அசாம்: பா.ஜ.க-வின் பசு மாட்டு ஊழல்!

இந்த ஊழலானது பாசிச பா.ஜ.க கும்பல் பேசும் ‘பசு பாதுகாப்பு’ அரசியலின் யோக்கியதையை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.

0

சாம் மாநில பா.ஜ.க அரசு பால் பண்ணை திட்டத்தின் மூலம் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (Right to Information – RTI – Act) மூலம் சமீபத்தில் அம்பலமாகியுள்ளது. இதற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அசாம் மாநிலத்தில் 2021 ஆம் ஆண்டு பா.ஜ.க மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. பின்னர், தர்ராங் (Darrang) மாவட்டத்தில் உள்ள கோருகுட்டி கிராமத்தை அசாமி பழங்குடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மையமாக மாற்றுவதாகவும், பால் உற்பத்தியை மேம்படுத்துவதாகவும் கூறி அரசு நிதியில் பால் பண்ணை திட்டம் தொடங்கப்பட்டது. அதற்காக நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 லிட்டர் வரை பால் தரக்கூடிய குஜராத்தைச் சேர்ந்த 300 கிர் பசுக்கள் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தால் (National Diary Development Board – NDDB) வழங்கப்பட்டன.

எம்.எல்.ஏ பத்மா ஹசாரிகா தலைமையிலான இத்திட்டம் பழங்குடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும், ’சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின்’ ’அமைதியான பொருளாதார படையெடுப்பை’ எதிர்க்கும் என்றும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இஸ்லாமியர்களைக் குறிவைத்து வெறுப்புணர்வுடன் பேசியிருந்தார்.

ஆனால் தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நான்கு ஆண்டுகளில் பால் பண்ணை திட்டத்தின் மூலம் பா.ஜ.க செய்த ஊழல் அம்பலமாகியுள்ளது. அதாவது பழங்குடி இளைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல கிர் பசுக்கள் பி.ஜே.பி-இன் அசாம் மாநிலத் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான திலீப் சைகியா (Dilip Saikia) மற்றும் பருவா திகந்தா, பூபன் பெகு உள்ளிட்ட பல அமைச்சர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கட்சியின் கேபினட் அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா (Jayanta Malla Baruah), பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவர் சித்தார்த்த பட்டாச்சார்யா ஆகியோரின் மனைவிகள் அரசு மானியங்களைப் பெற்றுள்ளதும் அம்பலமாகியுள்ளது.

ஆர்.டி.ஐ தகவலைத் தொடர்ந்து இரண்டு கிர் பசுக்களை வாங்கியதாக திலீப் சைகியா ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் மாடுகளைப் பராமரிக்க தனது இயலாமையைக் காரணம் காட்டி மாடுகளை கொடுத்துவிட்டு தேசிய பால் மேம்பாட்டு வாரியத்திடமிருந்து (NDDB) பணத்தைத் திரும்பப் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.


படிக்க: அசாம்: அதானிக்காக விரட்டியடிக்கப்படும் இஸ்லாமிய மக்கள்!


பா.ஜ.க கும்பலின் பசு ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தின. போராட்டத்தில் ”கோரு சோர்” (goru chor), அதாவது பசு திருடர்கள் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களை குறிப்பிட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் பிராந்திய எதிர்க்கட்சியான அசோம் ஜாதிய பரிஷத் கிர் மாடுகள் ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது. ”முதல்வர் ஏன் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அமைதியாக இருக்கிறார்” என்று கேள்வி எழுப்பியும் உள்ளது. இந்த பிரச்சினை பா.ஜ.க கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ”தேசிய பால் வள மேம்பாட்டு வாரியம் வழங்கிய சில கிர் பசுக்கள் ’தரமற்றவை’. அவை பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பிறருக்கும் விற்கப்பட்டன” என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அவர்களின் மனைவிகளுக்கு பசுக்கள் விற்கப்பட்டு அதற்கான மானியங்கள் வழங்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது “இன்று அவர்கள் அமைச்சர்கள். ஆனால், அவர்கள் அமைச்சர்களாக இல்லாதபோது அவர்களது குடும்பங்கள் எப்படி இயங்கும்?” என்று தனது அரசின் ஊழலை நியாயப்படுத்திப் பேசியுள்ளார்.

இதைக் கண்டித்துப் பேசிய எதிர்க்கட்சிகள் ”இது மக்கள் பணத்தை தவறாகப் பயன்படுத்துதல் இல்லையா?” என்றும் ”பொது நிதியில் இயங்கும் பால் பண்ணை திட்டத்திற்கான கால்நடைகளை விற்பனை செய்வதற்கு ஏன் டெண்டர் விடப்படவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளன.

இது குறித்து கருத்து கூறிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கெளரவ் கோகாய் ”பா.ஜ.க பசுக்களை வணங்குவதாகக் கூறுகிறது. ஆனால் அதன் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் பால் (உற்பத்தி தொடர்பான) திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். அவர்களின் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் பால் நிறுவனங்களுக்கான மானியங்களைப் பெறுகிறார்கள். அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான வேலையில்லாத இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக இது போன்ற திட்டங்களைத் தொடங்கி நடத்துவதற்கு அரசாங்க ஆதரவைப் பெற போராடுகிறார்கள்,” என்று கூறியுள்ளார்.

பாசிச கும்பல் பால் பண்ணை திட்டத்தில் செய்துள்ள ஊழல் அம்பலமாகியிருப்பது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தாக்கம் செலுத்தும் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த ஊழலானது பாசிச பா.ஜ.க கும்பல் பேசும் ‘பசு பாதுகாப்பு’ அரசியலின் யோக்கியதையை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க