தமிழ்நாட்டில் 30 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் குற்றச்சாட்டு!

பீகாரில் “சிறப்பு தீவிர மறு ஆய்வு” மூலம் தேர்தல் ஆணையம் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் கடந்த தேர்தல்களின் போது 30 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் “சிறப்பு தீவிர மறு ஆய்வு” (Special Intensive Revision) என்ற பெயரில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கேற்ப வாக்காளர் பட்டியலை மறு ஆய்வு செய்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், அதிகாரப்பூர்வமாகவே 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது.

இது இந்தியா முழுவதும் பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் கடந்த தேர்தல்களின் போது 30 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

2016 சட்டமன்றத் தேர்தலின் போது தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.77 கோடி.

2019 மக்களவைத் தேர்தலில் புதிய வாக்காளர்களையும் சேர்த்து மொத்தம் 6.24 கோடி பேர்.

2021 சட்டமன்ற தேர்தலில் இந்த எண்ணிக்கை 6.29 கோடியாக அதிகரித்தது.

ஆக சராசரியாக 2016, 2019-ஆம் ஆண்டுகளில் 40 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இடையிலான எண்ணிக்கையை ஒப்பிடும்போது வெறும் ஐந்து லட்சம் வாக்காளர்கள் மட்டும்தான் அதிகரித்துள்ளனர்.

இதன் மூலம் இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 30 லட்சதிற்கும் மேலான வாக்காளர்கள் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது. இந்த 30 லட்சம் வாக்காளர்கள் எவ்வாறு மாயமானார்கள்? இதன் பின்னணி என்ன?

இதை தமிழ்நாட்டு மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய தருணமிது.

குறிப்பாக, 2016-ஆம் ஆண்டிலிருந்து தேர்தல் ஆணையத்தின் படிவம் 6, 7-இன் தகவல்களை நாம் கேட்டுப்பெற வேண்டும். 2016 முதல் 2024-ஆம் ஆண்டு வரை 76 லட்சம் வாக்காளர்கள் வரை நீக்கப்பட்டிருக்கலாம் என்று டாக்டர் கார்க் (Dr Pyara Lal Garg) கூறுகிறார். எனவே இந்த விசயத்தில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் மக்களும் தீவிர கவனம் செலுத்துவதோடு கடந்த ஐந்து தேர்தல்களின் வாக்காளர்கள் பட்டியலையும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலும் எளிதாக இருக்காது.

இவ்வாறு செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


படிக்க: பீகார் சிறப்பு தீவிர மறு ஆய்வு: காவிமயமாகும் வாக்காளர் பட்டியல்


உண்மையில், 2024 தேர்தலுக்கு முந்தைய தேர்தல்களில் தமிழ்நாட்டில் 5.5 சதவிகித வாக்குகளை கூட தாண்டாத பா.ஜ.க., 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 11 சதவிகித வாக்குகளை பெற்றதோடு பல இடங்களில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வை மூன்றாம் இடத்திற்கு தள்ளியது. இதற்கு மாறிவரும் அரசியல் சூழல் காரணம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தீஸ்தா செதல்வாட்டின் குற்றச்சாட்டு வேறு ஒரு அர்த்தப்பாட்டை கொடுப்பதுடன் தேர்தல் ஆணையத்தின் மீது பெரும் சந்தேகத்தை தோற்றுவித்திருக்கிறது.

இந்த குற்றச்சாட்டை அப்படியே புறந்தள்ள முடியாத வகையில், தேர்தல் ஆணையம் + பா.ஜ.க. இரண்டும் கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டு பல மோசடிகளை செய்துள்ளதை கடந்த காலங்களில் நாம் பல்வேறு மாநில தேர்தல்களில் பார்த்துள்ளோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் தேர்தல் ஆணையம் செய்த மோசடியை ராகுல் காந்தி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தையும் அழித்து பாசிசத்தை நிலைநாட்ட இந்துத்துவ கும்பல் துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு அரசு கட்டமைப்பின் அனைத்து உறுப்புகளையும் பாசிசமயமாக்கி வருகிறது. அடிப்படை உரிமை என்று சொல்லப்பட்ட வாக்குரிமையை கூட பறித்து, ‘ஜனநாயகத்தை’ தகர்க்கிறது பாசிச கும்பல்.

இந்த பாசிச கும்பலை வீழ்த்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டிய அவசியம் ஜனநாயக சக்திகள், உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உள்ளது. பாசிசத்தை வீழ்த்தி பாசிசம் மீண்டெழாதவாறு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்பது ஒன்றே தீர்வாக இருக்க முடியும்.

நன்றி: பேரலை


சூர்யா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க