அபாயமாகும் உயிரி மருத்துவக் கழிவுகள் – பொறுப்பேற்குமா அரசு?

உயிரி மருத்துவக் கழிவுகளை தரம் பிரிப்பதில் ஈடுபடும் தொழிலாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் இவற்றை கையாள்வதால் எச்.ஐ.வி (HIV), கல்லீரல் தொற்று (Hepatitis) போன்ற பல தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

மீபத்தில் டெல்லியில் உள்ள காலிந்தி குஞ்ச் என்ற பகுதியில் பி.பி.சி ஊடகம் நடத்திய ஆய்வில், உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு குறித்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரி மருத்துவக் கழிவுகள் (Bio-medical Waste) என்பது மருத்துவமனைகளில் உருவாகும் கழிவு பொருட்களாகும். கையுறைகள், முகக்கவசங்கள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் போன்றவை இதில் அடங்கும். இந்தியாவில் நாளொன்றுக்கு 743 டன் உயிரி மருத்துவக் கழிவுகள் உற்பத்தியாகிறது. ஆனால் இதில் 694 டன் கழிவுகள் மட்டுமே முறையாக அப்புறப்படுத்தப்படுகிறது.

2022-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 208 “பொது உயிரி மருத்துவக் கழிவுகளை சுத்திகரிப்பு மற்றும் அகற்றல் வசதி” (Common Bio-medical Waste Treatment and Disposal facility) உள்ளது. இவற்றை கொண்டு மொத்தமாக ஒரு நாளைக்கு 1,167 டன் கழிவுகளை சுத்திகரிப்பு செய்ய முடியும். இருப்பினும் இந்தியாவில் உருவாகும் மருத்துவக் கழிவுகள் மேற்சொன்ன அளவைவிட குறைவாகவே உள்ள போதிலும் அவை முறையாக அப்புறப்படுத்தப் படுவதில்லை. முறையாக பண்படுத்தப்படாத குப்பைகள் பொது குப்பைகளுடன் கலந்து பொது குப்பை கிடங்குகளை சென்றடைகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிக்கையின்படி, மருத்துவக் கழிவுகளை இரண்டு தரமாக பிரிக்கலாம். அவற்றில், 85 சதவிகித மருத்துவக் கழிவுகள் ஆபத்தற்றவை, 15 சதவிகிதம் அபாயகரமானவையாகும். இந்த அபாயகரமான கழிவுகளை கையாள்வதில் அதிக கவனம் தேவை என்று தெரிவிக்கும் அவ்வறிக்கை, அவற்றில் சிறிதளவு பொது கழிவுகளுக்குள் சென்றாலும் அவை மொத்தமும் அபாயகரமாகிவிடும் என்று எச்சரிக்கிறது.

அதேபோல், கடந்த 2016-இல் சுற்றுச்சூழல் வளம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகமானது உயிரி மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகள்-வழிமுறைகளை வெளியிட்டது. இந்த வழிமுறைகள் உயிரி மருத்துவக் கழிவுகள் பிற குப்பைகளுடன் கலக்கப்படக் கூடாது என்பதையும் அவற்றை தனியாக முறையான பாதுகாப்பு உபகரண வசதிகளுடன் தரம் பிரித்து கையாள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

இந்த வழிமுறைகள், ஆபத்தான உயிரி மருத்துவக் கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காத வண்ணம் அப்புறப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டதாகும். ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றுவதில்லை.


படிக்க: கேரளா: கடலில் மூழ்கிய கப்பலால் சுற்றுச்சூழல் பேராபத்து!


கொரோனா தொற்றுக்கு பிந்தைய காலத்தில் மருத்துவக் கழிவுகள் அதிகளவில் உற்பத்தி ஆகிறது. ஆனால் இவற்றை கையாளுவதில் முறையான வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. மேலும் குப்பை கிடங்குகளில் குப்பைகளை தரம் பிரித்து வைக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் எந்தவித பயிற்சியும் இல்லாமல் பாதுகாப்பு உபகரணங்களும் கொடுக்கப்படாமல் இந்த வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்தியாவில் மொத்தம் 3,93,242 சுகாதார நிறுவனங்கள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் 1,56,540 நிறுவனங்கள் மட்டுமே கழிவுகளை பிரித்தெடுக்கும் திறனுடையவை என்று மாநில மாசுக் கட்டுப்பாட்டு துறையால் அங்கீகரிக்கப்பட்டவை.

பொதுவாக மருத்துவமனைகளில் இந்த மருத்துவக் கழிவுகளை தரம் பிரித்து வைப்பதற்கு தனித்தனியான குப்பை தொட்டிகள் நிற வாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் சிவப்பு நிற தொட்டி நெகிழி குப்பைக்காகவும், கருப்பு நிற தொட்டி தொற்று இல்லாத பொதுக் கழிவுக்கும், நீல நிற தொட்டி உடைந்த கண்ணாடிகளுக்கும், மஞ்சள் நிற தொட்டி அபாயகரமான கழிவுகளுக்காகவும் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. எனினும் இவற்றை எடுத்து செல்வதில் உள்ள கவனக்குறைவால் இந்த குப்பைகள் ஒன்றோடொன்று கலந்து விடுகிறது.

இந்த உயிரி மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு முன்னதாக அவற்றை முறையாக பண்படுத்தி அதில் உள்ள நச்சுத்தன்மையை குறைக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் குப்பைகளை பொதுக் கழிவுகளோடு கொட்டுவதால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது.

மேலும், உயிரி மருத்துவக் கழிவுகள் அதிகபட்சம் 48 மணி நேரம் மட்டுமே ஒரு இடத்தில் வைத்திருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால், அது அங்குள்ள சுற்றுச்சூழலை அதிக அளவில் பாதிக்கும் அபாயம் உள்ளது. அதேபோல் உயிரி மருத்துவக் கழிவுகளை முறையாக பிரித்து இன்சினரேட்டர் (incinerator) மூலம் அப்புறப்படுத்தும் ஒரு வழிமுறையும் உள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் இதற்கான வசதிகள் செய்யப்படாமல் பொதுவான நிலங்களில் குப்பைகள் கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால் காற்றில் கார்பன்-டை-ஆக்சைட் போன்ற பசுமை இல்ல வாயுக்கள் (greenhouse gases) கலந்து காற்றை மாசடைய செய்கிறது. குப்பைகளை பண்படுத்தாமல் கொட்டுவதால் அங்குள்ள நிலம் மாசடைகிறது. மேலும் இக்குப்பைகளை நீர் நிலைகளில் கொட்டுவதால் நீர்நிலைகள் மாசடையும் அபாயமும் உள்ளது. உயிரினங்கள் மாசடைந்த இந்த நீரை குடிப்பதாலோ அல்லது அங்குள்ள செடிகளோடு சேர்த்து இந்த குப்பைகளை உண்பதாலோ பல தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றன.

மேலும் இக்குப்பைகளை தரம் பிரிப்பதில் ஈடுபடும் தொழிலாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் இவற்றை கையாள்வதால் எச்.ஐ.வி (HIV), கல்லீரல் தொற்று (Hepatitis) போன்ற பல தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர். பயன்படுத்தப்பட்ட ஊசிகளால் காயம் ஏற்பட்டு இவர்களுக்கு பல வகை நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குப்பைகளை கையாளும் தொழிலாளர்களில் 33,800 பேருக்கு எச்.ஐ.வி தொற்றும் 1,70,000 பேருக்கு ஹெபடிடிஸ்-பி (Hepatitis B) தொற்றும் 3,15,000 பேருக்கு ஹெபடைடிஸ் சி (Hepatitis C) தொற்றும் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் தனியார் காண்ட்ராக்ட் மூலம் பணியமர்த்தப்படுகின்றனர். அந்த தனியார் நிறுவனங்கள் இந்த பாதிப்புகளுக்கு பொறுப்பு ஏற்பதில்லை. இதனால் இத்தொழிலாளர்கள் கொடிய தொற்றுகளால் பாதிக்கப்பட்டு அவர்கள் வாழ்வாதாரத்தையும் இயல்பு வாழ்க்கையையும் இழக்கின்றனர்.


படிக்க: சூழலியலைச் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகள் | நூல்


இந்த பிரச்சனை டெல்லி மட்டுமின்றி இந்தியாவில் பல பகுதிகளில் அதிகப்படியாக இருந்துகொண்டே இருக்கிறது. கேரளா கேன்சர் நிறுவனத்திலிருந்து தமிழ்நாடு எல்லைக்குள் உயிரி கழிவுகள் கொட்டப்படுவதால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் அங்குள்ள நிலமும் நீரும் அதிகப்படியாக மாசடைவதாகவும் மக்கள் கூறுகின்றனர். தொடர்ந்து புகார்களும் மனுக்களும் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பிரச்சனை இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அரசு தரப்பு மௌனம் காத்த வண்ணமே உள்ளது.

அரசின் மாசு கட்டுப்பாட்டு துறையும், சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகமும் குப்பைகளை முறையாக கையாள்வதற்கான வழிமுறைகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால் இக்குப்பைகளை தரம் பிரித்து அப்புறப்படுத்தும் பணியானது பெரும்பாலும் தனியார் நிறுவனங்களின் கைகளில் உள்ளன. இந்நிறுவனங்கள் காண்ட்ராக்ட் அடிப்படையில் குறைந்த கூலியில் தொழிலாளர்களை நியமித்து இப்பணிகளை மேற்கொள்வதால் அரசின் எந்த வழிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. இதனால் சுற்றுச்சூழலுக்கும் இந்த பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்புகளுக்கு இந்நிறுவனங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்பதில்லை. அரசும் இந்நிறுவனங்கள் வழிமுறைகளை பின்பற்றுகின்றனவா என்பதை கண்காணிப்பதில்லை.

உயிரி மருத்துவக் கழிவுகள் என்பதை தாண்டி பொதுவாகவே குப்பைகளை கையாள்வது தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. இந்த தனியார் நிறுவனங்கள் குறைந்த கூலி கொடுத்து மக்களை இவ்வேலையில் நியமித்து அவர்களுக்கு இக்குப்பைகளை கையாள்வதற்கு தேவையான எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் எந்தவித பயிற்சியும் வழங்காமல் அபாயகரமான கழிவுகளை கையாள வைத்து அவர்களை ஆபத்தின் விளிம்பில் நிறுத்துகின்றனர். மேலும், மருத்துவ கழிவுகளை கொட்டுவதில் மாஃபியா கும்பல்கள் ஈடுபடுவதும் அதற்கு ஒன்றிய-மாநில அரசுகள் துணைநிறுபதும் செய்திகள் மூலம் வெளிவருகின்றன.

மிகை உற்பத்தி மற்றும் நகரமயமாக்கலின் விளைவாக மருத்துவம் உட்பட எல்லா துறைகளிலும் நெகிழி குப்பைகள், மின்சார கழிவுகள் போன்ற பல தரப்பட்ட கழிவுகள் உற்பத்தியாகின்றன. ஆனால் அவை முறையாக கையாளப்படாமல் போவதால் சுற்றுச்சூழல் பேரபாயத்தை நோக்கி நகர்கிறது.

எனவே அரசு இந்த பிரச்சினைக்கு அதிக கவனம் கொடுப்பதுடன், குப்பைகளை தரம் பிரிப்பதற்கு அரசின் மாசு கட்டுப்பாட்டுத்துறை முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தனியார் நிறுவனங்கள் குப்பைகளை தரம் பிரித்து வைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனவா என்பதையும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கின்றனவா என்பதையும் சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றனவா என்பதையும் தொடர்ந்து கவனித்துவர வேண்டும். அப்படி வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

செய்தி மூலம்: பி.பி.சி


மாயவள்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க