ஜூலை 19 ஆம் தேதி அன்று காசா மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போருக்கு எதிராகவும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும் டெல்லியில் உள்ள நேரு பிலேஸ் (Nehru Place) என்னும் இடத்தில் பல்வேறு சமூக அமைப்பினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதியம் 12:30 மணிக்கு அமைதியாகத் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலஸ்தீன கொடிகள் மற்றும் “சுதந்திர பாலஸ்தீனம்” (Free, Free Palestine), ”இனப்படுகொலையை நிறுத்து” மற்றும் “உடனடி போர் நிறுத்தம்” போன்ற பதாகைகளை ஏந்தியும், காசாவில் மக்கள் அனுபவிக்கும் கொடூரங்களை எடுத்துரைக்கும் வகையிலும் துண்டுப் பிரசுரங்களை மக்களுக்குக் கொடுத்தும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சங்கிகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சேற்றை வீசியும், “இஸ்ரேல் ஜிந்தாபாத், பாலஸ்தீனம் முர்தாபாத்” போன்ற கோஷங்களை எழுப்பியும் தாக்கியுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிக்கு அருகில் கூடி, “ஜெய் ஸ்ரீராம்”, “ஹரஹர மகாதேவ்” மற்றும் “வந்தேமாதரம்” போன்ற கோஷங்களை எழுப்பினர்.
சிறிது நேரத்தில் சங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி “பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் போராட்டம் நடத்துவதென்றால், அங்கே போய் நடத்துங்கள், இங்கே ஏன் நடத்துகிறீர்கள்?” என்று பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இனவெறி கருத்துக்களை அள்ளி வீசத் தொடங்கியது காவி கும்பல்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொருளாதார நிபுணரும் சமூக ஆர்வலருமான ஜீன் ட்ரீஸ், “நாங்கள் எந்த முழக்கங்களையும் எழுப்பவில்லை. அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தத் தொடங்கினோம். ஆனால், ஆர்ப்பாட்டம் நடத்தவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டோம். காசாவில் நடந்த இனப்படுகொலையை எதிர்ப்பது, உடனடி போர் நிறுத்தத்தைக் கோருவது மட்டுமல்லாமல், இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு இந்திய அரசு உடந்தையாக இருப்பதை அம்பலப்படுத்தவும்தான் நாங்கள் இங்கு கூடியிருக்கிறோம்” என்று தி வயர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், “தற்போதைய சூழ்நிலையில், அரசு எங்களுக்கு அனுமதி அளித்தாலும் இல்லாவிட்டாலும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. தொழில்நுட்பத்திற்காக, குறிப்பாக பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பத்திற்காக மோடி அரசு இஸ்ரேலைச் சார்ந்திருக்கிறது. இந்திய அரசு இஸ்ரேலுடன் பல வணிக உறவுகளைக் கொண்டுள்ளது. பாலஸ்தீனியர்கள் சக்தியற்றவர்கள். அவர்களால் எதுவும் வழங்க முடியாது. எனவே இயற்கையாகவே, இந்திய அரசாங்கம் இஸ்ரேலின் பக்கம் நிற்கிறது. ஆனால், நாங்கள் பாலஸ்தீன மக்களுடன் இருக்கிறோம். இந்திய பொதுமக்களின் உணர்வும் பாலஸ்தீன மக்களுடன் இருப்பதாக நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
படிக்க: காசா: நவீன ஆயுத சோதனைச்சாலை
நேரு பகுதியில் உள்ள சந்தையின் மையமாக உள்ள ஹெச்.பி கணினி கடையிலிருந்து நேரு மெட்ரோ நிலையம் வரை ஆர்ப்பாட்டக்காரர்களை காவி கும்பல் பின்தொடர்ந்து சென்று மதவெறி முழக்கங்களை எழுப்பி அவர்களை அச்சுறுத்தியுள்ளது.
இவையெல்லாம் டெல்லி போலீசு முன்னிலையில் நடந்துள்ளது. சங்கி கும்பலின் அட்டூழியங்களைக் கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த டெல்லி போலீசு அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம், ”உங்களுக்கு இங்கே போராட்டம் நடத்த அனுமதி இல்லை” என்று கூறு அந்த இடத்தைவிட்டு அப்புறப்படுத்தியுள்ளது.
ஆர்ப்பாட்டம் குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களைத் தடுத்தும், ஆர்ப்பாட்டக்காரர்களை பத்திரிகையாளர்களிடம் பேச விடாமல் தடுத்தும் அராஜகத்தில் ஈடுபட்டது போலீசு.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அஞ்சலி என்ற பெண்மணி, போலீசின் இந்த அராஜக நடவடிக்கையைக் கண்டித்தார். “நாங்கள் போலீசிடம் அனுமதி பெறவில்லை, ஏனெனில், இது முழக்கங்களுடன் கூடிய ஆர்ப்பாட்டம் அல்ல; இது ஒரு அமைதியான ஆர்ப்பாட்டம். இது எங்கள் அரசியலமைப்பு உரிமை. எங்கள் பதாகைகளில் மிக எளிய செய்திகள் இருந்தன: ‘இனப்படுகொலையை நிறுத்து’, ‘குழந்தைகளைக் கொல்லும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்காதே’.
“மதியம் 12:30 மணிக்கு எங்கள் ஆர்ப்பாட்டம் தொடங்கியபோது, மிகவும் கோபமாக இருந்த ஒரு கூட்டம் எங்களை நோக்கி வந்தது. அவர்கள் ’இந்தியக் கொடி எங்கே?’ என்று எங்களை கேள்வி கேட்கத் தொடங்கினர். ஆனால், இந்தியக் கொடி அவர்களிடம் கொடுக்கப்பட்டபோது, அதைப் பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படவில்லை. அவர்கள் எல்லா பாலஸ்தீனக் கொடிகளையும் எங்கள் அமைதியான பதாகைகளையும் கிழித்துக்கொண்டே இருந்தனர். நம்முடைய நாட்டில் எந்தளவிற்கு எதிர்ப்பை தெரிக்க முடியும் என்பதை இந்த நிலை காட்டுகிறது” என்று அவர் கூறினார்.
படிக்க: பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கும் யோகி அரசு!
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட சமூக ஆர்வலரும் கல்வியாளருமான நந்திதா நரேன், “பாலஸ்தீனியர்களை வெளியே தள்ளி அந்த நிலத்தை ஆக்கிரமிக்க முடியாது. அதற்குப் பெயர் இன அழிப்பு. இந்தக் காலத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நடக்கும் என்றும், பல மேற்கத்திய நாடுகள் இதைப் பாராட்டி, நடக்கும் குற்றங்களைப் பார்த்து கண்களை மூடிக்கொள்வார்கள் என்றும் நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை,” என்று கூறியுள்ளார்.
நீண்ட காலமாக, இந்திய அரசு தன்னுடைய அயலுறவு கொள்கையின்படி பெயரளவிற்கேனும் பாலஸ்தீனத்தினை ஆதரித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால்,1990-களில், குறிப்பாக 1999-ஆம் ஆண்டு முதல் இந்தியா ராணுவத்திற்கான ஆயுதங்களை இஸ்ரேலிடமிருந்து வாங்கத் தொடங்கியது முதல், இந்தியாவின் நிலைப்பாடு மாறத் தொடங்கியது. அதிலும், பாசிச பா.ஜ.க கும்பல் ஆட்சிக்கு வந்த பின்பு அயலுறவு கொள்கையில் பாலஸ்தீனம் குறித்தான நிலைப்பாடு முற்றிலுமாக மாறியுள்ளது.
சான்றாக, கடந்த ஜூன் 12 அன்று காசா மீதான இஸ்ரேலின் இனவெறிப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவது, ஹமாஸ் பணையக் கைதிகளை விடுவிப்பது என்பதை வலியுறுத்தி ஐ.நா-வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அத்தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காமல் வாக்கெடுப்பைப் புறக்கணித்தது. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களை கொன்றொழித்துவரும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவே மோடி அரசின் செயல்பாடு இருப்பதை இது காட்டுகிறது.
இதன் நீட்சியாக தற்போது பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இந்தியாவில் போராடுபவர்கள் மீது சங்கி கும்பல் தாக்குதல் தொடுக்கிறது.
இஸ்ரேலின் பட்டினிப்போரால், கண்கொண்டு பார்க்க முடியாத அவலநிலையில் பாலஸ்தீன மக்கள் கோரமாகக் கொல்லப்பட்டு வருகின்றனர். பச்சிளம் குழந்தைகள் உணவின்றி மாண்டு போகும் காட்சிகள் நம்மை நடுங்க வைக்கிறது. இந்நிலையில், இஸ்ரேலின் இன அழிப்புப் போருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் பாசிச மோடி அரசிற்கு எதிராகப் போராட வேண்டியது இந்திய உழைக்கும் மக்களின் உடனடிக் கடமையாகும்.
செய்தி ஆதாரம்: தி வயர்
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram