“ஆட்சிக் கவிழ்ப்பு மசோதாக்கள்”: இந்துராஷ்டிர முடியாட்சிக்கான கொள்ளைப்புற வழி!

ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறை போன்று இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் பாசிச சட்டத்திட்டங்களில் ஒன்றாகவே இப்பதவி நீக்க மாசோதாக்களை பார்க்க வேண்டியுள்ளது.

டந்துமுடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிவதற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 21 அன்று, எவ்வித முன்னறிவிப்புமின்றி மூன்று “பதவி நீக்க மசோதா”க்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா  தாக்கல் செய்தார். “யூனியன் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா 2025”, “அரசியலமைப்பு (நூற்று முப்பதாவது திருத்தம்) மசோதா 2025” மற்றும் “ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு (திருத்தம்) மசோதா 2025” ஆகியவை அம்மூன்று மசோதாக்கள் ஆகும்.

இம்மசோதாக்கள் மூலம் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை விதிக்கக்கூடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் பிரதமர், முதலமைச்சர்கள், ஒன்றிய-மாநில அமைச்சர்கள் 30 நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டால் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். இதற்கு அவர்கள் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

ஊஃபா கருப்பு சட்டத்தின் மூலம் அறிவுஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடுவதை போல, எதிர்க்கட்சிகளை சட்டப்பூர்வமாகவே வேட்டையாடுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ள இம்மசோதாக்கள் தற்போது நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

திசைதிருப்பும் பாசிச அணுகுமுறை

மக்கள் போராட்டங்களால் அரசியல் அரங்கில் தோல்வி முகத்திற்கு தள்ளப்பட்டுள்ள பாசிச பா.ஜ.க. கும்பல், இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

பா.ஜ.க-வும் தேர்தல் ஆணையமும் கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டு பீகாரில் சிறப்பு தீவிர மறு ஆய்வு (SIR – Special Intensive Revision) என்ற பெயரில் இலட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமையை பறித்து வருகிறது. இது பீகாரில் கடுமையான நெருக்கடியையும் நாடு முழுவதும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.

மறுபுறம், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவின் மகாதேவப்புரா சட்டமன்றத் தொகுதியில் நடந்த தேர்தல் மோசடிகளை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி முன்னெடுத்துள்ள “வாக்குத் திருட்டு” பிரச்சாரம் விவாதப் பொருளாகியுள்ளது. பா.ஜ.க-வின் கைக்கூலியாக செயல்பட்டுவரும் தேர்தல் ஆணையம் முற்றிலும் அம்பலப்பட்டு நிற்கிறது.

சர்வதேச அளவில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது பல்வேறு பொருளாதார தாக்குதல்களை தொடுத்து வருகிறார். உலகில் எந்தவொரு நாட்டையும் விட இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவிகித வரி விதித்துள்ளார். இதனால், இந்தியாவில் ஆயத்த ஆடை தொழில் உள்ளிட்ட பல தொழில்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும் நிலையும், தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆனால், ட்ரம்பின் அடாவடித்தனத்தைக் கண்டித்து தற்போது வரை வாய்திறக்காத மோடி அரசு, ட்ரம்பின் கட்டளைக்கு அடிபணியும் அடிமையாகவே செயல்பட்டு வருகிறது. இது பா.ஜ.க. ஆதரவாளர்கள் மத்தியிலேயே அதிருப்தியை கிளப்பியுள்ளது.

இந்நிலையில்தான், இவ்விவாதங்களை திசைதிருப்பும் நோக்கில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடையும் நேரத்தில், இம்மசோதாக்களை மோடி அரசு நயவஞ்சகமாக தாக்கல் செய்துள்ளது.

இம்மசோதாக்கள் அரசியலமைப்பின் பிரிவுகள் 75, 164 மற்றும் 239A ஆகியவற்றில் திருத்தங்களை கோரும் அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் என்பதால், இவற்றை சட்டமாக நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை (சிறப்பு பெரும்பான்மை) வேண்டும். தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் மோடி-அமித்ஷா கும்பலுக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், இம்மாசோதாக்களை அவசர அவசரமாக தாக்கல் செய்ததற்கு பின்னணியில் திசைத்திருப்பும் பாசிச அணுகுமுறை ஒளிந்துள்ளது.

இந்துராஷ்டிர முடியாட்சிக்கான அடித்தளம்

அரசியல் நிகழ்ச்சி போக்குகளை திசைதிருப்புவது இம்மசோதாக்களின் உடனடி நோக்கமெனில், ஒரு கட்சி சர்வாதிகாரத்திற்கு செப்பனிடுவதே இம்மசோதாக்களின் இலக்காகும்.

ஒன்றியத்தில் பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அமலாக்கத்துறை, வருமானவரி துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சியினரை கைது செய்து சிறையிலடைப்பது, கட்சிகளை உடைப்பது, பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க நிர்ப்பந்திப்பது போன்ற பாசிச அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது.

குறிப்பாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரை அடாவடித்தனமாக கைது செய்து சிறையிலடைத்தது மோடி-அமித்ஷா கும்பல். இதன் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பிற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

அதேபோல், தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறையை ஏவி கைது செய்து சிறையிலடைத்து, அவர்களின் பதவிகளைப் பறித்து “சட்டப்பூர்வமாகவே” ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொள்வது என்ற அடிப்படையிலேயே இப்பதவி நீக்க மசோதாக்களை மோடி அரசு கொண்டுவந்துள்ளது. இதனை பதவி நீக்க மசோதாக்கள் என்று கூறுவதை விட “ஆட்சிக் கவிழ்ப்பு மசோதாக்கள்” என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 356, ஆளுநரின் பரிந்துரையின் அடிப்படையில் அல்லது குடியரசுத் தலைவரின் சொந்த விருப்பத்தின் பேரில் ஒரு மாநிலத்தின் மாநில அரசைக் கலைத்துவிட்டு, அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சியை நடைமுறைப்டுத்துவதற்கு வழிவகை செய்கிறது. ஆனால், “குடியரசுத் தலைவர் ஆட்சி” என்ற இந்த எதேச்சதிகாரத்தை காட்டிலும் மோடி அரசு தற்போது தாக்கல் செய்திருக்கும் மசோதாக்கள் கொடியவை ஆகும்.

குடியரசுத் தலைவர் ஆட்சி நிலைநாட்டப்பட்டு, ஆறு மாதங்களுக்குப் பின்னர், மீண்டும் எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்ற முடியும். அதற்கு தமிழ்நாட்டின் தி.மு.க. ஆட்சிக் கலைப்புகளே சாட்சி. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மீது அடிக்கடி அமலாக்கத்துறையை ஏவி கைது செய்து சிறையிலடைத்து, இச்சட்டத்தின் அடிப்படையில், அவர்களின் பதவிகளைப் பறித்து, நிச்சயமற்ற அரசியல் சூழலை உருவாக்க முடியும். இத்தகைய சதிகார நடவடிக்கைகள் மூலமாக, எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கே வரமுடியாத நிலைமையை உருவாக்க இம்மசோதாக்கள் வழிவகை செய்து கொடுக்கின்றன. ஆகையால், ஒன்றிய அரசுக்கு அடிபணியாத எந்தக் கட்சியும் மாநிலங்களை ஆட்சி செய்ய முடியாத நிலைமையை இது உருவாக்குகிறது.

அதேபோல், எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டுவதற்காக “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற பாசிசத் திட்டத்தை மோடி அரசு ஏற்கெனவே தனது நிகழ்ச்சிநிரலில் வைத்துள்ளது. இதனுடன் இப்பதவி நீக்க மசோதாக்களையும் இணைத்துப் பார்க்கும்போது, அடுத்து நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், இந்தியாவில் ஒன்றியத்திலும் மாநிலத்திலும் பா.ஜ.க-வும் அதன் அடிமைக் கட்சிகளும் மட்டுமே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான, இந்துராஷ்டிர முடியாட்சி முறையை நிலைநாட்டுவதற்கான அடித்தளமிடப்படுவதை உணர முடிகிறது.

வெட்டிச் சுருக்கப்படும் ‘தேர்தல் ஜனநாயகம்’

‘தேர்தல் ஜனநாயகத்தைக்’ கேலிக்கூத்தாக்கி, அதனை அழித்தொழிப்பதில் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு பாசிச அணுகுமுறையை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது. சட்டப்பூர்வ வழிமுறைகளைப் பயன்படுத்தி, அதன் சந்துபொந்துகளில் புகுந்து, பாசிச சர்வாதிகாரத்தை அங்கேற்றி வருகிறது.

2014 நாடாளுமன்றத் தேர்தலிலேயே முறைகேடுகளை அரங்கேற்றித்தான் ஒன்றியத்தில் மோடி கும்பல் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது என்ற விமர்சனம் கடுமையாக எழுந்தது. இதனையடுத்து, 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வாக்குப் பதிவு இயந்திரத்தை (EVM) பயன்படுத்துவதற்கு எதிரான இயக்கத்தை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டன. ஆனால், அவற்றையெல்லாம் தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்று ‘இயல்பாக்கி’விட்டது பாசிச மோடி-அமித்ஷா கும்பல்.

அதற்குப் பின்னர், 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது, எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த தேர்தல் ஆணையம், மோடி-அமித்ஷா கும்பலின் மதவெறிப் பேச்சுக்களை அப்படியே அனுமதித்தது. மோடி-அமித்ஷாவின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு உகந்த வகையில் தேர்தல் தேதிகள் விரிவாக அமைக்கப்பட்டன. தேர்தல் மோசடிகள் மிகப்பெரிய அளவில் அரங்கேறின. காங்கிரசு கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. ஆனால், இவை எதையும் தேர்தல் ஆணையமோ உச்சநீதிமன்றமோ பொருட்படுத்தவில்லை. இனி இப்படித்தான் தேர்தல் நடக்கும் என்ற நிலைமையை மோடி-அமித்ஷா கும்பல் நிலைநாட்டி வருகிறது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வாக்காளர் எண்ணிக்கை திடீரென உயர்ந்ததைப் பற்றி, எதிர்க்கட்சிகள்  கடந்த ஓராண்டாக கேள்வியெழுப்பி வருகின்றனர்.

தற்போது பீகாரில் சிறப்பு தீவிர மறு ஆய்வு  என்ற பெயரில் பல லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறித்து வருகிறது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு மோசடியும் அம்பலமாகியுள்ளது.

மேலும், மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வங்காளம் பேசும் இசுலாமிய மக்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதன் மூலம் தனக்கான எதிர்ப்பு வாக்குகளை இல்லாமல் ஆக்கி வருகிறது.

தேர்தல் ஆணையம், நீதிமன்றங்களை பா.ஜ.க-வின் கிளையாக மாற்றி, கேள்விக்கிடமற்ற முறையில், தேர்தல் வழிமுறைகளை எல்லாம் சிதைத்து, தேர்தலில் பா.ஜ.க. மட்டுமே வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை உருவாக்கி, தேர்தல் என்பதையே பா.ஜ.க-வினரை எதிர்ப்பின்றி தேர்வு செய்யும் மோசடியானதாக மாற்றி வருகிறது மோடி-அமித்ஷா கும்பல்.

இவை அனைத்தையும் மீறி, வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எதிர்க்கட்சிகளின் ஆட்சியை சட்டப்பூர்வமாகவே கவிழ்ப்பதற்குத்தான் தற்போது இந்த பதவி நீக்க மசோதாக்களை பாசிச கும்பல் கொண்டுவந்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறை போன்று இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் பாசிச சட்டத்திட்டங்களில் ஒன்றாகவே இப்பதவி நீக்க மாசோதாக்களை பார்க்க வேண்டியுள்ளது.

***

இம்மூன்று பதவி நீக்க மசோதாக்களும் நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில் கூட்டு குழு தனது அறிக்கையை ஒப்படைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தலின் முடிவில், பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மை பெற முடியாமல் போனதையும் ‘வலுவான’ எதிர்க்கட்சி அமைந்திருப்பதையும் எதிர்க்கட்சிகள் கொண்டாடின. ஆனால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளை ஒரு பொருட்டாகக் கூட பாசிச கும்பல் மதிப்பதில்லை.

ஆபரேஷன் சித்தூர் முதல் தற்போதைய பீகார் சிறப்பு தீவிர மறு ஆய்வு வரை நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென போராடிய எதிர்க்கட்சிகளின் குரலுக்கு இதுவரை மதிப்பளிக்கப்படவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைத்து, எதிர்க்கட்சிகளுக்கு ‘ஜனநாயக’த்தை வழங்கி, தான் விரும்பிய சட்டத்தை நிறைவேற்றும் யுக்தியை வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்தின் போதே கையாண்டது, பாசிச கும்பல்.

ஆகையால், உளுத்துப்போன நாடாளுமன்ற மரபுகளைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைத்து, ‘ஜனநாயக’ வாய்ப்பை வழங்கி, தனது இந்துராஷ்டிரத் திட்டத்தைத் நடைமுறைப்படுத்த பாசிச பா.ஜ.க. முயற்சிக்கும்.

அதேபோல், 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், 146 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்துவிட்டு, மூன்று குற்றவியல் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, இம்மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு பல்வேறு பாசிச ஒடுக்குமுறைகளையும் சதித்திட்டங்களையும் மோடி அரசு மேற்கொள்ளும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், இந்த நாடாளுமன்றத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதை எதிர்க்கட்சிகள் கைவிடுவதாக இல்லை. பாசிச மோடி அரசால் எந்த அளவிற்கு இழிவுப்படுத்தப்பட்டாலும் அவற்றையெல்லாம் துடைத்துக்கொண்டு, பாசிச பா.ஜ.க-வை நாடாளுமன்றத்தில் முடக்கிவிடலாம் என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைக்கும் தங்களது பணியை மட்டும் எதிர்க்கட்சிகள் கைவிடவில்லை. இதன் மூலமாக, தாங்கள் இந்துராஷ்டிர புதைக்குழியில் விழுவது மட்டுமின்றி மக்களையும் இழுத்துச் செல்ல முனைகின்றன.

கடுமையான வரி, விலைவாசி உயர்வு, அடிப்படை வசதியின்மை; பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறைகள்; இசுலாமியர்கள், கிருத்தவர்கள், தலித் மக்கள் அடித்துக் கொலை செய்யப்படுவது; விவசாயிகள், பழங்குடியினருக்கு எதிராகக் கார்ப்பரேட் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது போன்ற ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் கும்பல், பா.ஜ.க. அரசு ஆகியவற்றின் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகள், திட்டங்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை உள்ளடக்கி மாற்றுத் திட்டத்தை முன்வைப்பதன் மூலம் உழைக்கும் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சிக்கவில்லை.

எனவே, ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிச கும்பலை பல்முனைகளில் முறியடிக்கும் நடவடிக்கைகளை உள்ளடக்கிய, ஒரு மக்கள் எழுச்சியைத் தொடங்குவதே பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கான ஒரே வழி.


தங்கம்

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க