தென்மாவட்டங்களில் அதிகரிக்கும் சாதிய வன்முறைகள் – தீர்வு என்ன?

எவ்வளவுதான் படித்திருந்தாலும், உயர்பதவிக்குப் போய் தன் நிலையை உயர்த்திக்கொண்டாலும், சாதிய மனோபாவம் கொண்ட நடுத்தர வர்க்கத்திடம் வெற்று சாதி கௌரவம், ஆண்ட சாதி புத்தி ஆகியவை கூடவே ஒட்டிக்கொண்டு வருகிறது.

திக்கச் சாதி வெறியின் காரணமாக நெல்லை மண்ணில் நிகழ்ந்த அடுத்த படுகொலை கவின் செல்வகணேஷ்-இன் ஆணவப் படுகொலை.

நன்றாகப் படித்ததனால் வீடு புகுந்து வெட்டப்பட்ட நாங்குநேரி சின்னதுரை; கபடிப் போட்டியில் வெற்றி பெற்றதனால் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளான  ஸ்ரீவைகுண்டம் தேவேந்திரராஜா; வகுப்பறைக்குள்ளேயே சக மாணவனால் வெட்டப்பட்ட மேலப்பாளையம் ரஹ்மத்துல்லாஹ்; வண்டியில் ஓரமாகச் செல்லுங்கள் என்று சொன்னதற்காக கொலை வெறி தாக்குதலுக்கு ஆளான மேலப்பாட்டம் மனோஜ்; ’தேவேந்திரகுல வேளாளர்’ சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக வெட்டப்பட்ட, ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கீழநத்தம் ராஜாமணி; ஆதிக்கச் சாதி பெண்ணை தனது பைக்கில் வீட்டில் விட்டதற்காகவே கொல்லப்பட்ட புளியங்குளத்தைச் சேர்ந்த இளைஞர் முத்து பெருமாள்; தூங்கிக் கொண்டிருந்த போது வெட்டப்பட்ட மணக்கரை விவசாயி மணி; ஒடுக்கப்பட்ட சாதி எனத் தெரிந்த பின்னர் நிர்வாணப்படுத்தி அடித்து சிறுநீர் கழித்து அவமானப்படுத்தப்பட்ட மணிமூர்த்தீஸ்வரம் மனோஜ்குமார் மற்றும் மாரியப்பன்… இப்படி நெல்லை, தூத்துக்குடி பகுதியில் மட்டும் ஆதிக்கச் சாதி வெறியினால் பலிபீடத்தில் நிறுத்தப்பட்டவர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தற்போது சாதி மறுத்துக் காதலித்த ‘குற்றத்திற்காக’ ஆணவ படுகொலை செய்யப்பட்டுள்ளார் கவின்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் கவின், சென்னை டி.சி.எஸ் மென்பொருள் நிறுவனத்தில் லட்சங்களில் ஊதியம் பெற்று வந்தவர். தேவேந்திர குல வேளாளர் சாதியைச் சேர்ந்த கவினும், நெல்லை கே.டி.சி நகரில் வசிக்கும் தேவர் சாதியைச் சேர்ந்த சித்த மருத்துவரான சுபாஷினியும் பள்ளிப் பருவத்திலிருந்தே ஒன்றாகப் பழகி வந்துள்ளனர். நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இந்த காதலுக்கு சுபாஷினியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் தன் அக்காவைக் காதலிப்பதா என ஆத்திரப்பட்ட சுபாஷினியின் தம்பி சுர்ஜித் 27.07.2025 அன்று நெல்லை கே.டி.சி நகரில் கவினை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.

கொலை செய்த சுர்ஜித் போலீசில் சரணடைந்தார். சுர்ஜித்தின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்ட போராட்டத்திற்குப் பின் சுர்ஜித்தின் பெற்றோர்கள் மீதும் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சுர்ஜித்தின் தந்தையான போலீஸ் உதவி ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக கவினின் உடல் வைக்கப்பட்டுள்ளது. உடலைப் பெற்றுக் கொள்ளாமல் கவினின் ஊர்க்காரர்களும் உறவினர்களும் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் முக்காணி பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோர்களான போலீசு உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கப் போவதாகக் கூறினர். ”சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரும் போலீஸ் என்பதால் போலீஸ் அவர்களுக்குச் சாதகமாகவே நடந்து கொள்ளும். உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என பேச்சு வார்த்தைக்கு வந்த போலீஸிடம் போராடிய பொதுமக்கள் கூறினர்.

சுர்ஜித்தின் புகைப்படத்தை 28.07.2025 அன்று இரவு தான் போலீஸ் வெளியிட்டது. குற்றம் செய்தவரின் புகைப்படத்தை வெளியிடுவதற்குக் கூட சாலையில் இறங்கிப் போராட வேண்டியுள்ளது என்பதுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் அவல நிலையாக உள்ளது.

29.07.2025 அன்று போலீஸ் தரப்பில் வந்து அரசு கொடுக்கும் நிதியைப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ”எங்களுக்கு நிதி வேண்டாம்; நீதிதான் வேண்டும்” என்றும் ”சுர்ஜித்தின் பெற்றோர்களைக் கைது செய்யாமல் கவினின் உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம்” என்றும் கவினின் பெற்றோர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர். இதை வலியுறுத்தி ஆறுமுகமங்கலத்தில் மீண்டும் மக்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து 30.07.2025 அன்று பெற்றோர்களான சரவணகுமார், கிருஷ்ணகுமாரி ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களது புகைப்படங்களும் வெளியிடப்பட்டது. அன்றிரவு சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்டார். இவை அனைத்தும் மக்களின் உறுதியான போராட்டங்களினால் மட்டுமே நடைபெற்றது.

இக்கொலையானது நெல்லைப் பகுதியில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. படிக்காத ஒருவர் உணர்ச்சிவசப்பட்டுச் செய்த கொலை அல்ல இது. சுர்ஜித் 24 வயதேயான படித்த இளைஞர். கொலை செய்த சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரும் போலீஸில் பொறுப்பில் இருப்பவர்கள். சுர்ஜித்தின் அப்பா சரவணகுமார் ராஜபாளையம் பட்டாலியனிலும், அம்மா கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் போலீஸ் துணை ஆய்வாளராக பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்கள் இருவரும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்று கொல்லப்பட்ட இளைஞர் கவினின் குடும்பத்தினர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  சரவணகுமார்தான் தனது மகன் சுர்ஜித்தை போலீஸ் நிலையத்தில் ஆஜர் படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஆகவே இக்கொலையானது திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஆணவப் படுகொலை என்பதை கவின் தரப்பினரும் கவினின் அப்பாவும் உறுதியாகத் தெரிவிக்கின்றனர். கவின் அம்மா செல்வி ”கொலைக்குக் காரணமான சுர்ஜித்தின் பெற்றோர்களையும் இவ்வழக்கில் இணைக்க வேண்டும்” என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


படிக்க: கவின்குமார் ஆணவப்படுகொலை: தென்மாவட்டங்களில் தொடரும் சாதிவெறியாட்டம்


படித்தவர்கள் மத்தியிலும் சாதி வேரூன்றி இருப்பதை இக்கொலை மீண்டும் நிரூபிக்கிறது. சிற்சில சீர்திருத்தங்களால் முன்னேறிய நடுத்தர வர்க்கத்திடம் மேலோட்டமாக மறைக்கப்பட்ட சுயசாதி பற்றுதான் சந்தர்ப்பம் வரும்போது தன் மீது மூடப்பட்டிருந்த  திரைச்சீலையைத் தூக்கி எறிந்து விட்டு சாதிவெறியாக நேரடியாகத் தனது கோர முகத்தைக் காட்டி நிற்கிறது.

எவ்வளவுதான் படித்திருந்தாலும், உயர்பதவிக்குப் போய் தன் நிலையை உயர்த்திக்கொண்டாலும், சாதிய மனோபாவம் கொண்ட நடுத்தர வர்க்கத்திடம் வெற்று சாதி கௌரவம், ஆண்ட சாதி புத்தி ஆகியவை கூடவே ஒட்டிக்கொண்டு வருகிறது. இதன் அடுத்த நிலையாக ஒரு கட்டத்திற்கு மேல் அரிவாளைக் கையில் தூக்கும் அடுத்த நிலை தொடங்குகிறது.

அதிகார வர்க்கத்தில் இருக்கும் இந்த ஆதிக்கச் சாதி சிந்தனை கொண்ட நபர்கள் சாதியை இறுகப் பிடித்துக் கொண்டு அதை மேலும் வளர்த்தெடுக்கின்றனர். குற்றம் செய்பவர்களுக்குச் சாதியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி எப்படியும் அக்குற்றத்திலிருந்து தப்பிவிடலாம் என்ற கூடுதலான நம்பிக்கையையும் இது கொடுக்கிறது. நெல்லை மாவட்டத்தில் பெரும்பான்மையான போலீஸ் அதிகாரிகள் மற்றும் உளவுப் பிரிவு போலீஸார் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதினால் தலித் மக்களுக்கு எதிரான உளவியல் திட்டமிட்டுக் கட்டமைக்கப்படுகிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குகள் திசை மாற்றப்படுகின்றன.

படுகொலை செய்யப்பட்ட இளவரசன் வழக்கு விசயத்தில் ஆதிக்கச் சாதி, அதிகார வர்க்கத்தின் தலையீட்டினால் காதலன் மற்றும் தந்தை ஆகியோரை இழந்த திவ்யா பிறழ் சாட்சியாக மாற்றப்பட்டார். அதுபோல இந்த வழக்கிலும் சுபாஷினியை மாற்ற முயற்சி நடக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சாதி சார்ந்த சமூகப் பிரச்சினைகள் சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமே சுருக்கப்படுகிறது.  மாவட்டத்திற்குப் பொறுப்பான கலெக்டர் இது குறித்து வாய் திறப்பதில்லை. எதிரெதிர் துருவங்களாக தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் தி.மு.க-வும், பா.ஜ.க-வும் ஆதிக்கச் சாதி வெறியர்களால் ஏற்படக்கூடிய வன்கொலைகள் குறித்த மௌனத்தில் ஒன்றிணைகிறார்கள்.

குறுகிய காலத்தில் ஆதிக்க தேவர் சாதி சங்கங்கள் புற்றீசல்களைப் போல முளைத்துக் கிளை பரப்பி உள்ளன. இதன் தலைவர்கள் சொந்த சாதியினர் மத்தியில் நடைபெறும் திருமணம், சடங்கு, இழவு வீடுகளில் தவறாமல் கலந்து கொண்டு சாதியின் விச விதைகளை இளைஞர்கள், மக்கள் மத்தியில் தூவி, தூண்டில் போடுகிறார்கள். அகப்படுபவர்களைப் பலியிடக் காத்திருக்கிறார்கள். சாதிக்கு ஏதாவதென்றால் முறுக்கிக் கொண்டு முன்னே நிற்பதாக ஏய்க்கும் இவர்கள், கந்துவட்டி கொடுமையால் இசக்கிமுத்து குடும்பமே நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து இறந்தபோது அந்த குடும்பத்திற்காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. சமீபத்தில் தனியார் நிதி நிறுவனத்தின் அநியாய நடவடிக்கைகளால் மருந்து குடித்து இறந்து போன வல்லநாடு சங்கரன் மரணத்திற்குக் காரணமான நிதி நிறுவனத்தையோ, போலீஸ் அதிகாரிகளையோ மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி தண்டனை பெற்றுத் தரப் போராடவில்லை.

பட்டியலின வெளியேற்றம் மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்று ஆண்ட சாதி உணர்வு ஊட்டி கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் போன்றவர்கள் அவர்களை நம்பிய தேவேந்திர குல வேளாளர் மக்களை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பலிடம் பலி கொடுக்கும் வேலையைச் செய்து வருகின்றனர்.

ஆதிக்கச் சாதிகளால் தாக்கப்படுவது ஒருபக்கம், சொந்த சாதியைச் சேர்ந்த கருங்காலிகளால் குழிபறிக்கப்படுவது ஒருபக்கம் என  இரண்டு பக்கமும் இடி வாங்கிக் கொண்டு தப்பிக்க வழி தெரியாமல் திணறுகிறார்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்.


படிக்க: இராமநாதபுரம்: தலித் இளைஞரைத் தாக்கிய அகமுடையார் சாதி வெறியர்கள்


சாதி மறுப்பு திருமணம் செய்த காதலர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக பந்தல் ராஜா என்கிற வேளாளர் சாதி வெறி கொண்ட நபரின் தலைமையில் நெல்லையில் சி.பி.எம் அலுவலகம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது.

திருவிழாக்களில் முன்பைவிட சாதிய அடையாளங்கள் அதிகமாக வெளிப்படுகின்றன. குருபூஜை என்ற பெயரில் சாதிவெறி தூண்டப்படுகிறது. மணக்கரை பாயாசம் என்கிற பரமசிவம் என்கிற தேவர் சாதி வெறிகொண்ட நபர் ”இந்து முக்குலத்தோர் சங்கம்” என்ற பெயரில் வலம் வருகிறார். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அறக்கட்டளை நிர்வாகி இசக்கி ராஜா என்பவர் செயல்படுகிறார். சாதி வெறியால் சின்னதுரை வெட்டப்பட்டபோது சுபாஷ் சேனை மகாராஜன் உள்ளிட்ட இந்த தேவர் சாதி சங்கங்கள் அனைத்தும் ஒரே குரலில் இது சாதிய பிரச்சினை அல்ல, மாணவர்கள் மத்தியிலான சாதாரண பிரச்சினைதான் என சாதிவெறியர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டனர். மறுபுறம், சாதி வெறியைத் தூண்டி விடுகின்றனர். இந்த ஆதிக்கச் சாதி சங்கங்களைக் கையில் எடுக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஆதிக்கச் சாதி வெறியை மேலும் தூண்டி விடுகிறது.

நெல்லையைச் சுற்றி 1,300 கிராமங்கள் உள்ளன. 1,306 கொடுங்குற்றவாளிகள், 1,896 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருப்பதாக ஒரு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற ரவுடிகளையும், குற்றப் பின்னணி கொண்டவர்களையும் பா.ஜ.க, இந்துத்துவ கும்பல் வாரி அணைத்துக் கொள்கிறது.

அதானி தூத்துக்குடி துறைமுகத்தைக் கைப்பற்றியிருக்கும் இவ்வேளையில் ஆதிக்கச் சாதிகளை, ஆர்.எஸ்.எஸ் கும்பல் தன் கைகளில் வைத்துக்கொள்கிறது‌. ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மனு கொடுக்கும் போராட்டங்களை ஆலை நிர்வாகம் தங்களது கைக்கூலிகளைக் கொண்டு அவ்வப்போது நடத்துகிறது. ஆதிக்கச் சாதி சங்கங்கள் பெரு நிறுவனங்களுக்கு அரணாக இருந்து செயல்படுகின்றன. ஆதிக்கச் சாதி சங்கங்கள் மற்றும் ஆதிக்கச் சாதி வெறியர்களை வளர்த்து விடுவது என்பது உழைக்கும் மக்களை ஒரே வர்க்கமாக ஒன்று திரட்டுவதைத் தடுக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி மற்றும் ஆளும் வர்க்கங்களின் உத்தியாக உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 90களில் சாதிப் பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு உடைக்கப்பட்டது. ஆனால் 2018ல் நடைபெற்ற போராட்டம் சாதியைத் தூக்கியெறிந்த உழைக்கும் மக்களின் ஒற்றுமையால் உண்டானது‌. ஆகவே அதானி, அம்பானி, அகர்வால் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக ஆட்சி நடத்தும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் ஆதிக்கச் சாதி சங்கங்களைக் கையில் எடுப்பதும், ஆதிக்கச் சாதி வெறியர்களை வளர்த்தெடுப்பதும் அவசியமான ஒன்றாக உள்ளது.

இந்த பாசிச கும்பலின் சதித் திட்டத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமின்றி, ஆதிக்கச் சாதி உழைக்கும் மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் வீட்டிலிருந்து ஒருவர் குற்றவாளி ஆக்கப்படலாம் என்பதே எதார்த்த நிலைமையாக உள்ளது.

ஆதிக்கச் சாதி சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலையும் தடை செய்வதற்காக உழைக்கும் மக்களும், ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து களமிறங்கிப் போராடுவதே இப்பிரச்சனைக்கான காரணங்களை வெட்டி எரிவதற்கான போராட்டமாக இருக்கும்.


பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க