேவின் மேற்பார்வையாளர். இவருடன் தொலைபேசியில் பேசுகையில் ”அதிகப்படியான புதிய வாக்காளர்கள் எண்ணிக்கைக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. மாவட்ட அலுவலகத்தில் தான் கேட்க வேண்டும்” என்றார். நடைபெற்ற சோதித்தறிதல் பற்றி கேட்டபோது தொடர்பை துண்டித்து விட்டார்.

“புதிய வாக்காளர் பட்டியலில் முகவரியே இல்லாத பெயர்கள் நிரம்ப இருந்ததை பார்க்க முடிந்தது. ஒரு 50 வாக்குச்சாவடிகளின் பட்டியலை பார்த்தபோது அவற்றில் 4,393 வாக்காளர் பெயர்கள் முகவரி இல்லாமலேயே இருந்தது. உதாரணத்துக்கு சாவடி எண் 107-இல் 290 பெயர்கள் கண்டறிய முடியாத தவறான முகவரிகளாக இருந்தன. முகவரி இல்லாமல் எப்படி இந்த பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றன என்பது வியப்பாக இருக்கின்றது. தேர்தல் ஆணையம் தனது வழிகாட்டுதல்களில் முகவரி இருப்பது கட்டாயம் என்பதை மட்டுமின்றி முகவரிக்கான ஆதாரமும் படிவம் 6 உடன் இணைக்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறது.” என்று நியூஸ் லாண்டரி கூறுகிறது.


படிக்க: மகாராஷ்டிரா பந்தர்பூர் யாத்திரை: இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்ட பட்னாவிஸ் அரசு!


கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் தலைமை தேர்தல் ஆணையர் நௌதீப் ரின்வா ”முகவரி கண்டறிய முடியாத வாக்காளர் பெயர்கள் மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது, அவற்றை நீக்கவும் முடிவெடுக்க முடியவில்லை. சரியான முழுமையான முகவரி பதிவு செய்யப்படாவிட்டால். அவற்றை ஊழியர்கள் எப்படி அடையாளம் காண முடியும் அல்லது நீக்கப்பட்டது என்பதை கூட அவர்களுக்கு தெரிவிப்பது எப்படி? இதற்கு தலைமை தேர்தல் ஆணையம் சரியான முடிவு எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

நியூஸ் லாண்டரி வலைத்தளம் கேள்விப் பட்டியல் (Questionnaire) ஒன்றுக்கு தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் பதிலளிக்கையில், ”வாக்காளர் பட்டியலில் எப்போதும் கூடுவதும் குறைவதும் இருக்கவே செய்யும். எனினும் இடமாற்றம் என்பது இப்போது அதிகமாகி விட்டது; சகஜமாகவும் ஆகிவிட்டது. நேரம் இருப்பதற்கு தகுந்தபடி நாங்கள் புதிய பட்டியலை பதிப்பிக்கிறோம். ஊழியர்களும் தங்கள் நிலைமைகளையும் கருத்துகளையும் சொல்லுகிறார்கள். அதன்படி எல்லாமும் நிறைவு செய்யப்படுகிறது. எனவே இவை தவிர்க்க முடியாத சமூக வளர்ச்சி நிலையில் ஏற்படும் சிக்கலாகும்” என்றார்.

முகவரிகள் பதிவு செய்யப்படாத வாக்காளர்கள் பற்றி கேட்டபோது ”சிலர் மிகவும் தற்காலிகமாக சில முகவரிகளில் தங்குகிறார்கள்; உடனே மாறிப் போய்விடுகிறார்கள். எனினும் அவர்கள் 18 வயது நிரம்பிய இந்திய குடிமகன் என்ற முறையில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுகிறார்கள். அதுவும் தவிர்க்க முடியாததே. பின்னர் ஒரு கட்டத்தில் அவை சரி செய்யப்படலாம்” என்றார். மேலும் அவர் நிறைவு செய்கையில் ”எங்களது வாக்காளர் பட்டியல் மிகவும் உண்மையானது. இதனால் தேர்தலில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. எல்லாம் சுமுகமாக நடந்து முடிந்தது” என்றார். எனவே தேர்தல் ஆணையம் பின்பற்றுகின்ற வழிமுறைகளில் எல்லாவிதமான தில்லு முல்லு மோசடிகளுக்கும் இடமுள்ளது என்பதே தெரியவருகிறது.

இறுதியாக மகாராஷ்டிரா தலைமை தேர்தல் அதிகாரி எஸ். சொக்கலிங்கம் அவர்களுக்கு எங்களது விரிவான கேள்வி பட்டியலை அனுப்பி உள்ளோம். அவர் பதிலளித்தால் புதிய விடை கிடைக்கக்கூடும். 2009க்கு பிறகு இப்போது தான் புதிய வாக்காளர் எண்ணிக்கை கனிசமான அளவில் அதிகரித்து இருக்கிறது 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது இந்த சட்டமன்ற தொகுதியில் மட்டும் 32,822 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

நாக்பூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2001 முதல் 2011 வரை 14 சதவீதம் மட்டுமே அதிகரித்திருந்தது. இந்த அதிகரிப்பு முந்தைய பத்தாண்டுகளை விட மிகவும் குறைவாகும்

தேசிய தலைமை பதிவாளர் ஏ.ஆர். நந்தா கூறுகையில் ”நாக்பூர் மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு 14 சதவீதம் மட்டுமே. எனில் வாக்காளர் அதிகரிப்பும் அதே விகிதத்தில் தான் இருக்க முடியும். இப்போது இருக்கின்றவாறு இருக்க முடியாது” என்று கூறுகிறார். 1988-இல் இவ்வாறு எண்ணிக்கையில் ஒரு பாய்ச்சல் இருந்ததை பார்த்தோம் அதற்கு காரணம் வாக்காளர்களுக்கான வயது வரம்பு அப்போது 21-ல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டு இருந்தது. இப்போது அப்படி எதுவும் இல்லை. தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் புதிய வாக்காளர் பட்டியலை தயாரித்து வெளியிடுகின்றது எனும் போது இவ்வாறு ஒரு ஆண்டில் ஆறு மாதத்தில் இவ்வளவு வாக்காளர்கள் அதிகரிப்பு இருக்க முடியாது. இதற்கு தேர்தல் ஆணையம் தான் பதிலளிக்க வேண்டும்” என்று கூறினார்.

நன்றி: நியூஸ் லாண்டரி

(உள்ளடக்கம் மாற்றப்படாமல் விவரங்கள் சுருக்கப்பட்ட வடிவம்)


தமிழில்: ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க