ஒரு நாட்டிற்குள் சென்று, அந்த நாட்டை ஆக்கிரமித்து கேள்விக்கிடமற்ற வகையில் அழித்தொழித்து ஒட்டுமொத்த மக்களையும் படுகொலை செய்ய முடியும் என்ற எதிர்கால உலக மேலாதிக்க நியதி காசாவில் ஒத்திகைப் பார்க்கப்படுகிறது.
ஆகஸ்டு 10-ஆம் தேதியுடன் காசாவில் 61,430 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல லட்சக்கணக்கானவர்கள் சாவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுள்ளனர். மொத்த காசாவையும் ஆக்கிரமிக்க நெதன்யாகுவிற்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்டு 8-ஆம் தேதி ஹிரோசிமா நினைவு நாளன்று காசா புதிய கோணத்தில் பார்க்கப்பட்டது. ஆம், ஹிரோஷிமாவில் அணுகுண்டுகள் வீசப்பட்ட பின்னர் அந்த நகரம் எப்படி நிலைகுலைந்திருந்ததோ, அதைப் போல காசா காட்சியளித்ததை உலகு பார்த்தது. அந்த அளவிற்கு ஒரு பேரழிவை இந்த உலகம் ஹிரோஷிமாவில் மட்டுமே பார்த்தது. அன்று வீசப்பட்டது சில அணுகுண்டுகள். ஒரு நாளில் அந்த நகரம் நிர்மூலமாக்கப்பட்டது.
காசா இதிலிருந்து மாறுபட்டது. அது இரண்டு ஆண்டுகளில் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. அதன் மக்கள் இன்று பட்டினியால் இறந்து கொண்டிருக்கின்றனர். மிச்ச மீதமிருக்கும் மக்களையும் ஒட்டுமொத்தமாகக் கொன்றுவிட்டுத்தான் அடங்குவேன் என்று இஸ்ரேலின் யூத இனவெறியர்கள் கொக்கரிக்கின்றனர். ஆயுத வியாபாரியும் உலக மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்காவின் பாசிச அதிபருமான டிரம்ப் இதன் புரவலராக உள்ளார்.
பாஸ்பரஸ் குண்டுகளை வீசுவது, அரை அணு ஆயுதங்களை வீசுவது, கைதானவர்களைக் கொல்வது போன்ற விதிமுறைகள் எல்லாம் மீறப்பட்டதை ஈராக் மீதான போரின்போது நாம் பார்த்திருந்தோம். ஆனால், தற்போது காசாவில் நடப்பதோ வரலாற்றில் இதுவரைக் காணப்படாத ஒரு பேரழிவாகும். ஒரு நாட்டையே அழித்து பத்து லட்சக்கணக்கான மக்களைக் கொல்லும் ஒரு மாபெரும் பேரழிவைக் குறிக்கும் செயலாகும்.
காசாவில் நடக்கும் பேரழிவுகள் நமக்கு உணர்த்துவது இதுதான்.
காசாவில் நடப்பது போர் விதிமுறை மீறல்கள் என்று குறிப்பிடுவது அதனை குறைத்து மதிப்பிடுவதாகும். மாறாக, இது போர் விதிமுறைகளைத் தகர்ப்பதைக் குறிப்பதாக அமைந்துள்ளது என்பதுதான் குறிப்பானதாகும். குறிப்பாக 1940-களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்ட சர்வதேச விதிகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு வருவதைக் குறிப்பதாகும்.
இரண்டாம் உலக யுத்தக் காலத்தில், ஆரிய இனவெறி ஹிட்லர் யூத மக்கள் மீது நிகழ்த்திய இனப்படுகொலைக்கெதிராக உருவாக்கப்பட்டதுதான், இனப்படுகொலை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளாகும். இன்று, இவ்விதிகளை மீறுவது இதே யூத இனத்தைப் பின்பற்றக்கூடிய பாசிஸ்டுகள் என்பது வரலாற்றின் விசித்திரமல்ல, வர்க்க சமுதாயத்தின் உண்மை!
ஒரு நாட்டிற்குள் சென்று, அந்த நாட்டை ஆக்கிரமித்து கேள்விக்கிடமற்ற வகையில் அழித்தொழித்து ஒட்டுமொத்த மக்களையும் படுகொலை செய்ய முடியும் என்ற எதிர்கால உலக மேலாதிக்க நியதி காசாவில் ஒத்திகை பார்க்கப்படுகிறது.
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாகக் கூறும் மேற்கத்திய நாடுகள், அமெரிக்காவிற்குக் கொடுத்த நிர்ப்பந்தங்கள் என்ன? சர்வதேச நீதிமன்றம் நெதன்யாகுவைப் போர்க்குற்றவாளி என அறிவித்த பின்னரும் அவர் அமெரிக்க அதிபரைச் சந்தித்து உதவிகளைக் கோருகிறார். அவருக்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைக்கிறது.
இதுதான், புதிய போர் நிதியா என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர். காசாவில் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கெதிராக துருக்கி முதல் ஆஸ்திரேலியா வரை லட்சக்கணக்கான மக்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். கல்லுளி மங்கன்களைப் போல, அதன் அரசுகள் அமைதி காக்கின்றன. காசாவை வேவுபார்ப்பதற்கு உதவி செய்த இங்கிலாந்துதான் இன்று பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாகப் பாசாங்கு செய்கிறது. ஜெர்மனியோ எல்லா காலங்களிலும் அமெரிக்காவிற்கு உடந்தையாகவே செயல்பட்டு வருகிறது. இந்நாடுகள் எவையும் சர்வதேச நீதிமன்றம் நெதன்யாகுவைப் போர்க்குற்றவாளியாக அறிவித்ததை ஒரு பொருட்டாகக் கூடக் கருதவில்லை.
பாலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அமெரிக்காவில் குரல் எழுப்புபவர்கள், சாதாரண சூழலில், யூத எதிர்ப்பாளர்களாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள்; மோசமான நிலையில், அவர்கள் போலீசால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படுகின்றனர் அல்லது அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.
இலங்கையில் முள்ளி வாய்க்காலில் ராஜபக்சே கும்பல் பெரும் இன அழிப்பைத் தொடுத்த போது, இந்த புதிய உலக நியதிக்கான கூறுகள் முளைவிடத் தொடங்கின. மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு ஆளான போதும் இதை நாம் கண்டோம். சிரியாவின் இன்னொரு பகுதியில் இன்னொரு காட்சியைக் காண்கிறோம்.
காசாவை ஒத்த ஒரு நிலைமைதான் இந்தியாவில் மணிப்பூரில் குக்கி இன பழங்குடி மக்களுக்கும் பஸ்தர் பகுதியில் இருக்கும் பழங்குடி மக்களுக்கும் பாசிச மோடி அரசு வழங்கியுள்ளது. தற்போது வங்காளம் பேசுகின்ற இசுலாமிய மக்களுக்கு எதிராக பாசிச தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. நாளை, இந்தியா முழுவதும் இருக்கும் இசுலாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கும் இதே நிலைமைதான் உருவாகும். தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இதுபோன்ற தாக்குதல்கள் தலித் மக்களை நோக்கி நடத்தப்படலாம்.
ஆகையால், ஏகாதிபத்தியங்கள் உருவாக்கும் புதிய உலக நியதியை எதிர்த்து, காசா மக்களுக்காகக் குரல் கொடுப்பது நம் அனைவரது கடமையாகும்.
தங்கம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram