பக்தி – மதவெறி – கலவரம்: சங்கிகளின் கலவரச் சூத்திரம்

முருக பக்தர் மாநாடு என்ற இந்து முன்னணி மாநாட்டை, மக்கள் அடையாளம் கண்டுகொண்ட அளவிற்கு சங்கிக் கும்பலின் பக்தி வேடத்தை உணர்ந்து கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

மிழ்நாட்டைக் கலவர பூமியாக்க வேண்டும் என்பதற்காக, இவ்வாண்டின் தொடக்கத்தில் மதுரை திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிடுவது முருகன் கோவிலின் புனிதத்தைக் கெடுப்பதாகக் கூறி பிரச்சினையைக் கிளப்பியது சங்கிக் கும்பல்.

ஆனால், மதுரை மக்களின் மதநல்லிணக்க மரபும் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் எதிர் நடவடிக்கைகளும் சங்கிக் கும்பலை நெருக்கடிகளுக்குள்ளாக்கி பின்வாங்க வைத்தது. இனியும் இவ்வாறு நேருக்கு நேர் தமிழ் மக்களின் உணர்வுடன் மோதினால், அம்பலப்பட்டு போவோம் என்றுணர்ந்த இந்து முன்னணிக் கும்பல் ‘முருக பக்தர்’ என்ற வேடத்தைப் போட்டுக்கொண்டு தனது அமைப்பு மாநாட்டை முருக பக்தர் மாநாடு என்று அறிவித்தது.

தொடக்கத்தில் “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்று கூச்சலிட்ட இக்கும்பல், “எதிர்ப்பாளர்களுக்கு பதிலளிப்போம்!” என்று பம்மியது. சிக்கந்தர் தர்கா குறித்து நேரடியாக பேசினாலோ, திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம் என்று பேசினாலோ தமது கலவர நோக்கத்தை மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பதால், ‘பக்தர்கள் மாநாடு’ என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டது. “அறுபடை வீடுகளைக் காப்போம், கோவிலைக் காப்போம்” போன்ற முழக்கங்களை முன்வைத்தது. இது அதிகார வர்க்கத்திலும் நீதித்துறையிலும் இருக்கும் சங்கிகள், நெருக்கடி ஏதுமில்லாமல் மாநாடு நடத்துவதற்கான அனுமதி வழங்குவதற்கு வாய்ப்பாக அமைந்தது.

எனினும், பக்தர் வேடமணிந்து முருக பக்தர்கள் மாநாடு என சங்கிக் கும்பல் பின்வாங்கியது என்பது, எதிர்ப்பின் காரணமாக மேற்கொண்ட நடவடிக்கை மட்டுமல்ல.

மதவெறி – அதிகார வெறியை மறைக்க பக்தி வேடம்

ஒருபுறம், பக்தர்கள் மாநாடு என இந்து முன்னணிக் கும்பல் குறிப்பிடும் அதேவேளையில், சங்கப் பரிவாரத்தின் இன்னொரு பிரிவான பா.ஜ.க-வோ இந்த மாநாட்டின் மூலமாக தமிழ்நாட்டின் அரசியலை மாற்றுவோம் என்று கொக்கரித்தது.

பாசிச மோடிக்கு அடுத்த நிலையில் இருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த மாநாட்டிற்குப் பிரச்சாரம் செய்வதற்காக மதுரைக்கு வந்தார். ஜூன் 9-ஆம் தேதி நடந்த பா.ஜ.க-வின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அமித்ஷா, இந்து முன்னணி மாநாட்டிற்காக ஐந்து லட்சம் பேரைத் திரட்ட வேண்டும் என்றார். இம்மாநாட்டிற்கு, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருவதாகவும் அறிவித்தார்.

இப்படியாக, பா.ஜ.க. இந்த மாநாட்டை நடத்தி முடிப்பதை தனது முதன்மையான நிகழ்ச்சிநிரலாக எடுத்துக்கொண்டது. 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த மாநாடு எதிரொலிக்கும் என்று பா.ஜ.க-வினர் கூச்சலிட்டனர்.

தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை நடத்தி ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தின் தொடக்கம்தான் இந்த மதுரை மாநாடு என ஜனநாயக சக்திகள், ஊடகங்கள் மட்டுமல்ல, சாதாரண பொதுமக்களே அம்பலப்படுத்தினர்.

பக்தியே சங்கிக் கும்பலின் மூலதனம்

முருக பக்தர் மாநாடு என்ற இந்து முன்னணி மாநாட்டை, மக்கள் அடையாளம் கண்டுகொண்ட அளவிற்கு சங்கிக் கும்பலின் பக்தி வேடத்தை உணர்ந்து கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

அதனால்தான், தனது இந்துத்துவ சதித்திட்டத்தை நடைமுறைப்படுத்த சங்கிக் கும்பல் தனது நடவடிக்கைகளை மக்களின் பக்தி, ஆன்மீக உணர்விலிருந்து தொடங்குகிறது. மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து இந்துமத கோவில்களை இணைத்து ஆன்மீக சுற்றுலா, பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் கும்பமேளா, ராமநவமி, ஹனுமன்நவமி போன்ற மத நிகழ்ச்சிகளை அரசு பொறுப்பெடுத்து நடத்துவது போன்றவையும் இந்த நோக்கத்தில்தான்.

மேலும், இச்சங்கிக் கும்பலானது சமூக ஊடகங்களின் மூலமாக பக்தி என்ற பெயரில் அடிமுட்டாள்தனமான கருத்துகளைப் பரப்பி வருகிறது. தாங்கள் வணங்குகின்ற கடவுள்களைப் பற்றி இவ்வாறு, இந்த சங்கிக் கும்பல் வழக்கத்திற்கு மாறான, மிகைப்படுத்தப்பட்ட கதைகளைக் கட்டவிழ்த்துவிடும்போது, சாதாரண இந்து பக்தர்கள் அதனை அங்கீகரித்துக் கொள்கின்றனர்.

இவ்வாறு தொடர்ந்து புரட்டுகளைப் பார்க்கும் அந்த சாதாரண இந்து பக்தர்களின் சுயசிந்தனையானது செயலிழக்கத் தொடங்குகிறது. இதுதான், இக்கும்பல் இசுலாமியர்கள், கிறிஸ்த்தவர்களுக்கு எதிரான பொய்களையும் வதந்திகளையும் பரப்பும் போது எதிர்ப்புகள் ஏதுமின்றி, ஆமோதித்துக் கொள்வதற்கு காரணமாகும்.

சங்கிக் கும்பலின் வதந்திகளை நம்பும் இந்த சாதாரண இந்து பக்தர்கள், தாம் வசிக்கும் பகுதிகளில் இசுலாமியர்களுக்கு எதிராக பொய்-வதந்திகளைக் கிளப்பிவிட்டு சங்கிக் கும்பல் கலவரங்களைத் தூண்டும்போது, இக்கும்பலின் அக்கிரமங்களைக் கண்டு அமைதி காக்கின்றனர்; இசுலாமியர்கள், கிறிஸ்த்தவர்கள் மீது தாக்குதலைத் தொடுக்கும் போது வேடிக்கைப் பார்க்கும் நிலைக்குச் சென்றுவிடுகின்றனர்.

இவ்வாறு மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மதவெறிக்குப் பழக்கப்படுத்த சங்கிக் கும்பல் பயன்படுத்தும் ஆயுதம்தான் பக்தி!

“திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்று கொக்கரித்த இக்கும்பலுக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கவே, முருக பக்தர்கள் மாநாடு என்று பக்தர் வேடத்தை அணிந்து கொண்டதற்கும் இதுவேதான் காரணமாகும்.

பக்தி வேடத்தைத் திரைக்கிழிக்கும் பார்ப்பனிய எதிர்ப்புணர்வு

திருப்பரங்குன்ற மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிடுவதால், முருகன் கோவிலின் புனிதம் கெட்டுவிடுகிறது; இது, முருக பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிரானது; ஆகையால், சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்பது சங்கிகளின் தொடக்கக்கால பிரச்சாரமாகும்.

இந்த நச்சுப் பிரச்சாரத்தை அப்போதே முறியடிக்காததன் விளைவுதான், சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிட்டு வணங்கும் பழக்கமே இல்லை என்று சங்கிகள் அப்பட்டமாக பொய் பேசி வருவதற்கு அடிப்படையாகும். இதனை அப்படியே வளர்த்தெடுத்து, தர்காவே ஆக்கிரமிக்கப்பட்டது என்று சொல்லி, அதன் மீது “கரசேவை” நடத்துவதுதான் இச்சங்கிக் கும்பலின் சதித்திட்டமாகும்.

இதனைத்தான், பிப்ரவரி 4-ஆம் தேதி “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்று பா.ஜ.க-வின் எச்.ராஜாவும் இந்து முன்னணியின் காடேஸ்வரனும் இந்து முன்னணியின் ஆர்ப்பாட்டத்தில் கொக்கரித்தனர்.

இச்சூழலில், பார்ப்பன புராணத்தின் அடிப்படையில் முருகனுக்குப் புனிதம் கற்பிக்கும் சங்கிக் கும்பலின் மோசடிகளை அம்பலப்படுத்த வேண்டியிருந்தது. மேலும், உழைக்கும் இந்து பக்தர்களைத் தம்பக்கம் திரட்டும் இந்து முன்னணியின் மதவெறிக் கூச்சலை அடக்க வேண்டியிருந்தது.

அந்தவகையில்தான், “முருகனை மீட்போம், கருப்பனைக் காப்போம்!” என்ற முழக்கத்தை மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் முன்வைத்தன. தமிழர் கடவுளாகிய முருகனைப் பார்ப்பனமயமாக்கியதை அம்பலப்படுத்தின. வேட்டைக்கடவுள் முருகன் என்பதையும் சிக்கந்தருக்கு உழைக்கும் இந்து மக்கள் ஆடு-கோழி பலியிடும் மரபையும் வெளியுலகிற்கு எடுத்துக்காட்டின. இன்று, சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிடும் உரிமையை மறுக்கும் சங்கிக் கும்பல், நாளை கருப்பசாமி, சுடலைமாடன், அய்யனார், பாண்டி கோவில் என நாட்டார் தெய்வங்களுக்கும் குல தெய்வங்களுக்கும் ஆடு-கோழி பலியிட்டு வணங்கும் உரிமையை பறித்துவிடும் என்றும் ஏற்கெனவே பல அம்மன் கோவில்களை பார்ப்பனமயமாக்கியிருப்பதையும் எடுத்துக்காட்டி உழைக்கும் மக்களை எச்சரித்தன.

இந்த முழக்கமும் அதன் அடிப்படையிலான தொடர்ச்சியான சங்கிக் கும்பலுக்கு எதிரான இவ்வமைப்புகளின் போராட்டங்கள், அம்பலப்படுத்துதல்களும் இந்துமதவெறியைக் கேள்விக்குள்ளாக்கியது. மார்ச் 9-ஆம் தேதி, மதுரையில் நடந்த மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனநாயக சக்திகள், ஆடு-கோழி பலியிட்டு வணங்கும் மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டியதை வலியுறுத்தினர். தமிழ் கடவுள் முருகனுக்கு ஆடு-கோழி பலியிட்டு வணங்கும் மரபு குறித்து பலரும் சமூக ஊடகங்களில் பேசத் தொடங்கினர்.

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தைக் கொண்டுவந்து இயற்கை வளத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கவந்த பாசிச மோடி அரசு, அம்மக்களின் உறுதியான எதிர்ப்பின் காரணமாக பின்வாங்கியது. ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்த மோடி அரசுக்கு எதிராக, மதுரை அலங்காநல்லூர் மக்களின் போராட்டமானது உலகமே திரும்பிப் பார்க்க வைத்த, ஜல்லிக்கட்டு எழுச்சியாக வளர்ந்தது. மதுரை மக்களின் இந்தப் போராட்ட மரபை மக்களுக்கு எடுத்துக்காட்டி, இந்து மதவெறிக்கு மக்கள் இடம் கொடுக்கக் கூடாது என்ற இப்புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரமானது, சங்கிக் கும்பலுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

இவற்றின் தொடர்ச்சியாகத்தான், சங்கப் பரிவாரக் கும்பல் பின்வாங்கி முருக பக்தர்கள் மாநாடு என்று பேசத் தொடங்கியது.

உழைக்கும் மக்களின் பக்தியுணர்வில் இருக்கும் பார்ப்பனிய எதிர்ப்புணர்வையும் அவர்களது போராட்ட மரபையும் எடுத்துக்காட்டி மக்களுக்கு உணர்த்தும்போது, சங்கிக் கும்பலின் மதவெறிப் பிரச்சாரத்தை முறியடிக்க முடியும், அதனைப் பின்வாங்க வைக்க முடியும் என்பதுதான் அனுபவமாகும்.

பக்தி – மதவெறி – கலவரம்

ஆக, தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்புணர்வுக்கு நேருக்கு நேர் முகம் கொடுக்க முடியாத இச்சங்கிக் கும்பலின் உத்திதான் பக்தி – மதவெறி – கலவரம் என்ற சூத்திரமாகும். திருப்பரங்குன்றத்தில் எடுத்த எடுப்பிலேயே மதவெறியைப் பேச முயன்று மூக்கறுப்பட்டுள்ள இச்சங்கிக் கும்பல், பக்தி என்ற போர்வையில் ஒளிந்துக் கொண்டுள்ளது. இதனை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டியது தமிழ்நாட்டு ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

ஆனால், தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசோ, முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தியது; அதில், பார்ப்பனமயமாக்கப்பட்ட முருகனையே முன்னிறுத்தியது; பள்ளி மாணவர்களை கந்தசஷ்டி பாராயணம் பாடச் சொன்னது; அர்ஜுன் சம்பத் போன்ற சங்கிகளை இம்மாநாட்டிற்கு அழைத்து கௌரவித்தது. இதனால், சங்கிக் கும்பலால் இந்த மாநாடு வரவேற்கப்பட்டது.

சங்கிக் கும்பல் முன்வைக்கும் பார்ப்பனமயமாக்கப்பட்ட இந்து மத உணர்வுக்குள் சென்று, இந்து மக்களின் நம்பிக்கையைப் பெற முயற்சிப்பது, சங்கிக் கும்பலின் ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும் என்பதுதான் மேற்குவங்கம், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் அனுபவமாகும்.

ஆகையால், தேர்தலில் பா.ஜ.க-விற்கு ஜனநாயகம் வழங்குவது எந்த அளவிற்கு ஆபத்தானதோ, அதே அளவிற்கு பக்தி வேடமணிந்துவரும் சங்கப் பரிவாரக் கும்பலை எதிர்க்கத் தயங்குவதும், பக்தியைப் பிரச்சாரம் செய்வது அவர்களது உரிமை என்று அங்கீகரிப்பதும் ஆபத்தானதாகும்.

பொதுவில், தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை மட்டும் வைத்துக்கொண்டு சங்கிக் கும்பலை விரட்டியடித்துவிட முடியாது. இச்சங்கிக் கும்பல், நேரடியாக மதவெறிக் கூச்சல் போடும்போது அதனை அம்பலப்படுத்துவதைவிட, இதுபோல பக்தர் வேடமணிந்துவரும் போதுதான் அக்கும்பலை இன்னும் தீவிரமாக தோலுரிக்க வேண்டும்.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க