21.07.2025
சென்னைப் பல்கலை:
அபகரிக்கப்படும் நிலம், கேள்விக்குறியாகும் கல்வி!
பத்திரிகை செய்தி
175 ஆண்டுகளைக் கடந்து கல்விப்பணி ஆற்றிவரும் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் பிற பல்கலைக்கழகங்களின் தாயாக விளங்குகிறது. வரலாற்று பெருமைமிக்க இப்பல்கலைக்கழகம் தற்போது துணைவேந்தர் நியமிக்கப்படாமல், பல்வேறு நிர்வாக சிக்கல்கள் மற்றும் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இவற்றை சரிசெய்து ஆயிரக்கணக்கான மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்களின் நலனைக் காக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, பல ஆண்டுகளாக பல்கலைக்கழகத்திற்கான நிதியை ஒதுக்காமல் நிறுத்திவைத்து வஞ்சித்து வருகிறது.
இந்நிலையில், வார்த்தைக்கு வார்த்தை சமூகநீதி குறித்து பேசும் தி.மு.க அரசு, இந்த நிதி நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு, பல்கலைக்கழகத்தின் இராமானுஜம் வளாகத்தில், நகர்ப்புறங்களில் பணிபுரியும் பெண்கள் தங்குவதற்கான “தோழி” விடுதி கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏழு ஆண்டுகளாக தீராத விடுதி பிரச்சினை
சென்னைப் பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் மற்றும் மெரினா வளாகங்களில் படிக்கும் முதுகலை மாணவிகளுக்கான விடுதி டிசம்பர் 2018 வரை சேப்பாக்கம் இராமானுஜம் வளாகத்தில்தான் செயல்பட்டு வந்தது. ஆனால், விடுதி கட்டடங்களின் நிலை மோசமடைந்ததாலும், போதிய வசதிகள் இல்லாத காரணத்தினாலும், அங்கு தங்கியிருந்த மாணவிகள், சென்னை பல்கலைக்கழக தரமணி வளாகத்தில் (IBMS) வெளிநாட்டு மாணவர்களுக்காக கட்டப்பட்ட தரமணி விடுதிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டனர். இது நடந்து சுமார் ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இராமானுஜம் வளாகத்தில் பாதிப்படைந்த விடுதியை சரிசெய்யாமல், அலட்சியப் போக்குடன் நடந்து வருகிறது தமிழ்நாடு அரசு. இதனால், பல்கலைக்கழக மாணவிகள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.
பல்கலைக்கழக மாணவிகள் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள தரமணி விடுதியில் 180 அறைகள் மட்டுமே உள்ளதால் வெறும் 190 மாணவிகள் வரையே அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால், அருகிலுள்ள தரமணி வளாகத்தின் T2 என்ற பெண்கள் விடுதிகளில் 75 மாணவிகள் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர். விடுதி மாற்றத்தால், தினந்தோறும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்து மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும், விடுதியில் மாணவிகளுக்கான போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. தற்போது, தரமணி வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளதால் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மாணவிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியான நிலையில் உள்ளது.
மறுபுறம், தரமணி விடுதியில் போதிய இடமில்லாத காரணத்தினால், ஆண்டுந்தோறும் சுமார் 100-150 மாணவிகள் விடுதிகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். தனியாக வீடு எடுத்தோ அல்லது தனியார் விடுதிகளிலோ பாதுகாப்பற்ற முறையில் தங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இம்மாணவிகளுக்கான மாற்று ஏற்பாடுகளை உருவாக்குவதற்கு பதிலாக, “மாணவிகள் விடுதியில் தங்குவதற்கான ஒப்புதலை வழங்க வேண்டாம்” என பெண்கள் விடுதியின் பாதுகாவலர் பல்கலைக்கழகத் துறைத்தலைவர்களை வற்புறுத்தி வருகிறார். ஒப்புதலுடன் வரும் மாணவிகளுக்கும் அறை ஒதுக்க முடியாது என்று மறுப்புதுடன், மாணவிகளை மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொள்ளுமாறு மிரட்டும் அவலமும் அரங்கேறுகிறது.
மாணவிகளின் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கோரிக்கையை பல்வேறு மாணவர் அமைப்புகளும் பேராசிரியர்களும் முன்வைத்து வருகின்றனர். இதனையடுத்து தமிழ்நாடு முதல்வர் சட்டமன்றத்தில், 2024 மானியக் கோரிக்கையின்போது பல்கலைக்கழகத்தின் முதுகலை மாணவியர்களுக்கான விடுதி கட்டுவதற்கு சுமார் 53 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்தார். ஆனால், விடுதிக் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில் மாணவிகள் விடுதி செயல்பட்டுவந்த இராமானுஜம் வளாகத்தை தோழி விடுதி கட்டுவதற்கு அபகரிக்கும் முயற்சியில் தி.மு.க அரசு இறங்கியுள்ளது.
சென்னைப் பல்கலை நிலத்தை அபகரிக்கும் முயற்சி
தமிழ்நாடு அரசின் சமூகநலத் துறைதான் தோழி விடுதி கட்டும் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இத்துறை, சேப்பாக்கத்தில் தோழி விடுதி கட்டுவதற்கு பொதுவான இடத்தைத் தேர்ந்தெடுக்காமல், உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கிவரும் பல்கலைக்கழகத்தின் இடத்தை அபகரிப்பது என்பது ஆயிரக்கணக்கான மாணவிகளின் கல்வி உரிமையை பறிக்கும் நடவடிக்கையாகும்.
அதிலும், பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான இடத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஒப்புதல் பெறாமலேயே சமூக நலத்துறை செயலாளர் ஆக்கிரமிப்பு செய்ய முடிவு செய்துள்ளதாக பேராசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக, தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமிக்கப்படாத காரணத்தினால் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறைச் செயலாளர் மற்றும் தொழில்நுட்பத் துறை இயக்குநர் இருவரும்தான் துணைவேந்தருக்கான பொறுப்புகளை நிர்வகித்து வருகின்றனர். இவர்களின் உதவியுடன் சமூக நலத்துறை செயலாளர் முறையான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக தன்னிச்சையாக பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான நிலத்தை அபகரிப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்.
இராமானுஜம் வளாகத்தில் உள்ள 85 செண்ட் நிலத்தை, தோழி விடுதி கட்டுவதற்கு 33 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதாகவும், இதற்கு ஈடாக பல்கலைக்கழக மாணவிகளுக்கு 350 அறைகள் ஒதுக்கப்படும் என்றும் அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், எதிர்ப்புகளை மழுங்கடிப்பதற்காகவே இவ்வாறான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும், எந்தவித முறையான ஒப்பந்தமும் அனுமதியும் பெறாமல் சமூக நலத்துறை இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்றும் பேராசிரியர்கள் சிலர் அம்பலப்படுத்துகின்றனர். இதுமட்டுமன்றி, இன்னும் பல குற்றச்சாட்டுகளும் பேராசிரியர்களால் முன்வைக்கப்படுகின்றன.
அரசு ஒரு நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்றால் அந்த நிலத்திற்கான சந்தை மதிப்பு அல்லது அரசு மதிப்பீடு செய்து ஒரு தொகையை வழங்க வேண்டும். ஆனால், சமூக நலத்துறை எவ்வித இழப்பீடும் வழங்காமல் பல்கலைக்கழகத்தின் நிலத்தை கையகப்படுத்தப் பார்க்கிறது. அதேபோல், பொதுப்பணித்துறைக்கு பதிலாக இத்துறையுடன் துளியும் சம்பந்தமில்லாத தமிழ்நாடு போலீசுதுறை வீட்டு வசதி வாரியம் ஒப்பந்தப் புள்ளியை கோரியுள்ளது. மேலும், பொதுவாக ஒரு கட்டடம் கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் என்றால் அதற்கு முன்பாக அங்கு ஏற்கெனவே இருக்கின்ற கட்டடத்தை இடிப்பதற்கு மாநகராட்சியிடம் சான்றிதழ் பெற வேண்டும். அதேபோல புதிய கட்டடம் கட்டுவதற்கான வரைவு மாதிரியை மாநகராட்சியிடம் காட்டி ஒப்புதல் பெற வேண்டும். அதிலும், இராமானுஜம் வளாகம் கடற்கரைக்கு அருகில் இருப்பதால் தேசிய பசுமை வாரியத்திடமும் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், இவ்வாறான எவ்வித ஒப்புதல்களையும் மேற்கண்ட துறைகளிடம் பெறாமல் தன்னிச்சையாக ஒப்பந்தம் வெளியிட்டு கட்டடத்தை கட்டுவதற்குகான முயற்சிகள் நடப்பதாக பேராசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதேபோல், “தோழி” மகளிர் விடுதிகள் என்பன சென்னையில் தங்கி வேலை பார்க்கின்ற பெண்களுக்கான திட்டமாகும். வேலை பார்க்கின்ற பெண்கள் தங்கள் வேலை நிமித்தம் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் விடுதிகளுக்கு வர இயலாத சூழ்நிலை ஏற்படும். அதேபோல், பெரும்பாலும் வேலை முடித்து வருகின்ற பெண்கள் ஓய்வு எடுப்பதற்காகத்தான் விடுதிக்கு வருவர். ஆனால், கல்வி பயிலும் மாணவிகள் தங்களின் படிப்பிற்காக இரவில் நீண்ட நேரம் வரை படிக்கின்ற சூழ்நிலை ஏற்படும். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் தங்க வைப்பது சிரமங்களையும் தேவையில்லாத சிக்கல்களையும்தான் உருவாக்கும்.
மேலும், சென்னையில் எவ்வளவோ இடங்களிருப்பினும் பெண்களின் கல்வி நோக்கத்திற்காக பயன்படுத்தும் இடத்தை தேர்ந்தெடுத்து இடிப்பது சமூக அநீதியாகும். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சேப்பாக்கத்தில்தான் விடுதி கட்ட வேண்டுமென்றால், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை மாற்றிவிட்டு, அந்நிலத்தின் ஒரு பகுதியை விடுதிக்காக வழங்கலாமே என்று கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக இடத்தில் தற்போது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளதை சுட்டிக்காட்டி இந்நிலை சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டு விடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
நிதி நெருக்கடிக்கு பின்னாலிருக்கும் சதித்திட்டம்
உண்மையில், பல்கலைக்கழக மாணவிகளுக்கான தனி விடுதி கட்டப்படாததற்கும், பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான இடத்தில் தோழி விடுதி கட்டப்படுவதற்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியே காரணமாக முன்வைக்கப்படுகிறது.
ஆனால், பல்கலைக்கழத்தின் நிதி நெருக்கடி என்பது ஒன்றிய-மாநில அரசுகளால் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும். தமிழ்நாடு அரசுக்கு கீழ் இயங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாடு அரசு கடந்த ஏழு ஆண்டுகளாக நிதி ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறது. தி.மு.க. ஆட்சியிலும் இந்த நிலைதான் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. ஒன்றிய பாசிச மோடி அரசோ, தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததைக் காரணம் காட்டி பல்கலைக்கழக மானிய குழு மூலம் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கான நிதியை நிறுத்தி வைத்திருப்பதுடன், மோசடியான காரணங்களைக் கூறி பல்கலைக்கழகத்தின் வரி விகிதத்தைக் கூட்டி நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, சென்னைப் பல்கலைக்கழகம் முறையாக வரி செலுத்தவில்லை எனக் கூறி வருமான வரித்துறை மூலம் கடந்த 2024-ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கி நேரடித் தாக்குதலில் இறங்கியது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் குறித்து துளியும் கவலைப்படாமல், ஒன்றிய-மாநில அரசுகளால் திட்டமிட்டே சென்னைப் பல்கலைக்கழகம் சீரழிக்கப்பட்டுவருகிறது என்பதே உண்மை நிலை.
இவ்வாறு சென்னை பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியைத் தீவிரப்படுத்தப்படுவதன் மூலம் பல்கலைக்கழகத்தை சீரழித்து கொஞ்சம் கொஞ்சமாக கார்ப்பரேட்டுகளை பல்கலைக்கழகத்திற்குள் உள்நுழைப்பதே இதன் பின்னாலிருக்கும் சதித்திட்டம். இச்சதித்திட்டம் குறித்து புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகிறது. தற்போது, பல்கலைக்கழகத்திடம் விடுதி கட்டுவதற்கு நிதி இல்லை என்ற காரணத்தை முன்வைத்து மாணவிகளின் விடுதிக்கான நிலத்தை சமூக நலத்துறையிடம் தாரைவார்ப்பதும் இதனடிப்படையிலேயே. மேலும், தோழி விடுதி முழுமையாக அரசு சார்பில் கட்டப்படாமல் அரசு-தனியார் கூட்டு முறையில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், இயல்பாகவே பல்கலைக்கழக நிலம் கார்ப்பரேட்டுகளின் ஆளுகையின் கீழ் செல்லும் அபாயம் உள்ளது.
இதற்கிடையே, தற்போது இராமானுஜம் வளாகத்தில் செயல்பட்டுவந்த கணிதத்துறையும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்திற்குள் கொண்டுவரப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது அவ்வளாகம் முழுவதையும் ஆக்கிரமிப்பதற்கான வேலைகளை அரசு மேற்கொள்கிறதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் 14 இடங்களில் தோழி விடுதிகள் கட்டப்படும் என்றும் சென்னையில் சேப்பாக்கம், தரமணி இரண்டு இடங்களில் விடுதி கட்டப்படும் என்றும் தி.மு.க அரசு அறிவித்துள்ளது. மே 21 அன்று காணொளி காட்சி வாயிலாக முதல்வர் 14 விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அச்சமயத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரும் சில அரசு அதிகாரிகளும் சென்னைப் பல்கலைக்கழக தரமணி வளாகத்தை திடீரென பார்வையிட்டனர். இதனால், தரமணி வளாகமும் தோழி விடுதிக் கட்டுவதற்கு தி.மு.க அரசால் குறிவைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் இராமானுஜம் வளாகத்தில் தோழி விடுதி கட்டுவதற்கு பக்கபலமாக இருந்துவருவது இங்கு கவனிக்கத்தக்கதாகும். இவ்வாறு சென்னைப் பல்கலைக்கழகமே கொஞ்சம் கொஞ்சமாக செல்லறிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
எனவே, பல்லாயிரக்கணக்கான பெண்களின் கல்வியை பாதிக்கக் கூடிய பல்கலைக்கழகத்தின் நிலத்தை அபகரிக்கும் நடவடிக்கையை தி.மு.க அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
தி.மு.க அரசே,
- பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான நிலத்தை அபகரிப்பதைக் கைவிட்டு, அவ்விடத்தில் மீண்டும் பல்கலைக்கழக மாணவிகளுக்கான விடுதியைக் கட்டிக் கொடு!
- நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பல்கலைக்கழகத்திற்கு ஏழு ஆண்டுகளாக ஓதுக்கப்படாத மொத்த நிதியையும் வழங்குவதுடன், சிறப்புநிதி ஒதுக்கி நிதி நெருக்கடியிலிருந்து பல்கலைக்கழகத்தை மீட்டிடு. ஒன்றிய அரசின் கடன் வலையிலிருந்து பல்கலைக்கழகத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடு!
- பல்கலைக்கழகத்தின் நிர்வாக நெருக்கடிகளை தீர்க்கும் வகையில் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தரை உடனடியாக நியமித்திடு!
- பல்கலைக்கழக நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டவும் மாணவர்களின் பிரச்சினைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிமையை நிலைநாட்டவும் மாணவர் சங்கத் தேர்தலை நடத்துவதற்கு அனுமதி கொடு!
தோழர் தீரன்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram