அமெரிக்க – இந்திய காம்பாக்ட் திட்டம்: மோடி அரசின் அமெரிக்க அடிமை சாசனம்

அமெரிக்காவில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ட்ரம்ப்-மஸ்க் கார்ப்பரேட் கும்பலின் மேலாதிக்க நோக்கத்திற்கேற்ப இந்தியாவை மறுகாலனியாக்குவது என்ற நோக்கத்திலிருந்து காம்பாக்ட் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

மெரிக்க – இந்திய காம்பாக்ட் எனப்படும் இராணுவக் கூட்டணி, துரித வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல் (US-India COMPACT – Catalyzing Opportunities for Military Partnership, Accelerated Commerce & Technology) என்ற திட்டத்தை கடந்த சில மாதங்களாக பாசிச மோடி அரசு இந்தியாவில் அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகள், நிதிமூலதனக் கும்பலின் சூறையாடலுக்காக இந்தியாவின் விவசாயம், எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைத் திறந்துவிடும் வகையில் இத்திட்டத்தின் கூறுகள் உள்ளன.

டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றவுடன், கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். அப்போதுதான் இந்தக் “காம்பாக்ட் திட்டம்” இறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க-இந்திய கூட்டுத் தலைவர்களின் அறிக்கை (United States – India Joint Leaders’ Statement) என்ற பெயரில் இத்திட்டத்தின் விவரங்கள் வெள்ளை மாளிகையால் பிப்ரவரி 13 அன்று வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாகும் இந்தியா

காம்பாக்ட் திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமான இருதரப்பு வர்த்தகத்தை 2030-ஆம் ஆண்டிற்குள் 500 பில்லியன் டாலராக உயர்த்துவது என்ற இலக்கின் அடிப்படையிலேயே, சமீப மாதங்களாக இரு நாடுகளும் இருதரப்பு ஒப்பந்தத்திற்கான (Bilateral Trade Agreement) பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த ஒப்பந்தத்தில் விவசாய மற்றும் பால் பொருட்களுக்கான இந்திய சந்தையை அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கு திறந்துவிடக் கோரி அமெரிக்க அரசு மோடி அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து வருகிறது. அமெரிக்க அரசின் விருப்பத்திற்கேற்ப நடந்துகொண்டால் கோடிக்கணக்கான விவசாய மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சம் மோடி அரசுக்கு உள்ளது. இதனால் நேரடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல், இந்திய விவசாய மற்றும் பால் பொருட்களுக்கான சந்தையை அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு படிப்படியாகவும் மறைமுகமாகவும் திறந்துவிடுவது என்ற நோக்கத்திலிருந்தே மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

மேலும், விலை அதிகமாக உள்ள போதிலும் அமெரிக்காவிடமிருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி. எரிவாயு கொள்முதலை அதிகரிக்கக்கோரி மோடி அரசை காம்பாக்ட் திட்டத்தின் அடிப்படையில் அமெரிக்க அரசு நிர்பந்தித்து வருகிறது. இதற்கு மோடி அரசும் அடிபணிந்துள்ளது. இதனால் 2024 ஜனவரி-ஏப்ரல் மாதங்களில் 1.69 மில்லியன் டன்னாக இருந்த அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி, 2025 ஜனவரி–ஏப்ரல் மாதத்தில் 6.31 மில்லியன் டன்னாக அதிகரித்து இருக்கிறது. 2026-ஆம் ஆண்டுக்குள் எல்.பி.ஜி. எரிவாயு இறக்குமதியில் 10 சதவிகிதத்தை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்ய மோடி அரசு இலக்கு வைத்துள்ளதாகவும், எரிவாயுக்கான இறக்குமதி வரியை நீக்குவதற்கு பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

அதேபோல, இந்திய அணுசக்தித் துறையில் அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில், கோடிக்கணக்கான மக்களின் உயிரை பணயம் வைத்து இந்தியாவில் சிறிய அணு உலைகளை அமைப்பதற்கு மோடி அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. இதற்கு சாதகமாக சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ள உள்ளது. மேலும், தொலைதொடர்புத் துறையில் எலான் மஸ்க்-இன் ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்திற்கு இணைய சேவை வழங்க அனுமதியளித்திருப்பது போன்றவையும் காம்பாக்ட் திட்டத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், இந்தியாவின் காடுகள், மலைகள், கடற்பரப்புக்கு அடியில் புதைந்து கிடக்கும் லித்தியம், கிராஃபைட், கோபால்ட் உள்ளிட்ட அரிய வகைத் தனிமங்களையும் பெட்ரோலிய கச்சா எண்ணெய், எரிவாயுக்களையும் கையகப்படுத்தும் வகையில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றிணைந்து புதிய கூட்டிணைவுத் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக காம்பாக்ட் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அரிய வகைத் தனிமங்களில் ஆதிக்கம் செலுத்துவதற்காக சீனக் கார்ப்பரேட்டுகளுடன் போட்டிபோட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காகவே இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே, பாசிச மோடி அரசு அம்பானி-அதானிகளின் கனிமவளக் கொள்ளைக்காக, “சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை)” திருத்தச்சட்டம், வனப் பாதுகாப்பு திருத்தச் சட்டம் உள்ளிட்டு பல்வேறு சட்டத் திருத்தங்களையும் சுரங்கத்துறையில் அதானியின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

மேலும், நாடு முழுவதும் எங்கெல்லாம் அரியவகைக் கனிமங்கள் புதைந்துள்ளன என்பதை கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து மிகத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. அக்கனிமங்களை வெட்டியெடுப்பதற்கான சுரங்க ஏலங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

சமீபத்தில் கூட, மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் என்று அழைக்கப்படும் துத்தநாக சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை அறிவித்து மக்களின் போராட்டத்தினால் மோடி அரசு அதை நிறுத்தி வைத்திருக்கிறது. சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்குத் தடையாக இருக்கும் மாவோயிஸ்டுகளையும் பழங்குடியின மக்களையும் நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் நரவேட்டையாடி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக காம்பாக்ட் திட்டத்தை மோடி அரசு ஏற்றுக்கொண்டிருப்பதானது, இந்தியாவில் கனிமவளக் கொள்ளை மேலும் தீவிரப்படுத்தப்படுவதற்கான பேராபயத்தைக் கொண்டிருக்கிறது.

அதேபோல, அமெரிக்காவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களை இந்தியாவில் தொடங்க வேண்டும் என்று காம்பாக்ட் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் கிளைகளை கொண்டுள்ள அமெரிக்காவின் பொருளுற்பத்தி மற்றும் தொழில்நுட்ப கார்ப்பரேட் நிறுவனங்களை அமெரிக்காவிற்கு திருப்பி அழைக்கும் ட்ரம்ப் அரசு, அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகளை தொடங்குவதற்கு மட்டும் அனுமதிக்கிறது.

பாசிச மோடி அரசோ, தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் உயர்கல்வித் துறையை கார்ப்பரேட்மயமாக்கும் தன்னுடைய நோக்கத்திலிருந்து அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கையை மோடி அரசு அமல்படுத்தத் தொடங்கியதிலிருந்தே, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதித்து வருகிறது. இப்பல்கலைக்கழகங்களின் கட்டுமானப் பணிகள் முடிவடையாத நிலையிலும் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதியளித்து மக்களின் பணத்தை கோடிக்கணக்கில் சூறையாட உடந்தையாக இருக்கிறது.

அதாவது அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு ஒருபுறம் மூடுவிழா நடத்திக்கொண்டு, பணம் படைத்தவர்கள் மட்டும் தனியார், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் பயில முடியும் என்ற நிலைமையை மோடி அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

மேலும்,  அமெரிக்க ஆயுத வியாபாரிகளின் நலன்களுக்காக அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றிணைந்து இராணுவக் கூட்டணியை உருவாக்குவது; அதில் அடுத்த பத்தாண்டுகளுக்கு இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது; அமெரிக்காவிலிருந்து ஆயுத ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக அமெரிக்காவின் “சர்வதேச ஆயுத போக்குவரத்து விதிமுறைகள்”-ஐ (ITAR) மறு ஆய்வுக்கு உட்படுத்துவது; கப்பல் மற்றும் டாங்கிகளை தாங்குவதற்கான ஏவுகணைகளையும் போர்க் கப்பல்களையும் இந்தியா கொள்முதல் செய்வது; அமெரிக்க ஆயுத நிறுவனங்கள் இந்தியாவின் மகேந்திரா மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் காம்பாக்ட் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் போராட்டங்களை கட்டியமைப்போம்!

அமெரிக்காவில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ட்ரம்ப்-மஸ்க் கார்ப்பரேட் கும்பலின் மேலாதிக்க நோக்கத்திற்கேற்ப இந்தியாவை மறுகாலனியாக்குவது என்ற நோக்கத்திலிருந்து அமல்படுத்தப்படும் காம்பாக்ட் திட்டமானது, மோடி அரசின் அமெரிக்க அடிமை சாசனமாகவே உள்ளது. அந்தவகையில், ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற கடந்த ஜனவரி மாதத்திலிருந்து காம்பாக்ட் திட்டத்தில் உள்ள கூறுகளை மோடி அரசு அமல்படுத்தி வருகிறது.

அதாவது, அமெரிக்க அரசின் அடாவடித்தனங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மெக்சிகோ, பிரேசில் உள்ளிட்ட சிறிய நாடுகளே எதிர்ப்பு தெரிவித்து எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் போது, ‘56 இன்ச் மார்பு’ கொண்ட மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசோ, அமெரிக்க அரசின் செல்லப்பிராணியைப் போல அதன் காலில் விழுந்து கிடக்கிறது.

கடந்த ஜூலை 30 அன்று கூட, “ஆகஸ்ட் 1 முதல் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்படும்” என்று அமெரிக்க அரசு அடாவடித்தனமாக அறிவித்திருக்கிறது. மேலும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மிரட்டியிருக்கிறது. ஆனால், எப்போதும் போல இந்த வரி விதிப்பிற்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் பேச்சுவார்த்தையின் மூலம் வரியைக் குறைக்கும் நடவடிக்கையிலேயே மோடி அரசு ஈடுபடும்.

மேலும், காம்பாக்ட் திட்டத்தை மோடி அரசு இந்தியாவில் செயல்படுத்தி வருவதில் அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பலின் நலன் அடங்கியிருக்கிறது. சான்றாக, அமெரிக்காவிலிருந்து விவசாய மற்றும் பால் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டால், ஏற்கெனவே விலைவாசி உயர்வு, உரத் தட்டுப்பாடு, விளைச்சலுக்கு உரிய விலை கிடைக்காததால் நொடித்துப் போயிருக்கும் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுவது பன்மடங்கு அதிகரிக்கும். அதனைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களின் நிலங்களை கைப்பற்றி கார்ப்பரேட் விவசாய பண்ணையார்களாக உருவெடுக்க வேண்டும் என்ற சதித்திட்டம் அம்பானி-அதானி கும்பலுக்கு உள்ளது.

ஆகவே,  “காம்பாக்ட் திட்டத்திலிருந்து வெளியேறு”, “அமெரிக்காவுடனான அடிமை ஒப்பந்தங்களை கிழித்தெறி” உள்ளிட்ட முழுக்கங்களை முன்வைத்து புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மாபெரும் மக்கள்திரள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியுள்ளது. அத்தகைய போராட்டங்களே இந்திய, அமெரிக்க அரசுகளை பணிய வைக்கும்.


கதிர்

(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க