எங்கு பார்த்தாலும் எலும்பும் தோலுமாய் குழந்தைகள், பசிக்கொடுமையால் மண்ணை தின்னும் பிள்ளைகள், உணவு தேடிப்போன மக்கள் குறிவைத்து கொலை செய்யப்படுவது, திரும்பிய பக்கமெல்லாம் பசி, பட்டினி, பஞ்சம், உயிரிழப்பு, எல்லா திசைகளிலும் மரணம் ஓலம் – இதுவே இன்றைய பாலஸ்தீனத்தின் நிலைமை.
2023 அக்டோபர் தொடங்கி 650 நாட்களைக் கடந்தும் இன்னும் நீண்டு கொண்டே போகும் இஸ்ரேலின் இன அழிப்பு தாக்குதலில் மனிதாபிமானமற்ற முறையில் அன்றாடம் பல அப்பாவி உயிர்கள் பலியாகிக் கொண்டே உள்ளன. இதுவரை இதில் 60,034க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் கூடிக் கொண்டே உள்ளது.
தாக்குதலால் மக்கள் கொல்லப்படுவது ஒரு புறம் இருக்க இனவெறி இஸ்ரேல் தோற்றுவித்துள்ள பட்டினியால் மக்கள் கொத்து கொத்தாகக் கொல்லப்பட்டு வருகின்றனர். மார்ச் 02, 2025 முதல் இஸ்ரேல் காசாவிற்கு நிவாரண பொருட்களைக் கொண்டு செல்லும் வழித்தடத்தை முற்றிலுமாக முடக்கி உள்ளது. இதனால் காசாவிற்கு செல்ல வேண்டிய உணவுப் பொருட்கள், மருந்துகள், எரிவாயு, குழந்தைகளுக்கான ஃபார்முலா பவுடர், மற்ற அத்தியாவசிய நிவாரண பொருட்கள் யாவும் அங்குள்ள மக்களுக்குக் கிடைக்காமல் உள்ளன. இதனால் காசாவின் மக்கள் பஞ்சத்தாலும் பட்டினியாலும் அவதியுறுகின்றனர். உலக உணவுத் திட்டம் (World Health Programme) என்ற அமைப்பு காசாவில் தற்போது பெரிய அளவில் பஞ்சம், பட்டினி ஏற்படும் பேராபத்து உள்ளதாக எச்சரிக்கின்றது. மேலும் மூன்றில் ஒருவர் நாள் கணக்காக உணவில்லாமல் இருக்கும் மனதை உலுக்கும் தகவலையும் பகிர்ந்துள்ளது.
காசாவில் இதுவரை பட்டினியால் மட்டும் 150 பேர் இறந்துள்ளனர். இதில் இன்னும் வேதனைக்குரிய தகவல் இறந்தவர்களில் 90 பேர் குழந்தைகள் என்பதாகும். இஸ்ரேலின் இந்த கொலைவெறி நடவடிக்கையானது காசவிலுள்ள 24 லட்சம் மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலையாகும். குறிப்பாக இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளைக் குறிவைத்துக் கொல்வதன் மூலம் அந்த இனத்தையே அழித்தொழிக்கும் வேலையில் இனவெறி இஸ்ரேல் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது.
திட்டமிட்டு காசா மக்களின்மீது கட்டவிழ்க்கப்படும் பட்டினியால் ஆயிரக்கணக்கில் மக்கள் உடல் நெளிந்து சாகும் தறுவாயில் உள்ளனர். ஆனால் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல் இருப்பதால் முறையான சிகிச்சை இல்லாமல் மக்கள் உயிரிழக்கும் அபாயமும் அதிகரித்துள்ளது. 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்துக் குறைபட்டால் அவதியுறுகின்றனர். காசாவில் பெரும்பாலான குழந்தைகள் எலும்பும் தோலுமாகவே இருக்கின்றனர். ஐந்து வயதுக்கும் குறைந்த 6,50,000 குழந்தைகளுக்கு அதிதீவிரமான உடனடி சத்துக் குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது. பாலூட்டும் தாய்மார்களுக்குச் சத்துக் குறைபாடு ஏற்படுவதால் குழந்தைகளுக்குப் பாலூட்ட முடியாமல் போகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. காசாவில் உள்ள மக்கள் தொகையில் 96 சதவீதம் பேருக்கு அன்றாட உணவு கேள்விக்குறியாகவே உள்ளது.
படிக்க: காசா: நவீன ஆயுத சோதனைச்சாலை
உணவு மறுக்கப்பட்டு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் இந்த பட்டினியால் மக்கள் மடிந்து கொண்டிருக்கும் அதே வேலையில் நிவாரணப் பொருட்களை வாங்கப் போகும் மக்களையும் குறிப்பாக பாத்திரங்களை ஏந்தி ஓடும் குழந்தைகளை ஈவு இரக்கமின்றி குறி வைத்து சுட்டுத் தள்ளுகிறது இஸ்ரேல் ராணுவம். இதுவரை உணவு தேடி சென்ற 1,343 பேரைக் கொன்றுள்ளனர். இந்த தாக்குதல்களில் 6,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் இந்த கொலைவெறி தாக்குதலுக்குப் பல உலக நாடுகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். உலகின் பல நாடுகளில் மக்கள் இந்த போரை நிறுத்த போராடி வருகின்றனர். இஸ்ரேலிலும் மக்கள் இந்த இன அழிப்பை நிறுத்த கோரி பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உலக நாடுகள் பலவற்றில் தொடர்ந்து நடந்து வரும் இந்த போராட்டத்தின் விளைவாக காசாவிற்கு செல்லும் நிவாரண பொருட்களுக்கான வழித்தடத்தைத் தளர்த்த இஸ்ரேல் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. எனினும் சொற்பமான அளவில் மட்டுமே நிவாரண பொருட்கள் அனுமதிக்கப்படுகின்றன.
மேலும், இஸ்ரேல் – அமெரிக்கா கட்டுப்பாட்டில் செயல்படும் காசா மனிதநேயம் மையம் (Gaza Humanitarian Foundation – GHF) என்ற அமைப்பு மூலம் உணவு வழங்கப்படும் இடங்களில், உணவைப் பெறச் சென்ற பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்யும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
ஹிட்லரின் வதை முகாம் போல இன்று காசாவை ஒரு திறந்தவெளி பட்டினி வதை முகாமாக மாற்றி இன அழிப்பில் ஈடுபட்டு வருகிறது இனவெறி இஸ்ரேல். போர் விதிமுறைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளி வெளிப்படையாக காசாவை அழிக்க முற்படுகிறது. உலகில் அமைதியை நிலை நாட்டுவதற்கு இயங்குவதாகச் சொல்லிக்கொள்ளப்படும் எண்ணற்ற அமைப்புகள் இந்த கொடூர தாக்குதல்களின் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கின்றன.
இஸ்ரேலின் இந்த கொலைவெறி தாக்குதல்களுக்கு எதிராக உலகின் பல பகுதிகளில் நடைபெறும் மக்கள் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவதன் மூலமே இஸ்ரேலைப் பின்வாங்க வைக்க முடியும்.
மாயவள்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram