பிற்போக்குப் பார்ப்பனிய சாதிய படிநிலை அமைப்பைக் கொண்ட இந்திய சமூகத்தில், படிநிலைச் சாதிய அமைப்பிற்கேற்பவே மக்கள் சமூகப்-பொருளாதார நிலையைப் பெற்றிருக்கின்றனர். தமிழ்நாடு, கேரளா போன்ற சில மாநிலங்களில் சமூக சீர்திருத்தத்தின் காரணமாக சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால், இன்றளவில் இந்தியாவில் மொத்தம் எத்தனை சாதிகள்-உட்சாதிகள் உள்ளன? சாதி ரீதியாக மக்கள்தொகை எண்ணிக்கை என்ன? தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக பொருளாதார நிலை என்ன? என்பவை குறித்த எந்தத் தரவுகளும் ஒன்றிட அரசிடமோ அல்லது மாநில அரசுகளிடமோ இல்லை. பிரிட்டீஷ் ஆட்சியில் 1931-இல் எடுக்கப்பட்ட சாதிவாரியான கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இதுவரை இந்தியாவில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
2011-இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போதும் மக்களிடம் சாதி குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அதன்படி, இந்தியாவில் மொத்தமாக 46 லட்சம் சாதிகள், துணை சாதிகள், சாதி பெயர்கள், குலங்கள் குறித்த தகவல்கள் மக்களால் அளிக்கப்பட்டிருந்தன. இவை குறித்த எந்தத் தரவுகளும் ஒன்றிய அரசால் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்தக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட சாதி தொடர்பான விவரங்களைப் பகுப்பாய்வு செய்ய அப்போதைய நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா தலைமையில் ஒரு குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. ஆனால், அதற்குப் பிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களைக் கோருகின்றன. சான்றாக, கல்வி நிலையங்களில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது தொடர்பான வழக்கிலும் நீதிமன்றம் இவ்வாறான கேள்வியை எழுப்பியுள்ளது என்கிறார் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி.
இந்தப் பின்னணியில்தான், இந்தியாவில் சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து குரல்கள் எழுப்பப்படுகின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரம் முக்கிய வினையாற்றியது. ராகுல்காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியமான ஆயுதமாக சாதிவாரிக் கணக்கெடுப்பை முன்னெடுத்தார். இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தி.மு.க., ஜனதா தளம் போன்ற கட்சிகளும் இந்தக் கோரிக்கையை முன்வைத்தன. தெலுங்கானாவிலும், பீகாரிலும் சாதிவாரிக் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. இவை பிற மாநிலங்களிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையைத் தீவிரப்படுத்தின.
எனினும், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து எந்த அறிவிப்பையும் ஒன்றிய அரசு அப்போது வெளியிடவில்லை. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோருபவர்களை “நகர்ப்புற நக்சல் மனநிலை கொண்டவர்கள்” என்றும், “இந்தியாவை பிளவுபடுத்துபவர்கள்” என்றும் ஏப்ரல் 28, 2024 அன்று பத்திரிகையாளார் சந்திப்பின்போது வெறுப்பைக் கக்கினார் மோடி. 23 செப்டம்பர், 2021-இல் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது, ஒன்றிய அரசு.
ஆனால், திடீரென்று சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு எதிரான தனது நிலைப்பாட்டிலிருந்து “அந்தர் பல்டி” அடித்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல். கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி, அடுத்துவரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. சாதிவாரிக் கணக்கெடுப்புடனான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, ஜம்மு காஷ்மீர், உத்தராக்கண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வருகிற அக்டோபர் 2026-லிருந்தும், இதர மாநிலங்களில் மார்ச் 1, 2027-லிருந்தும் தொடங்கப்படும் என்று ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் இப்பணியில் 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், 1.3 லட்சம் செயற்பாட்டாளார்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சகத்தின் சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
“யூ-டர்னா?” செயலுத்தியா?
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற மோடி அரசின் அறிவிப்பு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்திருக்கின்றன. பெரும்பாலான முதலாளித்துவ ஊடகங்கள் ஒன்றிய அரசின் இந்த முடிவை “யூ-டர்ன்” என்று அழைக்கின்றன. பீகாரில் அடுத்த ஆறு மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதாலேயே மோடி அரசு யூ-டர்ன் அடித்திருப்பதாக கருத்து தெரிவிக்கின்றன.
ஆனால், சாதிவாரிக் கணக்கெடுப்பானது பீகார் தேர்தலுக்கானது என்பது ஒரு பகுதி உண்மை மட்டுமே. வட மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் இந்துத்துவ அரசியலுக்கு முதுகெலும்பாக இருந்த நிலவுடைமை சாதிகள் தற்போது இப்பாசிச கும்பலுக்கு எதிராகவே திரும்பியுள்ளது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதனால், பாசிச கும்பலின் சமூக அடித்தளம் அரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்த மோடி அரசு எடுத்த மூர்க்கத்தனமான நடவடிக்கைகள், ஜாட் சாதியினரை அரசியல் ரீதியாக பா.ஜ.க-விற்கு எதிராகத் திருப்பியது. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் ஜாட் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியது. தங்களது சாதிய அடித்தளம் பறிபோய்விடும், சாதிய-சனாதனக் கட்டமைப்பு உடைக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தினால் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக மோடி அரசு அறிவித்தது.
அதேபோல், பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம், மோடி அரசின் சதியால் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது போன்றவை ஜாட் சாதியினரிடையே பா.ஜ.க. எதிர்ப்புணர்வை மேலும் அதிகரித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-விற்கு வாக்களிக்க மாட்டோம் என காப் பஞ்சாயத்தில் முடிவெடுத்து வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. வடமாநிலங்களில், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி மாநிலங்களில் வாழும் இச்சாதியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 8.25 கோடியாகும். இதன் எதிரொலியாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் பா.ஜ.க. 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.விற்கு விழுந்த மிகப்பெரும் அடியும் சரிவுமாகும்.
மேலும், கடந்த 30 ஆண்டுகளில் தீவிரமாக மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்தியதன் விளைவாக இந்திய விவசாயத்துறை பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால், விவசாயத்தை நம்பியிருந்த நிலவுடைமை சாதிகள் அரசு வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியது. எனவே, அரசு வேலைகளில் தங்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவதற்கான போராட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது.
மகாராஷ்டிராவில் 2016-ஆம் ஆண்டிலிருந்தே இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது மகாராஷ்டிராவில் மராத்தியர்களை குன்பி சாதியாக வகைப்படுத்தி ஓ.பி.சி. பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மனோஜ் ஜாரங்கே பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினார். அப்போராட்டத்திற்கு அடிபணிந்த பா.ஜ.க. தலைமையிலான தேவேந்திர பட்னாவிஸ் அரசு 72,000 பணியிடங்களை நிரப்புவதாகவும், 16 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதாகவும் வாக்குறுதியளித்தது.
மராத்தியர்கள் மட்டுமின்றி, குஜராத்தில் பட்டிதார்கள் (படேல்கள்), ராஜஸ்தானில் குஜ்ஜார்கள் மற்றும் ஹரியானாவில் ஜாட்டுகள் போன்ற சாதியினரும் இத்தகைய இட ஒதுக்கீட்டுப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
குஜராத்தில், 1981 மற்றும் 1985-ஆம் ஆண்டுகளில் ஒடுக்கப்பட்ட தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டபோது அதனை எதிர்த்து படேல் சமூகத்தினர் குஜராத் மாநிலத்தையே நிலைகுலைய வைக்கும் வகையில் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், அதே படேல் சமூகத்தினர் 2015-க்கு பிறகு தங்களையும் ஓ.பி.சி. பிரிவின்கீழ் சேர்க்க வேண்டும், தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.
இச்சாதிகள், சமூக, பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களாக இருந்தாலும் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில், பார்ப்பனியர்களுக்குப் பின்தங்கியவர்களாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, வடமாநிலக் கட்சிகளில் தங்களுக்குரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை என்ற குமுறலும் இவர்களிடையே இருக்கிறது. நீருபூத்த நெருப்பாக இவர்களிடம் உள்ள இடஒதுக்கீட்டு மனநிலை ஆர்.எஸ்.எஸ் -பா.ஜ.க.விற்கு எதிராக வெடிக்கும் அபாயம் இருப்பதை ஆர்.எஸ்.எஸ். உணர்ந்திருக்கிறது. அதேபோல், பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். காங்கிரஸ் மற்றும் இதர மாநிலக் கட்சிகளின் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கான நிர்பந்தமும், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் பீகாரில் மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தியிருப்பதும், இடஒதுக்கீடுக் கோரி போராடும் சாதிகளிடமும், இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளிடமும் தாக்கம் செலுத்துகின்றன.
எனவே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலக்காட்டில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு எதிரான தனது வரலாற்று நிலைப்பாட்டை ஆர்.எஸ்.எஸ். மாற்றியிருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பானது பின்தங்கிய மக்களின் நலனுக்காக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் கருவியாகப் பயன்படுத்தக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்-இன் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் கூறியிருக்கிறார்.
இவ்வாறு, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் தனது வரலாற்று நிலைப்பாட்டிற்கு எதிராக சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதானது பாசிச கும்பலின் இன்றைய சூழலுக்கான அரசியல் செயல் உத்தியே தவிர, சித்தாந்த மாற்றம் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மக்கள்தொகையில் சிறு கும்பலான குஜராத்தி-மார்வாரி-பார்ப்பன-பனியா மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவே ‘இந்து ஒற்றுமை’ என்று பேசிவருகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல். ஆட்சி-அரசின் உயர் பதவிகளையும், சமூகத்தின் சொத்துகளில் 40 சதவிகிதத்தையும் அனுபவிக்கிற, இச்சிறு கும்பலுக்குப் பாதகம் ஏற்படும் என்பதாலே இவ்வளவு காலம் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் இடஒதுக்கீட்டையும் எதிர்த்து வருகிறது காவி கும்பல்.
தற்போது, தனது குஜராத்தி-மார்வாரி-பார்ப்பனிய-பனியா மேலாதிக்கத்திற்குப் பக்கபலமாக இருந்த ஜாட், படேல் மற்றும் மராத்தியர்கள் போன்ற சாதியினரிடையே பா.ஜ.க. எதிர்ப்புணர்வு உருவாகிவருவதால் வேறுவழியின்றி சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல்.
சாதிய முனைவாக்கத்திற்கான கருவி
சாதிவாரிக் கணக்கெடுப்பை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். கூறினாலும், உண்மையில் தங்களது சமூக அடித்தளத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்குமான கருவியாக சாதிவாரிக் கணக்கெடுப்பைப் பயன்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் சதித்திட்டம்.
மக்களிடம் சாதி இல்லை, ‘இந்து’ என்ற ஒற்றைக் குடையின் கீழ் மக்களைத் திரட்டுவதாக ஆர்.எஸ்.எஸ். கூறினாலும், சாதிய அமைப்புகளில் ஊடுருவி தங்களுக்கான ஜந்தாம் படைகளை உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்திலும், தென்மாவட்டங்களிலும் ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களில் ஊடுருவும் ஆர்.எஸ்.எஸ். கும்பலால் அப்பகுதிகளில் சாதியத் தாக்குதல்கள் அதிகரித்துவருவது குறித்து “புதிய ஜனநாயகம்” தொடர்ந்து பதிவுசெய்து வருகிறது.
அதேபோல், கடந்த ஆகஸ்ட் 2024-இல் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பானது, தாழ்த்தப்பட்ட மக்களைப் பல்வேறு துணைப் பிரிவுகளாகப் பிரித்து, தாழ்த்தப்பட்ட மக்களின் ஒற்றுமையை சிதைத்து, இறுதியில் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் அபாயம் கொண்டது என்று 2024 செப்டம்பர் மாத புதிய ஜனநாயக இதழில் வெளியான “உள் இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் விளைவும் தீர்வும் என்ன?” என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குவதன் மூலம், ஓட்டுக் கட்சிகள் இவ்வதிகாரத்தை தனது வாக்குவங்கி அரசியலுக்காகப் பயன்படுத்தி மக்களைக் கூறுபோடும் அபாயம் உள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
தற்போது, மோடி அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதாக அறிவித்திருப்பதை இவற்றுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் சாதிவாரிக் கணக்கெடுப்பை பயன்படுத்தி, தனது சித்தாந்த மற்றும் அரசியல் ஆதாயத்திற்காக, தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை சாதி ரீதியாக அணிதிரட்டுவதற்கு ஏதுவாக, அவர்களை பல்வேறு துணைப் பிரிவுகளாக கூறுபோடும் அபாயம் உள்ளது. மக்களை பல்வேறு சாதிக் குழுக்களாகப் பிரித்து, ஒருவருக்கொருவரை எதிராக நிறுத்தி, சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும். அதன் மூலம், தங்களது, குஜராத்தி-மார்வாரி-பார்ப்பன-பனியா மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் சதித்திட்டமே பாசிச கும்பலின் இந்த திடீர் பல்டிக்கு பின்னாலிருக்கிறது.
அதுமட்டுமின்றி, தற்போது மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் நடத்தப்படுவதால் புதிய மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் அபாயமும் சேர்ந்திருக்கிறது. அவ்வாறு தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், இந்து, இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் என மத அடிப்படையில் மட்டுமல்லாது, பெரும்பான்மை சாதிகள் அடிப்படையிலும் காவி கும்பல் இந்தியாவைக் கூறுபோடும்.
மொத்தத்தில், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் தங்களது இந்துராஷ்டிரத்திற்கான பாதையை செப்பனிட்டுக் கொள்வதற்கான கருவியாகவே மக்கள்தொகை மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பை பயன்படுத்தப் போகிறது.
மேலும், மோடி அரசின் சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பினால், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வுடன் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதிக் கட்சிகள் பா.ஜ.க-வுடன் நெருக்கமாவதற்கும், பா.ஜ.க. கூட்டணி வலுப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதேசமயம், சமூக நீதி, இடஒதுக்கீடு என்று பேசி வருகிற மாநிலக் கட்சிகளின் அடித்தளத்தை அரித்து, அவற்றை பா.ஜ.க-வின் படைவரிசையில் சேர்த்துக் கொள்ளும் அபாயமும் இருக்கிறது.
நிராயுதபாணியான எதிர்க்கட்சிகள்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய விவாதப் பொருளாக சாதிவாரிக் கணக்கெடுப்பு இருந்தது. மோடி அரசின் பத்தாண்டுகால ஆட்சி மீதான வெறுப்பு ஒருபுறம் இருப்பினும், சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தது. எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு முக்கியமான ஆயுதமாக இருந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் பறித்துவிட்ட நிலையில், தற்போது எதிர்க்கட்சிகள் நிராயுதபாணியாக நிற்கின்றனர்.
ஆனால், இதை உணராத எதிர்க்கட்சிகளோ தங்களின் கோரிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பணிந்துவிட்டதாக எண்ணி புளங்காகிதம் அடைகின்றனர். ஒன்றிய அரசின் சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பை ஆதரிக்கின்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 50 சதவிகித இடஒதுக்கீடு என்ற உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளதோடு, கணக்கெடுப்பிற்கு கால நிர்ணயம் செய்யாமல் இருப்பது குறித்து விமர்சித்துள்ளார்.
ஆனால், பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பல் திடீரென அடித்த அந்தர் பல்டிக்கு பின்னால் இந்தியாவையே கூறுபோடும் அபாயமிக்க சதித்திட்டம் இருக்கிறது என்பதை எதிர்க்கட்சிகள் உணரவில்லை. பாசிசத்திற்கு எதிரான செயல்திட்டமின்றி இருப்பதும், மாற்று அரசியல்-பொருளாதார திட்டத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையாமல் இருப்பதுமே எதிர்க்கட்சிகளின் இந்த அரசியலற்றப் போக்கிற்கும், பாசிச சக்திகளை ஜனநாயகப் பூர்வமாக அணுகுவதற்கும் அடிப்படையாக இருக்கிறது. எனவேதான், பா.ஜ.க. முன்னெடுக்கும் ஆபரேஷன் சிந்தூர், சாதிவாரிக் கணக்கெடுப்பு என அனைத்தையும் ஆதரிப்பதோடு மக்களையும் அதற்கு பலி கொடுக்கின்றனர்.
அப்பு
(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram