ஒடிசா மாநிலத்தில் கல்லூரி துறைத் தலைவரின் பாலியல் துன்புறுத்தலால் மாணவி ஒருவர் தீக்குளித்து இறந்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் ஃபக்கீர் மோகன் தன்னாட்சி கல்லூரி (Fahir Mohan Autonomous College) செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பி.எட் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துவந்த மாணவியை துறைத் தலைவர் சமீர் குமார் சாஹூ என்பவன் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளான். மேலும், தனது இச்சைக்கு இணங்காவிட்டால் கல்லூரி படிப்பையே முடிக்க முடியாது என அக்கொடூரன் மிரட்டி வந்ததுடன் மாணவியை வகுப்புகளுக்குச் செல்ல விடாமல் தடுத்து வந்துள்ளான். இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாணவி கடந்த ஜூன் 30 அன்று இப்பிரச்சினை குறித்து கல்லூரியின் உள் புகார் குழுவிடம் எழுத்துப்பூர்வமாகப் புகாரளித்துள்ளார். தான் மிகுந்த மன அழுத்தத்துடன் இருப்பதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், மாணவிக்கு நீதி பெற்றுத்தர வேண்டிய கல்லூரி நிர்வாகம் பாலியல் பொறுக்கி சமீர் குமார் சாஹூக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளது. மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான எந்த சாட்சியும் இல்லை என்று கூறி பொறுக்கி சமீர் குமார் சாஹுக்கு யோக்கியன் பட்டம் கொடுத்துள்ளது. மேலும், துறைத் தலைவருக்கு ஆதரவாக அவன் மீது கொடுத்த புகாரைத் திரும்பப் பெறுமாறு மாணவியை அக்கல்லூரி முதல்வர் திலீப் கோஷ் மிரட்டி வந்துள்ளான்.
தொடர்ச்சியாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மாணவி மன அழுத்தத்துடன் இருந்துள்ளார். இந்நிலையில், ஜூலை 12-ஆம் தேதி அன்று கல்லூரியின் முதல்வரை சந்தித்துப் பேசிய பிறகு வெளியேவந்த மாணவி தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். உடலில் தீ கொழுந்துவிட்டு எரிய, மாணவி அங்குமிங்கும் ஓடும் சி.சி.டி.வி. காட்சிகள் காண்போரைப் பதற வைக்கிறது. மாணவியைக் காப்பாற்ற முயன்ற அவரது தோழியின் மீதும் தீ பற்றியதையடுத்து இருவரும் மீட்கப்பட்டு பாலசோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மாணவியின் தோழி 70 சதவிகித தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். 95 சதவிகித தீக்காயங்களுடன் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவி ஜூலை 14 அன்று புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். மாணவியின் மரணம் ஒடிசாவில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இதனையடுத்து, மாணவியை பாலியல் வல்லுறவு செய்த துறைத் தலைவர் சமீர் குமார் சாஹு மீது தற்கொலைக்குத் தூண்டுதல், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அவன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளான். இத்தகைய பாலியல் பொறுக்கிக்கு துணைபோன கல்லூரி முதல்வரும் கைது செய்யப்பட்டுள்ளான்.
படிக்க: ஒடிசா: பா.ஜ.க ஆட்சியில் அதிகரித்து வரும் பெண்கள் மீதான பாலியல் கொடூரங்கள்!
இதுகுறித்து பேசியுள்ள மாணவியின் தந்தை, “எல்லோரும் சேர்ந்து என் மகளை சாவதற்கு வற்புறுத்தினர். அது கொலை இல்லையா? கல்லூரியில் அவள் குரல் எழுப்புவாள். ஆனால், அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே இது ஒரு சதி என்று நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். மேலும், “உள்ளே (முதல்வர் அறை) ஏதோ நடந்திருக்க வேண்டும். உள்ளே என்ன நடந்தது? அவளை ஏன் தனியாக அழைத்தார்கள்? என்னையோ அல்லது என் மகனையோ ஏன் அழைக்கவில்லை? என் மகள் இறக்கவில்லை, அவள் கொல்லப்பட்டாள் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அனைவரின் மீதும் கொலைக் குற்றம் சாட்டப்பட வேண்டும்” என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
உண்மையில், மாணவியின் தந்தை கூறுவது போல மாணவியின் மரணமானது கல்லூரி நிர்வாகம் மற்றும் ஒடிசா பா.ஜ.க. அரசால் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட படுகொலை என்பதே வெளியாகியிருக்கும் செய்திகள் மூலம் தெரிய வருகிறது. தன் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஒருபுறம் கல்லூரிக்குள் போராடிவந்த மாணவிக்கு எதிராக மற்றொரு பிரிவு மாணவர்களைச் செயல்பட வைத்துள்ளான் துறைத் தலைவர் சமீர் சாஹு.
ஜூலை 1 அன்றே பாலசோர் போலீசு நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகாரளித்துள்ளார். ஆனால், மாணவியின் புகார் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல், பாலசோர் தொகுதியின் பா.ஜ.க எம்.பி பிரதாப் சாரங்கியையும் மாணவி அணுகியுள்ளார். ஆனால், எங்கு முறையிட்டும் எந்த பலனும் கிடைக்காததால், சில நாட்களுக்கு முன்பாகவே மாணவி தனது எக்ஸ் பக்கத்தில், “எனக்கு நீதி கிடைக்காவிட்டால், நான் தற்கொலை செய்து கொள்வேன்” என்று துறைத் தலைவரின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
மாணவி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ஒடிசா முழுவதும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. இப்போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்வதற்காக மாணவி இறந்த சில மணி நேரங்களிலேயே நள்ளிரவில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவியின் குடும்பத்திற்கு ஒடிசா பா.ஜ.க. அரசு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. ஆனால், இவையெல்லாம் போராட்டத்தைத் தடுத்துவிடவில்லை. மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு ஒடிசா முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. காங்கிரசு, பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் சார்பாக இன்று மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒடிசாவிலுள்ள மாணவர் சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஒடிசாவில், பா.ஜ.க ஆட்சிக்கு வந்து கடந்த ஒன்றைரை மாதங்களில் பெண்கள் மீதான வன்முறை தீவிரமாகி வருகிறது. கடந்த மாதம் மூன்று பெண்கள் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி வெளியாகியது. அதில், 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு காமவெறி பிடித்த மிருகங்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த கொடூரத்தின் சுவடுகள் மக்களின் மனங்களிலிருந்து மறைவதற்குள் தற்போது மீண்டும் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் தாங்க முடியாமல், நீதி கேட்டு போராடி வேறுவழியின்றி தீக்குளித்து உயிரிழந்துள்ளார். பில்கிஸ் பானு, மணிப்பூர் பழங்குடியின பெண்கள், மல்யுத்த வீராங்கனைகள் ஆகியோர் பாசிச கும்பலின் ஆட்சியில் பெண்கள் மீதான வன்முறையின் சாட்சியங்களாக உள்ள நிலையில், தற்போது ஒடிசா கல்லூரி மாணவி மரணம் இதில் இணைகிறது.
பாசிச கும்பலின் பேயாட்சியில் பெண்கள் மீதான வன்முறை நாளுக்குநாள் உச்சநிலையை அடைந்து வருகிறது. பா.ஜ.க ஒடிசாவில் கால்பதித்து ஓராண்டு கடந்துள்ள நிலையில் அம்மாநிலத்தை பெண்கள் வாழத்தகுதியற்ற இடமாக மாற்றிவருகிறது. பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டங்கள், பா.ஜ.க கும்பலின் பாசிச ஆட்சிக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட்டு அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கப்படுவது உடனடி தேவையாக உள்ளது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram