தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலிருந்து வரும் தோத்தாபுரி மாம்பழங்களை ஆந்திர அரசு தடை செய்துள்ளது. ஆந்திர மாம்பழ விவசாயிகளுக்குரிய விலை கிடைப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு கூறியுள்ளது.
ஆந்திர அரசின் இந்நடவடிக்கையால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாம்பழ விவசாயிகள் மாம்பழங்களை சாலைகளில் கொட்டித் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில், ஆந்திர அரசின் தடையை நீக்க வேண்டும்; தமிழ்நாடு அரசு டன் ஒன்றுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; குறைந்தபட்ச ஆதாரவிலையாக டன் ஒன்றுக்கு ரூ.15,000 வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜூன் 11 அன்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆந்திர அரசின் மாம்பழத் தடை என்பது திடீரென்று எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்றும், இது கர்நாடகாவில் தோத்தாபுரி மாம்பழங்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த விவசாயிகள் நீண்டகாலமாக ஆந்திராவின் சித்தூரில் உள்ள கூழ் பிரித்தெடுத்தல் தொழிலுடன் வலுவான இணைப்புகளைக் கொண்டிருக்கின்றனர்; இத்தடையால் ஆயிரக்கணக்கான கர்நாடக விவசாயிகளின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் சித்தராமையா கூறியுள்ளார்.
மாநில அரசுகளுக்கிடையில் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லாமல் இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிரானது எனவும் சித்தராமையா விமர்சித்துள்ளார்.
அதேசமயம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ ஆந்திர அரசின் சட்டவிரோத நடவடிக்கையை கண்டிக்காமலும் மாம்பழ விவசாயிகளின் கோரிக்கைகளைப் பற்றி வாய் திறக்காமலும் விவசாயிகளுக்கு விரோதமான போக்கை கடைப்பிடித்து வருகிறார்.
கர்நாடக அரசிடமோ, தமிழ்நாடு அரசிடமோ எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தாமல், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எந்தவித பொறுப்புணர்ச்சியுமின்றி ஆந்திர அரசு எடுத்துள்ள இந்நடவடிக்கை தான்தோன்றித்தனமானதும், சட்டவிரோதமானதுமாகும். சொல்லிக்கொள்ளப்படும் கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கே எதிரானதாகும்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்றால், உடனே அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூப்பாடு போடும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசு, ஆந்திர அரசின் இந்த சட்டவிரோத நடவடிக்கையைப் பற்றி வாய் திறக்கவில்லை.
அதேசமயம், ஆந்திர அரசின் இந்நடவடிக்கை அம்மாநில மா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகவும் கருத முடியாது. ஏனெனில், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் மாங்கூழுக்காக தோத்தாபுரி மாம்பழங்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு சித்தூர் மாவட்ட நிர்வாகம் டன்னுக்கு ரூ.30,000 விலை நிர்ணயித்திருந்த நிலையில், இந்த ஆண்டு டன்னுக்கு ரூ.12,000 மட்டுமே நிர்ணயித்துள்ளது. ஆந்திர அரசு, விவசாயிகளின் மீது அக்கறைக் கொண்டிருந்தால், கூடுதல் விலை நிர்ணயித்திருக்கலாம்.
அவ்வாறு செய்யாமல், விவசாயிகளின் பிரச்சினைக்கு அடிப்படையாக இருக்கும் கார்ப்பரேட்மய கொள்கைகளைப் பற்றிய விடயத்தை திசைதிருப்புவதற்காக இத்தடையை மேற்கொண்டுள்ளது.
இதன்மூலம், நமது நாட்டில் கூட்டாட்சிக் கோட்பாடு என்ற அம்சம் அரசியல் உள்நோக்கத்தோடும், சந்தர்ப்பவாத நோக்கிலும்தான் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது அம்பலமாகிறது. அதாவது இந்திய அரசுக் கட்டமைப்பு என்பது தேசிய இனங்களின் சிறைக்கூடமாகத்தான் இருக்கிறது.
இதன் காரணமாகத்தான் இவ்வளவு ஆண்டுகளாகியும் மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல், அது தேசிய இன முரண்பாடாக வெடிக்கிறது.
உண்மையான விவசாயிகள் நலன், தேசிய இனங்களுக்கிடையேயான அரசியல், பொருளாதார, சமூக ரீதியான ஒற்றுமை ஆகியவற்றை இந்தக் கட்டமைப்பில் சாத்தியப்படுத்த முடியாது என்பதையும், இப்பிரச்சினைகள் மேலும் மேலும் தீவிரமடையும் வகையில்தான் இப்போலி ஜனநாயகக் கட்டமைப்பு உள்ளது என்பதையும் இத்தகைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. மாநில அரசுகளின் சமரச, சந்தர்ப்பவாத அணுகுமுறைகளால் ஒருபோதும் இப்பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பதே யதார்த்தம். விவசாயிகள் நலனை முதன்மைப்படுத்துகின்ற, தேசிய இன முரண்பாடுகளை தீர்க்கும் வகையிலான மாற்றுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்ற பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்பது ஒன்றே இதற்கான தீர்வாகும்.
அய்யனார்
(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram