கிருஷ்ணகிரி: பௌத்தப்பள்ளிக் கல்வெட்டும் ஸ்தூபக் குறியீடும்

தற்போது காவேரிப்பட்டினம் அருகே ஜெகதாப் என்கிற இடத்தில் பௌத்த பள்ளி குறித்த கல்வெட்டு தமிழ்நாட்டிலேயே முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லப்பாடியில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பாறை ஓவியங்கள் 1978 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மயிலாடும்பாறை அகழாய்வின் மூலம் கண்டறியப்பட்டது.

தற்போது (ஜூலை 2) காவேரிப்பட்டினம் அருகே ஜெகதாப் என்கிற இடத்தில் பௌத்த பள்ளி குறித்த கல்வெட்டு தமிழ்நாட்டிலேயே முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. இக்கல்வெட்டை ஆய்வு செய்த கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் குழுவில் உள்ள தொல்லியல் ஆய்வாளர் கோவிந்தராஜ் அவர்களிடம் பேட்டி எடுத்து இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.

சங்க காலத்திற்கு முன்பாகவே சமணம், பௌத்தம், வைதீகம் ஆகிய மதங்கள் தமிழ்நாட்டில் வந்துவிட்டன. இதில் ஒவ்வொரு மதங்களும் பல்வேறு காலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. மதுரையைச் சுற்றி சமண மதத்தின் ஆதிக்கம் இருந்துள்ளது. பௌத்தம் குறித்து கர்நாடகா, ஆந்திராவில் இருக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் சங்க காலத்தில் அதிக அளவில் பதிவுகள் இல்லை. ஏனென்றால், ஒரு மதம் வளர வேண்டும் என்றால் ஆட்சியில் இருப்பவர்களின் ஆதரவு முக்கியமாகும். அதனால், அப்போதைக்கு பௌத்தத்திற்கான ஆதரவு இல்லை.

இருப்பினும், இந்த காலகட்டத்தில் பௌத்த துறவிகள் தமிழ்நாட்டிற்கு வந்து பௌத்தத்தைப் பரப்பியுள்ளனர். இதற்கு பிறகுதான் தமிழ்நாட்டில் பௌத்தம் வளரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, பல்லவர் காலத்தில்தான் பௌத்தம் செழித்தோங்கியுள்ளது. இதனை, சீன யாத்திரிகர் யுவான் சுவாங் பதிவு செய்துள்ளார். நூற்றுக்கணக்கான பௌத்த பள்ளிகள் இருந்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


படிக்க: தமிழர் நிலத்தில் பௌத்தமும் சமணமும் வீழ காரணம் என்ன ? | நா. வானமாமலை


காஞ்சி தான் பௌத்தத்திற்கான தலைநகரமாக இருந்துள்ளது. பௌத்தத்திற்கான அகழ்வாராய்ச்சிகள் எல்லாம் காஞ்சியில்தான் அதிகம் கிடைக்கின்றன. ஸ்ரீ விஜய மன்னன் புத்த விகாரம் கட்டுவதற்கு இராஜராஜ சோழனிடம் அனுமதி கேட்டதன் பெயரில் இராஜராஜ சோழனும் ஆனைமங்கலம் என்கிற ஊரை தானம் அளித்து அனுமதி வழங்கியுள்ளார். இந்த விகாரத்திற்கு ‘சூடாமணி விகாரம்’ எனப் பெயர் வைத்துள்ளனர். பிற்காலத்தில் இதுகுறித்து இராஜேந்திர சோழன் செப்பேட்டில் எழுதப்படுகிறது. இந்த செப்பேட்டிற்குப் பெயர் “ஆனைமங்கலம் பெரிய செப்பேடு”.

இதன்பிறகு, இந்த விகாரத்தை நிர்வகிக்கும் சிக்கல் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் ஏற்படுகிறது. இந்த சிக்கலைத் தீர்த்து வைத்தது குறித்து ஒரு செப்பேடு உள்ளது. இந்த செப்பேடு “ஆனைமங்கலம் சிறிய செப்பேடு” என அழைக்கப்படுகிறது. ஆனால், இவ்விரு செப்பேடுகளும் தற்போது தமிழ்நாட்டில் இல்லை. நெதர்லாந்து நாட்டில் உள்ள லைடன் என்கிற அருங்காட்சியகத்தில் உள்ளன. அதனால், தற்போது இவ்விரு செப்பேடுகளும் “பெரிய லைடன் செப்பேடு, சிறிய லைடன் செப்பேடு” என அழைக்கப்படுகின்றன. இதுதான் தமிழ்நாட்டில் கிடைத்த பௌத்தத்தின் இருத்தலுக்கான முதல் தொல்லியல் சான்று.

சூடாமணி விகாரம் நாகப்பட்டினத்தில் உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்பதற்காக இடிக்கப்பட்டுள்ளது. தற்போது, சூடாமணி விகாரம் என்பதே இல்லை. இது பெரிய விகாரம் என்பதால், அகழ்வாராய்ச்சி செய்யும்போது இதனைச் சுற்றியுள்ள இடங்களில் நூற்றுக்கணக்கில் பௌத்த சிற்பங்கள் கிடைத்து வருகின்றன. இந்த சிலைகள் பல்வேறு நாடுகளின் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இதன்பிறகு, கி.பி 10 முதல் 13 நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்த சிற்பங்கள் நூற்றுக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சேலம், அரியலூர், போன்ற மாவட்டங்களில் அதிகமாகக் கிடைக்கின்றன. இதுபோன்ற சிற்பங்கள் கிடைக்கிறது என்றாலே பௌத்த கோவிலோ அல்லது விகாரமோ அங்கு இருந்திருக்க வேண்டும். ஆனால், இதற்கான சான்றுகள் இன்றுவரை கிடைக்கவில்லை. வேறு மதத்தினர் வந்து அழித்திருக்கலாம். வைதீக மதங்கள் அழித்திருக்கக் கூடும். ஏன், சிலரின் கூற்றுப்படி சமன மதத்தைச் சேர்ந்தவர்களே பௌத்தத்திற்கு எதிராக இருந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

அதனால், தொல்லியல் ஆய்வில் கிடைக்கும் சிற்பங்கள் தலைவெட்டப்பட்ட நிலையில் கிடைக்கிறது. இரண்டில் ஒரு சிற்பம் தலை வெட்டப்பட்ட நிலையிலேயே கிடைக்கிறது.

பௌத்தம் குறித்த கல்வெட்டுகள் அரிதாகவே தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன. பாண்டியன் ஆட்சிக் காலத்தில் சூடாமணி விகாரத்திற்குப் பெயர் மாற்றம் செய்கின்றனர். இதுகுறித்து கல்வெட்டில் குறிப்பிடுகின்றனர். பிறகு, கும்பகோணத்தில் உள்ள ஒரு கோவிலின் நிலைக்காலில் ‘புத்தர் கோவில்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் பௌத்தம் குறித்த கல்வெட்டு சான்றுகள். இவையெல்லாம், 2000 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டவை. அதற்குப் பிறகு, பௌத்தம் சார்ந்து வேறு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த பின்னணியிலிருந்துதான் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் கிடைத்துள்ள கல்வெட்டை நாம் பார்க்க வேண்டியுள்ளது. இந்த கல்வெட்டில் நிறைய சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு சமயக் கோவில்களுக்கும் தனிச்சிறப்பான குறியீடு இருக்கும். சைவக் கோவில் என்றால் திரிசூலம்; வைணவக் கோவில் என்றால் சங்கு சக்கரம்; சமணம் என்றால் முக்குடை என குறியீடுகள் உள்ளன. அதேபோல், பௌத்தத்திற்கான சமயக் குறியீடு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த கல்வெட்டு ஆய்வின் மூலமாகத்தான் பௌத்தத்திற்கான குறியீடு ”ஸ்தூப” குறியீடாக இருக்கக்கூடும் என தொல்லியல் ஆய்வாளர் கோவிந்தராஜ் கூறுகிறார். கோவில்கள் தோன்றுவதற்கு முன்னோடியாக இருந்தது ஸ்தூப கட்டட அமைப்புமுறைதான்.


படிக்க: பார்ப்பன கும்பலிடமிருந்து புத்தர் கோயில்களை மீட்கப் போராட்டம்!


வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்து பெரிய கற்களைக் கொண்டு நினைவுச் சின்னங்கள் கட்டப்படும் வழக்கம் இருந்தது. இந்த காலத்திற்குப் பெயர் பெருங்கற்படைக்காலம். கி.மு ஆறாம் நூற்றாண்டில் புத்தர் இறந்த பிறகு அவரது உடல் பாகங்களைப் பிரித்து பல்வேறு இடங்களில் புதைத்து அதன்மீது ஸ்தூபங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இதற்குப் பிறகு, பௌத்த துறவிகள் இறந்தாலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது.

ஸ்தூப அமைப்பு முறை என்பது செவ்வக வடிவத்தில் அடிப்பகுதி இருக்கும். இதற்கு ‘மேதி’ (மேடை) என்றும், இதற்கு மேல் உள்ள நடுப்பகுதி அறை வட்ட வடிவமானது ’அண்டம்’ என்றும், இதன் மேலுள்ள முக்கோணப் பகுதி, ஸ்தூபத்தின் உச்சியில் குடை நட்டு வைத்திருக்கும் பகுதி, ’சத்ரா’ என்றும் குறிக்கப்படுகிறது. இந்த கல்வெட்டில் இந்த குறியீடு இருந்தாலும் தொடக்கத்தில் இந்த குறியீடு பௌத்தத்திற்கானது என முடிவுக்கு வர முடியவில்லை.

கணிகிலுப்பை-யில் புத்தர் சிலைக்கு எதிரில் இந்த சின்னத்தை வெட்டி வைத்துள்ளனர். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஏசியாடிக் சொசைட்டி (Asiatic Society) அலுவலகத்தில் வைத்துள்ள புத்தர் சிலைக்குப் பின்புறமும் இந்த குறியீடு இருக்கிறது. தற்போது கிடைத்துள்ள கல்வெட்டைக் கொண்டும் மேற்கூறிய இரண்டு சான்றுகளைக் கொண்டும் ஆராய்ந்ததில் குறியீடுகளில் ஸ்தூப அமைப்புமுறை இருக்கிறது என புரிந்து கொள்ள முடிந்தது. இதனைக் கொண்டே பௌத்தத்திற்கான குறியீடு ஸ்தூப குறியீடு என முடிவுக்கு வந்ததாகக் கூறுகிறார் கோவிந்தராஜன்.

இந்த குறியீடு ஜெகதாப்-இல் இரண்டு இடத்தில் கிடைத்துள்ளது. ஒன்று கல்வெட்டிலும் மற்றொன்று இந்த கல்வெட்டுக்கு அருகிலே உள்ள குகையிலும் கிடைத்துள்ளது. இந்த குகையில் பௌத்த துறவிகள் தங்கியிருந்து இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்த கல்வெட்டைப் படிப்பதற்கே ஒரு வார காலம் ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் சமண பள்ளி இருந்ததற்கான சான்று நிறைய கிடைத்துள்ளது. ஆனால், பௌத்த பள்ளி இருந்ததற்கான சான்று இல்லை. இக்கல்வெட்டைக் கண்டுபிடித்ததுதான் பௌத்த பள்ளி இருந்துள்ளதற்கான முதல் தொல்லியல் சான்று. இந்த பௌத்த பள்ளிக்கு தானம் கொடுத்தவர் மாறமங்களமுடையார். இவர் ஒரு வணிகர். இந்த குகைக்கு அருகில் வணிகக் குறியீடு கிடைத்துள்ளது. வணிகர்களுக்கும் பௌத்தத்திற்கும் நிறைய தொடர்புகள் இருக்கிறது. இந்த பௌத்த பள்ளி இருந்த இடம் கடைக்கோட்டூர் (தருமபுரியில் கடகத்தூர் என்ற பெயரில் தற்போது உள்ளது).

தருமபுரி அருங்காட்சியகத்தில் இரண்டு புத்தர் சிலைகள் உள்ளன. இவ்விரு புத்தர் சிலைகளும் கடகத்தூர் என்கிற இடத்திலிருந்து கிடைக்கப் பெற்றன. மேலும், இந்த கல்வெட்டில், “கடைக்கோட்டூர் நாற்பத்தென்னாட்டு நானாதேசி சித்திரமேழி பெரும்பள்ளி” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்த பௌத்த பள்ளிக்கான பெயர். இந்த சொல்லினை அடுத்து, புத்த தம்மம் எனப் பெயர் வருகிறது. இந்த கல்வெட்டில் இரண்டு குறியீடுகளில் ஒன்று பௌத்த குறியீடும், மற்றொன்று பௌத்த தருமசக்கரமாகவும் இருந்துள்ளது. இவையெல்லாம் கொண்டே இந்த கல்வெட்டு பௌத்த பள்ளிக்கானது என முடிவுக்கு வந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் கோவிந்தராஜ் கூறுகிறார். ஜெகதாப்பில் குறிப்பிடப்படும் பெளத்தப்பள்ளி கடகத்தூரில் இருந்துள்ளதாக உறுதிப்படுத்திக் கொண்டதாக அவர் மேலும் கூறுகிறார்.

தமிழ்நாட்டின் வரலாற்றை மூடி மறைக்கத் துடித்துக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலுக்கு பார்ப்பனிய எதிர்ப்பு மரபைப் பறைசாற்றும் வகையில் பௌத்த பள்ளி குறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதானது எரிச்சல் ஊட்டுவதாகவே இருக்கும் என்பது திண்ணம்!

(தொல்லியல் ஆய்வாளர் கோவிந்தராஜ் அவர்களின் நேர்காணல் அடிப்படையில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் வந்தடைந்துள்ள முடிவுகள் ஆய்வாளரின் முடிவுகளே)


தமிழ்நம்பி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க