இனவெறி இஸ்ரேல் அரசு காசாவை முழுமையாக கைப்பற்றுவதற்காக கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதியிலிருந்து காசா நகரத்தின் (Gaza City) மீதான தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக காசா மீது இன அழிப்புப் போரை நடத்திக் கொண்டிருக்கும் யூத இனவெறி இஸ்ரேல், தற்போது வரை 62,122-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களை கொன்றுள்ளது. மறுபுறம், காசாவிற்குள் உணவுப் பொருட்களை அனுமதிக்காமல் பட்டினிப் போரை தொடுத்து வருவதால், 269-க்கும் மேற்பட்டோர் ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் பசியாலும் செத்து மடிந்துள்ளனர். இறந்தவர்களில் 112-க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் ஆவர்.
இந்நிலையில், ஆகஸ்ட் 8-ஆம் தேதியன்று காசா நகரத்தை முழுவதுமாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், அவற்றையெல்லாம் மீறி காசா மீது தீவிர தாக்குதலை நடத்திய இஸ்ரேலுக்கு அந்நாட்டு மக்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் 17 அன்று இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் நகரில் ஒன்றுகூடிய லட்சக்கணக்கான இஸ்ரேலிய மக்கள், காசா மீதான போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும், ஹமாஸ் வசம் சிறையிலுள்ள பணயக் கைதிகளை மீட்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு ஆதரவாக பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டன.
இது இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய போதிலும், “அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்கும் ஒரு விரிவான ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும். பாதி பேரை விடுதலை செய்யும் ஒப்பந்தத்தை இனி ஏற்கப்போவதில்லை” என்று கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதியன்று அடாவடியாக தெரிவித்தது. காசாவை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் பேரழிவுத் திட்டத்திலிருந்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
படிக்க: காசா இனப்படுகொலை: மறுகாலனியாதிக்க உலகத்தின் சர்வதேச விதிகள்
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 20-ஆம் தேதியன்று காசா நகரம் முழுவதையும் இஸ்ரேலின் கட்டுப்பட்டின் கீழ் கொண்டுவரும் திட்டத்தை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், காசா நகரை கைப்பற்றும் திட்டத்திற்காக மேலும் 60,000 ரிசர்வு படைகளை காசாவிற்குள் அனுப்புகின்ற திட்டத்தையும் அங்கீகரித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 21-ஆம் தேதியன்று மக்கள் நெருக்கமாக உள்ள காசா நகரத்தின் சைதூன் (Zaidoon) மற்றும் ஜபாலியா (Jabalia) பகுதிகளில் இஸ்ரேலிய இராணுவம் தரைவழி தாக்குதலை தீவீரப்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே, காசாவில் இருந்த 19 லட்சம் மக்களை வெளியேற்றி விட்டு காசாவின் 90 சதவிகிதப் பகுதியை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், காசா நகரத்தின் மீது தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்துவதன் மூலம் அப்பகுதியில் உள்ள பத்து லட்சம் மக்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றி, காசாவின் அல்-மவாசி (Al-Mawasi) மற்றும் தெற்குப் பகுதியில் உள்ள முகாம்களுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வருகிறது. அப்பகுதிகளிலிருந்து தெற்கு சூடான் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு கடத்தவும் கொலைகார இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.
மேலும், இஸ்ரேலியப் படைகள் தொலைதூரக் கட்டுப்பாட்டு வெடிபொருட்களைப் பயன்படுத்தி காசா நகரின் புறநகரில் உள்ள மக்களின் வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களை இடித்து வருகின்றன. காசா நகரத்தை முழுவதுமாக அழித்துவிட்டு அதனை கேளிக்கை நகரமாக்கும் அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் ட்ரம்பின் திட்டத்தின் அடிப்படையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டு வருவதை இது உறுதிப்படுத்துகிறது.
இஸ்ரேலின் தாக்குதலினால் வெளியேற்றப்படும் மக்களில் ஒருவரான ஏழு குழந்தைகளின் தந்தையான 67 வயதான ரபா அபு எலியாஸ் கூறுகையில், “நாங்கள் எங்கள் வீடுகளிலேயே இறக்க வேண்டும் அல்லது வேறு எங்காவது சென்று இறக்க வேண்டும் என்ற கசப்பான சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். இந்தப் போர் தொடரும் வரை உயிர்வாழ்வது நிச்சயமற்றது” என்று தெரிவித்துள்ளார்.
படிக்க: காசா மீதான பேரழிவுப் போரை நிறுத்து!
மேலும், ஆகஸ்ட் 20-ஆம் தேதியன்று பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்களை அமைக்கும் இ1 (E1) திட்டத்திற்கும் இஸ்ரேல் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டு மேற்குக் கரையில் 20,000 புதிய குடியேற்றங்களை அமைத்து மேற்குக் கரையை இரண்டாகப் பிரிப்பதற்கான திட்டம் இதுவாகும்.
சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஜெர்மனியில் பாசிச ஹிட்லர் யூதர்களை வதை முகாம்களில் அடைத்து படுகொலை செய்ததைப் போன்று, தற்போது பாசிஸ்ட் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசு காசாவின் பாலஸ்தீன மக்களை முகாம்களில் அடைத்து படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்காக காசா நகரத்தின் மீது தாக்குதல் நடத்தி காசாவை திறந்தவெளி வதைமுகமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
ஆனால், உலக அமைதிக்காக பல்வேறு அமைப்புகளும் நீதிமன்றங்களும் சட்ட விதிகளும் உள்ளதாக சொல்லப்படும் இந்த 21-ஆம் நூற்றாண்டில்தான் இது நடந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகளோ கைக்கட்டி வாய்பொத்தி இந்த இனப் படுகொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு நாட்டிலும் ”காசா மீதான இனப்படுகொலையை நிறுத்த வேண்டும்” என்று அந்தந்த நாட்டு அரசிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் போது மட்டுமே காசா மீதான இன அழிப்பை தடுத்து நிறுத்த முடியும்.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram