கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது மஞ்சுநாத சுவாமி கோவில். இந்த கோவில் 800 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். இந்த கோவிலுக்கு தினமும் சாதாரண உழைக்கும் மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைத்துறை நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், வெளி மாநிலத்தவர்கள், வெளிநாட்டவர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த கோவில் இந்துக்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சமண மதத்தைச் சார்ந்தவர்களே இதை நிர்வாகம் செய்து வருகின்றனர்.
இந்தக் கோவில் கர்நாடகா அரசு கட்டுப்பாட்டில் இல்லாமல் ஒரு தனியார் குடும்பத்திற்கு கீழ் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. காலம் காலமாக ஜெயின் ஹெக்டே குடும்பத்தினரால் நிர்வாகம் செய்யப்பட்டு இப்பொழுது வீரேந்திர ஹெக்டே என்பவர் இதற்கு தலைவராக இருந்து வருகிறார். இந்த கோவிலில் பட்டியல் சாதியைச் சார்ந்தவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் தனித்தனி மடங்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. கர்நாடகாவின் அரசுக்கு அதிக வருவாயைக் கொடுக்கிற கோவிலாக இது செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜூலை 4 அன்று இந்த கோவிலில் வேலை செய்த முன்னாள் தூய்மைப் பணியாளர் ஒருவர், 100க்கும் மேற்பட்ட பெண்களை தர்மஸ்தாலா கோவில் நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமை செய்தும் ஆசிட் ஊற்றி சித்திரவதை செய்து கொலை செய்ததாகவும் அப்பிணங்களைத் தானே எரித்ததாகவும் அரை உயிருடன் வந்தவர்களையும் தானே பெட்ரோல் டீசல் ஊற்றி எரித்து மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளதாகவும் போலீசுக்குத் தெரிவித்ததை அடுத்து, நாடே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
மதநிறுவனங்களின் பெயரில் பெண்கள் மீது அரங்கேற்றப்படும் இந்த கொலைகள் குறித்து தற்போது அதிகம் விவாதிக்கப்படுகிறது.
காவலாளியின் வாக்குமூலம்
ஜூலை 13 அன்று பெல்தங்கடி முதன்மை நீதிமன்றத்தில் அக்காவலாளி கொடுத்த வாக்குமூலம்தான் இந்தியாவையே அதிர வைத்துள்ளது. அவர் நீதிபதியிடம் கூறுகையில்:
“நான் அந்த கோவிலில் 1995 முதல் தூய்மை பணியாளராக வேலை செய்து கொண்டு வருகிறேன். 1995 முதல் 2014 வரை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை தர்மஸ்தலா கோவில் நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமை செய்தும் கொடூரமான முறையில் சித்திரவதை செய்தும் கொலை செய்துள்ளனர். அவர்கள் அந்தப் பெண்களை கழுத்தை நெறித்தும், உடம்பில் ஆசிட் அடித்தும் கொலை செய்வார்கள். இந்த தடயத்தை நான் அந்த பெண்களின் சடலங்களில் பார்த்துள்ளேன்.
கொலை செய்த பெண்களை அவர்கள் காரில் ஏற்றி வருவார்கள். அதன் பிறகு என்னிடம் ஒப்படைத்து யாருக்கும் தெரியாமல் அதை எரிக்கவோ புதைக்கவோ செய்யச் சொல்வார்கள். நான் முதலில் செய்யமாட்டேன் என்றுதான் சொல்லியிருந்தேன். அவர்கள் என்னையும் என் குடும்பத்தில் இருக்கும் நபர்களையும் இதுபோன்று எரித்து விடுவோம் என்று மிரட்டி அடித்தார்கள். அந்த பயத்தில்தான் இதை நான் செய்தேன்.
அவர்கள் எப்பொழுதும் நேத்ராவதி ஆற்றுப் படுகையில்தான் புதைக்கவோ எரிக்கவோ செய்யச் சொல்வார்கள். ஏனென்றால் நேத்ராவதி ஆற்றின் மண் மென்மையாக இருக்கும், அது சீக்கிரமாகவே அந்த உடலை அரித்து மக்கச் செய்துவிடும். அந்த இடத்தில் நிறைய பெண்களின் உடல்கள் இருக்கிறது. அந்த கொலை வெறி கும்பல்தான் எந்த திசையில் குழி வெட்ட வேண்டும் என்பது முதற்கொண்டு சொல்வார்கள்.
நான் எனது கையாலேயே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை பெட்ரோல் மற்றும் டீசல் ஊற்றி எரித்தும் புதைத்தும் இருக்கிறேன். பல பெண்களை ஆடை இன்றியும் கொடூரமான முறையில் தாக்கியிருந்த பல காயங்களுடனும் நான் பார்த்துள்ளேன். ஒரு 14 வயதுடைய பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த சிறுமியின் பள்ளி பை மற்றும் பள்ளி சீருடையுடன் அதை நான் எரித்து இருக்கிறேன்.
இன்னொரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அந்த உடம்பின் மீது ஆசிட் அடித்து விட்டு செய்தித் தாளை வைத்து சுற்றி எடுத்து வந்தார்கள். ஒன்று அல்லது இரண்டு நாட்களாக இதை நான் செய்யவில்லை இதுபோன்று 10 ஆண்டுக்கு மேல் இந்த வேலையை நான் செய்து கொண்டிருந்தேன்.
என்னுடைய மேற்பார்வையாளர் அப்பொழுது இதைப் பற்றி போலீஸிடம் சொல்லச் சொல்லி இருந்தார். ஆனால் அந்த கும்பலுக்கு இவரைத் தெரிந்து விட்டது. பின்பு அவரையும் அவர் குடும்பத்தினரையும் மிரட்டினார்கள். இதைச் சொன்னால் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என்ற பயத்தில்தான் இவ்வளவு நாள் சொல்லாமல் இருந்தேன்.
2014 ஆம் ஆண்டு என் உறவினர் ஒருவரையும் பாலியல் பலாத்காரம் செய்து என்னை எரிக்கச் சொன்னார்கள். என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதைக் கண்டு நான் வேலையை விட்டு வெளி மாநிலத்திற்குச் சென்று தஞ்சம் அடைந்தேன்.
ஆனால் இந்த சம்பவங்கள் அனைத்தும் எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது, மனசாட்சி உறுத்திக் கொண்டு இருந்தது. அவர்கள் ஆன்மா சாந்தி அடைய அவர்களுக்கு இறுதி சடங்குகள் செய்ய வேண்டும்.
என்னை அந்த கும்பல் மிரட்ட அதிக வாய்ப்புள்ளது. ஆதலால் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும். என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளன. இந்த ஆதாரத்தை எல்லாம் அழிக்கும் மனநிலை கொண்டவர்கள் அவர்கள்; மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் அவர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இது மட்டுமல்லாமல் பல போட்டோ மற்றும் வீடியோ ஆவணத்தையும் நீதிபதியிடம் ஒப்படைத்துள்ளார். நீதிமன்றம் கிராம நிர்வாகி மற்றும் புகார்தாரர் தலைமையில் அந்த பகுதி முழுவதும் குழி தோண்டி பெண்களின் உடல்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் மகளிர் ஆணைய நிர்வாகி நாகலட்சுமி சவுத்ரி முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் ”எஸ்.பி தலைமையில் விசாரணை அமைத்தால் விசாரணை ஒழுங்காக நடைபெறாது. மாறாக, ஒரு சிறப்புப் புலனாய்வு அமைக்க வேண்டும். அதன் அடிப்படையில் விசாரணை செய்ய வேண்டும்” என்று அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.
’காணாமல் போன’ அனன்யா
நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நிறையப் பேர் புகார் கொடுக்க முன்வந்துள்ளனர்.
பெங்களூருவைச் சார்ந்த சுஜாதா என்ற பெண் போலீஸ் நிலையத்தில் தற்போது மீண்டும் புகார் கொடுக்க சென்றிருந்தார். இவருடைய மகள் அனன்யா 2003 ஆம் ஆண்டு மணிப்பூரில் மருத்துவ கல்வி படித்துக் கொண்டிருந்தார். கல்லூரி விடுமுறைக் காலத்தில் தர்மஸ்தலா கோவிலுக்கு தன் நண்பர்களுடன் சென்ற போது மர்மமான முறையில் காணாமல் போனார். செய்தியை அறிந்த சுஜாதா கொல்கத்தாவிலிருந்து உடனடியாக தர்மஸ்தலா சென்று இரவு முழுவதும் தேடிப் பார்த்திருக்கிறார். இரவு முழுவதும் தேடியும் அனன்யா கிடைக்கவில்லை.
பின்பு போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். போலீஸ் அதிகாரிகள் யாரும் இந்த புகாரை எடுத்துக் கொள்ளாமல் ”உங்கள் பெண் வேறு யார் கூடயாவது ஓடிப் போயிருப்பார்” என்று அவமானப்படுத்தி அனுப்பி இருக்கின்றனர். மேலும், போலீஸ் அதிகாரிகள் புகார் கொடுக்க சென்ற சுஜாத்தாவை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
அடுத்து கோவில் நிர்வாகத்திடம் சென்றும் தனது மகளைக் காணவில்லை என்று கூறியிருக்கிறார். கோவில் நிர்வாகம் எந்த உதவியும் செய்யவில்லை. மனமுடைந்து அக்கோவிலின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த சுஜாதாவிடம் நான்கு வெள்ளை ஆடை அணிந்து வந்த நபர்கள் அனன்யாவை எங்களுக்குத் தெரியும் என்று பொய் சொல்லி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கே அந்த கும்பல் இவருடைய தலையில் அடித்ததில் அவர் மூன்று மாதம் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். இந்த சம்பவங்கள் அனைத்தும் 2003-இல் நடைபெற்றது. காவலாளியின் வாக்குமூலம் வெளியானதை அடுத்து தற்போது அவர் தனது மகளின் உடலைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கண்ணீர் மல்கப் புகார் அளித்துள்ளார். அந்த வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
சிறுமி சவுஜனா படுகொலை
இது போன்று மற்றுமொரு சம்பவம். 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி சிறுமி சவுஜானா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கோவில் பகுதியில் சடலமாக ஆடையின்றி மீட்கப்பட்டார். உடற்கூராய்வில் இந்த சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்பட்டிருந்தது.
போலீஸ் விசாரணையில் இந்த பாலியல் பலாத்காரத்தை அந்த கோவிலில் யாசகம் எடுக்கும் நபர்தான் செய்துள்ளார் என்று பொய்யான ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார்கள். இந்த வழக்கில் உறுதியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உரிய நீதியையும் வழங்கவில்லை. தற்போது இந்த சம்பவமும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சி.பி.எம் கட்சியின் போராட்டங்கள்
கர்நாடகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2012-இல் தர்மஸ்தலாவில் பாலியல் வன்முறைகள் கொலைகள் நடப்பதை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தியுள்ளது. அப்பொழுதே 400-க்கும் மேற்பட்ட பெண்கள் மர்மமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அன்றுமுதல் இன்றுவரை, காங்கிரசு, பா.ஜ.க., ம.ஜ.த. ஆகிய மூன்று கட்சிகளின் ஆட்சிகளுமே இந்தப் பிரச்சினையை மூடி மறைத்தே வந்துள்ளன.
யார் இந்த வீரேந்திர ஹெக்டே?
வீரேந்திர ஹெக்டே 20 வயதில் இந்த கோவிலின் நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கர்நாடகா மாநிலத்தின் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், சாதி சங்கத் தலைவர்களை தன் கைக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார். இந்தக் கோவிலில் இவர் சொல்வதுதான் சட்டம்.
குறிப்பாக, இந்த கோவில் ஒரு கட்டப்பஞ்சாயத்து மையமாக இயங்கிக் கொண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இவர் தன்னை இறைவனுடைய பிரதிநிதி என்று கூறி வருவதால் இது அவருக்கு பெரிய பாதுகாப்பாக இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நண்பராக இருந்து கொண்டு வருகிறார். இவருக்கு அந்த மாநிலத்தின் கர்நாடகா ரத்னா விருது, ஒன்றிய அரசின் பத்மபூஷன் விருது ஆகியன வழங்கப்பட்டுள்ளன. இப்பொழுது பா.ஜ.க.வின் சார்பாக மாநிலங்களவையின் உறுப்பினராகவும் இருந்து கொண்டு வருகிறார்.
இந்த கோவிலைச் சுற்றியுள்ள விவசாயிகள் அனைவரும் இந்த கோவிலுக்கு அவர்கள் நிலத்தில் விளையும் பொருட்களை வழங்க வேண்டும் என்று எழுதப்படாத சட்டமாக இருந்து வருகிறது. இது மட்டுமில்லாமல் இவர் குடும்பத்தைச் சார்ந்த நபர்களின் பெயர்களில் கல்வி நிறுவனம், முதியோர் இல்லம் என ஒரு பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டி வைத்திருக்கிறார்.
000
காங்கிரசு, பா.ஜ.க., ம.ஜ.த. ஆகிய மூன்று கட்சிகளின் ஆட்சியிலும் இந்த கொடிய பாலியல் கொலைகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள்தான் மிரட்டப்பட்டு வந்துள்ளனர்.
அரசியல்வாதிகளையும் அரசு அதிகாரிகளையும் கைக்குள் வைத்துக் கொண்டுள்ளதால்தான் இது போன்ற கொடூரங்களை இந்த கயவர்களால் நிகழ்த்த முடிகிறது.
நீதிமன்றமும் இந்த பிரச்சினை குறித்துப் பேசுபவர்களுக்கு வாய்ப்பூட்டு சட்டம் போட்டு வாயை அடைக்கும் வேலையைத்தான் செய்து வருகிறது. நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடை ஆணை மூலமாக இதுவரை 8,800-க்கும் மேற்பட்ட இணைய இணைப்புகள் (links) நீக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தின் துணையில்லாமல் இவ்வளவு பெரிய கொடூரத்தை அரங்கேற்றிவிட்டுத் தப்பிக்க முடியுமா என்ற கேள்வி நம் முன் எழுகிறது.
எனவே, இதுபோன்ற தனியார் கோவில்கள், மடங்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும். இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அதற்குத் துணைபோனவர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும்!!
இளையநிலா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram