மதுரையில் மதக்கலவரத்தைத் தூண்டுவதற்காக இந்து முன்னணி கும்பலால், முருக பக்தர் என்ற பெயரில் நடத்தப்பட்ட மாநாட்டில் ஆறு தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தனர். இதில் வழக்கம்போல ‘இந்து’ வாக்குவங்கியை அறுவடை செய்து கொள்ளும் நோக்கத்திலிருந்து சில தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தாலும் முக்கியமான இரண்டு தீர்மானங்கள் திருப்பரங்குன்றம் தொடர்பானவையாகும்.
“திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்”, “திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்” ஆகிய இரண்டு தீர்மானங்களின் மூலமாக, மதுரையில் மதக்கலவரத்தைத் தூண்டுவதற்கான தனது சதித்திட்டத்தை மீண்டும் வழிமொழிந்துள்ளது. இதன் போக்கில் தமிழ்நாடு முழுவதிலும் மதக்கலவரத்தைப் பரவச் செய்வதற்கான வழிவகையையும் உருவாக்கியுள்ளது.
இச்சூழலில், மதுரை திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று அழைப்பதற்கு தடை விதிக்க வேண்டும், ஆடு-கோழி பலியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும், திருப்பரங்குன்றம் மலையை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும், திருப்பரங்குன்றம் மலையை சமணர் மலை என்று அறிவிக்க வேண்டும் உள்ளிட்டு பல்வேறு வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மூன்று மாதங்களாக நடைபெற்றுவந்த இவ்வழக்கு விசாரணையில், ஜூன் 24-ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இரண்டு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது.
இதில், நீதிபதி நிஷா பானு வழங்கிய தீர்ப்பில் சில குறைபாடுகள் இருந்தாலும், ஆதாரங்கள் மற்றும் ஆய்வின் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தது. ஆடு-கோழி பலியிட்டு வணங்கும் உரிமையானது தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருவதை உறுதி செய்யும் விதமாக இத்தீர்ப்பு இருந்தது. குறிப்பாக, மதநல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் தர்காவில் கந்தூரி கொடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என்பதை நீதிபதி நிஷா பானு தீர்ப்பில் பதிவு செய்திருந்தார்.
அதேவேளையில், நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பானது, சனாதன நீதியின் அடிப்படையில், ஆதாரங்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, சங்கப் பரிவாரக் கும்பல் முன்வைக்கின்ற வாதங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் வழங்கப்பட்டிருந்தது. இத்தீர்ப்பு மதுரை திருப்பரங்குன்றத்தில் மக்கள் காலங்காலமாக பின்பற்றிவரும் பழக்கவழக்கங்களுக்கு முற்றிலும் எதிரானது. அயோத்தி பாபர் மசூதி, அஜ்மீர் தர்கா போன்றவற்றை இந்துமதவெறி பாசிச கும்பல் கைப்பற்றுவதற்கு நீதிமன்றங்கள் ஒத்துழைத்ததை போல, திருப்பரங்குன்றத்தை சங்கி கூட்டம் கைப்பற்றுவதற்கான முகாந்திரத்தை இத்தீர்ப்பு ஏற்படுத்துகிறது.
நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பானது,
- தர்காவை “ஆக்கிரமிக்கப்பட்ட இடம்” என்று குறிப்பிடுகிறது.
- தர்காவில் புனரமைப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு தொல்லியல் துறையின் அனுமதி பெற வேண்டுமென்று குறிப்பிடுவதன் மூலம் இத்தர்காவை ஒன்றிய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்ல வழிவகுக்கிறது.
- மேலும், திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், தர்கா, கோவில்களுக்கான எல்லைகளை தொல்லியல் துறை நில அளவை (Survey) மூலம் வரையறுக்க வேண்டுமென்று குறிப்பிடுகிறது. இதன் மூலம், மொத்த மலையையும் ஒன்றிய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்கிறது.
- கோவிலைச் சுற்றி 300 மீட்டர் தொலைவிற்கு அப்பாலும் கூட கறிக்கடைகளே இல்லை, கோவிலைச் சுற்றியுள்ள மண்டபங்களில் எங்கும் இறைச்சி உணவு பரிமாறப்படுவது இல்லை என்ற சங்கிக் கும்பலின் பொய்யையே தீர்ப்பு வழிமொழிகிறது. இதன் மூலம் ஆடு-கோழி பலியிட்டு வணங்குவதற்கான உரிமையை மறுக்கிறது. இது சிக்கந்தர் தர்காவில் வழிபடும் மக்களுக்கு மட்டுமல்ல, கீழே உள்ள குல தெய்வங்களை வழிபடும் மக்களுக்கும் எதிரானது.
- சந்தனக் கூடு விழாவில் கந்தூரி கொடுப்பதற்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அனுமதி வாங்க வேண்டும் என்கிறது.
- “ஆறு மணிக்கு மேல் யாரும் சிக்கந்தர் தர்காவிற்கு செல்வதில்லை. எனவே, அங்கு மின்சார இணைப்பு கொடுக்கத் தேவையில்லை” என்ற சங்கிக் கும்பலின் அறிவியல் வளர்ச்சிக்குப் புறம்பான-பிற்போக்கான கருத்தையும் இத்தீர்ப்பு வழிமொழிகிறது.
- தர்காவிற்கு வழிபட வருபவர்களுக்கு மலைக்கு மேலே உள்ள சுணையில் நீர் எடுத்துக்கொள்ள அனுமதி மறுக்கிறது. வழிபட செல்பவர்கள் அவர்களுக்குத் தேவையான நீரை கீழிருந்து கொண்டு செல்ல வேண்டும் என்கிறது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவை தீர்ப்பின் சில முக்கியமான அம்சங்களின் சுருக்கமான முடிவுகள் மட்டுமே. இவை ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்தும் நிலைமை வந்தால், திருப்பரங்குன்றம் மலை தமிழர்கள் கையிலிருந்து முற்றிலும் பறிக்கப்பட்டு பார்ப்பன சனாதனக் கூட்டத்தின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும்.
‘முருக பக்தர்’ மாநாட்டில், மதக்கலவரத்தை தூண்டும் விதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைக்குக் கொண்டு செல்லும் முதல் நடவடிக்கையாக நீதிபதி ஸ்ரீமதியின் இத்தீர்ப்பு அமைந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வழக்கு உச்சநீதிமன்றத்திற்கே சென்றாலும் சங்கிக் கும்பலின் செல்வாக்கில் இருக்கும் நமது நாட்டின் நீதித்துறையில் மக்களுக்கு ஆதரவான தீர்ப்பு வரும் என்று நம்பியிருப்பது, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும்.
இந்து முன்னணியின் மாநாட்டை மக்கள் புறக்கணித்ததைப் போலவே, இந்தத் தீர்மானங்களையும் நீர்த்துப் போகச் செய்வதற்கான மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்பதே சங்கிக் கும்பலின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும்.
மகேஷ்
(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram