தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் மகன் கவின்குமார் (வயது 28). இவர் பட்டப்படிப்பு முடித்து சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த கவின்குமாரும், நெல்லை கே.டி.சி நகர் மறவர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் பள்ளிப்பருவத்திலிருந்து காதலித்து வந்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த பெண்ணின் பெற்றோர்கள் இதைக் கண்டித்துள்ளனர்.
சென்னையிலிருந்து விடுமுறையில் ஊருக்கு வந்த கவின்குமார் கே.டி.சி நகர் முதலாவது தெருவில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்குத் தனது உறவினர் ஒருவருடன் நேற்று காலை சென்றுள்ளார். சிகிச்சைக்குப் பின்னர் மாலை 3 மணிக்கு மேல் ஊருக்குச் செல்வதற்குத் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், அந்த இளம்பெண்ணின் தம்பி சுர்ஜித் மற்றும் இன்னொருவர் கவின் குமாரை அழைத்துச் சென்று ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இந்த சாதி ஆணவப்படுகொலையை மக்கள் அதிகாரக் கழகம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
பெண்ணின் பெற்றோர் இருவரும் ராஜபாளையம் மற்றும் மணிமுத்தாறு பட்டாலியனில் சப் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர். பெண்ணின் தந்தை படுகொலை செய்த தனது மகன் சுர்ஜித்தை போலீஸ் நிலையத்தில் சரண் அடையச் செய்ததாகத் தெரிகிறது.
போலீஸ் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் பெற்றோர்கள் சரவணகுமார், கிருஷ்ணவேணி தங்கள் மகனைத் தூண்டிவிட்டு கவின்குமாரை கொலை செய்ய வைத்ததாக, உயிரிழந்த கவின் குமாரின் தாய் செல்வி பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சுர்ஜித்தின் பெற்றோர்கள் உட்பட மூவரும் இணைந்து திட்டமிட்டு சதி செய்து இந்த ஆணவப் படுகொலையைச் செய்திருக்கக் கூடும் என்று சந்தேகம் எழுகிறது. ஆகையால் படுகொலை செய்த சுர்ஜித்தின் பெற்றோர்களையும் இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் என்று கூறி கவின்குமாரின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்துள்ளனர்.
சமீப காலத்தில், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில், குறிப்பாக நெல்லையில் பள்ளி மாணவன் சின்னதுரை வெட்டப்பட்டது, கபடிப் போட்டியில் வென்றதற்காக தேவேந்திரராஜா வெட்டப்பட்டது உள்ளிட்ட பல்வேறு சாதிவெறி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. இவற்றில் ’தேவேந்திர குல வேளாளர்’ சமூகத்து மக்கள் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உழைக்கும் மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
படிக்க: இராமநாதபுரம்: தலித் இளைஞரைத் தாக்கிய அகமுடையார் சாதி வெறியர்கள்
ஆனால் இப்படிப்பட்ட சாதிய தாக்குதல்கள் படுகொலைகள் எதுவும் தென் மாவட்டங்களில் நடக்கவில்லை என சபாநாயகர் அப்பாவு கூறுகிறார். தி.மு.க-வின் எம்.பி கனிமொழி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தி.மு.க-வைச் சேர்ந்த முக்கியமான மக்கள் பிரதிநிதிகள் சாதிய தாக்குதல்களைக் கண்டித்து அறிக்கை கூட வெளியிடுவதில்லை. சாதிய தாக்குதல்களைத் தடுக்கும் விதத்திலும் எவ்வித நடவடிக்கையையும் அரசு எடுப்பதில்லை.
தொடரும் இந்த சாதி வெறி படுகொலைகளுக்கு ஆதிக்கச் சாதி சங்கங்கள் மிகவும் முக்கியமான காரணமாக உள்ளன. குருபூஜை, கோவில் திருவிழாக்கள் ஆகியவற்றின் மூலம் இவை இளைஞர்களுக்கு சாதிவெறி ஊட்டுகின்றன. இளைஞர்களை மாணவர்களைச் சாராய போதையிலும் சாதி போதையிலும் ஆழ்த்தி அவர்களின் கைகளில் அரிவாளைத் திணிப்பது இந்த ஆதிக்க சாதி சங்கங்களும் அதன் தலைவர்களும் தான். இந்த ஆதிக்க சாதி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் ஊடுருவி இவற்றைத் தனக்கான ஆயுதமாக வருகிறது. இதை மக்கள் அதிகாரக் கழகம் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது.
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலையும் ஆதிக்க சாதி சங்கங்களையும் சாதி வெறியை தூண்டும் திரைப்படங்களையும் வலைத்தளங்களையும் தடை செய்யாமல் சாதியின் பெயரால் நடக்கும் படுகொலைகளை ஒரு நாளும் தடுக்க முடியாது.
ஆகவே இக்கோரிக்கையை முன்வைத்து உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து களத்தில் இறங்கி இறங்கிப் போராட வேண்டிய தருணமிது.
பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram