03.08.2025
நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி
அலுவலக ஊழியர்களை வஞ்சிக்கும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம்
பத்திரிகை செய்தி
சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம், அலுவலக பணியாளர்களின் ஊதியத்தைக் குறைக்கப் போவதாகவும் அது தொடர்பாக சனிக்கிழமை (02.08.2025) அன்று நடக்க இருந்த சிண்டிகேட் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.
இதனை எதிர்த்தும், இந்நடவடிக்கையை உடனடியாக கைவிடக் கோரியும் சென்னைப் பல்கலைக்கழக அலுவலர் பேரவை தலைமையில் அலுவலகப் பணியாளர்கள் 31.07.2025 அன்று காலை 10 மணி முதல் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளே காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கினர். சுமார் 100 முதல் 150 ஊழியர்கள் பங்கேற்று தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.
குறிப்பாக,
-
- சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிலங்களை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்.
- சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு பல ஆண்டுகளாக முறையாக வழங்க வேண்டிய நிதியை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
- சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்ற அலுவலர்களின் ஊதிய குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்.
- ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உரிய காலத்தில் முறையாக வழங்க வேண்டிய பதவி உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும்.
- கடந்த ஏழு ஆண்டுகளாக பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
- சென்னைப் பல்கலைக்கழகத்தில் தற்போதுள்ள துறைகளில் கடந்த 11 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்களைத் திட்டமிட்டே நிரப்பாமல் விட்டுவிட்டு ’ஆசிரியர் பற்றாக்குறை’ என்று கூறி துறைகளை ஒன்றிணைப்பதைக் கைவிட வேண்டும்.
- மாணவர் சங்கத் தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும்.
ஆகிய ஏழு அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இப்போராட்டத்தில், சென்னைப் பல்கலைக்கழக டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்.டி ஊழியர் நலச்சங்கம், சென்னைப் பல்கலைக்கழக நான்காம் பிரிவு ஊழியர் நலச்சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை தெரிவித்தனர்.
பல்கலைக்கழக அலுவலர்கள், “இதுநாள் வரை நாங்கள் வாங்கி வந்த ஊதியத்தைச் சார்ந்தே எங்களின் மொத்த வாழ்வாதாரமும் அமைந்தது. திடீரென இப்படியான நடவடிக்கையில் ஈடுபடுவதால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகும். அதுமட்டுமின்றி ஏற்கெனவே வேலைப்பளு என்பது மிகக் கடுமையாக உள்ளது. குறிப்பாக, மூன்று ஊழியர்கள் செய்ய வேண்டிய வேலையை ஒரு ஊழியர் செய்து வருகிறார்.
“காரணம் 1,500 நபர்கள் வேலை செய்யக்கூடிய பல்கலைக்கழகத்தில் இப்பொழுது வெறும் 400 முதல் 450 ஊழியர்களே வேலை செய்கிறோம். ஆக இப்படியான நடவடிக்கை எங்களை மேலும் மன ரீதியாக பெரும் அழுத்தத்துக்கு உள்ளாக்கக் கூடியவையாக அமைகிறது. ஆனால் இதையெல்லாம் நிர்வாகம் துளியும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை” என்று தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.
31.07.2025 அன்று போராட்டமானது இரவு முழுவதும் நடைபெற்றது. போராடியவர்களின் கோரிக்கையைக் காது கொடுத்துக் கேட்கக் கூட நிர்வாகம் தயாராக இல்லாமல் அடாவடித்தனமான போக்கையே கடைப்பிடித்தது.
இதனையடுத்து நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கவும், அவர்களை நிர்ப்பந்திக்கவும் போராட்டக்காரர்கள் 01.08.2025 அன்று பேரணியாக முழக்கமிட்டு பல்கலைக்கழகத்தைச் சுற்றி வந்தனர்.
இப்பேரணியிலும் போராட்டத்திலும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி கலந்து கொண்டு போராடிய அலுவலக ஊழியர்களுக்கு ஆதரவு அளித்தது.
போராட்டத்தால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, பல கட்ட ஆலோசனைக்குப் பின் சிண்டிகேட் கூட்டத்தை 09.08.2025 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகப் பதிவாளர் ரீட்டா ஜானு அன்றிரவு 8 மணியளவில் அறிவித்தார்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அலுவலர்கள், “நமது விடாப்பிடியான போராட்டத்தின் விளைவாகவே சிண்டிகேட் கூட்டத்தை ஒத்தி வைத்துள்ளார்கள். இதனால் தற்காலிகமாக நமது போராட்டத்தை நிறுத்திக் கொள்வோம். நமது கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம். அது சம்பந்தமாக அலுவலகப் பேரவை பொதுக்குழுவைக் கூட்டி முடிவெடுக்கப்படும்” என்று அறிவித்தனர்.
இது ஒருபுறமிருக்க, தொடர்ச்சியாக பல்கலைக்கழக நிர்வாகமானது மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உயர்த்துவது, ஆய்வு மாணவர்களுக்கான உதவித்தொகையை நிலுவையில் வைப்பது, பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான இடத்தில் வேறொரு துறை சார்ந்த கட்டடம் கட்ட அனுமதிப்பது உள்ளிட்ட மாணவர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அரசு பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகம் செயல்பாட்டளவில் தனியார் பல்கலைக்கழகத்தைப் போலவும் இயக்கப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி இதற்குக் காரணமாகக் காட்டப்படுகிறது.
இந்த நிதி நெருக்கடி என்பது பல்கலைக்கழகத்தை கார்ப்பரேட் மயமாக்குவதற்காக ஒன்றிய, மாநில அரசுகளால் திட்டமிட்டே உருவாக்கப்பட்ட செயற்கையான நிதி நெருக்கடியாகும்.
அதாவது, தமிழ்நாடு அரசு ஏழு ஆண்டுகளாக ஒதுக்க வேண்டிய நிதியை இதுவரை ஒதுக்கவில்லை. ஒன்றிய அரசோ தனது பங்கிற்கு தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததைக் காரணம் காட்டி பல்கலைக்கழக மானிய குழு மூலம் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இவ்வாறு செயற்கையான நிதி நெருக்கடியை உருவாக்கி கொஞ்சம் கொஞ்சமாக பல்கலைக்கழகத்தை செல்லரிக்கச் செய்து கார்பரேட்மயமாக்கும் சதித் திட்டம் நடந்தேறுகிறது.
“தமிழ்நாடு அரசே!
உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண்க!
பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான நிலத்தை அபகரிப்பதைக் கைவிட்டு, அவ்விடத்தில் மீண்டும் பல்கலைக்கழக மாணவிகளுக்கான விடுதியைக் கட்டிக் கொடு!
ஏழு ஆண்டுகளாக ஒதுக்கப்படாத மொத்த நிதியையும் வழங்குவதுடன், சிறப்பு நிதி ஒதுக்கி நிதி நெருக்கடியிலிருந்து பல்கலைக்கழகத்தை மீட்டெடு!
பல்கலைக்கழகத்தின் நிர்வாக நெருக்கடிகளைத் தீர்க்கும் வகையில் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரை உடனடியாக நியமித்திடு!
பல்கலைக்கழக நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மையை நிலைநாட்டவும் மாணவர்களின் பிரச்சனைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிமையை நிலைநாட்டவும் மாணவர் சங்க தேர்தல் நடத்துவதற்கு அனுமதி கொடு!”
என முழங்குவோம்..
தமிழ்நாட்டின் தாய் பல்கலைக்கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தையும், மாணவர்களின் கல்வி உரிமையையும், பேராசிரியர்கள், அலுவலர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஒன்றிணைந்து போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அதுதான் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தையும் அரசையும் பணிய வைக்கும்.
தோழர் தீரன்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram