ஜூன் மாத தொடக்கத்தில், கர்நாடக மாநிலம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் 2025 ஐ.பி.எல். போட்டியில் ஆர்.சி.பி. அணி வெற்றிபெற்றதைக் கொண்டாடுவதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 56 பேர் படுகாயமடைந்தனர்.
பெரும்பாலும் இதுபோன்ற கூட்டநெரிசல் விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதைத் தாண்டி, விபத்துக்கு காரணமானவர்களைத் தண்டிப்பது அரிதினும் அரிதாகவே நடக்கும்.
பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்திலும் கூட கர்நாடக காங்கிரசு அரசு, போலீசு, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான “டி.என்.ஏ. என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட்”, ஆர்.சி.பி. அணி என அனைவரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், இந்த விபத்திற்கான குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விசாரணை நடத்தப்படவில்லை என்பதே உண்மை.
ஐ.பி.எல். எனும் கார்ப்பரேட் சூதாட்டப் போட்டியில், ஆர்.சி.பி. எனும் ஒரு கார்ப்பரேட் அணி வெற்றிப் பெற்றதற்கு அரசு ஏன் விழா எடுக்க வேண்டும்? கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் விமான நிலையத்திற்கே சென்று ஏன் வீரர்களை வரவேற்க வேண்டும்? என்ற கேள்விகளை நாம் எழுப்பினால், இவ்விவகாரத்தில் கர்நாடக காங்கிரசு அரசுதான் முதலில் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
ஐ.பி.எல். போட்டியின்போது தனது குறுகிய லாபவெறிக்காக, திட்டமிட்டு கன்னட, தமிழ் மக்களின் தேசிய இன உணர்வைத் தூண்டிவிடுகிறது கார்ப்பரேட் கும்பல். மக்களும் கார்ப்பரேட்டுகளின் இந்த நுகர்வு வெறிக்கும், தேசிய இனவெறிக்கும் பலியாகி மாறிமாறி அடித்துக் கொள்கின்றனர். சமூக வலைத்தளங்களில் நடந்துக்கொண்டிருந்த சண்டை தற்போது வீதிகளுக்கு வந்துவிட்டது. 11 பேர் விபத்தில் உயிரிழந்த பிறகும், ஒருவேளை பஞ்சாப் அணி வெற்றிப் பெற்றிருந்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது என வன்மத்தை கக்கும் அளவிற்கு இவர்களுக்கு வெறியூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், கார்ப்பரேட்டுகளால் தூண்டிவிடப்படும் இந்த தேசிய இன உணர்வை பயன்படுத்திக் கொள்வதற்காகவே, கர்நாடக அரசு ஆர்.சி.பி. அணியின் வெற்றியை கன்னடர்களின் வெற்றியாக கர்நாடகாவின் வெற்றியாக சித்தரிக்க முயன்றது. எனவே, இத்தகைய கோரமான விபத்து நிகழ்ந்துள்ளதற்கு ஆர்.சி.பி. அணியின் வெற்றியைப் பயன்படுத்தி ஆதாயம் பார்க்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் குறுகிய நோக்கமும், விளம்பரவெறியுமே அடிப்படை காரணம்.
கர்நாடக அரசு மட்டுமல்ல, பல்வேறு மாநில அரசுகளும் கர்ப்பரேட்டுகளின் லாப நோக்கத்திற்காகவும், தங்களுடைய விளம்பர வெறிக்காகவும் பொழுதுபோக்கு என்ற பெயரில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை அனுமதிக்கின்றன.
கார்ப்பரேட்-அரசு லாபவெறிக்கு பலியிடப்படும் மக்கள்
2023-இல் சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சியில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் பலருக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. 25,000 பேர் மட்டும் பங்கேற்க முடியும் என்பது தெரிந்தும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த கார்ப்பரேட் நிறுவனம் 50,000 டிக்கெட்டுகள் வரை விற்பனை செய்ததே இதற்கு முக்கிய காரணம். மேலும், இந்நிகழ்ச்சியில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. தற்போது, பெங்களூருவில் ஏற்பட்ட விபத்திலும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நுகர்வு வெறிக்கு பலியாகி அதிகளவு மக்கள் கூடும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது பொதுத்தன்மையாக உள்ளது.
அதேபோல், 2024-ஆம் ஆண்டு இந்திய விமானப் படையின் 92-ஆம் ஆண்டு நிறைவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 5 பேர் உயிரிழந்தனர். 240 பேர் மயக்கம் அடைந்தனர். விமான சாகச நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டது. ஆனால், இவ்வளவு மக்களை கையாளும் வகையிலான குடிநீர், மருத்துவ வசதி போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோல், ஹைதராபாத் திரையரங்கம் ஒன்றில் “புஷ்பா-2” திரைப்படத்தைப் பார்ப்பதற்கு வந்த ரேவதி (39 வயது) என்ற பெண்ணும் அவரது மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அல்லு அர்ஜூன் திரையரங்கத்திற்கு வருகை தந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறி அல்லு அர்ஜூன் மற்றும் திரையரங்கம் மீது வழக்குப்பதிவு செய்தது தெலுங்கானா அரசு. ஆனால், இதுபோன்று விபத்துகள் ஏற்படும் என்பதை அறிந்திருந்தும் தெலுங்கானா அரசு இத்திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கான அனுமதி வழங்கியதே இவ்விபத்திற்கு அடிப்படையான காரணமாக உள்ளது.
இவ்வாறு, ஒவ்வொரு கூட்ட நெரிசல் விபத்துகளும் தடுத்து நிறுத்தக்கூடியதாக இருந்தாலும் அரசும் சரி கார்ப்பரேட்டுகளும் அதை வேண்டுமென்றே அனுமதிக்கின்றன. கூட்ட நெரிசலில் மக்கள் உயிரிழக்கும்போது அவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதற்கும் முயற்சிக்கின்றன.
அதேசமயம், ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து எப்படியாவது இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்று மக்கள் காட்டும் ஆர்வம் கார்ப்பரேட்டுகளின் நுகர்வு கலாச்சாரத்தின் வீரியத்தைக் காட்டுகிறது. குழந்தையின் பள்ளிக் கட்டணத்தைக் கூட பொருட்படுத்தாமல், ஐ.பி.எல். டிக்கெட் வாங்கியதை ஒரு தந்தை பெருமையாகப் பேசுகிறார் என்றால், எந்தளவிற்கு மக்கள் நுகர்வு வெறிக்கு அடிமையாகி வருகின்றனர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்
அதுவும், இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக வலைத்தளங்கள் வேகமாக வளர்ந்துவரும் சூழலில், இன்ஃப்ளூயன்சர்கள் (Influencers) என்ற பெயரில் புதிய கூட்டம் ஒன்று உருவாகியுள்ளது. இன்ஃப்ளூயன்சர்கள் என்ற பெயரில் உலாவுபவர்களில் பெரும்பான்மையானோர், நுகர்வு மட்டுமே வாழ்க்கை என்பதை மக்களிடம் திணித்து வருகின்றனர். உணவு, சுற்றுலாத்தலம் தொடங்கி அன்றாடம் பயன்படுத்தும் பொருள் வரை எதுவாயினும், இவர்கள் மூலம் விளம்பரப்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களால் எளிமையாக மக்களிடம் திணித்து விட முடிகிறது.
மதவெறிக்கு பலியிடப்படும் மக்கள்
ஒருபுறம் கார்ப்பரேட்டுகள் மக்ககளிடையே நுகர்வு வெறியைத் தூண்டிவரும் நிலையில், மறுபுறம் ஒன்றியத்தில் ஆட்சியிலிருக்கும் பாசிச மோடி அரசு தீவிரமான மதவெறியைத் தூண்டிவருகிறது. இந்தியாவில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசல் விபத்துகளில் அதிகளவிலான விபத்துகள் மத நிகழ்ச்சிகளில்தான் நடைபெறுகிறது.
இந்தாண்டு நடந்த கும்பமேளா கூட்ட நெரிசல் விபத்தே இதற்கு போதுமான சான்றாகும். ஜனவரி 29-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் பலியாகியிருப்பதாக யோகி அரசு தெரிவித்திருந்தது. ஆனால், சமீபத்தில் “பி.பி.சி.” செய்தி நிறுவனம் நடத்திய கள ஆய்வில் குறைந்தது 82 பேர் உயிரிழந்திருப்பதாக அம்பலப்படுத்தியது. மேலும், பிப்ரவரி 15-ஆம் தேதி இரவு டெல்லி ரயில் நிலையத்தில் கும்பமேளாவிற்குச் செல்வதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். ஆனால், இதே கும்பமேளா நிகழ்விற்கு அம்பானி குடும்பம் தொடங்கி நாட்டிலிருக்கும் பல கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள், அரசு அதிகாரிகள், எம்.பி-க்கள் பாதுகாப்பாக வந்து சென்றபோது உழைக்கும் மக்களுக்கு மட்டுமே இந்த அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.
பாசிஸ்டுகளை பொறுத்தவரை இதுபோன்ற பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் மூலம் இந்து மதவெறியைத் தூண்ட வேண்டும் என்பதே நோக்கம். அதற்காக மக்களை கொன்றொழிப்பதற்கும் தயங்க மாட்டார்கள். கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலிலிருந்த காலத்தில் மருத்துவர்கள் எச்சரிக்கையும் மீறி உத்தரகாண்ட் மாநிலத்தில் கும்பமேளாவை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களை கொரோனாவிற்கு பலியிட்டது பாசிச கும்பல்.
அதேபோல், உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் ஜூலை 2 அன்று போலே பாபா எனும் போலி சாமியாரின் மத நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 121 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால், நூற்றுக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்த போலே பாபாவின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் கூட இடம்பெறவில்லை.
இவ்வாறு, மத நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிற்போக்குத்தனமாக மூட நம்பிக்கைகளை விதைப்பதுடன், எந்தவித முறையான பாதுகாப்பு ஏற்பாடுமின்றி மதவெறியைத் தூண்டுவதற்காக பிரம்மாண்டமான மத நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் உயிரையும் பறித்து வருகிறது பா.ஜ.க. கும்பல்.
ஒருபுறம் கார்ப்பரேட்டுகள் லாபவெறிக்காக தூண்டப்படும் நுகர்வு வெறி, மறுபுறம் பாசிஸ்டுகளால் தூண்டப்படும் இந்து மதவெறி ஆகிய இரண்டுக்கும் திட்டமிட்டே மக்கள் பலியிடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் பாசிச அபாயம் படர்ந்துவரும் சூழலில் மக்கள் இவ்வாறான நுகர்வு வெறி, இந்து மதவெறிகளுக்கு அடிமையாகிக் கொண்டிருப்பது அபாயமிக்கதாகும்.
மதி
(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram