மாறுபட்ட தீர்ப்புகள்: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்!
மதுரை கருத்தரங்கம்: ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை
முறியடிக்கும் பாதையில் ஒரு மைல்கல்!
மக்கள் அதிகார கழகத்தின் தோழர் ரவியின் தலைமை உரையுடன் கூட்டம் தொடங்கியது. தோழர் பேசும்போது திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் மத்தியில் கலவரத்தைத் தூண்டுவதில் தோற்றுப் போன ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – இந்து முன்னணி கும்பல் நீதிமன்றத்தின் வாயிலாகவும் அதிகார வர்க்கத்தின் வாயிலாகவும் நரித்தனமாக வேலை செய்து வருவதை அம்பலப்படுத்தியும், அதை முறியடிக்க வேண்டிய தேவையை வலியுறுத்தும் இந்த கருத்தரங்கத்தின் அவசியத்தையும் மக்கள் கலை இலக்கிய கழகம், மக்கள் அதிகாரக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் எப்படி முன்னணியாகச் செயல்படுகின்றன என்பதையும் தனது தலைமை உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
அடுத்ததாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். கொரோனா வாய்ப்பை பயன்படுத்தி தர்காவிற்குச் சென்ற இந்து பக்தர்களை வரவிடாமல் தடுத்தது முதல் ஆடு கோழி பலியிடுவதைத் தடுத்தது வரை அனைத்து வேலைகளும் இந்து முன்னணி – பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பலும் மதுரைவீரன் தலைமையிலான போலீஸ் அதிகார வர்க்கமும் இணைந்து செய்தது என்பதை அம்பலப்படுத்தினார். தோழர் ஆவணப்படம் எடுக்கச் சென்றபோது ”ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – இந்து முன்னணி கும்பல் மக்களுக்கு என்ன செய்தது?” என்ற கேள்வியை மக்கள் ஒவ்வொரு இடத்திலும் எழுப்பியதைப் பதிவு செய்தார். மேலும் ”கறி சாப்பிடாத ராம சீனிவாசன் – பி.ஜே.பி – இந்து முன்னணி கும்பல்கள்தான் முட்டாள்கள் என்பதைப் பகிரங்கமாக மக்கள் பேசியதையும் அம்பலப்படுத்தினார். மேலும் தற்போது நீதிமன்றத்தின் துணைகொண்டு நடப்பதைப் புரிந்து கொண்டு நாம் களத்தில் இறங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார். தோழருடைய அனுபவங்கள் வந்திருந்த அனைவருக்கும் நிலைமைகளைப் புரிந்து கொள்ளவும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும் உதவியாக இருந்தது.
இதன் பிறகு சிறப்புரை பகுதி தொடங்கியது.
மூத்த வழக்கறிஞர் தோழர் லஜபதிராய் தனது சிறப்புரையில் பல்வேறு தகவல்களுடன் வந்து ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – இந்து முன்னணி கும்பலின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டினார்.
அவர் தனது உரையில், “மதுரையில் உள்ள பல்வேறு மலைகளிலும் எல்லா மதத்தினருடைய அடையாளங்களும் இருக்கிறது. அதை ஒற்றை அடையாளமாக மாற்ற முயல்கின்றனர்.
முன்பு சமணக் கோவில்கள் இருந்த இடத்தில் இன்று பல இந்து கோவில்கள் இருக்கின்றன அதற்காக அவற்றையெல்லாம் இடித்து விட முடியுமா? தர்காவில் ஆடு கோழி பலியிடும் உரிமை இருக்கிறது. அதை எப்படி இப்போது மாற்ற வேண்டும் என சொல்கிறார்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
பாசிச கும்பல் ’விவேகானந்தர் பாறை’யை கைப்பற்றியதையும் அதன் தொடர்ச்சியாக மண்டைக்காடு கலவரம் நடைபெற்றதையும் குறிப்பிட்டு அதை திருப்பரங்குன்ற விவகாரத்தோடு ஒப்பிட்டுப் பேசினார்.
இந்து முன்னணி – பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பல் நம்மை மாட்டுச்சாண காலகட்டத்திற்கு இழுத்துச் செல்ல நினைக்கிறது என்ற மண்டைக்காடு மதக் கலவரம் குறித்த நீதிபதி வேணுகோபால் கமிஷன் அறிக்கையையும் சுட்டிக்காட்டினார்.
பின்பு நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ள ஆறு வழக்குகளிலும் என்னென்ன வாதங்கள் வைக்கப்பட்டது என்பதை விவரித்துப் பேசினார். ஒற்றை கலாச்சாரமான இந்துராஷ்டத்தை நோக்கி நகர்த்த நினைக்கிறார்கள் என்பதையும் அம்பலப்படுத்தினார்.
தோழர் லஜபதிராய் பேசிய காணொளிகள் வினவு யூடியூப் பக்கத்தில் கிடைக்கிறது. அனைவரும் இதைப் பார்க்க வேண்டும்.
அடுத்ததாகப் பேசிய மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது “அயோத்தியல்ல, இது தமிழ்நாடு!” என்பதை பல்வேறு அம்சங்களில் விளக்கி சங்கிகளின் முகத்திரையைக் கிழித்துத் தொங்கவிட்டார்.
தோழர் மருது பேசும் போது கலவரங்கள் மூலம் இந்து முன்னணி – பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஆட்சியைப் பிடித்தவர்கள் என்பதை அம்பலப்படுத்தினார்.
திருப்பரங்குன்றம் மலை தமிழர் மலை; இங்கு கந்தனுக்கும் இடம் உண்டு; சிக்கந்தனுக்கும் இடம் உண்டு என்று முழங்கினார்.
பாபர் மசூதி பிரச்சினையில் மசூதியை சர்ச்சைக்குரிய இடமாக சங்கிக் கும்பல் மாற்றியதையும், அதேபோல் திருப்பரங்குன்றத்தில் எப்படி அதிகார வர்க்கத்தை கைக்குள் போட்டுக்கொண்டு நகர்த்தி வருகிறார்கள் என்பதையும் அம்பலப்படுத்தினார்.
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம் மலை போனால் எப்படி அங்குள்ள குகை கோவில்கள் பராமரிப்பற்று ஒன்றுமில்லாமல் செய்யப்பட்டதோ அதேபோல் கருப்பனும் இன்னும் உள்ள 18 குலதெய்வங்களும் பராமரிக்காமல் ஒழித்துக் கட்டப்படும் என்று கூறி ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தினார்.
பார்ப்பன கும்பல் ஏழாம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை முருகனை எப்படிப் புறக்கணித்தது, அருணகிரிநாதரால் தமிழ் மொழியால்தான் முருகர் மீட்கப்பட்டார் என்பதை அம்பலப்படுத்தினார்.
எப்படி தமிழ்நாட்டினுடைய மலைகள் அனைத்தும் சேட்டு மார்வாடி கும்பல்களின் சூறையாடல்களுக்காகத் திறந்து விடத் திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு அடியார்களாக இந்த இந்து முன்னணி – பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பல் எப்படி வேலை செய்கிறது என்பதையெல்லாம் பேசி முருகனை ஏன் மீட்க வேண்டும் கருப்பனை ஏன் காக்க வேண்டும் என்பதை விளக்கிப் பேசினார்.
தோழர் பேசிய காணொளிகள் வினவு யூடியூப் சேனலில் பார்க்க முடியும். அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்ச்சியின் இடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடகக் குழுவைச் சேர்ந்த தோழர் ஜெயக்குமார் மற்றும் அவருடன் வந்திருந்த தோழர் இருவரும் இணைந்து ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல்களுக்கு எதிரான மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்தில் எளிய மக்களுக்கான பாடல் மொழியில் பாடி சிறப்பான பங்காற்றினர்.
இந்த கருத்தரங்கிற்கு திருப்பரங்குன்றம் பிரச்சினையில் முன்னணியாக நின்ற பல்வேறு ஜனநாயக சக்திகளும் வருகை தந்திருந்தனர். தமிழ்ப்புலிகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடத் தமிழர் கட்சி, தமிழ் தேச மக்கள் முன்னணி, சாதி ஒழிப்பு முன்னணி, மக்கள் தமிழகம் கட்சி, எஸ்.டி.பி.ஐ கட்சி, மக்கள் பாதை பேரியக்கம், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம், ஐக்கிய ஜமாத், உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி போன்ற பல்வேறு அமைப்புகளின் முன்னணியான தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஜனநாயக – முற்போக்கு சக்திகளின் புத்தகக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், ஜனநாயக சக்திகள் எனப் பல்வேறு தரப்பினருடன் பூத்துக் குலுங்கியது அரங்கம்.
கருத்தரங்கம் அனைவரின் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. புத்தகக் கடை போட்டிருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் இறுதியாகக் குறிப்பிட்டார்: “எல்லாம் புதிய முகங்களாக இருக்கிறது தோழர். மிகவும் நம்பிக்கையாக உற்சாகமாக இருக்கிறது. கூட்டம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்” என பதிவு செய்தார்.
அதே உற்சாகத்துடன் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – இந்து முன்னணி கும்பலின் பொய் பித்தலாட்டங்களை திரைக்கிழித்து உண்மையை நிலை நாட்ட உறுதியேற்று கூட்டம் முடிவடைந்தது.
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மக்கள் அதிகாரக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
மதுரை மாவட்டம்.
97916 53200

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram