‘முருக பக்தர்’ மாநாடு: மக்களின் புறக்கணிப்பு சங்கிகளின் கொக்கரிப்பு

சங்கிகளின் போலி முருக பக்தர் மாநாடானது அக்கும்பல் பிரச்சாரம் செய்து வந்ததற்கு நேரெதிராக தோல்வியைத் தழுவியிருக்கிறது.

டந்த ஜூன் 22-ஆம் தேதி, மதுரையில் உள்ள வண்டியூர் டோல்கேட்டுக்கு அருகே பா.ஜ.க – இந்து முன்னணி கும்பலானது போலி முருக பக்தர் மாநாட்டை வெற்று ஆரவார இந்துமதவெறிக் கூச்சலுடன் நடத்தி முடித்திருக்கிறது. “மாநாட்டில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டுவிட்டார்கள், மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துவிட்டது, தமிழ்நாட்டில் ‘இந்து’க்கள் ஒற்றுமை அடைந்துவிட்டார்கள்” என்றெல்லாம் சங்கிகளும் அவர்களது ஆதரவு ஊடகங்களும் பொய்களைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன.

இதன்மூலம், தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர்ந்து வருவதைப் போன்றதொரு போலியான பிம்பத்தைக் கட்டியமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், மாநாட்டில் சங்கிகள் எழுப்பிய இந்துமதவெறிக் கூச்சல்கள் மூலம் அவர்களின் கலவர நோக்கம் அம்பலப்பட்டு தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பதே எதார்த்தம்.

மண்ணைக் கவ்விய ‘முருக பக்தர்’ மாநாடு

‘முருக பக்தர்’ மாநாட்டில் ஐந்து லட்சம் மக்கள் திரண்டதாக சங்கிகள் அண்டப்புளுகை அவிழ்த்துவிட்ட நிலையில், மாநாடு நடந்த இடத்தில் ஒரு லட்சம் இருக்கைகள்தான் போட முடியும், 50,000 மக்கள்தான் கூடியிருக்கிறார்கள், கடைசி வரிசையில் இருக்கைகள் காலியாகக் கிடந்தன என்பதை மாநாட்டு களத்திலிருந்து யூடியூப் ஊடகங்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. மேலும், “ஐந்து லட்சம் மக்கள் ஒன்றாக இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடப்போகிறோம், உலக சாதனை படைக்கப்போகிறோம்” என்று சங்கிகள் வாய்ச்சவடால் அடித்துவந்த நிலையில் கந்த சஷ்டி பாடும்போது மக்கள் கூட்டம் கூட்டமாக மாநாட்டு திடலிலிருந்து வெளியேறும் காணொளிகளையும் வெளியிட்டிருக்கின்றன.

அதேபோல, மாநாட்டிற்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் வெளியூர்களிலிருந்து வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் இந்து முன்னணியினரால் அழைத்து வரப்பட்டவர்கள். முருகனின் அறுபடை வீடுகளை தரிசிக்கலாம் என்றுக் கூறியே மக்களை சங்கிக் கும்பல் மாநாட்டிற்கு அழைத்து வந்துள்ளது.

எனவே, மாநாடு முடியும் வரை மக்கள் இருக்கைகளில் அமர வேண்டும் என்பதற்காக மாநாட்டு திடலுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த அறுபடை வீடுகளை மாநாட்டு மேடைக்கு மாற்றியது சங்கிக் கும்பல். மேலும், முருகனை வழிபட்டுவிட்டால் மக்கள் மாநாட்டை விட்டு சென்று விடுவார்கள் என்பதற்காக சிலைகளை திரையிட்டு மறைத்திருந்தனர். மாநாட்டு உரைகள் முடிந்த பிறகு முருகனுக்கு தீபாராதனை காட்டுகிறோம் என்று கூறி மக்களை அமர வைத்திருந்தனர். “சாமி பார்க்கலாம்னு வந்தோம். ஆனால், முருகனை திரைபோட்டு மறைத்து வைத்திருக்கிறார்கள். இரவு வரை எங்களால் எப்படி காத்திருக்க முடியும்” என்று மாநாட்டிற்கு வந்த மக்கள் ஊடகங்களில் புலம்பித் தீர்த்தனர்.

ரஜினிகாந்த உள்ளிட்டு திரைத்துறையில் உள்ள பல சங்கிகள் முருக பக்தர் மாநாட்டிற்கு வருவதாக காவிக் கும்பல் பிரச்சாரம் செய்த நிலையில், மாநாட்டிற்கு வந்தால் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர்களும் இம்மாநாட்டை புறக்கணித்திருக்கின்றனர். மேலும், “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்று கொக்கரித்த எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க-வின் தலைவர்கள் மாநாட்டில் எங்கு இருந்தார்கள் என்று கூட தெரியவில்லை.

மதுரை ஆதினம் மாநாட்டிற்கு வரவே இல்லை; ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த திருமாறன் ஜி போன்ற ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளை ஆளைக் காணவில்லை. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று வாய்ச்சவடால் அடித்துக்கொண்டிருந்த சங்கிகளின் அடிவருடியான வேலூர் இப்ராஹிம் பத்து பேரைக்கூட திரட்டிக்கொண்டு வரவில்லை.

பா.ஜ.க-வின் அடிமைக் கட்சியான அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. எனினும், அ.தி.மு.க அடிமைக் கூட்டத்திலிருந்து ஆர்.பி உதயகுமார், கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர். மாநாட்டில், ஒளிபரப்பப்பட்ட காணொளியில் பெரியார், அண்ணா, திராவிடம் குறித்து அவதூறு செய்யப்பட்டிருந்ததை வாய்மூடி வேடிக்கைப் பார்த்தனர். இந்த விவகாரத்தை தி.மு.க. ஐ.டி விங்-கள் கையிலெடுத்து பூதாகரமாக்கத் தொடங்கியவுடன் அ.தி.மு.க. தரப்பிலிருந்து பெயரளவில் கண்டனங்களைத் தெரிவிக்க ஆரம்பித்தனர். “மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது இந்து முன்னணியின் பழைய காணொளி. பெரியார், அண்ணாவை மாநாட்டில் விமர்சிக்கவில்லை” என்று பா.ஜ.க. தலைவர்கள் செய்தி ஊடகங்களில் மறுப்பு தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இவ்வாறு சங்கிகளின் போலி முருக பக்தர் மாநாடானது அக்கும்பல் பிரச்சாரம் செய்து வந்ததற்கு நேரெதிராக தோல்வியைத் தழுவியிருக்கிறது. 2020 ஜூலையில் கந்த சஷ்டி கவசத்தை அவமதித்ததாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டது, அதனைத் தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி வேல் யாத்திரை நடத்தியது என முருகனை கையிலெடுத்து பா.ஜ.க. கும்பல் மேற்கொண்ட கடந்தகால நடவடிக்கைகளை போல, சங்கிகளின் இந்த மாநாடும் மண்ணைக் கவ்வியிருக்கிறது.

குறிப்பாக, இந்தாண்டு ஜனவரி மாதத்தில் சங்கிக் கும்பல் அதிகார வர்க்கத்தின் துணையுடன் மதுரை திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிடுவதை தடுத்திருக்கிறது. அதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்து மதவெறியூட்டும் பிரச்சாரங்கள் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எடுபடாத நிலையில், ’முருக பக்தர்’ என்ற பெயரில் மக்களை திரட்டலாம் என்று தன்னுடைய உத்தியை மாற்றியது. அப்படியிருந்தும் மதுரை மக்களும் தமிழ்நாட்டு மக்களும் மாநாட்டை புறக்கணித்திருப்பது பா.ஜ.க. கும்பலின் தோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பாசிஸ்டுகளின் கலவர சதித்திட்டம்

சங்கிகளின் போலி முருக பக்தர் மாநாடு மண்ணைக் கவ்வியிருந்தாலும், மாநாட்டில் சங்கிகள் நிறைவேற்றியுள்ள தீர்மானங்களும் இந்து மதவெறியர்களின் கொக்கரிப்புகளும் தமிழ்நாட்டில் கலவரத்தைத் தூண்டுவதற்கான ஏற்பாடுகளே என்பதை மறுப்பதற்கில்லை.

மாநாட்டில் கலந்துகொண்ட ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், “இந்து என்றாலே பிரச்சினையாக பார்க்கிறார்கள். எங்களை சீண்டிப் பார்க்காதீங்க. சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்று அப்பட்டமாக கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை “முருகன் கோவில்களில் வழிபாட்டு விவகாரத்தில் தலையிட்டால் சூரசம்ஹாரம் செய்துவிடுவோம்” என்று வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

ஏற்கெனவே, பள்ளி மாணவர்களிடையே சாதித் தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில் அவர்களிடையே இந்து மதவெறியை தூண்டும் வகையில் “பள்ளிகளுக்கு செல்லக்கூடிய குழந்தைகள் நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராட்ச கொட்டையும் அணிந்து செல்ல வேண்டும்” என்று அண்ணாமலை பேசியிருக்கிறார்.

மேலும், திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவின் இடத்தில் உள்ள கொடிமரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது என்று நீதிமன்றத் தடை உள்ள போதிலும், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்; குன்றம் குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்; சஷ்டி தினத்தன்று கந்த சஷ்டி கவசத்தை ஒன்றுசேர்ந்து பாட வேண்டும்; தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்று தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பது சங்கிக் கும்பல் தமிழ்நாட்டை கலவர பூமியாக்க வேண்டும் என்பதற்காக பல சதித்திட்டங்களை தீட்டி வைத்துள்ளதைக் காட்டுகிறது.

இத்தகைய சதித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பா.ஜ.க – இந்து முன்னணிக் கும்பலுக்கு மக்கள் அடித்தளம் இல்லை என்ற போதிலும் அதிகார வர்க்கத்தில் ஊடுருவியுள்ள சங்கிகள் மூலம் தங்களின் சதித்திட்டங்களை நடைமுறைப்படுத்த முயலும் என்பதே கடந்த கால அனுபவமாக உள்ளது.

கடந்த ஜூன் 24-ஆம் தேதி திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்குகளின் விசாரணையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஸ்ரீமதியின் தீர்ப்பு சங்கிகளுக்கு ஆதரவாக வழங்கப்பட்டிருப்பதை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றமும் அதிகார வரக்கமும் தொடர்ச்சியாக சங்கிகளின் கலவரத் திட்டத்திற்கு ஆதரவாகவும், அதற்கு எதிராக போராடும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளுக்கு எதிராகவுமே செயல்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றத்தில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய எச்.ராஜா, காடேஸ்வர சுப்பிரமணியம் உள்ளிட்ட சங்கிகள் மீது தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, சங்கிகளின் போலி முருக பக்தர் மாநாடு தோல்வியடைந்து விட்டது என்று நாம் இறுமாந்திருந்துவிட முடியாது. கலவரத்தை நடத்தி தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு சங்கப் பரிவார கும்பல் அனைத்து வகையிலும் முயற்சிக்கும். பாசிச எதிர்ப்பு சக்திகள் எச்சரிக்கையுடன் இருந்து இந்த சதித்திட்டங்களை களத்தில் முறியடிக்க வேண்டும்.


கதிர்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க