மகாராஷ்டிராவில் சட்டவிரோத ஆக்கிரமிப்பை அம்பலப்படுத்தியதற்காக ஜூலை 4 அன்று பத்திரிகையாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள மன்சார் நகருக்கு அருகில் நிகோத்வாடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள ஆற்றை மறைத்து உள்ளூர் தொழிலதிபர் மோர்டே சட்டவிரோத கட்டுமானப் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். இதனால் அப்பகுதியில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தை வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நில உரிமையாளர் சுதாகர் பாபு ராவ் காலே என்பவர் சமர்த் பாரத் (Samarth Bharat) செய்தித்தாள் மற்றும் சமர்த பாரத் பரிவார் (SBP) யூடியூப் சேனளின் ஆசிரியரான சினேகா பார்வேயிடம் (Sneha Barve) தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சட்டவிரோத கட்டுமானம் குறித்து ஜூலை 4 ஆம் தேதி அன்று உள்ளூர் மக்களிடம் செய்தி சேகரிக்கச் சென்றுள்ளார் சினேகா பார்வே.
திடீரென்று பின்னால் வந்த பாண்டுரங் சாகாராம் மோர்டே (Pandurang Sakharam Morde) சினேகாவின் தலையில் இரும்பக் கம்பியைக் கொண்டு தாக்கியுள்ளார். அவர் மயக்கமடைந்து கீழே விழுந்த பின்பும் கொலைவெறியுடன் தாக்கியுள்ளார். அதனை கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்த கேமரா மேன் அஜாஸ் ஷேக் (Ajaz Sheikh), தாக்குதலைத் தடுக்க வந்த மக்கள் என அனைவரையும் குண்டர் படை கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதில் ஒருவரின் மூக்கும் மற்றொருவரின் கையும் முறிந்துள்ளது. தற்போது சினேகா தாக்கப்படுகின்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக மீட்கப்பட்டு சினேகா பார்வே படுகாயங்களுடன் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பிம்ப்ரி சின்ச்வாட்டில் (Pimpri Chinchwad) உள்ள டி. ஒய். பாட்டீல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தலை மற்றும் முதுகில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. சி.டி ஸ்கேன் மூலம் உள் மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
படிக்க: மகாராஷ்டிரா: ஆண்டுதோறும் அதிகரித்துவரும் விவசாயிகள் தற்கொலை
சினேகா பார்வே இதற்கு முன்பாகவும் பல்வேறு தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது சாஸ் – நரோடி (Chas-Narodi) கிராமத்தில் சாலைகளின் மோசமான நிலை குறித்து புகார் அளித்ததற்காக அவருடைய அலுவலகத்திற்கு முன்பு தாக்கப்பட்டுள்ளார். அதேபோல், 2024-ஆம் ஜூலை மாதத்தில் முன்னாள் எம்.பி சிவாஜிராவ் அதால்ராவ் பாட்டீலை விமர்சித்ததற்காக மிரட்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சினேகா மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பாண்டுரங் சாகாராம் மோர்டே மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் மகாயுதி கூட்டணி கட்சிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர். இதன் காரணமாக, பெயருக்கு மோர்டேவின் இரண்டு மகன்கள் உள்பட ஐந்து பேரைக் கைது செய்த போலீசார் பின்னர் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர்.
மோர்டேவின் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர் குணமடைந்தவுடன் கைது செய்யவுள்ளதாக போலீசு கூறியுள்ளது. இது மோர்டேவிற்கு ஆதரவாக போலீசு செயல்படுவதைக் காட்டுகிறது.
சினேகா பார்வே மீதான தாக்குதல் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும். உள்ளூர் மாவட்ட பகுதிகளில் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தினால் பத்திரிகையாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
கடந்த ஆண்டு எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு (Reporters Without Borders – RSF) வெளியிட்ட அறிக்கையில் 2014 முதல் இந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட 28 பத்திரிகையாளர்களில் அதிகார வர்க்கத்தின் ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதற்காக 13 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க: குணால் கம்ரா மீதான பாசிச தாக்குதல் – கருத்துச் சுதந்திரத்தைக் கல்லறையில் தள்ளும் நடவடிக்கை!
மேலும் ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (United Nations Educational Scientific And Cultural Organizations – UNESCO) ”பிரஸ் அன்ட் பிளான்ட் இன் டேஞ்சர்” (Press and Planet in Danger) என்ற அறிக்கையை வெளியிட்டது. அதில் ”அதிகார வர்க்கத்தினரால் பத்திரிகையாளர்கள் மீது உடல் ரீதியான தாக்குதல்கள், மன ரீதியான தாக்குதல்கள், ஆன்லைன் துன்புறுத்தல்கள் வெளிப்படையாய் நடத்தப்படுகின்றன. 2019-2023 ஆண்டுகளுக்கு இடையில் பத்திரிகையாளர்கள் மீது 300க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன. இது 2014- 2018 காலத்தில் நடந்ததை விட 42 சதவிகிதம் அதிகம்” என்று தெரிவித்துள்ளது.
முக்கியமாக 2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில் மகாராஷ்டிராவில் நிலத்தகராறு குறித்து செய்தி வெளியிட்டதற்காக பத்திரிகையாளர் சஷிகாந்த் வாரீஷே (Shashikant Warishe) படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்களின் குரல்களை தன்னுடைய பாசிச கரங்களால் நெறித்து வருகிறது பா.ஜ.க அரசு. போஜ்புரி பாடகர் நேஹா சிங் ரத்தோர், நகைச்சுவையாளர் குணால் காம்ரா என பலரின் குரல்களும் பாசிச பா.ஜ.க-வால் நசுக்கப்படுகின்றன.
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக ஊடகவியலாளர்கள், ஜனநாயக சக்திகள், மக்கள் என அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். அதன் மூலமே பத்திரிகையாளர்கள் மீதான பாசிச தாக்குதலைத் தடுக்க முடியும்; கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாக்க முடியும்.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram