உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய்: தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படும் விவசாயிகள்

58 கிராம பாசன கால்வாய்க்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது, இப்பிரச்சினைக்கு தீர்வுகாண நிரந்தர அரசாணை ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிடுவது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

துரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி, “58 கிராம பாசன கால்வாய் விவசாயிகள் சங்கம்” சார்பாக ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, மறியல் என தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 58 கிராம பாசன கால்வாய்க்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது, இப்பிரச்சினைக்கு தீர்வுகாண நிரந்தர அரசாணை ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிடுவது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 12 அன்றும் இக்கோரிக்கையை வலியுறுத்தி உசிலம்பட்டியில் கடையடைப்பு  போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், ஆளும் அரசுகள் விவசாயிகளின் இவ்வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்றாமல் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன.

அனைத்துக் கட்சிகளும் சங்கங்களும் ஒருங்கிணைந்து, ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு, போராடக்கூடிய இப்பிரச்சினையைப் பற்றி நாம் புரிந்துகொள்வதற்கு, அதன் வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

1975-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உசிலம்பட்டியின் ஒரு பகுதி பெரியாறு வைகை பாசனப் பகுதியாக மாற்றப்பட்டது. நீர்ப் பாசன வசதி ஏற்பாடு செய்யப்பட்ட பிறகு அப்பகுதி மூன்று போகம் விளையக்கூடிய பயிர்கள் செழித்து வளரக்கூடிய பகுதியாக மாறியது. இது அப்பகுதிக்கும் நீர்ப் பாசன வசதி ஏற்பாடு செய்யப்படாத பிற பகுதிகளுக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வை உருவாக்கியது.

பாசன வசதி ஏற்பாடு செய்யப்படாத பகுதி மக்கள், வேலைவாய்ப்பு இல்லாமல் வட மாநிலங்களில் முறுக்கு சுட்டு விற்பனை செய்வது போன்ற வேலைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தகைய சூழலில்தான் தண்ணீர் பாசன வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அம்மக்களிடம் இயல்பாக எழுந்தது.

அதனடிப்படையில், பாப்பாபட்டி கிராமத்தைச் சார்ந்த சில இளைஞர்கள் முதன்முதலில் நீர்ப் பாசன வசதி வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுக்கத் தொடங்கினர். தொடர்ச்சியான போராட்டங்களையும் நடத்த ஆரம்பித்தனர்.


படிக்க: தேவனஹள்ளி: விவசாயிகளின் உறுதியான போராட்டம் வெற்றி! | தோழர் அமிர்தா


இடதுசாரிகள் அதனை அரசியல் கோரிக்கையாகக் கையில் எடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினர். அதன் பிறகு ”மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம்” (State Institute for Rural Development – SIRD) இப்பிரச்சினையைக் கையிலெடுத்தது. கிராமங்கள் தோறும் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தியும் அரசுக்கு தேவையான தகவல்களைக் கொடுத்தும் இத்திட்டத்திற்கு ஒரு வடிவத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

1983-க்கு பிறகு இக்கோரிக்கைக்காகவே “பாசன வசதி வேண்டுவோர் சங்கம்” என்றொரு சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, அப்பகுதி விவசாயிகள் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்தனர். இப்போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட திரு வல்லரசு பின்னாளில் தி.மு.க. எம்.எல்.ஏ-வாக ஆனார். அந்தளவிற்கு அப்போராட்டங்கள் முக்கியத்துவம் உடையதாக அமைந்திருந்தது.

பின்னர் 1996-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில், இத்திட்டத்திற்கான நிதி ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டு அரசாணை அறிவிக்கப்பட்டது. 1999-இல் தி.மு.க. அரசால் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.  ஆனால், அதன் பிறகு வந்த அ.தி.மு.க. அரசு இதனைக் கண்டு கொள்ளாமல் கைவிட்டது. பிறகு வந்த தி.மு.க. அரசும் இதில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் கட்டுமான பணிகள் தொடங்காமல் தாமதம் ஆனது.

இதன் விளைவாக ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலம் என்று அழைக்கப்படும் இந்த கால்வாயின் கட்டுமானப் பணிகள் 18 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்தன. ஆண்டுக்கணக்கில் நடைபெற்று வந்த இக்கட்டுமானப் பணி ஒருபுறம் சோர்வை ஏற்படுத்தினாலும் மறுபுறத்தில் மக்கள் போராட்டங்கள் முன்னேறி வந்து கொண்டே இருந்தன.

2014-ஆம் ஆண்டு முதல் 58 கிராம பாசன விவசாயிகள் போராட்டங்கள் புத்துணர்ச்சி பெற்றன. 2018 மார்ச் மாதத்திற்குள் கட்டுமான பணிகளை முடிப்பதாக பொதுப்பணித்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன்படி 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவந்த கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றன.

அதே காலகட்டத்தில் கேரளாவில் கனமழை காரணமாக வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனை முன்வைத்து 58 கிராம பாசன கால்வாய்க்குத் தண்ணீரைத் திறந்துவிடக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 2018 ஆகஸ்ட் மாதத்தில் சோதனை ஓட்டமாக அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால், தேனி மாவட்டம் டி.புதூர் பகுதியில் ஒரு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நிறுத்தப்பட்டது. பின்னர் சரி செய்யப்பட்டு 2019-ஆம் ஆண்டு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மக்கள் போராட்டம் காரணமாக கால்வாய்க்குத் தண்ணீர் திறக்கப்பட்டது.


படிக்க: மகாராஷ்டிரா: ஆண்டுதோறும் அதிகரித்துவரும் விவசாயிகள் தற்கொலை


2023-ஆம் ஆண்டில்தான் இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 35 கண்மாய்களிலும் முழுமையாக தண்ணீர் நிறைந்தது. தொய்வாக இருந்த விவசாயப் பணிகள் மீண்டும் துளிர்விடத் தொடங்கின. குறிப்பாக 25 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பகுதியில் மூன்று போக விவசாயம் உற்சாகமாக நடைபெற்றது. அதன் துணைத் தொழில்களான ஆடு, கோழி வளர்ப்பு போன்றவையும் அப்பகுதியில் முன்னேறத் தொடங்கியது. கண்மாய் தண்ணீர் நிரம்பிய காரணத்தினால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, கிணற்றுப் பாசனமே போதும் என்கிற அளவுக்கு புதிய சூழல் உருவானது. அதன் பிறகு ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி அப்பகுதியில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது எனும் அளவுக்கு சூழல் மாறியது.

ஆனால், அதன் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக கால்வாய்க்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி விவசாயிகள், மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த வரலாற்றுப் பின்னணியிலிருந்துதான் அப்பகுதி விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் அனைவரும், 58 கிராம பாசன கால்வாய்க்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்துப் போராடி வருகின்றனர். இப்போராட்டத்தின் முக்கியமான கோரிக்கையாக, நிரந்தர அரசாணையை வெளியிட வேண்டும் என்பது இருந்து வருகிறது.

இத்திட்டம் தொடங்கப்பட்ட போது வெளியிடப்பட்ட அரசாணையில், ஏற்கெனவே வைகை அணையைச் சார்ந்துள்ள பாசனப் பகுதிகள் முழுமையாகப் பயன்பெற்ற பிறகு, இராமநாதபுரம் பெரிய கண்மாய் நிரம்பி, அதன் பிறகு வைகை அணை நிரம்பி, அதன் உபரி நீரும் பயன்படுத்தப்பட்டு, அதன் பிறகு வரும் வெள்ள உபரி நீர் 58 கிராம பாசன கால்வாய்க்குத் திறந்துவிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அவ்வரசாணையில் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் தண்ணீர் திறந்துவிடப்படும் என்பது போன்ற விவரங்கள் இல்லை. ஆகையால், ஒவ்வொரு ஆண்டும் போராட்டம் நடத்தி, அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தி, அதன் பிறகு நீரைப் பெற வேண்டிய அவல நிலைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதனால்தான் அரசாணையை மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மறுபுறம்,  58 கிராம பாசன கால்வாய்க்குத் தண்ணீர் திறக்கப்பட்டால் ஏற்கெனவே பயன்பெற்றுவரும் பகுதியில் பாசன பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் என்ற கருத்து நிலவி வருகிறது.

ஆனால், அரசு இதில் தலையிட்டு அனைத்து பகுதிகளுக்கும் பொதுவான பாசன வசதியை ஏற்படுத்தும்படியான ஒரு அரசாணையை வெளியிட வேண்டும். அந்த அரசாணையானது நிரந்தரமானதாக இருக்க வேண்டுமென்றால், ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீர் அணையில் நிரம்பிய பிறகு பாசனத்துக்குத் திறந்து விட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிரந்தர அரசாணை வரும் போதுதான் அம்மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இந்த 58 கிராம பாசன கால்வாய் திட்டமென்பது இப்பகுதியின் விவசாய உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் அரசால் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக, பாசன வசதி ஏற்படுத்தினால்தான் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்று மக்கள் தங்களது சொந்த அனுபவத்தின் மூலம் உணர்ந்து தொடர் போராட்டங்களை நடத்தியதன் விளைவாக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் பல பத்தாண்டுக்கால போராட்ட வரலாறு அமைந்திருக்கிறது. மேலும், தங்களுக்கு நிரந்தரமாக நீர் வழங்குவதற்கு ஏற்ற வகையில் அரசாணை வேண்டும் என்று தொடர்ந்து போராட வேண்டிய அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

58 கிராமங்களுக்கான பாசன வசதியை, குடிநீர் ஆதாரத்தை, கிராம பொருளாதாரத்தைப் பயன்படுத்தக்கூடிய ஒரு திட்டமாக இருப்பதினால்தான் இது 58 கிராம பாசன கால்வாய் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

ஆனால், அரசாங்கங்களின் தொடர்ச்சியான இழுத்தடிப்பு காரணமாக இதில் தொய்வு ஏற்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. அதை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. குறிப்பாக அனைத்து கட்சிகள், சங்கங்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்தாலும், இந்த 58 கிராம மக்களும் அமைப்பாக்கப்பட்டு ஒரு மாபெரும் மக்கள் போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும்.  அதன் மூலமாகத்தான் இந்த அரசுக்கு அழுத்தம் கொடுத்து நிரந்தர அரசாணையை நிறைவேற்ற முடியும்.

போராடக்கூடிய இயக்கங்கள் அரசியல் கட்சிகள் இக்கண்ணோட்டத்திலிருந்து இப்போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை அடைய முடியும்.

இவண்,
தோழர் சிவகாமு,
செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை மேற்கு மாவட்டம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க