திருவாரூர் மாவட்டம் கம்பர் தெருவைச் சேர்ந்த 22 வயது மாணவர் சபரீஸ்வரன். இவர் நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பா கோவிலில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் பிசியோதெரபி (Bachelor of Physiotherapy) இறுதியாண்டு படித்து வந்துள்ளார்.
கல்விக் கட்டணத்தை முழுமையாகச் செலுத்த முடியாததால் கல்லூரி நிர்வாகம் அவரை தொடர்ச்சியாக அவமானப்படுத்தி துன்புறுத்தி வந்துள்ளது. துளியும் ஈவிரக்கமின்றி மாணவரை வகுப்பறைக்குள் அனுமதிக்காதது; அனைத்து மாணவர்கள் முன்னும் அவமானப்படுத்துவது; ஆசிரியர்கள் மூலம் பழிவாங்குவது; நிர்வாக அதிகாரிகள் தொடர் அழுத்தம் கொடுப்பது என்று மன ரீதியாக சித்திரவதைக்கு உள்ளாக்கி வந்துள்ளது.
இதனால் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்துவந்த மாணவர் சபரீஸ்வரன், கடந்த ஜூலை 16 அன்று மாலை நான்காவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நான்காவது மாடியில் இருந்து குதித்ததில் மாணவரின் இடுப்பு மற்றும் முதுகு எலும்பு பகுதி முழுவதுமாக நொறுங்கி மாணவர் சம்பவ இடத்திலேயே அநியாயமாக உயிரிழந்தார்.
பல்வேறு கனவுகளுடன் கல்லூரியில் படிக்கவந்த சபரீஸ்வரனை சர் ஐசக் நியூட்டன் கல்லூரி நிர்வாகம் தனது லாபவெறிக்காக படுகொலை செய்துள்ளது. ஆனால், அதுகுறித்த எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி தற்கொலையை மூடிமறைப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. மாணவரின் தற்கொலை குறித்து சக மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் அம்பலப்படுத்தியதையடுத்தே விசயம் வெளியில் வந்துள்ளது.
படிக்க: மூடப்படும் ஆதிதிராவிடர் விடுதிகள்… கேள்விக்குள்ளாகும் மாணவர்களின் நிலை!
சர் ஐசக் நியூட்டன் கல்லூரியின் கல்விக் கட்டண கொள்ளையால் கொல்லப்பட்டது மாணவர் சபரீஸ்வரன் மட்டுமல்ல. 2022-ஆம் ஆண்டில் 19 வயதான பிசியோதரப்பி மாணவி சுபாஷினி கல்விக் கட்டண மிச்சத்தை உடனடியாக செலுத்தாததால், அவரையும் மூன்று நாட்களுக்கு வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்து அவமானப்படுத்தியது கல்லூரி நிர்வாகம். பட்டியல் சாதியைச் சேர்ந்த மாணவி சுபாஷினியிடம் “உனக்கெல்லாம் எதுக்கு உயர்கல்வி” என்று சாதிய ரீதியாக இழிவுபடுத்தி தற்கொலைக்குத் தள்ளி கொன்றது. மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு மாணவியின் உறவினர்களும் மாணவர் சங்கங்களும் போராட்டங்களை முன்னெடுத்ததுடன், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கும் பதியப்பட்டது.
ஆனால், கல்லூரி நிர்வாகத்தின் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒருவேளை அன்றே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு கல்லூரி நிர்வாகம் அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப் பட்டிருந்தாலோ அரசுடைமையாக்கப் பட்டிருந்தாலோ தற்போது சபரீஸ்வரனின் உயிர் பறிபோயிருக்காது.
அன்றிலிருந்து இன்று வரை கொலைகார நியூட்டன் கல்லூரிக்கு ஆதரவாகவே அரசுக் கட்டமைப்பு நடந்து கொள்கிறது. மாணவர் தற்கொலை செய்துகொண்ட உடனேயே, அவரது தற்கொலைக்கு நீதி கேட்டு மாணவர்கள் கொதிழுந்துவிட்டுவார்களோ என்று யூகித்து கல்லூரியின் பாதுகாப்பிற்கு பெரும் படையைக் குவித்தது போலீசு. இந்திய மாணவர் சங்கத்தினர் மாணவரின் மரணத்திற்கு நீதிகேட்டுப் போராடியபோது அவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்காமல் அராஜகமாக நடந்துகொண்டது. இது தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளை படுகொலைகளுக்கு அரசுக் கட்டமைப்பு பக்கபலமாக இருப்பதையே காட்டுகின்றது.
கல்வி என்பது சமூகத்திற்கான சேவை என்பதற்கு நேரெதிராக கல்வித்துறையில் தனியார்களை-கார்ப்பரேட்களை அனுமதித்து அவை கல்வியை வியாபாரமாக்கிக் கொள்ளையடிப்பதற்கு அனுமதிப்பதே, இத்தகைய ‘தற்’கொலைகளுக்கு அடிப்படை காரணம். எனவே, சர் ஐசக் நியூட்டன் கல்லூரியை உடனடியாக அரசுடைமையாக்க வேண்டும். இல்லையெனில் இன்னும் பல சுபாஷினிகளையும் சபரீஸ்வரன்களையும் பலி கொடுப்பதற்கே அது வழிவகுக்கும். மேலும். அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களின் உரிமைக்காகப் போராடும் சங்கம் வைக்கும் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். மாணவர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு மாணவர் சங்கத் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட வேண்டும்.
கெவின்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram