டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஜூலை 24 அன்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிசுக்கு எதிராக மாணவர்கள் ஒன்று திரண்டு “ஃபட்னாவிஸே திரும்பிப் போ” (Go Back Fadnavis) என்று போராட்டம் நடத்தியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் புதிதாக இரண்டு துறைகளைத் தொடங்கி வைப்பதற்காக தேவேந்திர ஃபட்னாவிஸ் அழைக்கப்பட்டு இருந்தார். ஒன்று சத்ரபதி சிவாஜியின் பாதுகாப்பு மற்றும் ராணுவ போர்த் தந்திரங்கள் குறித்த ஆய்வு மையம், மற்றது மராட்டிய மொழி மற்றும் பண்பாடு குறித்த ஆய்வு மையமாகும்.
பட்னாவிஸ் அமைச்சரவை கொண்டு வந்திருக்கும் மகாராஷ்டிரா சிறப்பு பாதுகாப்பு சட்டம் (Maharashtra Special Public Safety Act) சிறுபான்மை மதத்து மக்களை ஒடுக்கும் மற்றும் ஜனநாயகக் குரல்களை நசுக்கும் நோக்கம் கொண்டது; மக்களை மகிழ்விக்கும் காமெடியன்கள் தொடங்கி இஸ்லாமிய சிறுபான்மையினர், தலித்துகள், மற்றும் அரசு கொள்கைகளை எதிர்க்கும் சமூக செயற்பாட்டாளர்கள், மக்களுக்காகப் போராடக் கூடிய போராளிகள், எதிர்க்கட்சிகள் என்று அனைவரையும் ஒடுக்கக் கூடியது என்று கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜே.என்.யு மாணவர் சங்கம் அழைப்பு விடுத்ததன் பேரில் அகில இந்திய மாணவர் சங்கத்தினரும் (AISA) மற்ற பிற மாணவர் சங்கங்களோடு கூட்டாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படிக்க: ஜே.என்.யு மாணவர் சங்க தேர்தல் உணர்த்துவது என்ன?
வளாகத்தில் பெரிய அளவில் போலீசு குவிக்கப்பட்டு இருந்தபோதிலும் தொடக்க விழா அரங்கிற்கு வெளியே ஒன்று திரண்ட மாணவர்கள் மனிதச் சங்கிலி அமைத்து “ஃபட்னாவிஸே திரும்பி போ” என்று முழக்கங்களை எழுப்பினர். பலரும் கருப்பு வண்ணத்தில் ஆடைகள் அணிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெறுப்பை விதைக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்கு ஜே.என்.யு-வில் இடம் இல்லை என்று கூறினார் ஜே.என்.யு-வின் மாணவர் தலைவர் நிதீஷ் குமார்.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் போலீசை வரவழைத்த பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்தி ஸ்ரீ துலிப்புடி பண்டிட்டுக்கு எதிராகவும் மாணவர்கள் முழக்கமிட்டனர். மக்களின் சிவில் ஜனநாயக உரிமைகளை மறுக்கும், அரசியலமைப்பின் மாண்பைக் குலைக்கும் எவரையும் நாங்கள் கடுமையாக எதிர்ப்போம், அப்படிப்பட்ட நபர்களை வளாகத்திற்குள் வரவழைத்ததற்காக நிர்வாகம் வெட்கப்பட வேண்டும் என்று கூறினார் மாணவர் சங்கப் பொதுச் செயலாளர் முண்டஹே ஃபாத்திமா.
பாசிஸ்டுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் முன்னுதாரணம் மிக்க போராட்டங்களுக்கு ஜனநாயக சக்திகள் துணை நிற்க வேண்டும்.
சுந்தரம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram