காசா மீதான பேரழிவுப் போரை நிறுத்து!

சொல்லொணா பசிக் கொடுமையில் வாடிய போதிலும் சொந்த மண்ணைவிட்டுக் கொடுக்க முடியாது என்ற பாலஸ்தீன மக்களின் இன உணர்வு நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.

காசாவில் இருக்கும் பணயக்கைதிகள் சிலரின் குடும்பத்தினர் காசாவை கைப்பற்றும் திட்டத்தை கைவிடக் கோரி நெதன்யாகு அரசுக்கு எதிராக ஆகஸ்ட் 7 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசானது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீனத்தின் காசா மீது மிகக் கொடூரமான முறையில் இன அழிப்புப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று (08.08.2025) காசா நகரைக் கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. காசா பகுதியை முழுவதுமாக இஸ்ரேல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் எடுக்க விரும்புவதாக பெஞ்சமின் நெதன்யாகு கூறிய ஒரு நாளுக்குப் பிறகு, காசாவைக் கைப்பற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து அமெரிக்கா வாய்திறக்காமல் இருப்பதானது அமெரிக்காவின் ஆசியுடனும் அமெரிக்க ஆயுதங்களின் துணைகொண்டும்தான் காசாவைக் கைப்பற்றுவதற்கான பேரழிவுப் போர் நடத்தப்படுகிறது என்பதை அம்பலப்படுத்துகிறது.

இனவெறி இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையானது, ”இசுரேலின் இந்த போர் முயற்சியானது மனிதப் பேரழிவு” என்று குறிப்பிட்டுள்ளது. ஜெர்மனி இஸ்ரேலுக்கு வழங்கி வந்த ஆயுத உதவிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. சீனா, இங்கிலாந்து, துருக்கி, எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இஸ்ரேல் தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளன.

இந்த அறிவிப்புக்குப் பிறகு உலகம் முழுவதும் பல்வேறு எதிர்வினைகள் வந்த பிறகு, இனவெறிப் பிடித்த இசுரேலானது, காசாவை நாங்கள் ஆக்கிரமிக்கப் போவதில்லை, ஹமாஸிடமிருந்து காசாவை மீட்கப் போகிறோம் என்று பேசியுள்ளது. இனவெறிப் பிடித்த எல்லா ஓநாய்களும் இந்த வகையிலேயே பேசின. அன்று, முள்ளிவாய்க்கால் படுகொலையை அரங்கேற்றிய, இலங்கையின் இராஜபக்சே கும்பலானது, விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பு என்று கூறித்தான் தனது இனவெறிப் படுகொலையை அரங்கேற்றியது.

ஏகாதிபத்தியவாதிகளும் இனவெறிப் பிடித்த பாசிச அரசுகளும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு என்றைக்குமே ஆதரவாக இருந்ததில்லை; தனது சொந்த தேசத்தின் விடுதலைக்காகப் போரிடும் நாடுகளை அவை அனுமதித்ததும் இல்லை.

ஆகையால், இனவெறிப் பிடித்த இசுரேல்-அமெரிக்க போர் வெறியர்களின் இந்த பேரழிவுப் போரை உடனடியாக நிறுத்தப் போராடுவதே நம் அனைவரின் முன்னுள்ள கடமையாகும்.


படிக்க: காசா: நவீன ஆயுத சோதனைச்சாலை


பாலஸ்தீன மக்களும் ஹமாஸ் அமைப்பும் காசாவை விட்டு வெளியேற முடியாது என வீரமுடன் முழங்குகின்றனர். சொல்லொணா பசிக் கொடுமையில் வாடிய போதிலும் சொந்த மண்ணைவிட்டுக் கொடுக்க முடியாது என்ற பாலஸ்தீன மக்களின் இன உணர்வு நமக்கு நம்பிக்கையூட்டுகிறது. நிராயுதபாணியாக நிற்கும் மக்கள் மீது இஸ்ரேல் போர் நடத்துவதை நாம் அனுமதிக்கக் கூடாது.

இசுரேல் மக்களும் நெதன்யாகு – டிரம்ப் கும்பலுக்கு எதிராக முழக்கமிடுகின்றனர். காசா மீதான பேரழிவுப் போரை நிறுத்துமாறு முழக்கமிடுகின்றனர். உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் பாலஸ்தீனத்தின் மீதான இந்த பேரழிவுப் போருக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

பாசிச மோடி அரசானது, அமெரிக்காவிடம் அடிமை விசுவாசத்தையும் இசுரேலிடம் நெருக்கத்தையும் காட்டி வருவதை உடனே நிறுத்த வேண்டும். ஜனநாயக வேடம் போட்டுக்கொண்டே, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குத் துணை போவதைத் தடுக்க வேண்டும்.

”இனவெறிப் பிடித்த இசுரேலே, காசா மீதான பேரழிவுப் போரை நிறுத்து! அமெரிக்க அடிமை மோடி அரசே, இசுரேலுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்திடு!” என்ற முழக்கங்களுடன் வீதியில் இறங்குவதும் மக்கள் எழுச்சியை உருவாக்குவதுமே இப்போதைய உடனடி கடமையாகும்.


அமீர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க