அசாம்: அதானிக்காக விரட்டியடிக்கப்படும் இஸ்லாமிய மக்கள்!

“இந்த அனல்மின் நிலையத் திட்டத்திற்கும் அதானி குழுமத்திற்கும் தொடர்புள்ளது. அதானி குழுமத்தின் இயக்குநரான ஜீத் அதானி ஏப்ரல் 22 அன்று அனல்மின் நிலையம் அமையவிருக்கும் இந்த இடத்தைப் பார்வையிட்டார்”

0

சாம் மாநில பா.ஜ.க அரசு, அனல் மின்நிலையத் திட்டத்திற்காக 2,000-க்கும் மேற்பட்ட மியா இஸ்லாமிய மக்களின் வீடுகளை இடித்து வருகிறது. இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நான்கு கிராமங்களில் சுமார் 5,000 பிகா-விற்கும் (bigha) அதிகமான நிலம் பரந்து விரிந்துள்ளது. இந்த வெளியேற்ற நடவடிக்கையால் சுமார் 10,000 நிலமற்ற மியா  இஸ்லாமிய மக்கள் இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க அரசின் இந்நடவடிக்கையை இஸ்லாமிய மக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அசாம் மாநில மின் விநியோக நிறுவனம் மூலம் 3,400 மெகாவாட் அனல்மின் நிலையம் அமைப்பதற்கான திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க அரசு முன்மொழிந்தது. பழங்குடியின மக்கள் அதிகளவு வசிக்கும் கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள பகுதிதான் முதலில் அனல்மின் நிலையம் அமைப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக இத்திட்டம் மியா இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய துப்ரி (Dhubri) மாவட்டத்தின் பிலாப்ஷிபாரா பகுதிக்கு பா.ஜ.க அரசால் மாற்றப்பட்டது.

இத்திட்டத்தால், துப்ரி மாவட்டத்தில் உள்ள சாருபக்ரா ஜங்கல் பிளாக், சிரகுடா பகுதி 1, பகுதி 2 மற்றும் சந்தோஷ்பூர் உள்ளிட்ட நான்கு கிராமங்களில் வசித்துவரும் இஸ்லாமிய மக்கள் கூண்டோடு வெளியேற்றப்படுவர்.

ஜூன் 25-ஆம் தேதி அன்று அனல் மின் நிலையம் அமைப்பதற்கான இடத்தை அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பார்வையிட்ட பிறகு அப்பகுதியிலிருந்து இஸ்லாமிய மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

ஜூலை 4-ஆம் தேதி அன்று துப்ரி மாவட்ட நிர்வாகம் இஸ்லாமிய மக்கள் வீடுகளை காலி செய்யுமாறு பொது அறிவிப்பு வெளியிட்டது. மறுநாள் ஜூலை 5-ஆம் தேதி அன்று வட்ட அலுவலக (Chapar Circle Office) அதிகாரிகள் 4 கிராமங்களின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வெளியேறுவதற்கான அறிவிப்பு போஸ்டர்களை ஒட்டினர். அதில், 1886-ஆம் ஆண்டு அசாம் நிலம் மற்றும் வருவாய் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், ஜூலை 6-ஆம் தேதிக்குள் குடியிருப்பாளர்கள் அனைவரும் நிலத்தைக் காலி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிலமற்ற குடும்பங்களுக்கு இழப்பீடாக 50,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், இப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்படும் மக்கள் அனைவரும் துப்ரியில் உள்ள அதானி (Athani) வருவாய் வட்டத்தின் கீழ் உள்ள பாய்ஜர் ஆல்கா கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநில நிர்வாகம் ஜூலை 8-ஆம் தேதி அன்று 3,000-த்திற்கும் மேற்பட்ட போலீஸ்காரர்களை குவித்து 100-க்கும் மேற்பட்ட புல்டோசர்கள் மூலம் இஸ்லாமிய மக்களின் வீடுகளை இடிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தூப்பக்கிச் சூடு நடத்திக் கலைத்துள்ளது பாசிச பா.ஜ.க அரசு. போலீஸ் நடத்திய இத்தாக்குதலில் சாருபக்ரா கிராமத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர்

சிரகுடா கிராமத்தில் வசிக்கும் 52 வயதான அஜிரன் நெஸ்ஸா, “திடீரென்று, 50,000 ரூபாயை கொடுத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறச் சொல்கிறார்கள். நாங்கள் எங்கே போவோம்? அரசாங்கம் எங்களை ஆற்றின் நடுவில் குடியேற்ற விரும்புகிறது. அங்கு நாங்கள் எப்படி வாழ முடியும்?” என்று மாநில அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

சிரகுடா கிராமத்தைச் சேர்ந்த 41 வயதான அப்துர் ரஷீத் சேக், இந்த அனல்மின் நிலையத் திட்டத்திற்கும் அதானி குழுமத்திற்கும் தொடர்புள்ளது. அதானி குழுமத்தின் இயக்குநரான ஜீத் அதானி ஏப்ரல் 22 அன்று அனல்மின் நிலையம் அமையவிருக்கும் இந்த இடத்தைப் பார்வையிட்டார் என அம்பலப்படுத்துகிறார்.


படிக்க: சத்தீஸ்கர்: 14 கிராமங்களை அழித்து அதானிக்கு நிலக்கரிச் சுரங்கம்


அதேபோல், இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் இஸ்லாமிய மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள பாய்ஜர் ஆல்கா என்ற கிராமம் தாழ்வான பகுதி. இதனால் மழை வெள்ளம், மண் அரிப்பு ஏற்படுவதற்கான அபாயங்கள் உள்ளன. முக்கியமாக குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதாரம் மற்றும் பள்ளிகள் போன்ற எந்தவித அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லை. மொத்தத்தில், இங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் இஸ்லாமிய மக்களை கூண்டோடு படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளது பாசிச பா.ஜ.க அரசு.

பிரமப்புத்திரா நதியால் ஏற்பட்ட அரிப்பு காரணமாக வீடுகளை இழந்து அரசு நிலத்தில் வசித்துவரும் சாருபக்ரா ஜங்கல் பிளாக் கிராமத்தைச் சேர்ந்த 400 குடியிருப்பாளர்கள், நிலங்களை காலி செய்யுமாறு வெளியிடப்பட்ட மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து ஏப்ரல் மாதம் குவஹாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கு விசாரணை ஜூலை 22 ஆம் தேதி அன்று நடைபெறும் என்று குவஹாத்தியைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்ட அதிகாரிகளின் இந்நடவடிக்கைகள் நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய ”சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன் செயல்முறைகள் பின்பற்றப்பட வேண்டும்” என்று தீர்ப்பை மீறுவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 8-ஆம் தேதி அன்று காலை, “ரைஜோர் தளத்” தலைவரும் எம்.எல்.ஏ-வுமான அகில் கோகாய் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில் “இஸ்லாமியர்கள் என்பதால் மட்டுமே, வகுப்புவாத பா.ஜ.க அரசாங்கம் இம்மக்களை இவ்வாறு சித்திரவதை செய்கிறது. இது அவர்களின் அரசியல் உத்தி” என்று தெரிவித்துள்ளார்.

சி.பி.ஐ (எம்) தலைவர் சுப்பிரகாஷ் தாலுக்தர் கூறுகையில், ”இந்த வெளியேற்ற இயக்கம் நிலம் மற்றும் பொது வளங்களை பெருநிறுவன நலன்களுக்கு மாற்றுவதற்கான ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆனால், பா.ஜ.க இதை ‘மியா இஸ்லாமியர்களிடமிருந்து அசாமை காப்பாற்றும்’ ஒரு தேசபக்தி செயலாக வடிவமைக்கிறது. தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக சமூகப் பிளவுகளை ஆழப்படுத்தும் வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது” என்று பாசிச கும்பலின் இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதலை அம்பலப்படுத்தியுள்ளார்.


படிக்க: நாக்பூர்: நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளி இஸ்லாமியர் வீடுகளை இடிக்கும் பாசிச பி.ஜே.பி!


முக்கியமாக, அசாம் மாநில வருவாய் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை துறை வழங்கிய தரவுகளின்படி, 2016-ஆம் ஆண்டு அசாமில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்பு 2016 முதல் ஆகஸ்ட் 2024 வரை, 10,620-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் (பெரு வாரியாக இஸ்லாமிய மக்கள்) அரசு நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக இருக்கும் அசாம் மாநிலத்தில், அம்பானி – அதானி கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து அகதிகளாக விரட்டியடிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதிலும், இஸ்லாமிய மக்களை குறிவைத்தே இந்நடவடிக்கையை பா.ஜ.க அரசு தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக, அசாமில் வங்கதேச குடியேறிகள் என்ற பெயரில் இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு இஸ்லாமிய மக்கள் வீடுகளை இடித்து வருகிறது. பாசிச கும்பலின் காவி நடவடிக்கைகள் கார்ப்பரேட் நலனை முதன்மைப்படுத்தியதே என்பதை அசாம் அனல்மின் நிலையத் திட்டம் மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க