ஜப்பான்: மீண்டும் செல்வாக்கு பெறும் பாசிசக் கட்சிகள்

ஜப்பான் இதுவரையிலும் தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆனால் இப்போது இந்த தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது என்று கூறுகிறார் கண்டா பல்கலைக்கழக பேராசிரியர் ஜெஃப்ரி ஹால்.

ப்பானில் அரசியல் பொருளாதார நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 1955 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஒரு சிறிய இடைக்காலத்தைத் தவிர பிற எல்லா காலங்களிலும் இப்போது ஆளுகின்ற கட்சியாக இருக்கின்ற தாராளவாத ஜனநாயக கட்சியே (Liberal Democratic Party) ஆட்சிப் பொறுப்பிலிருந்து வருகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இக்கட்சி தற்போதுதான் கடுமையான சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. சென்ற மாதம் ஜூலை 20 அன்று நடந்த மேலவைத் தேர்தலில் (House of Councillors) அதிக இடங்களில் தோல்வியைச் சந்தித்து முதல் முறையாகப் பெரும்பான்மையை இழந்திருக்கிறது.

ஆளும் கட்சியின் தலைவரான பிரதமர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) பொருளாதார சிக்கல்களைத் தீர்க்க அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதில் தொடர்ந்தும் இழுபறி நிலை நீடிக்கின்றது. உள்நாட்டில் விலைவாசிகளின் உயர்வால் சாதாரண மக்களின் வாழ்க்கைச் செலவுகள் கூடி வருவதைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டு மக்களின் நம்பிக்கை பெறப் போராடிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் 2020 கோவிட் காலத்தில் உலக மக்கள் அனைவருக்கும் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி மற்றும் முகக்கவசம் ஆகியவற்றில் சர்வதேச அளவில் சதி நடப்பதாக பல வகையான காணொளிகளை இணையத்தில் வெளியிட்டதன் மூலம் பழமைவாதிகளின் ஆதரவைப் பெற்று பிரபலம் அடைந்தார் சோஹெய் காமியா (Sohei Kamiya) என்பவர். 2020 ஆம் ஆண்டில் கட்சி தொடங்கி 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மேலவை தேர்தலில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றது இவரது சான்சிட்டோ கட்சி (Sanseito party). தொடர்ந்து உலகமயமாக்கத்திற்கு எதிரான கட்சியாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டு வந்தது.

தனது ஆதரவாளர்களைக் கொண்டு பெரிய பேரணிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. உலகை ஆதிக்கம் செய்யும் நோக்கத்துடன் கையளவேயான பன்னாட்டுக் கார்ப்பரேட் நிதி நிறுவனங்கள் ஜப்பான் மக்கள் மீது ஆதிக்கத்தை நிறுவ சதிசெய்து வருவதாக எச்சரிக்கை விடுத்தது.


படிக்க: அமெரிக்க – இந்திய காம்பாக்ட் திட்டம்: மோடி அரசின் அமெரிக்க அடிமை சாசனம்


சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தில் உணவுப் பொருட்களுக்கான வரிகளைக் குறைக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றும் கூறி குழந்தைகளின் நலனுக்குப் பல சலுகைகளைக் கோரியது. அவற்றுக்கெல்லாம் மேலாக அந்நியர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகக் கூறி “ஜப்பானியர்களுக்கு முன்னுரிமை” என்கிற முழக்கத்தை முன்வைத்து தேசிய காப்புவாதத்தை முன் தள்ளியது.

பல தலைமுறையாக ஜப்பானில் வாழ்ந்து வரும் சீன, கொரிய, மற்றும் வியட்நாம் நாடுகளைச் சேர்ந்த சாதாரண உழைக்கும் மக்களை வந்தேறிகள் என்று எதிர்ப் பிரச்சாரத்தை (Anti Immigrants) மேற்கொண்டது.

சான்சிட்டோ கட்சியின் நிறுவனத் தலைவரான சோஹெய் காமியா அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அடாவடித்தனமான நடவடிக்கைகளைத் துணிச்சலான அரசியல் (Bold Political Style) என்று புகழுவதுடன் அவற்றிலிருந்து தான் ஊக்கம் பெற்றதாகக் கூறிக் கொள்ளுகிறார்.

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (Shinzo Abe) அளவிற்கு இன்றைய பிரதமர் பழமையை நேசிப்பவராக இல்லை. பிரதமருக்கு ஜப்பானிய வரலாற்றுப் பாரம்பரியம் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. சீனாவுக்கு எதிராக முன்னாள் பிரதமர் அபே கொண்டிருந்த அளவுக்கு அழுத்தமான எதிர்ப்புணர்வு இன்றைய பிரதமரிடம் இல்லை என்று பலவாறாகத் தனிப்பட்ட வகையில் பிரதமர் மீதான விமர்சனத்திலும் ஈடுபட்டது சான்சிட்டோ கட்சி.

2022 மார்ச் மாதம் தேர்தலில் காமிய மட்டுமே மேலவை உறுப்பினராக வெற்றி பெற்றிருந்தார். அதற்குப் பிறகும் திட்டமிட்டு சமூக ஊடகங்களைத் தனது நோக்கத்திற்கேற்பப் பயன்படுத்திக் கொண்டு டிரம்பை போலவும் தமிழ் நாட்டின் சீமானைப் போலவும் வாய்க்கு வந்ததை எல்லாம் அடாவடியாகப் பேசுவதை தனிப்பாணியாக கொண்டு செயல்பட்டு வந்தார்.

பன்னாட்டு கார்ப்பரேட் நிதி நிறுவனங்கள் அவர்களின் நலனுக்கு உகந்த வகையில் ஜப்பானின் தேசிய பொருளாதாரக் கொள்கைகளை மாற்றி அமைத்து வருகின்றனர். இந்த போக்கை இப்போதே எதிர்த்து முறியடிக்காவிட்டால் எதிர்காலத்தில் ஜப்பான் அவர்களின் காலனி நாடாக மாறிப் போகும் அபாயம் நேரும் என்று நாட்டு மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுத்தார்.

பாலின சமத்துவம் என்னும் கொள்கையை எதிர்க்கிறார். ”பாலின சமத்துவக் கொள்கை பெண்கள் வேலைக்குச் செல்வதைக் கட்டாயமாக்குகிறது. அதனால் பெண்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள இயலாமல் போகிறது” என்று பேசியது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்த ஆணாதிக்கக் கருத்து இளைஞர்களிடமிருந்து மட்டுமில்லாமல் 20 முதல் 50 வயது வரையிலான ஆண்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

இரண்டாம் உலகப்போரின் போதும் போருக்கு முன்னரும் ஜப்பான் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றையும் காலனிபடுத்தி வைத்திருந்த காலத்தில் அந்நாட்டு மக்களை உழைப்பு சுரண்டலுக்காக அடிமைகளாக கடத்தி வந்து குடியமர்த்தியது ஜப்பானிய அரசு.

2024 ஆம் ஆண்டு அரசு புள்ளி விவரத்தின்படி ஜப்பானில் குடியேறி இருக்கும் வெளிநாட்டவர் எண்ணிக்கை 38 லட்சம். (ஆனாலும் இது மக்கள் மொத்த மக்கள் தொகையில் மூன்று சதவிகிதம் மட்டுமே).

நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பதற்கும் பணவீக்கம் அதிகமாகி விலைவாசிகள் உயர்வதற்கும் கூட அந்நிய குடியேற்றம் தான் காரணம் என்று குடியுரிமை கூட இல்லாமல் அல்லல்பட்டு வரும் அம்மக்களின் மீது பழி சுமத்துகிறது சான்சிட்டோ எனும் இப்பாசிசக் கட்சி.

அதே போன்று அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் ஜப்பானின் தனித்தன்மைக்கு ஆபத்தாகவே முடியும் என்று அபாய குரல் எழுப்புகிறது சான்சிட்டோ கட்சி.

பொருளாதார நெருக்கடிக் காலங்களில் வர்க்க இன மற்றும் பாலின அடிப்படையில் மக்களிடையே துளிர்விடும் சிறு முரண்பாடுகளை எல்லாம் எதிரெதிரான பகை முரண்பாடுகளாக்கி மக்களைப் பிளவுபடுத்தி மோதவிடும் பாசிசக் கொள்கைகளைப் பச்சையாகக் கையாளுகிறது சான்சிட்டோ கட்சியும் அதன் தலைமையும்.

மேலும் சுற்றுலாப் பயணிகளின் சிறு சிறு தவறான நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் உள்ளூர் மக்களிடம் நடத்தும் வாக்குவாதங்கள் போன்றவற்றை ஊதிப் பெருக்கி வீடியோவாகப் பரப்பி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீது வெறுப்புணர்வைப் பரப்புகிறது. மேலும் இது வெளிநாட்டினரின் அமைதியான படையெடுப்பு என்று சித்தரிக்கிறது. எனவே ஜப்பானியர்களுக்கே முன்னுரிமை என்பதை கட்சியின் முதன்மை முழக்கமாக்கி குடியேறிய மக்களை எதிரிகளாகக் காட்டுகிறது.


படிக்க: ஈரான் மீதான போர்: அமெரிக்க வல்லரசின் படுதோல்வி


இது தவிர ஜனநாயக மக்கள் கட்சி (Democratic People’s Party) என்ற இன்னுமொரு மிதவாத வலதுசாரி கட்சியும் 17 இடங்களைப் பிடித்துள்ளது. இந்த கட்சி ஏற்கனவே 5 இடங்களையே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் இதுவரையிலும் தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆனால் இப்போது இந்த தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது என்று கூறுகிறார் கண்டா பல்கலைக்கழக (Kanda University of International Studies – KUIS) பேராசிரியர் ஜெஃப்ரி ஹால் (Jeffrey C. Hall).

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப்பினுடைய MAGA (Make America Great Again) இயக்கம் மற்றும் பிரான்சின் தேசியப் பேரணி (National Rally) என்னும் அமைப்பு இவை எல்லாம் அந்தந்த நாடுகளை பாசிசத்தை நோக்கி வழிநடத்துகின்றன.

தற்போது நாடு முழுவதிலும் ஒட்டுமொத்தமாக மூன்று சதவிகிதம் மட்டுமே குடியேறிகள் இருக்கின்றனர். சான்சிட்டோ கட்சியோ ’வந்தேறி’களின் எண்ணிக்கையை ஒவ்வொரு நகராட்சியிலும் 5 சதவிகிதம் என்ற எண்ணிக்கையில் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறது.

குடியேறிய வெளிநாட்டினர்களுக்கு மூன்று தலைமுறை கழிந்த பின்னர்தான் வாக்குரிமை வழங்கப்படும் என்று சட்டத் திருத்தம் கொண்டு கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறது சான்சிட்டோ கட்சி.

கடந்த ஜூலை மாதம், 248 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையில் 125 இடங்களுக்கு (124 இடங்கள் + 1 காலி இடம்) மட்டும் தேர்தல் நடைபெற்றது. அதில் 14 இடங்களைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது சான்சிட்டோ கட்சி.

உலக மேலாதிக்கத்துக்காக ஏகாதிபத்தியங்கள் முட்டி மோதிக் கொள்ளும் இந்த காலகட்டத்தில் உலகெங்கும் பல நாடுகளிலும் பாசிசக் கட்சிகள் வளர்ந்து வருவதைப் போலவே இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் மேலோங்கி நிற்பதைப் போலவே ஜப்பானிலும் பாசிச கட்சிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இவற்றிற்கெதிராக உலக மக்கள் ஜனநாயக சக்திகளின் தலைமையில் அணிதிரண்டு போராட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க