ஒடிசா: தொடரும் பெண்களின் மீதான பாலியல் கொடூரங்கள்!

ஒடிசாவில் கடந்த 20 நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

0

ஜூலை 18-ஆம் தேதியன்று ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கார்மர் சாவ் என்கிற பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு மாணவி அவருடைய கணித ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது.

பள்ளியிலிருந்து மாலை வீட்டிற்குச் சென்ற சிறுமி மன அழுத்தத்துடன் இருந்திருக்கிறார். பின்பு நள்ளிரவில் தன்னுடைய பெற்றோர்களிடம் கணித ஆசிரியரால் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து கூறியுள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் ராய்பானியா போலீசார் 20-ஆம் தேதி அன்று இரவு கணித ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் இருவரை கைது செய்துள்ளனர்.

ஆசிரியர் என்ற போர்வையில் உலவிய மிருகத்தால் சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் சிறுமி புகாரளித்திருந்த போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காமவெறிபிடித்த அம்மிருகத்தை பாதுகாத்து வந்துள்ளார் என்கிற அதிர்ச்சிகர தகவலும் வெளியாகி உள்ளது.

சமீபத்தில், இதே பாலசோர் மாவட்டத்தில் உள்ள ஃபக்கீர்மோகன் கல்லூரியில் படித்து வந்த முதலாமாண்டு மாணவி தன்னுடைய துறைத் தலைவர் சமீரா குமார் சாஹூ என்பவனால் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. தனக்கு நேர்ந்த அநீதி குறித்து கல்லூரி முதல்வரிடமும், போலீசாரிடமும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வேறுவழியின்றி ஜூலை 12-ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் நாடுமுழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


படிக்க: ஒடிசா மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகம் – பா.ஜ.க அரசின் படுகொலை!


இந்த கொந்தளிப்பு அடங்குவதற்குள் கடந்த 19-ஆம் தேதி அன்று பூரி மாவட்டம் பாலங்கா அருகே உள்ள பயாபர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது தோழி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மிருகங்கள் சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து படுகொலை செய்ய முயன்றன. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு 70 சதவிகித தீக்காயங்களுடன் உயிர்க்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து தற்போது பள்ளி சிறுமி ஒருவர் ஆசிரியரால் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது. ஒடிசாவில் பெண் குழந்தைகள் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியுமா என்கிற அச்சத்தை பெற்றோர்கள் மனதில் உண்டாக்கியுள்ளது.

ஒடிசாவில் பாசிச பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்பு பெண்கள் மீதான பாலியல் கொடூரங்கள் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகின்றன. பள்ளி குழந்தைகள் முதல் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் என வயது வரம்பின்றி பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். பள்ளிகளும், கல்லூரிகளும் பாலியல் கூடாரங்களாக மாற்றப்பட்டு அதில் பாலியல் பொறுக்கிகள் ஆசிரியர்கள் வேடத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறனர்.

ஒடிசாவில் கடந்த 20 நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் பாசிச பா.ஜ.க ஆட்சி அமைந்ததும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ஒடிசாவை பெண்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாற்றி வரும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பது உடனடி கடமையாக உள்ளது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க