மாறுபட்ட தீர்ப்புகள்: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்! | துண்டறிக்கை

நாள்: ஜூலை 30, 2025 (புதன்கிழமை) | நேரம்: மாலை 05.00 மணிக்கு | இடம்: நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் ஹால், அப்போலோ மருத்துவமனை அருகில், மதுரை.

மாறுபட்ட தீர்ப்புகள்:
திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்!

தமிழ்நாடு தழுவிய பிரச்சாரம் | கருத்தரங்குகள்

நாள்: ஜூலை 30, 2025 (புதன்கிழமை) | நேரம்: மாலை 05.00 மணிக்கு

இடம்: நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் ஹால்,
அப்போலோ மருத்துவமனை அருகில், மதுரை.

துவக்க உரை:

வழக்கறிஞர் தோழர் மோகன்குமார்,
செயலாளர்,
மதுரை வழக்கறிஞர்கள் சங்கம்.

சிறப்புரை :

தோழர் தி. லஜபதிராய்,
மூத்த வழக்கறிஞர் உயர்நீதிமன்றம்,
மதுரை.

தோழர் மருது,
மாநில செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு-புதுச்சேரி.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

மக்களை பிளவுபடுத்தி, மதவெறி கலவரங்களை நடத்தி, அப்பாவி மக்களின் இரத்தம் குடித்து தனது அடித்தளத்தை விரிவுபடுத்திக் கொள்வதும் ஆட்சியைப் பிடிப்பதும் தான் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி கும்பலின் வரலாறு. 1980-களில் தமிழ்நாட்டில் மண்டைக்காடு கலவரத்தை இந்து முன்னணி, பி.ஜே.பி கும்பல் திட்டமிட்டு உருவாக்கியதை ஆதார பூர்வமாக வெளிக்கொண்டு வந்தது நீதிபதி வேணுகோபால் கமிஷன் அறிக்கை. தற்போது தமிழகத்தில் காலூன்றவும் 2026 தேர்தலை குறி வைத்தும் முருகனையும் திருப்பரங்குன்றத்தையும் கையில் எடுத்து கலவரத்திற்கான சதித் திட்டத்தை கட்டங்கட்டமாக நகர்த்தி வருகிறது. திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்காவில் ஆடு கோழி பலியிடுவதால் புனிதம் கெடுகிறது என ஆரம்பித்து மக்களை பிளவுபடுத்தி கலவரத்திற்கு அணிதிரட்ட முயற்சித்து வருகிறது.

அயோத்தி ஆக்குவோம் என கொக்கரித்த கும்பல் அடக்கப்பட்டது!

1990 களில் இருந்தே மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம் என பிரச்சனையை உருவாக்க முயற்சித்தவர்கள், கடந்த டிசம்பர் 2024 முதல் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கடந்த பிப்ரவரி 4ல் மதுரையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தனது ஆட்களையும் சேட்டு மார்வாடிகளின் ஆதரவோடு திரட்டப்பட்ட வட மாநிலத்தவரையும் திரட்டி வந்து “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்! மலையின் மீதுள்ள தர்காவை அகற்றுவோம்!” என வன்முறைக் கூச்சலிட்டனர். ஆனால் மத நல்லிணக்கத்தை பாரம்பரியமாகக் கொண்ட, மத வேறுபாடின்றி மாமன் மச்சான்களாக பழகும் மதுரை மக்களிடம் இது எடுபடாமல் போனது. இது சங்கிக் கும்பலுக்கு மதுரை மக்கள் கொடுத்த சரியான சவுக்கடி.

பதுங்கி பக்தி வேடம் பூண்டு வந்த பாஜக, இந்து முன்னணி கும்பல் !

கலவர கும்பலின் சதித்திட்டம் மற்றும் அதன் நடவடிக்கைகளை மக்கள் கலை இலக்கிய கழகம், மக்கள் அதிகாரக் கழகம், மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பில் உள்ள பல்வேறு ஜனநாயக சக்திகளாலும் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தப்பட்டது. திணை அரிசியும், இளம் ஆட்டு ரத்தத்துடன் கலந்து தமிழ் கடவுள் முருகனுக்கு படையலிடப்பட்டதாக கூறுகிறது சங்க இலக்கியம். அந்த முருகனையே ஆயுதமாக்கி, ஆடு கோழி பலியிடுவதை தடுக்க நினைக்கும் சங்கிக் கும்பலுக்கு எதிராக “அரிட்டாப்பட்டியையும் ஜல்லிக்கட்டையும் மீட்டோம்! முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! இந்து முன்னணி – பி.ஜே.பி கும்பலை விரட்டியடிப்போம்!” என்ற முழக்கத்தின் அடிப்படையிலான மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரக் கழகத்தின் செயல்பாடுகள் மக்களால் பெருமளவில் ஆதரிக்கப்பட்டது. இந்த பிரச்சாரங்களால் மூக்குடைப்பட்டுப் போன இந்து முன்னணி, பி.ஜே.பி கும்பல் பதுங்கி பக்தி வேடம் அணிந்து முருக பக்தர்கள் மாநாடு என்ற வேடமிட்டு வந்தது. அமித்ஷா முதல் நடிகர்கள், பிரபலங்கள் வரை களத்தில் இறக்கியும் மதுரை மக்களிடம் எடுபடவில்லை. கலவர நோக்கத்தை மறைத்து முருகனை வைத்து ஆள் சேர்க்கவும் மக்களை ஏய்கவும் முயற்சித்து தோற்றுப்போன இக்கும்பல் நீதிமன்றத்தின் மூலம் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது.

நீதிமன்றத்தின் மூலம் முன் நகர்த்தப்படும் கலவரக் கும்பலின் சதித்திட்டம்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மார்ச் 24, 2025 இல் வழக்கு விசாரணை முடிந்த பின்பும் அவ்வழக்கின் தீர்ப்பை ஜூன் 22 முருக பக்தர்கள் மாநாடு முடியும் வரை ஏன் ஒத்திவைக்க வேண்டும்? மாநாடு முடிந்தவுடன் ஜூன் 24 இல் வழங்கப்பட்ட தீர்ப்பில் ஒரு நீதிபதியின் தீர்ப்பு இந்து முன்னணியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைக்கு கொண்டு செல்வதாக உள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

அந்த நீதிபதி கூறிய தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால் திருப்பரங்குன்றத்தை அஜ்மீர் தர்கா மற்றும் பாபர் மசூதி போல் மாற்றுவதற்கான சங்கிகளின் திட்டம் எளிதில் புரியும்.

இத்தீர்ப்பை அமைதியாக அனுமதித்தால், திருப்பரங்குன்றத்தை ‘தென் கைலாயம்’ என்று முத்திரை குத்தி சைவ மலையாக்கி, திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள அனைத்து நாட்டார் தெய்வங்களின் ஆடு கோழி பலியிடும் வழிபாட்டு உரிமைகள் ஒழிக்கப்பட்டு, நாட்டார் தெய்வங்கள் காணாமலடிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன. ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தின் துணையுடன் மக்களுக்கெதிரான தனது நோக்கத்தை நடைமுறையில் சாதித்துக் கொண்டது தான் பார்ப்பனியத்தின் வரலாறு. 1949 முதல் 2019 உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை பாபர் மசூதியின் வரலாறு கூறுவதும் இதைத்தான். எனவே சங்கிகளின் சதியை தடுக்க மக்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் ஒற்றுமையையும் பாதுகாக்க நீதிமன்றத்தை மட்டுமே நம்பியிராமல் மக்கள் மன்றத்தில் முன் வைப்போம்!

  • மக்கள் எழுச்சியை கட்டியமைப்போம்!
  • அதற்கான நடவடிக்கையாக ஜூலை-30 கருத்தரங்கில் அணிதிரள்வோம்!
  • அனைவரும் வாரீர்!

மக்கள் கலை இலக்கிய கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை மாவட்டம்.
97916 53200

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க