யார் அவர்கள்?

நகரங்களின் அழகில் அடித்துச் செல்லப்பட்டு
காலத்தின் போக்கில் கரை ஒதுங்கியவர்கள்!

நகர்ப்புற வாழ்க்கையின் விளிம்புகளில் பாடப்படும்
யாரையும் அவ்வளவு எளிதில் தொந்தரவு செய்துவிடாத
ஓர் அமைதியான நாதியற்ற பாடல்!

மங்கலான விடியல் பொழுதுகளில்,
நகரங்கள் உறங்கிக் கொண்டிருக்கையில்
முதலாளித்துவத்தின் விருந்துகளில்
சிந்திய கழிவுகளைத் துடைப்பவர்கள்!

நவீனமயத்தின் கண்களில் அகப்பட்டுவிடாமல்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மலக்குழிகளின் மனித இணைப்புகள்!

ஒப்பந்ததாரர்களின் இலாபத்திற்கு இதமளிக்க
எவ்வித பாதுகாப்புமின்றி எரியூட்டப்படுபவர்கள்!

முதலாளித்துவச் சுரண்டலின் இழைகளில்
மிக்க கவனமாக இறுக்கி நெய்யப்பட்டவர்கள்!

பார்ப்பனியத்தின் சாதியச் சங்கிலியுடனும்
நவீன வர்க்க சுரண்டலுடனும் பின்னிப்பிணைந்தவர்கள்!

தொழிற்சாலைகளின் மறு உற்பத்தியை நிலைநிறுத்துவதற்காக
ஒடுக்கப்பட்டவர்களிலேயே தேர்ந்தெடுத்து ஒதுக்கப்பட்டவர்கள்!

ஆம், அவர்கள்தான் தூய்மைப் பணியாளர்கள்!

பளபளக்கும் நமது நகரங்களின் இதயத்துடிப்புகள்
இன்று ஒரு விடுதலையின் கனவை சுமக்கத் தொடங்கியுள்ளனர்!

‘சமூகநீதி’ அவர்களுக்கு எதிராக
என்றோ தனது பயணத்தை தொடங்கிவிட்டிருக்கிறது!

ஆளும் வர்க்க அரசுகளோ
அவர்களது குறைந்தபட்ச இருப்பிற்கும்
இறங்கற்பா இசைத்துக் கொண்டிருக்கின்றன!

தனியார்மயத்திற்குள் மிகத்திறமையாக மூடிமறைக்கப்பட்ட
சேரிகளின் சீர்குலைவில் இருந்து வீசுகிறது
இந்த கார்ப்பரேட் வாழ்க்கையின் முடை நாற்றம்!

நகர்ப்புற வாசிகளே!

நமது சூழலியல் பாதுகாப்பு,
தலைமுறை தலைமுறையாக அடக்கிவைக்கப்பட்ட
அவர்களின் பேராசையின் வடுக்களைத் தாங்கிநிற்கிறது!

சுகாதாரமான தெருக்களும், பூங்காக்களும், பேருந்து நிலையங்களும்
அவர்களின் கண்ணியமான வாழ்வைக் காவு கேட்கின்றன!

ஒடுக்குமுறைக்கான உரிமை அவர்களின் பரம்பரை சாபமா?
கண்டிப்பாக இல்லை!

இது நமது பங்களிப்பிற்கான நேரம்!

முதலாளித்துவ ஒடுக்குமுறையின் நிழலில் அவர்களோடு ஒன்றிணைவோம்!
அவர்களோடு ஒருகுரலெடுத்து முழங்குவோம்!
தனியார்மயத்தின் குப்பைக் கிடங்குகள் வீங்கி வெடிக்கட்டும்!

வேண்டும் ஜனநாயகம்!


பாரி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க